எந்த அலட்டலும் இல்லாமல் அரசு பேருந்து நிலையத்தில் வந்து நின்றாள். அவளது நேரம் பேருந்து உடனே வந்து விட்டது..
அதில் ஏறிக்கொண்டாள்.
“எந்தெந்த கனவுகளால் இந்த பூமி அழகாகிறதோ அந்த அழகு முழுவதும் காதலால் நிகழ்ந்தது. எந்தெந்த அவதிகளால் இந்த பூமி அழுது வடிகிறதோ அதுவும் காதலால் நேர்ந்தது தான்.. காதல் ஓர் அற்புதமான திரவம். அருந்த அருந்த மகிழ்ச்சி தரும். அருந்தி முடித்து அமர நினைக்கயில் திராவகமாகி விடுகிறது இந்த காதல்” என்கிறார் யுகபாரதி.
பாரதியோ...
“நானொருவன் மட்டிலும் - பிரிவென்பதோர்
நரகத் துழலுவதோ” என்று பாடுகிறார். எல்லாமே காதல் தான்...
காதல் சுட்டு எரிக்கும் சூரியனுக்குள்ளே உறைய வைக்கும் பனியையும் கொடுக்கும். அதன் பெயர் தான் காதல்..
காதல் காதல் என்ற நிகழ்ச்சியில் இருந்து உங்களுக்காக இதோ ஒரு பாடல்.. என்று மனதை வருடும் குரல் பேருந்தில் பொருத்தி இருந்த வானொலியின் அலைவரிசையில் இருந்து ஒலித்தது.
“காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம்...
இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம்..
புது மோகம்...
இதயம் இடம் மாறும்..
இளமை பரிமாறும்..
அமுதும் வழிந்தோடும்
அழகில் கலந்தாடா...” பாடல் ஒலிக்க குறுங்கண் ஓரம் அமர்ந்து இருந்தவளுக்கு இந்த பாடலுக்கு முன்பு ஒலித்த குரலில் பெரும் மயக்கம் முகிழ்த்தது.
ஓடி வந்த தென்றல் காற்று அவளின் கூந்தலை கலைத்து விட்டு சில்மிஷமாக ஓடிவிட அவளின் இதழ்களில் சின்ன புன்னகை.
அந்த புன்னகையோடும் வானொலியில் ஒலித்த குரலோடும் அவளது பயணம் தொடர்ந்தது.
என்னவோ இந்த காதல் காதல் என்ற நிகழ்ச்சி அவளை மிகவும் வசீகரித்தது. பல எழுத்தாளர்களின் காதல் மேற்கோள்களோடு அந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் நிகழ்ச்சியை கொண்டு போகிற விதம் அவளை மிகவும் வசீகரித்தது. அது மட்டும் தான் காரணமா என்று அவளிடம் கேட்டால் ஆமாம் என்று தான் சொல்லுவாள்.
ஆனால் அவள் அந்த நிகழ்ச்சியை விரும்பி கேட்கும் காரணமே வேறு அல்லவா... அது அவளின் உள் மனம் மட்டுமே அறியும்.
அவள் இறங்கும் இடம் வந்து விட நிகழ்ச்சி இன்னும் முடியவில்லை. தன் ஹெட்செட்டை எடுத்து காதில் மாட்டியவள், போனில் அந்த அலைவரிசையை வைத்து மீண்டும் கேட்க தொடங்கினாள்.
இறுதி பகுதிக்கு வந்து விட்டோம் என்று ஆர்ஜேவின் குரல் ஒலித்தது..
பச்சியப்பன் கவிதைகளில் இருந்து இதோ ஒன்று..
“மண்டி கிடக்கும்
காராமுட்களுக்கிடையில்
தளிர்த்தவைகளைப்
பசியோடு கடிக்கும்
வெள்ளாட்டினைப் போல
ஆடைகளுக்குள் உன் வாசம் தேடி
குளிர்கிறதென் பூமி” பிரிவின் ஆற்றாமையில் நொந்த உள்ளம் உடுத்தி போட்ட உடையில் காதலன்/லி யை தேடுகிறதாம் காதல் கொண்ட மனது.
என்ன அருமையான வரிகள்... இதோடு உங்களிடம் இருந்து விடை பெரும் நான் உங்கள் செஞ்சன்.
காதல் காதலில் நாளை மீண்டும் சந்திப்போம்... என்றவரிகளோடு இளையராஜாவின் பாடல் ஒலித்தது.
கண்களை மூடி தன வீட்டில் இருந்த உப்பரிகையில் போடப்பட்டு இருந்த ஊஞ்சலில் அமர்ந்து அந்த குரலை கேட்டுக் கொண்டு இருந்தாள் சங்கவை.
உடலெல்லாம் புல்லரித்தது. கண்களில் இருந்து மெல்லிய கண்ணீர் துளிகள் உருண்டோடியது. அவளின் நெஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாக கனக்க ஆரம்பித்தது.
இதழ்களிலோ வறண்ட புன்னகை. மெல்ல கண்களை திறந்தவள் ஊஞ்சல் மாட்டி இருந்த இரும்பு சங்கிலியில் தலையை சாய்த்து இலக்கற்று எங்கோ பார்த்தாள்.
அவளின் எண்ணங்களில் ஆயிரம் நினைவுகள் வந்து மோதியது. அதை ஒவ்வொரு நாளும் கடக்க நினைக்கிறாள். ஆனால் அது மட்டும் அவளால் முடியவே இல்லை.
சிறிது நேரம் அந்த கனத்துடனே அவளது நொடிகள் கரைந்துப் போனது. பின் மெல்ல இயல்புக்கு திரும்பி சுற்றிலும் பார்த்தாள்.
அந்தி வான சூரியன் முழு சிவப்பு நிறத்தில் மேற்கில் கொஞ்சம் கொஞ்சமாக மறைய ஆயத்தம் ஆகிக் கொண்டு இருந்தான்.
சுக்கு தட்டி தேநீர் போட்டவள் மீண்டும் உப்பரிகையில் வந்து அமர்ந்துக் கொண்டாள். அங்கும் இங்குமாய் நடமாடும் மனிதர்களோடு, கூடுக்கு திரும்பும் புள்ளினங்களையும் வேடிக்கை பார்த்தபடி தேநீரை இரசித்து குடித்தாள்.
அவளது அலைப்பேசி இசைத்தது. எடுத்து பார்த்தாள். அவளது அன்னை அழைத்து இருந்தார்.
“ம்மா” என்றாள்.
“தங்கம்” என்று அவர் அழைத்து மகளின் நலனை விசாரித்தவர்,
“ஊருல திருவிழாடா.. எப்போ வர்ற?” கேட்டார்.
“இப்போதைக்கு முடியாதும்மா. இங்க ஒரு படத்துக்கு பேசிட்டு இருக்கேன். அது முடிஞ்சா தான் வர முடியும்” என்றாள்.
“அப்படியா சாமி.. சரிடா கடைசி நாள் திருவிழாவுக்காவது வாம்மா” என்றார் புரிதலோடு.
“கண்டிப்பா ஒரு நாள்னா விடுமுறை கேட்டுட்டு வரேன் மா. கவலை படாதீங்க. அக்கா எப்போ வராலாம். அப்பா எப்படி இருக்காங்க.. தாத்தா பாட்டி எல்லாரும் நல்லா இருக்காங்களா?” என்று அனைவரையும் நலம் விசாரித்துக் கொண்டாள்.
மதராசில் தனித்து தங்கி இருக்கிறாள் சங்கவை. அவள் நிறைய படங்களுக்கும், சீரிஸ்களுக்கும், கார்ட்டூன் சேனலுக்கும், குறும்படங்களுக்கும் வாய்ஸ் குடுத்துக் கொண்டு இருக்கிறாள். தினமும் பிசி தான். அதே போல நாடகங்களுக்கும் அவள் குரல் கொடுத்துக் கொண்டு இருக்கிறாள்.
தனிமை அவள் விரும்பி ஏற்றுக் கொண்டு வந்து இருக்கிறாள். அவளின் குரலுக்கு அச்சாரம் போட்டதே அவளின் சஞ்சன் தான்.
சஞ்சன் அவளுக்கு மிகவும் நெருக்கமான நபர் ஒரு காலத்தில். இப்பொழுது அப்படி இல்லை. அவனை பார்த்தே பல மாதங்களும் வருடங்களும் கடந்து இருக்கிறது..
“உன் குரல் ரொம்ப அருமையா இருக்கு. ஹஸ்க்கியாவும் இருக்கு. அதே சமயம் ஆளுமையாவும் இருக்கு.. நீ வாய்ஸ் ஓவர் பண்ணு. சினி பீல்டுல எனக்கு தெரிஞ்சவங்க இருக்காங்க. வா நான் அறிமுகம் செய்து வைக்கிறேன்” என்று சொல்லி அவளின் வாழ்க்கையின் திசையை திருப்பி விட்டவன் அவன்.
அவனது நிகழ்ச்சி எந்த நேரம் என்றாலும் விரும்பி கேட்பாள். இடையில் ஏற்பட்ட இந்த பிரிவின் போதும் அவனது குரலை கேட்காமல் அவள் இருக்கவே மாட்டாள்.
மத்திய பொழுது அவன் தொகுக்கும் காதல் காதல் ஒரு வகை என்றால், பனி சூழ்ந்து இருள் கவிழ்ந்து வரும் இரவு பொழுதில் அவன் தொகுத்து வழங்கும் “இரவுக்காக...” என்கிற நிகழ்ச்சி அருமையோ அருமை.
ஒவ்வொரு இரவும் சஞ்சனின் “இரவுக்காக...” கேட்காமல் சங்கவையின் இரவு நகராது. அவனது குரல் வசியத்தில் இவளது இரவு பொழுதுகள் இன்னும் நீளும்.
தீண்டாத தென்றல் கூட அவளை தொட்டு தழுவிக் கொள்ளும் ஒரு உன்னத மன நிலையை கொடுப்பான் செவி வழியாக.
பெருமூச்சு விட்டவள் இரவு உணவை தயார் செய்து சாப்பிட்டாள். நெஞ்சமெங்கும் அவனின் நினைவே அவளுக்கு..
இங்கே நிகழ்ச்சியை முடித்து விட்டு வெளியே வந்த செஞ்சன் இரவு குளிரை ஆழ்ந்து அனுபவித்தான். என்ன தான் ஏசி அறையில் அமர்ந்து நிகழ்ச்சி செய்தாலும் இந்த இயற்கையின் குளுமைக்கு முன்பு ஒன்றுமே இல்லாமல் ஆகி விடுகிறது..
எண்ணியவன் கையில் ஒரு பெரிய புத்தகத்தை வைத்து இருந்தான். பாக்கெட்டில் போன். அதை தவிர அவனிடம் எந்த பொருளும் இல்லை. எப்பொழுதுமே சிம்பிள் தான் அவன்.
பேருந்தில் போக அலுப்பாக இருந்தது. வெளியே வந்து கேப் புக் பண்ணினான். பின் அதை அழித்து விட்டு ரேப்பிடோ புக் செய்தான். இரவு நேரத்தில் இரு சக்கர வாகனத்தில் பயணிப்பது அவனுக்கு ரொம்ப பிடிக்கும்.
சிறிது நேரத்திலே இரு சக்கரவாகனம் ஒன்று அவனுக்கு அருகில் வந்து நின்றது. ஓடிபி சொல்லி விட்டு ஏறி அமர்ந்துக் கொண்டான்.
அவனது வீட்டுக்கு அருகில் இருந்த ஏரிக்கரையில் நிறுத்த சொல்லி இறங்கி கொண்டு பணத்தை கொடுத்து விட்டு அந்த இரவு நேரத்தில் ஏரியில் விழுந்த பாதி நிலவை வெறித்துப் பார்த்தான்.
அவனது இதயத்தை போலவே அவனை சுற்றிலும் வெறுமை படர்ந்து இருந்தது. நடு நிசியில் யார் இருப்பார்கள். ஏரியை சுற்றி போட்டு இருந்த கம்பியை இறுக்கிப் பிடித்தான். அவனின் நெஞ்சமெங்கும் காலையில் பார்த்த புடவை பெண்ணின் தடமே நிறைந்து இருந்தது.
தலையை அழுத்திக் கோதி கொண்டான். என்ன முயன்றும் சங்கவையின் நினைவுகளில் இருந்து அவனால் வெளி வரவே முடியவில்லை.
அவளின் கழுத்து மச்சம் வரை அவனுக்கு அத்துபடி. இன்னும் அதிகமாக சொல்லப் போனால் அவளின் இமைகளில் இருக்கும் முடிகளின் எண்ணிக்கை கூட அவனுக்கு தெரியும்.
அவள் விடும் மூச்சுகளில் மடிந்து விட வரம் கேட்டது அவனது ஆண்மை. அவள் மடித்து வைக்கும் புடவைகளுக்கு இடையில் பத்திரமாய் அவனது கைக்கடிகாரம் இருந்து விட வேண்டும் என்று அடம் பிடித்தது இதயம்.
அவளின் நீண்ட விரல்களுக்கு இடையில் அவனின் தலைமுடிகள் சிக்கிக்கொள்ள வேண்டும் என்று ஆசைக் கொண்டது. ஆனால் இதெல்லாம் ஒரு காலத்தில் நடந்தது. அன்றைய பொழுதுகளில் தான் எவ்வளவு மகிழ்ச்சி இருவரிடையே..
காட்டன் புடவையை அவளுக்கு அறிமுகம் செய்து வைத்தவனே அவன் தான். கூந்தலை இறுக்கி பிடித்து பின்னல் போட்டு இருப்பாள் சங்கவை. ஆனால் அவளின் கூந்தல்களை அழகாக விரித்து விட்டு அரை குறையாக கொண்டையிட்டு சரிந்து விழும் முடி கற்றைகளை எடுத்து விடுவான்.
அவளின் தற்போதைய தோற்றம் அவன் இரசனையில் மெருகேறியது தான். ஆனால் அருகில் சென்று இரசித்து ருசித்து ஆழ்ந்து அனுபவிக்க அவனுக்கு வாய்க்கவில்லை.
பெருமூச்சு விட்டவன் கால் கடுக்க அந்த ஏரிக்கரையில் உலாத்தினான். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இரசித்த இரவும் குளுமையும் அவனுக்கு இப்பொழுது இரசனையை கொடுக்கவில்லை. மாறாக வெயிலாக காந்தி எடுத்தது.
அவளோடு இந்த நேரம் இந்த ஏரிக்கரையில் நின்று இருந்தால் எப்படி இருக்கும் என்ற பொழுதே அவனது மனம் அடிக்கரும்பாய் தித்தித்தது.
அவளின் முந்தானையை எடுத்து ஏன் குளிருக்கு இதமாக போர்த்தி இருப்பேனே.. கூந்தலை விரித்து பாயாக்கி இருப்பேனே... ஒளி விடும் அவளின் கண்களை என்னை மறந்து பார்த்துக் கொண்டு இருப்பேனே.. சஞ்சனின் நெஞ்சம் ஆசையில் தவிழ்ந்தது.. ஏக்கத்தில் விம்மியது.
“காதல் அரக்கிடி நீ” புலம்பியவன் தான் ஒரு பெரிய பதவியில் எல்லோரும் மதிக்க தக்க இருக்கிறோம் என்பதை எல்லாம் மறந்து வெறும் மணலில் நீட்டி நிமிர்ந்து படுத்து விட்டான்.
அவனை போலவே ஒற்றை நிலவும் தனியாக காய்ந்துக் கொண்டு இருந்தது.