அதன் பிறகு தன் தங்கை வேதாவை மிரட்டி என்ன நடந்தது என எல்லாவற்றையும் கேட்டு அறிந்துக் கொண்டான் செல்வம். அதனாலே மிக மூர்க்கமாக மண்டபத்தில் நடந்தும் கொண்டான். அவனுக்கு அவனது பிள்ளை வேண்டும். அவ்வளவு தான். அது யார் யாருடைய வாழ்க்கையை பாதித்தது என்று கூட புரியாமல் அவன் சில காரியங்களை செய்து விட்டான். அவனது அவசம் அவன் இருந்தால் அல்லவா நிதானித்து அவனால் செயல் பட்டு இருக்க முடியும். செல்வத்துக்கு நிதானம் என்பது ஒரு பொட்டு கூட இல்லை.
அதை எல்லாம் எண்ணிப் பார்த்துக் கொண்டு இருந்த வேதாவுக்கு நெஞ்சமெல்லாம் புண்ணாகி இருந்தது. அவளும் இப்படி எல்லாம் நடக்கும் என்று எதிர் பார்த்தே இருக்கவில்லை.
தலைக்குனிந்து நின்ற பெருவளத்தானை பார்க்கும் பொழுது பாவமாக இருந்தது. வேதாவின் கை மீறி என்னெனவோ நிகழ்ந்து முடிந்து இருந்தது. இப்பொழுதும் கனிகாவை பார்க்க செல்வத்தோடு வேதாவும் அவளின் அம்மாவும் வந்து இருந்தார்கள்.
வளைகாப்பு முடிந்த அடுத்த நாளே போகிறேன் என்று சொன்னவனை அது இது என்று சொல்லி தடுத்தவர்கள் அதற்கு அடுத்த வந்த நாட்களில் அவனை சமாளிக்க முடியாமல் போனது.
“யார் தடுத்தாலும் நான் போய் பார்ப்பேன். என்னை தடுக்க யாராலும் முடியாது” என்றவன் அவன் மட்டும் கிளம்பினான். ஆனால் இவர்கள் தான் வலுக்கட்டாயமாக நாங்களும் வருகிறோம் என்று கூட வந்து இருந்தார்கள். ஏற்கனவே தேரை இழுத்து தெருவில் விட்டாகி விட்டது? இதற்கு மேல என்ன வரப் போகிறது என்று எண்ணினாலும் அவனோடு உடன் சென்றார்கள்.
போகிற நேரம் ஆதினி வீட்டில் இருக்கக் கூடாது என்று வேண்டாத தெய்வம் இல்லை. அவள் இருந்தாள் வீட்டு வாசலில் கூட நுழைய விட மாட்டாளே... என்று எண்ணிக்கொண்டு அம்மாவும் மகளும் செல்வத்தோடு உடன் வந்து இருந்தார்கள்.
அவர்கள் வேண்டியது போல ஆதினி காலையில் கிளம்பி வேலைக்கு போய் விட்டாள். போகும் பொழுதே பெருவளத்தானின் கடைக்கு போய் விட்டு தான் சென்றாள்.
“குழந்தை எப்படி இருக்கான்?” என்று உர்ரென்ற முகத்துடனே கேட்டான் செல்வம். அதற்கு தலை மட்டுமே ஆட்டினாள் கனிகா.
“வாய் திறந்து சொல்லு...” என்று இவன் ஒரு அதட்டல் போட,
“நல்லா இருக்கான்” என்று பயந்துப் போனாள் கனிகா. இவள் தான் எல்லோரிடமும் எரிந்து விழுவதோ இல்லை கடினமாக பேசுவதோ நடக்கும். ஆனால் இவளையே ஒருவன் அடக்க பார்க்கிறான். என்ன நடக்க போகிறதோ...! எங்கு போய் முடிய போகிறதோ...
காலையில் இருவருக்கும் உணவை எடுத்துக்கொண்டு பார்க்கிங்க்கு வர அங்கே ஆறாவது தளத்தில் இருவரும் மட்டையாகி ஆளுக்கு ஒருபுறம் உருண்டுக் கொண்டு இருக்க அருகில் இருந்த தூணில் அடாச் பண்ணி இருந்த வாட்டர் பப்பை பிடுங்கி இவர்கள் மீது அடித்தாள்.
அதுவரை சுகமாக உருண்டுக் கொண்டு இருந்த மாமனும் மச்சானும் தண்ணீர் அவர்கள் மேல் பாயவும்,
“மாமா... மாமா... மலை மலை” என்று கூப்பாடு போட்டான்.
இந்த பக்கம், “மச்சான் அது மழை இல்லடா சுனாமிடா...” என்று திருத்தியவன், “மச்சான் எப்படியாவது நீ மட்டும் தப்பிச்சிடுடா. தப்பிச்சு போய் உங்க அக்காவை காப்பாத்துடா. பாவம் மூச்சு திணறி போயிடுவாடா” என்று முழு போதையில் உளறிக் கொண்டு இருந்தவனை பார்த்து தலையில் அடித்துக் கொண்டாள்.
விடாமல் அவர்களின் மீது குழாய் தண்ணீரை சரமாரியாக அடிக்க, மாமனுக்கும் மச்சானுக்கும் நேற்றைக்கு ஏறிய போதை மொத்தமும் இறங்கியது. அதன் பிறகே ஆதினி தான் தங்களின் மீது தண்ணீரை ஊற்றிக் கொண்டு இருக்கிறாள் என்று புரிய திருட்டு வேலை செய்த குட்டி பிள்ளைகளாய் பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு எழுந்து நின்றார்கள்.
அவர்களை அப்படி பார்க்கையில் எங்கிருந்து திட்ட, முறைத்துப் பார்த்தவள், “சாப்பாடு கொண்டு வந்து இருக்கேன். ரெண்டு பேரும் சாப்பிடுங்க. ஆபிஸ்க்கு நேரமாச்சு கிளம்புறேன்” என்றவள்,
“பெரியவங்களை பார்த்து சிரியவங்க கத்துக்குவாங்கன்னு சொல்றது சரியா தான் இருக்கு.. யாரு யாரை பார்த்து கெட்டு போறாங்கன்னு தெரியல. ஆனா ரெண்டு பேரும் கெட்டு போயி இருக்கீங்க” என்று ஆதினி கடுப்பாக சொல்ல பெருவளத்தான் தலையை கீழே குனிந்துக் கொண்டான்.
“சாப்பிட வை...” பெருவளத்தானை சுட்டி காட்டி தன் தம்பியிடம் சொன்னவள்,
“நேத்தைக்கு ஒரு நாள் தான் எஸ்கியூஸ். இன்னைக்கு இதே வேலை செய்தன்னா விதுல். அப்புறம் உன்கிட்ட பேசவே மாட்டேன்” என்று தன் தம்பியிடம் சொன்னவளின் பேச்சில் இருந்த சாரம் தனக்கும் தான் என்று புரிந்துக் கொண்ட பெருவளத்தான்,
“சாரி மச்சான்” என்று ஆதினியிடம் நேரடியாக சொல்ல முடியாமல் அவளின் தம்பியிடம் சொன்னவனை முறைத்து பார்த்தவள்,
“விதுல் டேக் கேர்... மத்தியம் அத்தை மாமாவை பார்க்க போறேன்” என்று சொல்ல, “நீ அங்க வராத” என்ற பொருள் அடங்கி இருந்தது பெருவளத்தானுக்கு. வந்தால் இன்னும் கேவலமாக தாங்கள் சித்தரிக்கப் படுவோம் என்று இருவருமே அறிந்து இருந்தார்கள்.
“சரிக்கா” என்றான் அவன்.
“கவனமா இரு” என்று விதுலை நடுவில் வைத்து இருவரும் பேசிக் கொள்வதை பார்த்த விதுலுக்கு பாவமாய் போனது. நல்ல உறவு முறை. ஆனால் அதை கனிகா ஒற்றை நொடியில் கசக்கி போட்டு விட்டாளே. இனி இவர்கள் இருவரும் இயல்பாக பேசினாலும் பார்ப்பவர்கள் அனைவருக்கும் தவறான கண்ணோட்டமே தென்படும். அதனாலே இருவரும் நேரடியாக பேசிக்கொள்ளவில்லை.
உச்சி வேளை பொழுது தன் வேலையை எல்லாம் முடித்துக் கொண்டு பெருவளத்தானின் வீட்டுக்கு சென்றாள் ஆதினி. அங்கே கலைந்த சிதைந்த ஓவியமாய் பெரியவர்கள் இருவரும் இருப்பதை பார்த்து மனம் கனத்துப் போனவள் அவர்களுக்கு என்ன கூறி, எந்த சொல்லை சொல்லி சமாதனம் செய்வது என்று தெரியவில்லை.
வெறுமென அவர்களோடு போய் அமர்ந்து இருந்தாள். பணிப்பெண் வந்து உபசரிக்க, மறுத்தவள் இவர்கள் என்ன சாப்பிட்டார்கள் என்று சாடையாக கேட்க, அவள் எதுவுமில்லை என்று விட்டு போனாள்.
தட்டில் இருவருக்கும் உணவை எடுத்துக் கொண்டு வந்தவள், “நடந்த எதையும் மாத்த முடியாதுன்னு உங்களுக்கே நல்லா தெரியும். அதை நினைத்து நீங்க கவலை படுறதுல நியாமே இல்ல மாமா... சின்னவருக்கு நீங்க ரெண்டு பேரும் வேணும். அவர் முகத்துக்காகவாவது நீங்க முகத்துல எதையும் காட்டிக்க கூடாது அத்தை” என்றவளை வேதனையுடன் பார்த்தார்கள் இருவரும்.
“கனிகா எதை மனதுல வச்சுக்கிட்டு இந்த முடிவை எடுத்தான்னு தெரியல மாமா... ஆனா அவ செய்ததுக்கு நான் உங்கக்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன்” என்று கை எடுத்து கும்பிட்டவளை இன்னும் அதிக வேதனையுடன் பார்த்த வாணி அவளின் கரத்தை கீழே இறக்கி விட்டார். வேணாம் என்பது போல..
விசாகன், “ஏன் ம்மா நீ வேற மன்னிப்பு கேட்டு எங்களை இன்னும் துன்பப்படுத்துற.. இருக்கிற துன்பம் போதாதா?” என்று கேட்டவரை கலங்கிய விழிகளுடன் பார்த்தாள்.
யாராலையும் நடந்துப் போன நிகழ்வுகளை விட்டு வெளியே வர முடியவில்லை. ஆனால் அதிலே இருந்தால் எல்லாம் சரியாகி விடுமா என்ன..?
“சரி நான் மன்னிப்பு கேட்கல... ஆனா நீங்க முதல்ல சாப்பிடனும். சாப்பிடுங்க மாமா. அத்தைக்கு நீங்களே குடுங்க.” என்று விட்டு அவர்களின் அருகில் அமர்ந்துக் கொண்டாள்.





