“இல்ல ஆதினி அண்ணன் ரொம்ப பிடிவாதமா இருக்காரு. ப்ளீஸ்” என்ற வேதாவை கட்டுக் கடங்காத கோவத்துடன் பார்த்த ஆதினி,
“வேதா நீங்க பார்க்கிற தொழிலுக்காக மட்டும் தான் நான் இவ்வளவு அமைதியா இருக்கேன். இல்லன்னா நீங்க வேற ஒரு ஆதினியை பார்க்க நேரும். இவ்வளவு தூரம் சொல்லிட்டு இருக்கேன். நீங்க இப்படி பிடிவாதம் பிடிச்சா எப்படி... ஒழுங்கா தட்டை எடுத்து வீசுறதுக்கு முன்னாடி நீங்களே மரியாதையா தட்டை எடுத்துக்கோங்க” என்று கோவத்துடன் சொன்னவளின் முன்பு கண்கள் சிவக்க முழு ஆத்திரத்துடன் வேதாவின் முதல் அண்ணன் செல்வன் வந்து நின்றான்.
“இங்க பாரு ஒழுங்கா நீ முதல்ல ஒதுங்கி நில்லு. அப்படி நின்னா தான் உனக்கு நல்லது. இல்லன்னா அவ்வளவு தான். அசிங்கப்பட்டு போயிடுவ. என் பிள்ளைக்கு கண்டவனையும் சீரு செய்ய நான் விட மாட்டேன். என் பிள்ளைக்கு நான் தான் செய்வேன்.. அதை தடுக்க எந்த கொம்பனாலும் முடியாது... ஆப்ட்ரால் நீ ஒரு பொம்பளை உன்னால என்ன செய்ய முடியும்...?” இளக்காரமாக கேட்டவனை ஏளன புன்னகையுடன் பார்த்தவள்,
“எந்த உரிமையில அது உன் பிள்ளைன்னு நீ ஆடிட்டு இருக்க? நீ தான் மாதம் மாதம் செக்கப்புக்கு கூட்டிட்டு போனியா...? நீ தான் இந்த ஒன்பது மாதமும் எங்க அக்காவுக்கு ஆக்கி போட்டியா...? இல்ல நீ தான் கண்ணும் கருத்துமா கூட இருந்து அவளை பார்த்துக்கிட்டியா? இல்ல நீ தான் அவ ஆசை பட்டது எல்லாம் செய்துக் குடுத்தியா...? இல்ல நீ தான் ஆரம்பத்துல இருந்து மருத்துவமனைக்கு செலவு செய்தியா..?” என்று கேட்டவள், அவனை இன்னும் கூர்ந்து பார்த்து,
“இல்ல தெரியாம தான் கேட்கிறேன் இதுல ஒன்னாவது நீ செஞ்சு இருக்கியா...? ஏதோ உன் பிள்ளை பிள்ளைன்னு பேசிட்டு இருக்க... உயிர் நீரை குடுத்ததா தவிர வேற என்ன செய்த... புள்ளை குடுக்குறவன் எல்லாம் தகப்பனா ஆக முடியாது அதை முதல்ல நினைச்சுக்கோ. இந்த குழந்தைக்கு முழு உரிமை உள்ளவர் எங்க அக்கா வீட்டுக்காரர் மட்டும் தான். ஏன்னா அந்த குழந்தை இருக்கிறது அவரோட மனைவி வயித்துல. அதை யாருக்கும் விட்டுக் குடுக்க முடியாது. அவரு தான் இவ்வளவு நாளும் பார்த்துக்கிட்டாரு. இனியும் அவரு தான் பார்த்துக்குவாரு. குழந்தை பிறந்த பிறகு ஒப்பந்த படி உன் பிள்ளையை வாங்கிட்டு போயிக்கிட்டே இரு. அதுவரை இங்க சலம்பிட்டு இருக்குற வேலை எல்லாம் வேணாம் சொல்லிட்டேன்” என நறுக்கென்று சொன்னவள், விசாகனை பார்த்து,
“நீங்க போய் முறை செய்யுங்க மாமா. யார் வந்து தடுக்குறாங்கன்னு நான் பார்க்கிறேன். நீங்க மட்டும் தான் முறை செய்யணும்” என்று சொன்ன ஆதினியை அனைவரும் வியந்து போய் பார்த்தார்கள்.
ஒற்றை ஆளாய் நின்று அவள் அந்த சூழலை எதிர் கொண்ட விதம் அனைவரையும் திகைக்க செய்தது.
“என்னை மீறி என் குழந்தைக்கு எப்படி முறை செய்யிறீங்கன்னு நானும் பார்க்கிறேன்” என்று குதித்த செல்வத்தை ஒரு பார்வை பார்த்தவள்,
“எங்க அம்மா இந்த விழாவுக்கு அழைக்க வரும் பொழுதே நீங்க தான் முறை செய்யனும்னு சொல்லி இருந்தா நாங்களே எங்க மாமாக்கிட்ட பேசி உங்களை செய்ய வைத்து இருப்போம். ஆனா அப்போ சொல்லாம இப்படி எல்லோரையும் கூட்டி வச்சு எங்க குடும்பத்தை அசிங்கப் படுத்த பார்த்தா நான் சும்மா இருக்க மாட்டேன் மிஸ்டர் செல்வம்”
“உன்னால என்னடி பண்ண முடியும்...?” திமிராக ஆத்திரத்துடன் கேட்டவனை பார்த்துக் கொண்டே,
“என்ன வேணாலும் செய்ய முடியும்...” என்றவள் அவர்கள் கொண்டு வந்த சீர் தட்டை எல்லோரும் சுதாரிக்கும் முன்பு தூக்கி வீசி எறிந்தாள்.
“ஏய் அவ்வளவு தான்டி உனக்கு மரியாதை” என்று அவளின் முடியை கொத்தாக பிடித்து கீழே தள்ளி விட பார்க்க, அதற்குள் பெருவளத்தான் வந்து அவளை தன் பின் புறம் மறைத்துக் கொண்டு செல்வத்தை உக்கிர விழிகளுடன் ஏறிட்டான்.
அந்த விழிகளில் ‘எங்க என்னை தாண்டி போய் தொடுரா அவளை’ என்ற எச்சரிப்பு இருந்தது...! அதை படித்தவனுக்கு உள்ளுக்குள் இன்னும் கோவம் வர,
“அவ என்ன அவ்வளவு பெரிய ஆளா?” என்று பெருவளத்தானின் மீது கை வைக்க வர அதற்கும் அசராமல் கண்களில் கனலை தாங்கி இருந்தான் பெருவளத்தான்.
செல்வம் அடிக்க வரும் முன்பே அவனது மேல் கையின் புஜத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டான். இந்த கை தானே என் ஆதினியை தொட வந்தது என்று குத்திய இடத்திலே மீண்டும் மீண்டும் குத்த செல்வத்தால் வலியை தாங்க முடியவில்லை.
அண்ணனை அடிக்கவும் பிரபு வந்து பெருவளத்தானை தாக்க, விதுல் பிரபுவை பின் புறம் இருந்து அடிக்க என நால்வரும் கட்டி உருண்டு அந்த இடத்தையே கலோபாரம் பண்ணி எடுக்க வாணி வாய் விட்டே கதறி விட்டார்.
செல்வத்தை அவனின் தாய் வந்து பிடித்துக் கொள்ள, பிரபுவை சஞ்சு வந்து பிடித்துக் கொள்ள, ஆதினி பெருவளத்தானையும் தன் தம்பியையும் பிடித்து நிறுத்தினாள். நிறுத்தி விட்டு,
“இதுக்கு மேல உங்களுக்கு அவ்வளவு தான் மரியாதை சொல்லிட்டேன். எங்க அக்காவுக்கு ரொம்ப நாள் கழிச்சு ஒரு நல்லது நடக்குது. அதை கெடுக்குற மாதிரி யாராவது நடந்துக்குட்டீங்க..” என்று கண்களில் நெருப்புடன் எச்சரித்தவளை நெஞ்சுக்குள் வஞ்சம் எழுந்தது. ஆனால் இரு திடகாத்திரமான ஆண்கள் அவளுக்கு பக்க பலமாக இருக்க யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை.
“ஏய் நீ ரொம்ப ஓவரா போராடி... என் குடும்பத்தை கூட்டிட்டு வந்து எல்லோருக்கும் முன்னாடி வச்சி அசிங்கப்படுத்திட்டில்ல. உனக்கு இருக்குடி..” என்ற சஞ்சுவை தூசியாக தட்டி விட்டவள்,
“மாமா நீங்க போய் உங்க மருமகளுக்கு சீர் செய்யிங்க” என்று சொன்ன ஆதினியை ஒரு பார்வை பார்த்த கனிகா,
“அங்கயே நில்லுங்க மாமா” என்று அவரை நிறுத்தினாள்.
“என்ன ஆச்சு...?” என்று கூர்மையான பார்வையை தன் தமக்கையின் மீது வீசினாள் ஆதினி.
“எனக்கு எதுவும் ஆகல...” என்று ஒரு கணம் நிறுத்தி அங்கிருந்த அத்தனை பேரையும் ஒரு பார்வை பார்த்தவள் பின் தலை குனிந்து,
“அவரோட பிள்ளைக்கு அவர் சீர் செய்வது தான் சரி. யாரோ ஒருத்தவங்களடோ பிள்ளைக்கு நீங்க சீர் செய்ய வேணாம்” என்று கனிகா சொல்ல விசாகன் கையில் இருந்த தட்டு பொத்தென்று தரையில் விழுந்து சிதறியது.
அதை விட சத்தமாக பெருவளத்தானின் இதயம் நொறுங்கிப் போனது. கனிகாவை வைத்த கண் வாங்காமல் பார்த்தான். அவள் தலையை நிமிர்த்தவே இல்லை... தன் கணவனின் அடிபட்ட பார்வை தன் மீது தான் இருக்கிறது என்று அறிந்தும் கனிகா நிமிரவே இல்லை.
“ஏய் உனக்கென்ன பைத்தியமா...? என்ன பேசிட்டு இருக்கன்னு தெரிஞ்சு தான் பேசுறியா? உனக்கு இவங்களை விட வேற யாரோ முக்கியமா போயிட்டாங்களா கனிகா? இதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன். விசாகன் மாமா தான் முறை செய்யணும்” என்ற ஆதினியை நிமிர்ந்து பார்த்தவள்,
“சொன்னா புருஞ்சுக்கோ ஆதினி. இவங்க முறை செய்யிறது தான் சரியா வரும். நீ பிரச்சனை பண்ணாம ஒதுங்கி நில்லு” என்று ஆதினியை சொல்ல குமுதாவுக்கு பத்திக் கொண்டு வந்தது.
“ஏன்டி நீ சொல்ல மாட்ட... நீ இதுவும் சொல்லுவ இதுக்கு மேலையும் சொல்லுவ. அவளோட உழைப்புல தான் உனக்கு இவ்வளவு ஏற்பாடும் நடந்து இருக்கு. ஆனா அவ உன் விழாவை விட்டு ஒதுங்கி இருக்கணும் இல்லை... ஏன்டி இப்படி நன்றி கேட்ட தனமா நடந்துக்குற... உன் புருசனை பாருடி நீ சொன்ன சொல்லுல உடைஞ்சி போய் நிக்கிறத..” என்று குமுதா குமுற ஏறெடுத்து தன் கணவனை பார்த்தாள்.
உன் பிள்ளையை உன் மனைவி சுமக்கல. வேற ஒருவருடைய குழந்தையை உன் மனைவி சுமந்துக்கிட்டு இருக்கலாமே என்று கேட்ட பொழுது கூட உடைந்து போகதவன் தான் சொன்ன சொல்லில் அடிவரை ஆட்டம் கண்ட மரமாய் உடைந்து சிதறிய மனதுடன் தன்னையே பார்த்துக் கொண்டு இருந்தவனை பார்த்தவளுக்கு கண்கள் கலங்கிக்கொண்டு தான் வந்தது.
ஆனால் அதை அடக்கிக்கொண்டு பெருவளத்தானிடம் இரு கரம் கூப்பி, “எனக்காக எவ்வளவோ பொறுத்துக்கிட்டீங்க. எவ்வளவோ செய்துட்டீங்க. இந்த ஒரு விசயத்தையும் பொறுத்துக்கோங்க.” என்று கேட்டவளின் கோரிக்கையில் உயிரும் உள்ளமும் சுக்கு நூறாய் உடைந்து சிதறியது பெருவளத்தானுக்கு..





