Notifications
Clear all

அத்தியாயம் 38

 

Admin
(@ramya-devi)
Member Admin
Joined: 1 year ago
Posts: 981
Topic starter  

“என்னவோ பயமா இருக்கு. ஏற்கனவே ஒருத்தியாய தூக்கி குடுத்ததே என்னால இப்ப வரை தாங்க முடியல. இதுல மறுபடியும் இன்னொரு இழப்புன்னா சத்தியமா என்னால தாங்க முடியாது” என்றவனை இறுக கட்டிக் கொண்டான்.

கிட்டத்தட்ட பெருவளத்தானுக்கும் இதே நிலை தானே. அதனால் அவனது உணர்வுகள் நன்று புரிந்தது.

“கவலை படாதடா. உன்னை விட்டு போன உறவு உன்கிட்ட கண்டிப்பா வந்து சேரும்” என்று இருவரும் தயக்கத்தை விட்டு பேசிக்கொள்ள ஆதினிக்கும் வேதாவுக்கும் கொஞ்சம் நெஞ்சம் நெகிழ்ந்தது.

வீம்பு பண்ணிக்கொண்டு இருக்கும் நேரம் இது இல்லையே... அதை புரிந்து பெருவளத்தான் செல்வத்திடம் நடந்துக்கொண்டது அவனின் பெரும் குணத்தை காட்டியது.

பதினோரு மணிக்கு ஆரம்பித்த ஆபரேஷன் மத்தியம் இரண்டு மணி வரை தொடர்ந்தது. மூன்று மணிக்கு மேல் வெளியே வந்த மருத்துவர்,

“உங்க குழந்தை சேப். இனி கவலை பட எதுவும் இல்லை. பட் இருக்கிற இடத்தை எல்லாம் சுத்தமா வச்சுக்கணும். தூசி அதிகம் படிய விடாம பாத்துக்கோங்க. இல்லன்னா அலர்ஜி வர வாய்ப்புகள் இருக்கு. டேக் கேர்” என்று இன்னும் சில விசயங்களை எல்லாம் அறிவுறுத்தி விட்டு அவர் செல்ல அவரை கடவுள் போல எல்லோரும் பார்த்தார்கள்.

கடவுள் பல நேரம் இப்படி மருத்துவர்களாக வந்து நமக்கு வேண்டியவர்களை நம்மோடு இருக்க வைத்து விட்டு போவது இயல்பு தானே...

அதன் பிறகு எல்லாமே சுகமாக முடிந்தது. யாரும் யாரிடமும் முகத்தை திருப்பிக் கொண்டு போகவில்லை. குறிப்பாக பெருவளத்தானும் செல்வமும். இருவரும் நெருங்கி பேசவில்லை என்றாலும் இருவரிடமும் ஒரு நட்பு இழையோடியது.

சஞ்சு அவ்வப்பொழுது ஆதினியை பார்த்துக் கொண்டே இருந்தாள். ஆனால் ஆதினி அவளை சிறிது கூட கண்டுக் கொள்ளவில்லை.

சஞ்சு ஆதினியை பேசிய பேச்சுக்கள் எல்லாம் கண் முன் வந்து வருந்த அவளிடம் மன்னிப்பு கேட்க கூட முடியாத அளவுக்கு அவளின் குற்ற உணர்வு அவளை வதைத்தது.

அதனால் பார்வையாலே தன் தங்கையை பின் தொடர்ந்துக் கொண்டு இருந்தாள். பிள்ளை பூரண ரெக்கவர் ஆகிறவரை இங்குபேட்டர்ல இருக்கட்டும் என்று விட பிள்ளையை அதிலே வைத்து இருந்தார்கள்.

எல்லா கவனிப்பும் அவர்கள் என்பதால் பிள்ளையை பற்றிய கவலை எதுவும் இல்லை. கண் விழித்த கனிகாவிடம் பேரமைதி தென்பட்டது. குழந்தை எப்படி இருக்கிறது என்று கேட்டுக் கொண்டவள் வேறு எதுவும் பேசவில்லை. ஆனால் என்ன நடந்தது என்று எல்லாவற்றையும் கேட்டு அறிந்துக் கொண்டாள்.

மாற்றி மாற்றி ஆட்கள் வந்த வண்ணமாகவே இருந்தார்கள் அவளை பார்க்க. ஆனால் அவள் யாரிடமும் பேசவில்லை. விசாகன் வந்து குழந்தையையும் கனிகாவையும் பார்த்து விட்டு சென்றார்.

தாய் சேய் இருவருக்கும் பிரச்சனை என்று அறிந்து மனம் வருந்தியவர், பின் தன் பிள்ளை தான் அதிகம் உதவி செய்து இருக்கிறான் என்று அறிந்து மனம் குளிர்ந்துப் போனார்.

அவரின் கொள்கையே ‘தீமைக்கும் நன்மை செய்’ என்பது தானே... அதனால் தன் மகனின் உதவியில் உளமார மகிழ்ந்தார் அவர்.

யாரிடமும் பேசாமல் இருந்த கனிகாவை கவனித்த ஆதினி அதை கண்டுக்கொள்ளவில்லை. “என்கிட்டே கூட பேசவே மாட்டிக்கிறாடி” என்று தாய் புலம்ப, சஞ்சு ஆறுதல் சொல்லிக் கொண்டு இருந்தாள்.

இப்படியே அனைவரையும் புலம்ப வைத்துக் கொண்டு இருந்தவள் பழத்தை வெட்ட அருகில் வைத்திருந்த கத்தியை பார்த்துக் கொண்டு இருந்தாள்.

அதன் கூர்மையில் அவளது கண்கள் படிந்து இருக்க,

“அதை எடுத்து கையை கிளிச்சுக்கலாம்னு நினைச்சா அது வேஸ்ட்... ஒரேடியால்லாம் போக முடியாது. இழுத்துக்கிட்டு தான் கிடப்ப” என்று நறுக்கென்று ஆதினி பேச அதிர்ந்துப் போனாள் கனிகா.

“என்ன பார்க்கிற. நீ தற்கொலை பண்ணிக்க தான் நாங்க உன்னை இவ்வளவு நாளும் கண்ணும் கருத்துமா வளர்த்தமா...? அறிவு இருக்காடி. உடம்பு சரியில்லாதவன்னு பார்க்கிறேன். இல்லன்னா ஓங்கி கன்னத்தில் நாலு அரை விட்டு இருப்பேன். மனுசியாடி நீயெல்லாம்.. குழந்தையை வயித்துல வச்சுக்கிட்டு யாராவது இந்த காரியத்தை பண்ணுவாங்களா...? ச்சீப்போடி...” என்று திட்ட மௌனமாக கனிகா அழுதாள்.

“அழுது தொலையாதடி.. நீ போயிட்டான்னா நானும் உன் புருசனும் வாழ்ந்துடுவோம்னு நினைச்சியா...?” ஆத்திரமாக கேட்டவளை ஏறிட முடியாமல் தலை குனிந்துக் கொண்டாள் கனிகா.

அவளை அப்படி பார்க்க பாவமாய் இருந்தது. “அக்கா” என்றாள் அமைதியாக.. அதில் நிமிர்ந்து அவளை பார்த்தாள் கனிகா.

“உன் வாழ்க்கையில பங்கு கேட்டு வருவேன்னு நினைச்சியா?” என்று கேட்டவளை தாவி வந்து அணைத்துக் கொண்டவள்,

“நான் என்னைக்கும் அப்படி நினைச்சது இல்லடி”

“பிறகு ஏன் இப்படி எல்லாம் நடந்துக்கிட்ட?”

“என்னால இந்த பிள்ளையை விட்டுட்டு இருக்க முடியாதுடி. எப்படியும் பிள்ளையை அவங்க அவங்க வீட்டுக்கு தூக்கிட்டு போயிடுவாங்க. நான் வெறும் வாடகை தாய் தான் இல்ல. அவங்க கிட்ட என்னால உரிமையா பிள்ளையை கேட்க முடியாது. எழுதி வேற குடுத்து இருக்கேன்.” என்று சொன்னவளின் பேச்சில் இருந்த தாய்மையை உணர்ந்து ஆதினி பாவமாக அவளை பார்த்தாள்.

“எனக்கும் உங்க மாமாவுக்கும் ஒரே பிளட் க்ரூப். அதனால தான் குழந்தை பிறக்கலன்னு எனக்கு இப்போ தான் தெரிய வந்தது. இனி எப்பொழுதும் எங்களுக்கு குழந்தை பிறக்காதுன்னு தெரிந்தது. ஒரு வேலை அவரு வேரு யார் கூடவாவது கல்யாணம் ஆனா கண்டிப்பா குழந்தை பிறக்கும். அவரோட வாழ்க்கையும் வீணாக்கிட்டு இருக்கேன்னு எனக்குள்ள ஒரு குற்ற உணர்வு.” என்றவளை இரக்கத்துடன் பார்த்தாள்.

“எனக்கு ஒரே ஒரு உதவி மட்டும் செய்டி. இனி எனக்கு குழந்தை பெத்துக்கொள்ளவும் முடியாது போல. அன்னைக்கு நான் எளிஜிபில்னு நிரூபிக்க விளையாட்டா செய்தது இன்னைக்கு எனக்கு ஒரு பிள்ளையை குடுத்து இருக்கு. அதை என்கிட்டயே குடுத்திட சொல்லுடி” என்று குழந்தைக்காக கெஞ்சியவளை பார்க்க மனம் கனத்துப் போனது.

அந்த பக்கம் செல்வமும் இதே நிலையில் இருக்கிறான். இங்கு யாருக்காக என்று பார்ப்பது. இருவருமே ஒரே நிலையில் இருக்கிறார்கள். கண்கள் கலங்கிக்கொண்டு வந்தது இருவரது நிலையையும் எண்ணி.

இன்னும் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பவில்லை. தாயும் பிள்ளையும் மருத்துவமனை வசம் தான். செல்வம் குழந்தை பிறந்த பிறகு கனிகாவை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை. பீட் பண்ணும் பொழுது மட்டும் அவளை பார்ப்பான். அதுவும் பீடிங் அறைக்குள் நுழைந்து விடுவதால் அதற்கு மேல் பார்க்க முடிவதில்லை.

பேசவும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. பெருவளத்தான் கனிகாவோடு நேரம் செலவு செய்ய அவனை ஆழ்ந்து ஒரு பார்வை பார்த்தாள்.

“என்ன கனிகா” என்று கேட்டான். அவனிடம் அப்பொழுதும் சரி இப்பொழுது சரி எந்த மாற்றமும் இல்லை. எப்பொழுதும் போலவே இருந்தான். இதழ்களில் ஒரு சின்ன புன்னகை மலர்ந்து அவளிடம்.

விடாமல் தன்னை பார்த்துக்கொண்டு இருந்தவளிடம் “எதுவும் வேணுமா..?” கேட்டான். அவள் இல்லை என்று தலை அசைக்க அவளுக்கு ஜூஸ் போட ஆரம்பித்தான்.

இன்னும் கொஞ்ச நேரம் கழித்து குழந்தைக்கு பீட் பண்ண போகணும். பெருவளத்தானை கூட அழைத்துக் கொண்டு போக ஆசை. ஆனால் வேணாம் என்று எண்ணி, அவள் மட்டும் கீழே உள்ள பீடிங் அறை உள்ளே நுழைந்தாள். நர்சிடம் சொல்லிவிட்டு காத்திருக்க, குழந்தையை கொண்டு வந்து கொடுத்தார்கள். அங்கு வேறு யாரும் இல்லை.

குழந்தையை வாங்கி தன் நெஞ்சோடு அனைத்தவளின் கண்களில் கண்ணீர் தளும்பியது. “நீ எனக்கு சொந்தமில்லையா கண்ணா..” என்று கண்ணீருடன் தன் பிள்ளையை சொந்தம் கொண்டாடியவளின் முன்பு ஒரு நிழல் தெரிய,

சட்டென்று நிமிர்ந்துப் பார்த்தாள். எதிரே செல்வம் நின்றிருந்தான். கலைந்த தலையோடு கண்கள் சிவந்துப் போய் கண்களில் உயிரே இல்லாமல் இருந்தவனை பார்த்து அடி நெஞ்சில் ஏதோ ஓர் இரக்கம் சுரந்தது.

Loading spinner


   
Quote
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top