Notifications
Clear all

அத்தியாயம் 26

 
Admin
(@ramya-devi)
Member Admin

பெருவளத்தானுக்கும் சிரிப்பு வந்தது. இதென்ன சின்ன பிள்ளை தனமாக என்று அவன் யோசிக்கவில்லை. சின்ன பிள்ளை ஆசைப்பட்டு கேட்கிறாள் நிறைவேற்றுவோமே என்று தலையை ஆட்டி ஒப்புதல் கொடுத்தவன்,

ஆதினி போன பக்கம் இவனும் போனான். போன உடனே, “இந்த கல்யாணத்தை நிறுத்திடுங்க” என்று சொன்னாள். அவளை பற்றி ஏற்கனவே வைகுந்தன் அவனிடம் சொல்லி இருந்தார்.

“எங்க வீட்டுல எங்க சின்ன குட்டி தான் தனி ரகம். அவளை மட்டும் நீங்க கொஞ்சமே கொஞ்சம் பொருத்து போகணும் தம்பி. எல்லா வேலையிலும் படு சுட்டி. ஆனா ரொம்ப கோவம் வரும். ரொம்ப நல்லவ தான். என்ன அதுக்கேத்த உரம் அவளுக்கு கொஞ்சம் சாஸ்த்தி. அவளை மட்டும் மடக்கி போட்டுடுங்க... என்று அவனிடம் சொல்லி இருக்க அப்போதிலிருந்து பெருவளத்தானுக்கு ஆதினி குட்டியாகவே மாறிபோனாள்.

அன்று அந்த குட்டி சொன்னதை தீர விசாரித்து இருந்து இருந்தால் இன்று இப்படி இரண்டு உள்ளமும் வேதனை பட்டு இருக்காதே என்று நொந்துப் போனான்.

நீ எல்லாத்திலும் சரியாகத் தான்டி இருக்க. நான் தான் எல்லாவற்றிலும் சொதப்பி வச்சுட்டேன் என்று கன்னம் கன்னமாக அறைந்துக் கொண்டான்.

“சிறு பிள்ளை பேச்சுன்னு அசால்ட்டா விட்டுட்டேன்டி கண்ணம்மா. அப்பொழுதே அதை ஆழமா கவனித்து இருந்தா உன்னை எல்லோரும் சுத்தி நின்னு கேள்வி கேட்கிற நிலமைக்கு விட்டு இருந்து இருக்க மாட்டன்டி. எல்லா தப்பும் என்னோடது தான் கண்ணம்மா” என்று காலம் கடந்து உருகினான் பெருவளத்தான். மனம் கொஞ்சம் கூட ஆறவில்லை. இப்பொழுதே ஆதினியை இழுத்து தன் கைகளுக்குள் வைத்துக் கொள்ள துடிதுடித்துப் போனான்.

ஆனால் அவளின் நிழலை கூட தொட முடியாத பாவியாகி நின்ற தன் நிலையை எண்ணி இன்னும் நொந்துப் போனான்.

இந்த காலம் அப்படியே பின்னால் கடந்து போய் மூணு நான்கு வருடங்களுக்கு பின்னோக்கி போனால் எல்லாவற்றையும் சரி செய்துக் கொள்வேனே என்று மாய்ந்துப் போனான். அவனது முகத்திலும் நெஞ்சிலும் ஏமாற்றம் அப்பட்டமாய் அறைய தாயின்றி, மார்பில் போட்டு தேற்றி எடுக்க ஆளில்லாத சிறு பிள்ளையாய், நீரில் இருந்து தவறி தரையில் விழுந்த சிறுமீனாய் வாழ்வின் இறுதி நொடிக்காக துடிதுடித்துக் கொண்டு இருப்பது போல பெருவளத்தானின் தற்போதைய நிலை இருந்தது.

காதல் கொண்ட இரு மனங்களும் காதலை உள்ளுக்குள் புதைத்து வைத்துக் கொண்டு மௌனமாக நாட்களை கடத்திக் கொண்டு இருந்தது. எதிர்காலமற்ற இந்த காதல் தான் இருவரையும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது என்றால் மிகையில்லை.

இந்த காதலில் கைக்கோர்த்து நெடுந்தூரம் பயணிக்கவில்லை, மணிக்கணக்காக அமர்ந்து கதை பேசவில்லை, கண்ணோடு கண் கலந்து கவி பாடவில்லை, இதழ் முத்தம் பரிமாறிக் கொள்ளவில்லை, மூச்சு முட்ட நெருக்கம் காட்டவில்லை... ஆனால் இது அத்தனையும் நடந்து காதல் கொண்ட உறவை விட, கடலளவு வெறும் நேசம் மட்டுமே கொண்ட இவர்களின் காதலில் உணர்வுகள் மட்டுமே காதலை வளர்க்கும் கருவியாக இருந்தது.

உணர்வில் குளித்து வந்த காதல் என்பதால் தான் இதை அவ்வளவு எளிதாக அழிக்க முடியவில்லையோ என்னவோ... நெஞ்சு நிறைய காதலை சுமந்துக் கொண்டு அதை காட்ட வழியின்றி இரு உள்ளமும் அமைதியில் நிறைந்து இருக்கிறது..!

என்றைக்கு கரை உடைக்குமோ தெரியவில்லை. கரை உடையும் நாளில் சேதாரம் அதிகம் ஆகும் என்பது மட்டும் நன்றாக தெரிகிறது.

அடக்கி வைத்த எந்த உணர்வுகளுக்கும் வீரியம் அதிகம் என்று பெருவளத்தானும் ஆதினியும் உணரும் வேலை வருமோ என்னவோ...?

பெருவளத்தானின் வீட்டுக்கு கனிகா வந்து இரண்டு நாட்கள் ஆகிய பொழுதும் பெருவளத்தான் வீட்டுக்கு வராமல் போக மாமனார் மாமியாரிடம் கேட்டாள்.

“ஏன் அவர் வீட்டுக்கு வரவே இல்லை. என்ன ஆச்சு?” என்று கேட்க,

“அவன் வீட்டுக்கு வந்து ரொம்ப நாள் ஆகுது” என்று பட்டும் படாமலும் சொன்ன விசாகனை ஒரு பார்வை பார்த்தவள் பெருவளத்தானுக்கு போனை போட்டாள். ரிங் போய்க்கொண்டே இருந்தது.

எடுத்தபாடே இல்லை. கடை எண்ணுக்கு போன் போட்டாள். அண்ணன் வேலையா இருக்காரு என்று சொல்லி வைக்கப் பட கனிகாவுக்கு கோவம் கோவமாய் வந்தது. தன்னை இவர் தவிர்க்க பார்க்கிறார் என்று எண்ணியவள் கிளம்பி கடைக்கு சென்றாள். அங்கே அவன் இல்லாமல் போக, “எங்க” என்று கேட்டு அந்த இடத்துக்கே அவனை தேடிப் போனாள்.

அந்த ஊரில் மிகப்பெரிய வணிக வளாகத்தை கட்டும் பணியில் ஈடுபட்டு இருந்தாள் ஆதினி. அதன் மேற்பார்வை முழுவதும் இவளிடம் தான். டிசைன் முதற்கொண்டு வேலைக்கு ஆட்கள், இஞ்சினியர்ஸ், டீலர்ஸ், இன்டீரியர் என அனைத்தும் இவள் தான்.

எனவே இரண்டு நாட்கள் சிமென்ட் மணல் கேட்பதை விட கம்மியாக சப்லை ஆகவும் அன்று பெருவளத்தானை கட்டிடம் கட்டுமிடத்துக்கே வர சொல்லி சொன்னாள்.

இவனும் தன் அவளை காணும் ஆர்வத்தோடும் மூச்சு முட்டும் காதலை அடக்கிக்கொண்டு அவளின் எதிரில் வந்து நின்றான்.

அதுவரை கலைந்து இருந்த தலையை படிய வாரி கசங்கிய சட்டையை அவிழ்த்து ஒரு உதறு உதறிவிட்டு போட்டுக் கொண்டு வந்து இருந்தான். அவனிடம் எப்பொழுதும் இருக்கும் கம்பீரம் அப்படியே இருந்தது. ஆனால் உடல் மெலிவு அப்பட்டமாய் தென்பட்டது.

கண்களின் கீழ் கருவளையம், ஒட்டிப்போய் இருந்த கன்னம் என தன் முன் வந்து நின்றவனை கண்கள் கலங்க பார்த்தவள் சொற்கள் வராமல் தொண்டை அடைத்துக் கொண்டு வந்தது. நன்றாக இருப்பான் என்று தான் இவ்வளவு நாளும் எண்ணி இருந்தாள். ஆனால் அவன் இப்படி ஒரு தோற்றத்தில் தன் முன் வந்து நிற்பான் என்று எதிர் பார்க்காதவள் ரொம்பவே தடுமாறிப் போனாள்.

சுற்றிலும் அவளுடைய அசிஸ்டெண்ட்ஸ் அவள் தடுமாறுவதை பார்த்து “மேம்..” என்று அவளை அசைக்க,

“நத்திங்” என்றவள் பெருவளத்தானை நேரடியாக பார்க்க முடியாமல் தடுமாறியவள் அவனுக்கு முதுகு காட்டி நின்று,

“என்ன ஆச்சு... ஏன் சப்ளை சரிவர வரல...?” என்று கம்பீரமாகவே கேட்க முனைந்தாள். ஆனால் அதில் சிறு பிசிறு தெரிந்தது என்றாலும் கம்பீரமாக தான் குரல் வந்தது. ஆனால் பெருவளத்தானுக்கு அவளுடைய குரல் வளமும் நிமிர்வும் நன்கு தெரியுமே... அதனால் அவளிடம் ஏற்பட்ட இந்த சின்ன வித்யாசம் கூட நன்றாக புரிந்தது. தான் வந்தவுடன் அவளின் கண்கள் தன்னை உச்சந்தலை முதல் பாதம் வரை ஆராய்ந்ததும் அதை தொடர்ந்து தன் தோற்றத்தில் தென்பட்ட தோய்வில் அவள் கண்கள் கலங்கியதும் பார்த்துக் கொண்டு தானே இருந்தான்.

 

Loading spinner

Quote
Topic starter Posted : January 29, 2026 2:50 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top