அந்த நேரம் வெள்ளியம்பலத்தார் ஏதோ சத்தம் கேட்க வெளியே எட்டி பார்த்தார். மூவரும் கீழே அமர்ந்து காபி குடித்துக்கொண்டு இருந்தார்கள்.
பின் உள்ளே சென்று ஒரு சால்வையை எடுத்துக்கொண்டு வந்து தன் மருமகளிடம் நீட்டி,
“போத்திக்க த்தா குளிரும்...” என்று பனிவாடையை சுட்டி காட்டி குடுக்க சின்ன சிரிப்புடன் வாங்கி கொண்டாள்.
“ஏன் இந்த நேரத்துக்கு இங்க உட்கார்ந்து இருக்கீங்கன்னு ஒரு வார்த்தை கூட அவர் கேட்கவில்லை. திரும்பி தன் அறைக்கு செல்ல,
“யய்யா நீரும் கொஞ்சம் காபி தண்ணி குடிக்கிறியாய்யா...?”
தயக்கமில்லாமல் “குடுங்க த்தா...” என்று சொல்லிவிட்டு நிலை படியின் அருகில் இருக்கும் பெரிய இருக்கையில் அமர்ந்துக்கொண்டார்.
அவரின் காலின் கீழே இவர்கள் மூவரும் அமர்ந்து இருந்தார்கள்.
நால்வரும் அந்த நேரத்தில் அந்த சூடான காபியை ரசித்து குடித்துக்கொண்டு இருந்தார்கள்.
“நான் அவனுக்கு அழைக்கவா த்தா...” தன் போனை எடுத்து காட்ட,
“வேணாங்க மாமா... அவுக கோவமா போயிருக்காக அவுக போக்குலயே வரட்டும்...” என்றாள்.
“அதுவும் சரி தான்...” என்றார்.
அந்த நேரம், “வந்தா ரெண்டு பேரும் வருவாளுக இல்லையா வராம என்னை என் உயிரை எடுப்பாளுக... எங்கத்தா போனீக மவராசி ரெண்டு பேரும்...” என்று தன் வீல்சேரில் வந்தார் வடிம்பலம்ப நின்ற பாண்டியர்.
“ம்கும் காலம் போன கடைசியில இந்த மனுசருக்கு ரொம்ப தான் குசும்பு... இங்க தான் ரெண்டு பெரும் இருக்கோம்... இங்கன வாங்க...” என்று ராக்காயி குரல் கொடுக்க,
“ஏட்டி தூங்கலையா... என்ன இந்த நேரத்துல மாநாடு...” என்று வந்தவர் அப்பொழுது தான் தன் மகனும் அங்கு இருப்பதை கண்டார்.
“அய்யா நீரும் உறங்க போகலையா...?”
“இல்லிங்கய்யா ஆத்தாமாருகளும் மருமகளும் இருக்கவும் நானும் இங்கன வந்துட்டேன்... நீங்களும் வாங்கய்யா...” என்று அவரை தள்ளிக்கொண்டு வந்து தனக்கருகில் இருத்திக்கொண்டார்.
தாத்தாவோட வீல்சேர் ஆட்டோமேட்டிக் என்றாலும் தந்தையின் மீது உள்ள பாசத்தால் தானே அவரை பாதி தூரம் சென்று அழைத்துக்கொண்டு வந்தார் வெள்ளியம்பலத்தார்.
அதன் பிறகு அது இது என்று எதையோ பேசிக்கொண்டு இருந்தார்கள்.
பொழிலிக்கு உள்ளுக்குள் ஒரு சந்தேகம் இருந்தது. எப்படி தான் இருக்கும் இடத்தை இவர்கள் கண்டு பிடித்தார் என்று. அதை வாய்விட்டே ஆத்தாமார்களிடம் கேட்டுவிட்டாள்.
“இதென்ன பெரிய விசயமாத்தா... நம்ம திருவிழால அந்த சிங்காரிய பார்த்தோம்... அதோட நீ வெளியில போனா உன் பாதுகாப்புக்குன்னு எப்பவும் நம்ம பவளத்தோட மாமன் கூட வருவான்.. கடைசி நாள் நீ பாண்டியனுக்கு சாப்பாடு குடுத்துட்டு உன் ஊருக்கு போகும் போது அவனும் கூட வந்தான். அவன் சொல்ற பாதையில நானும் பிச்சாயும் வந்தோம்.” என்று சொல்ல, அவளின் கண்கள் விரிந்தது.
“ஆத்தா...” வியந்து நின்றாள்.
“ஆமா கண்ணு...” என்று பிச்சாயி மேற்கொண்டு சொல்ல ஆரம்பித்தார்.
“நீ போனத உடனே வீட்டை விக்கிறத பத்தி பக்கத்து வீட்டு ஆளிடம் பேசிக்கிட்டு இருந்ததை நாங்க கேட்டோம். உனக்கு தெரியாம அவுகக்கிட்ட பேசி உடனடியா உனக்கு பணம் குடுக்க சொன்னோம்... உன்ற அய்யா பேர்ல தான் இன்னும் இருக்கு அந்த வீடு.” என்று சொல்ல
“எப்படி ஆத்தா... அப்போ பணம்... கையோட கொண்டு வந்தீங்களா...?”
“இல்ல கண்ணு...”
“பின்ன எப்படி ஆத்தா...?”
“பொறவு கழுத்துல தொங்க தொங்க போட்டு இருக்குற இந்த சங்கிலி எல்லாம் எதுக்காம்... இப்படி ஆத்திர அவசரத்துக்கு உதவ தானே...?” என்று சொன்னார் நின்ற பாண்டியர்.
“தாத்தா...” என்றாள் நெகிழ்ந்து போய்.
“என்ற பொண்டாட்டிங்க ரெண்டு பேரும் கழுத்துல நகை போடுறது வெறும் ஆடம்பரத்துக்கு மட்டும் இல்ல கண்ணு... இப்படி ஆத்திர அவசரத்துக்கு எங்கயாவது போகும் போதோ வரும்போதோ தேவைபட்டா அதை அடமானம் வச்சி பண நெருக்கடியை சமாளிக்க தான்... என்ற மனைவிமாறுக இது வரையிலும் எத்தனையோ சங்கிலியை உதவி தேவை படுறவங்களுக்கு கலட்டி குடுத்து இருக்காக...” என்று அவர் பெருமிதமாய் மீசையை முறுக்க,
“எங்க கழுத்துல சங்கிலி குறைய குறைய இவுகளும் எந்த கேள்வியும் கேட்காம உடனே அடுத்து அடுத்து சங்கிலி வாங்கி போட்டு விட்றுவாக... அதுல ஒரு நிறைவை காணுவாங்க...” ராக்காயி பிச்சாயி இருவரின் முகத்திலும் மெல்லிய வெட்க சிரிப்பு இருந்தது.
“அப்படி தான் உடனடியா உனக்கு பணம் ஏற்பாடு செய்யப்பட்டது...” ஆத்தா சொல்ல, முற்றிலும் நெகிழ்ந்து போனாள்.
கழுத்தில் போட்டு இருக்கும் நகையை விற்று காசு தர யாருக்கு இந்த மனசு வரும்... ஆனால் இவர்கள் இருவருக்கும் வருமே... நெகிழ்ந்தவள் அவர்களின் மடியில் படுத்துக்கொண்டாள்.
இருவரும் அவளின் தலையையும் முதுகையும் தடவி நீவி கொடுக்க தன் தாய் மடியை கண்டு கொண்டவளுக்கு கண்களில் நீர் நிறைந்தது.
“எனக்கு அம்மா இல்ல... அம்மா இருந்தா எப்படி என்னை வச்சுக்குவாங்கன்னு தோணும். இப்படி தான் வச்சுக்குவாங்கன்னு உங்க மூலமா தெரிஞ்சுக்கிட்டேன் ஆத்தா...” அவள் கண்கள் கலங்கி சொல்ல கேட்டுக்கொண்டு இருந்த இரு மூத்த ஆண்களுக்கு தவிப்பாய் போனது...
“கண்ணு இப்போ எதுக்கு இப்படி கலங்குறவ... நீ சொன்னாலும் சொல்லாட்டியும் இவங்க ரெண்டு பேரோட பொண்ணும் பேத்தியும் நீ தான்...” நின்ற பாண்டியர் சொல்ல,
“ஆமாம்மா... அய்யாரு சொல்றது சரி தான்... நீ அவங்க பொண்ணு தான்... கண்ணை தொட...” என்று வெள்ளியம்பலத்தாரும் சொல்ல, அவளின் கண்ணீரை இரு ஆத்தா மார்களும் ஆளுக்கு ஒரு புறம் துடைத்து விட்டார்கள்.
அதை கடுப்புடன் வெளியே நின்று பார்த்துக்கொண்டு இருந்தான் பாண்டியன்...
“ம்கும் ஆளாளுக்கு இப்படி செல்லம் குடுத்து கொஞ்சுனா அவ எப்படி வழிக்கு வருவா...” முணகியவன் யார் கண்ணிலும் தென்படாமல் அங்கேயே நின்றான்.
வெள்ளியம்பலத்தாரை அருகில் காணாமல் போகவும் எழுந்து வெளியே வந்தார் மீனாச்சியம்மை. பார்த்தால் குடும்பமே அங்கு தான் இருந்தது.
‘என்ன இது குடும்பமே ஒண்ணா கூடி இருக்காங்க...’ என்றபடி அவரும் ஒதுங்கி நின்று அங்கு நடக்கும் நிகழ்வுகளை கவனிக்க தொடங்கினார்.
அதோடு தன் மாமியார்களின் மடியில் மிக்கவும் ஒய்யாரமாக தலைவைத்து படுத்து இருந்தவளின் உரிமையை கண்டு லேசாய் புகைச்சல் ஆனது அவளின் மாமியாருக்கு.
ஆனாலும் அவரின் முகத்தில் மெல்லிய புன்னகை இருந்தது... சட்டென்று அவரால் அவர்களுடன் ஒட்ட முடியவில்லையே தவிர அவர்களின் ஒட்டுதலை ரசித்துக்கொண்டு இருந்தார்.
Nice





