வெளியே மழை சோவென்று பெய்துக் கொண்டு இருக்க அந்த பெரிய வீட்டின் கூடத்தில் அமைதி நிலவியது. அங்கிருந்த இருவரும் எதிரில் அமர்ந்து இருந்த பெண்ணவளை தான் கெஞ்சலுடன் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.
அவர்கள் மட்டும் அல்லாது வெப் காலில் இருந்த அவளின் கூடப்பிறந்த அண்ணனும் அவளின் பதிலுக்காக காத்துக் கொண்டு இருந்தான்.
“என்ன எல்லோரும் என்னையே பார்த்துக்கிட்டு இருக்கீங்க.. என்னால முடியாதுன்னா முடியாது தான்” என்றாள் திட்டவட்டமாக.
“மகி நீயே இப்படி சொன்னா நாங்க எங்க போறது.. அவன் பாவம் தானே” என்ற அண்ணனை கடுப்புடன் பார்த்த மகரியாள்,
“அவனை பாவம் பார்த்தா” என்ற நேரமே மூவரும் முறைக்க,
இரு கைகளையும் மேலே தூக்கி, “அவர்.. அவர்.. போதுமா” கடுப்புடன் சொன்னவள்,
“அவரை பார்த்தா என் நிலைமை என்னத்துக்கு ஆகுறது.. அவர் கூட எல்லாம் மனுசன் இருக்க முடியுமா? என்னை எதுக்காக அவர் கூட கோர்த்து விடுறீங்க.. எனக்கு இன்னும் மூணு மாசத்துல கல்யாணம் இருக்கு ஞாபகம் இருக்கு தானே” தன் அண்ணனை முறைத்தாள்.
“எங்களுக்கு ஞாபகம் இருக்குடா. உன்னை அப்படி எல்லாம் விட்டுட மாட்டோம்.. இந்த மூணு மாசம் நமக்கு நேரம் இருக்கு. அதுக்குள்ள அவனது ஸ்ட்ரெசை எப்படியாவது குறைச்சா எல்லோருக்கும் நல்லது தானே.. அவனுக்கும் ஒரு பெண்ணை பார்த்து கல்யாணம் பண்ணி வச்சுடலாம்” என்ற அண்ணனை இயலாமையுடன் பார்த்தாள் மகரியாள்.
“ஆமாம்டா.. இப்போதைக்கு உன் ஹெல்ப் தான் தேவை படுத்து. புதுசா கல்யாணம் ஆகி வர்ற பொண்ணுக்கிட்ட அவனை குடுக்க முடியாது. அவன் படுத்துற பாட்டுக்கு வர்ற பொண்ணு இரண்டு நாள் கூட தாக்கு பிடிக்காம மிரண்டு போய் ஓடிப் போனாலும் ஓடிப் போயிடும். அவனை பத்தி நல்லா தெரிஞ்ச நமக்கு தான் அவனை எப்படி சமாளிக்கிறதுன்னு தெரியும்” என்றார் துளசிநாதன்.
அதை கேட்டு பெருமூச்சு விட்டாள் மகரியாள்.
“ஆமாம் மகி.. அவனுக்கு இப்போ நம்ம சப்போர்ட் தான் வேணும்.. ஓவர் டிப்ரஷனால் இருக்கான். இப்போ நாம அவனுக்கு சப்போர்ட் பண்ணலன்னா எங்க நண்பன் எங்களுக்கு கிடைக்காமலே போயிடுவான். ப்ளீஸ் அவன் கூட இருந்து அவனை பார்த்துக்கோ மகி. இந்த ஒரு உதவி மட்டும் எங்களுக்காக செய்யேன்” என்று கோரிக்கைவைத்தான் கேசவன்.
“நான் சொல்ற எதையும் அவர் கேட்க மாட்டாரு” என்றாள் இறுதி முயற்சியாக.
“ம்ஹும் அப்படி சொல்லாத மகி.. அவன் நீன்னா கொஞ்சம் அடங்கி தான் போவான்.. நாங்க தான் சின்ன வயசுல இருந்தே பார்த்துட்டு இருக்கோமே..” என்ற அண்ணனை முறைத்துப் பார்த்தாள்.
“இல்ல மகி நிஜமாவே அவன் உன்னை னா ஒன்னும் சொல்ல மாட்டான். இதே இது நர்ஸ் டாக்டர் யாராவது ஏற்பாடு செய்தா கண்டிப்பா அடிச்சே துரத்தி விட்டுடுவான்” என்றான் உள்ள அடங்கிப் போன குரலில்.
“ம்கும்.. அப்படியே என் பேச்சை கேட்டுட்டாலும்.. வெறுமென பில்டப் குடுத்து வச்சு இருக்கான். அங்க போனா என்னென்ன பாடு படுத்துவான்னு எனக்கு தானே தெரியும்” மனதில் பல்லைக் கடித்துக் கொண்டவள்,
“ராஜா” என்றாள் அண்ணனை..
“உன் அண்ணனுக்காக இதை செய் மகி” என்றான் இறைஞ்சலாக.
அதற்கு மேல் அவர்களை கெஞ்ச விட மனம் வராமல் நீண்ட பெருமூச்சு விட்டவள், “இப்பவே சொல்லிட்டேன் மூணு மாசம் மட்டும் தான் அவர் கூட இருப்பேன்.. அதுக்குள்ள அவர் ரெக்கவர் ஆனா ஓகே. இல்லன்னா நான் பாட்டுக்க கிளம்பி வந்துடுவேன்.. அப்புரமா என்னை எதுவும் சொல்லக் கூடாது. எனக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கு. நானும் பிரஷனும் கல்யாணம் பண்ணிக் கொண்டு அமெரிக்கா கிளம்பிடுவோம். யாரும் தடுக்கக் கூடாது” கண்டிஷன் போட்டாள்.
“ஓகே ஓகே.. உன்னை யாரும் தடுக்க மாட்டாங்க.. நீ தாராளமா கிளம்பலாம்” என்றார்கள் மூவரும் ஒரே குரலாக.
அதன் பிறகு வேலை மடமடவென்று நடந்தது.. அவளை முழுமையாக கிளப்பி அவனின் வீட்டிற்கு கூட்டிக்கொண்டு போனார்கள் கேசவனும் அவனின் அப்பாவும்.
மகரியாளின் அண்ணன் ராஜேந்திரன், கேசவன் இவர்களோடு இன்னொருவன் அவன் தான் தான் ஆதித்யன். இவர்கள் மூவரும் மிக மிக நெருங்கிய நண்பர்கள். இதில் கேசவனுக்கு மட்டும் அப்பா இருக்கிறார் அவர் தான் துளசிநாதன்.
மற்ற இருவருக்கும் அப்பா அம்மா யாரும் இல்லை. இந்த நால்வருக்கும் அப்பா அம்மாவா பார்த்துக் கொள்வது துளசிநாதன் தான். அவர் நண்பர்களின் பிள்ளைகள் தான் இவர்கள்.
பிள்ளைகளின் கல்லூரி பருவத்தில் விழாவுக்கு சென்று திரும்பி வரும் பொழுது ஒரு கோர விபத்தில் ஆதித்யன் பெற்றவர்கள், ராஜேந்திரன் பெற்றவர்கள், கேசவனின் அம்மா என ஐந்து பேரும் சிக்கி வெறும் மூட்டையாக திரும்பி வந்தார்கள்.
இதில் ஆதித்யன் ஒற்றை பிள்ளையாக வளர்ந்தவன். ராஜேந்திரனுக்கு மகரியாள் என்ற தங்கையும், கேசவனுக்கு அபிராமி என்கிற தங்கையும் உண்டு. இதில் அபிராமிக்கு மட்டும் திருமணம் ஆகி இருந்தது. அவள் கணவனுடன் டெல்லியில் செட்டில் ஆகி விட்டாள்.
இதில் தனியாக வளர்ந்த ஆதித்யனுக்கு பிடிவாத குணம் ரொம்ப அதிகம். கூடவே யாருடனும் அவ்வளவு எளிதாக ஒட்ட மாட்டான். அவனை தங்களுக்குள் இழுத்துக் கொள்ள ராஜாவும் கேசவும் அரும்பாடு பட்டு போனார்கள். தாய் தந்தையை இழந்த பிறகு அவன் இன்னும் அவனது ஓட்டுக்குள் சுருண்டுக் கொண்டான்.
அதில் அவனுக்கு அதிக அளவு ஸ்ட்ரெஸ் ஏற்பட்டு மூச்சு திணறல் வந்து, மூக்கில் இருந்து உதிரம் கொட்டும் அளவுக்கு போய் விட்டது.
அப்பொழுதும் யாருடைய உதவியும் இல்லாது தானே மருத்துவ மனையில் போய் படுத்துக் கொண்டான். வேலைக்காரர்கள் மூலம் விசயம் கேள்வி பட்டு கேசவனும் துளசிநாதனும் அடித்துப் பிடித்துக் கொண்டு போய் பார்க்க கண்களை மூடி படுத்து இருந்தான் பிடிவாதக்காரன்.
“ஏன்டா இப்படி பண்ற? நாங்கல்லாம் செத்தா போயிட்டோம். எங்க கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்காலாம் தானே” என்றவனுக்கு எந்த பதிலும் சொல்லாமல் இன்னும் அழுத்தமாக படுத்து இருந்தான்.
துளசிநாதனுக்கு தாங்க முடியவில்லை இப்படி அனாதையாக படுத்து இருந்தவனை கண்டு.
கண்கள் கலங்க,
“ஆதி.. ஏன்ப்பா இப்படி பண்ற..? என்னை நம்பி தான் உன்னை விட்டுட்டு போயிருக்கான் என் நண்பன். அவனை பேர் சொல்ல நீ மட்டுமாவது இருக்கன்னு நான் நினைச்சுக்கிட்டு இருக்கேன்..” என்று தளுதளுத்து சொன்னவரை நிமிர்ந்துப் பார்த்த ஆதித்யன்,
“நான் இன்னும் செத்துப் போகல அங்கிள்” என்றான்.
“வாய்டா உனக்கு.. செத்துப் பாரு அப்போ தெரியும்” பொங்கி விட்டார் அவர்.
“ப்ச்” என்றவன், “ஜூஸ் போட்டு குடுங்க. தொண்டை எல்லாம் வறண்டு போச்சு” என்றான்.
“அதுக்கு தானே வந்து இருக்கோம்” என்று கடுப்படித்தான் கேசவ்.
“சும்மா இருடா பிள்ளையை ஏதாவது சொல்லிக்கிட்டு” என்று அதட்டிய நாதன் அவன் கேட்ட ஜூசை போட்டு நீட்டினார்.
“நீங்க இப்படி செல்லம் குடுத்து தான் அவன் ரொம்ப ஆடுறான்” என்று பல்லைக் கடித்தான் கேசவ். ஆனாலும் அவன் உள்ளுக்குள் ஆடி தான் போய் இருந்தான். மருத்துவரிடம் ஆதியின் நிலையை பற்றி விசாரிக்க சென்றதில் அவன் அதிக மன அழுத்தத்தில் இருப்பதாக சொல்ல தவித்துப் போய் விட்டான்.
அந்த நேரம் பார்த்து ராஜா கம்பெனி விசயமாக லண்டன் போய் இருந்தான். அவனுக்கு போனை போட்டு விசயத்தை சொல்ல,
“இனியும் அவனை தனியா விட்டா சரி வராது. மகியை அவன் கிட்ட அனுப்புறேன்.. எப்படியும் அவன் நம்மோட வந்து இருக்க மாட்டான். அதனால மகி அங்க போனா தான் சரி வரும்” என்று முடிவெடுத்து அவளை பேக்கும் பண்ணி இதோ கூட்டிக்கொண்டு போய் விட்டார்கள்.
அந்த பெரிய வீட்டை பார்க்கும் பொழுதே உள்ளுக்குள் கலவரம் மூண்டு இருந்தது மகிக்கு.
வெளியே கொட்டிக் கொண்டு இருந்த மழையை ஒரு பார்வை பார்த்தவள் அந்த வீட்டின் நடுக் கூடத்தில் வந்து அமர்ந்தாள். கூடவே நாதனும் கேசவும் அமர்ந்து இருந்தார்கள். பணியாளர்கள் வந்து தேநீர் குடுத்து உபசரிக்க, தலையை ஆட்டி எடுத்துக் கொண்டாள் மேலே ஏதோ சத்தம் கேட்க நிமிர்ந்துப் பார்த்தாள்.
படியில் தடதடவென்று இறங்கிக் கொண்டு இருந்தான் ஆதித்யன். அவனின் நீண்ட நெடிய உயரம் பார்த்தே சில நாட்கள் மலைத்து நின்றது கண் முன் வர தலையை திருப்பிக் கொண்டாள்.
அவனை ஆவென்று பார்த்தால் இன்னும் அவனுக்கு கொம்பு முளைக்கும்.. ரொம்ப ஓவரா போவான்.. எண்ணியவள் கொஞ்சம் அலட்சியமாக அமர்ந்துக் கொண்டாள்.
“என்ன மூணு பேரும் சேர்ந்து வந்து இருக்கீங்க..” அவனின் குரலில் இருந்த அழுத்தமும் அலட்சியமும் பெண்ணவளின் பீப்பியை எகிற வைத்தது. அதுவும் அவள் அருகே இருந்த பேக்கை அவன் பார்த்த பார்வையில் அப்படியே திரும்பி போய் விட்டால் என்ன என்று தோன்றியது.
“இதுக்கு தான் நான் வரலன்னு சொன்னேன்.. பாருண்ணா எப்படி ஓவரா ஆட்டிட்யூட் காட்ராருன்னு” கேசவிடம் முணகினாள்.
“பொறுமையா இரு மகி.. அவன் இப்படி தான்னு நமக்கு தெரியுமே..” என்றான் கெஞ்சலாக.
“அதுக்காக ரொம்ப ஓவரா போறாரு” அடிக் கண்களால் ஆதியை முறைத்தாள் மகி.
நாதன் தான் தாங்கள் வந்த காரணத்தை சொல்லி “மகி கொஞ்ச நாள் இங்க இருக்கட்டும் ஆதி.. ராஜாவும் ஊர்ல இல்ல.. அதனால தனியா எப்படி விட முடியும். உன் கிட்ட இருந்தா அவளுக்கும் பாதுகாப்பா இருக்கும்” என்று அவர் சொல்ல,
“ஏதே.. பாதுகாப்பா இவர் கிட்டயா? சுத்தம் திருட்டு பூனைக்கிட்டையே கருவாட்டை குடுத்த கதையா போச்சு” வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டாள்.
“அப்படின்னா சரி” என்றவன் மேற்கொண்டு ஒன்றுமே சொல்லவில்லை.
“என்ன இவ்வளவு சீக்கிரமா ஒத்துக்கிட்டான். அப்படி எல்லாம் ஒத்துக்குற ஆள் இல்லையே இவன்” மனதுக்குள் எண்ணியவள் ஆதியை பார்த்தாள்.
அவனும் இவளை தான் பார்த்துக் கொண்டு இருந்தான். அவனின் பார்வையில் திடுக்கிட்டுப் போனவள் தன் பார்வையை மாற்றிக் கொண்டாள்.
“ஏன் உங்க வீட்டுல வச்சுக்க வேண்டியது தானே..” என்று நாதனிடம் கேட்கவில்லை. ஆதி ஒத்துக் கொண்ட உடனே,
“சரிம்மா பார்த்துக்க.. நாங்க கிளம்புறோம்” என்று நாதனும் கேசவனும் கிளம்பி விட்டார்கள்.
“அட பாவிங்களா சிங்கத்துக்கிட்ட ஒத்தையா மாட்டி விட்டுட்டு போயிட்டீங்களே” கதறியவள் வெளியே எதுவும் பேசாமல் அப்படியே அமர்ந்து இருந்தாள்.
“இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே இருக்க போறதா உத்தேசம்?” அவளிடம் நேரடியாக கேட்டான். அந்த கேள்வியிலே உள்ளுக்குள் பதறிப் போனவள் அவனை நிமிர்ந்துப் பார்த்தாள்.
“என் அறை தெரியும் தானே”
“ம்ம்”
“அங்கயே தங்கு” என்றவன் எழுந்து போய் விட,
“ஏதே ஒரே அறையா?” விக்கித்துப் போனாள் மகரியாள்.
தொடரும் 💞💞
படித்து விட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே நன்றி
nice





