“கண்ணு...” ஈனஸ்வரத்தில் அவர் அழைக்க அவரின் குரல் அவருக்கே கேட்கவில்லை. மீண்டும் கத்தி அழைத்தார். அப்படி அழைக்கும் பொழுது தொண்டையின் ஒரு பகுதியில் உயிர் போகும் வலி எடுத்தது. கூடவே அடிவயிற்றில் இருந்த நரம்புகள் எல்லாம் ஒன்று கூடி சுருட்டி இழுத்தது போல ஒரு வலி சுரீர் என்று எழ அவரால் கத்த முடியவில்லை.
அப்பொழுது தான் தன்னை குனிந்து பார்த்தார்.
மருத்துவ உடையில் கை கால்கள் கட்டுப்போட்டு கழுத்தையும் கட்டுப்போட்டு சிறிதும் அசைக்க முடியாத அளவு செய்து வைத்து இருந்தார்கள்.
கண்களை சுழற்றி அறையில் தன் மகளை தேட, அவரின் கையருகே தலை சாய்த்து தூங்கிக்கொண்டு இருந்தாள். அவளின் முகத்தில் அவ்வளவு அயர்வு தெரிந்தது.
கை தொட்டு வருட நினைத்தவர் சட்டென்று கையை நகர்த்திக்கொண்டார். எப்படியும் மகள் இப்பொழுது தான் தூங்கி இருப்பாள். அதை ஏன் கலைக்க வேண்டும் என்று எண்ணியவரின் விழிகளில் கண்ணீர் நிறைந்தது.
அதன் பின்பு சிறிது நொடிகளே விழித்து இருந்தார். மறுபடியும் மருந்தின் வீரியத்தில் தூங்கிப்போனார்.
அடுத்த நாள் கண்விழித்த பொழுது தான் செவுனப்பனுக்கு தெரியும் தன்னால் பேச முடியாது என்று... உடைந்து தான் போனார்.
ஆனால் அதை தன் மகளிடம் சிறிதும் காட்டிக்கொள்ளவில்லை.
“இங்க வேணாம் கண்ணு நாம நம்ம ஊரு தர்ம ஆசுப்பத்திரியிலே காண்பிச்சுக்கலாம்...” என்று செய்கையில் சொல்ல, அதை அவள் கேட்கவே இல்லை.
“இங்க பாருய்யா... முன்ன எனக்கு ஒரு ஆசை இருந்ததுச்சு.. உன்னை கல்லு வீட்டுல குடித்தனம் வைக்கணும்னு. ஆனா இப்போ என்னோட ஒரே ஆசை என்ன தெரியுமா உன்னை முழுசா பழைய படி மாத்துறது தான்... நீரு எப்பவும் போல உம்மட வெண்கல குரல்ல பேசணும்ய்யா... அதை நான் காதாரா கேக்கணும்.” விழிகளில் நிறைந்த நீருடன் சொன்னாள்.
“கண்ணு...” அவர் இமைகள் கண்ணீரில் நனைய,
“தினமும் கூலி வேலை பாத்தாலே போதும். நம்ம வயித்துக்கு சோறு கிடைச்சிடும். சேர்த்து வச்சி என்ன பண்ண போறோம் சொல்லுங்க ய்யா...” என்றவள் இரண்டு மாத காலம் அந்த மருத்துவமனையில் தன் தந்தையை வைத்து மருத்துவம் பார்த்து முற்றும் குணமாக்கிய பின்பே ஊரு வந்து சேர்ந்தாள்.
அவளின் வைராக்கியத்தை கண்ட ஊர் மக்கள் எப்பொழுதும் போல வியந்து தான் பார்த்தார்கள். ஏனெனில் தன் தந்தை அடிபட்டு உயிருக்கு போராடிய நேரம் பல மருத்துவ மனைகள் ஏறி இறங்கி அல்லல் பட்டு துயரம் பட்டு காப்பாற்ற முடியாது என்று பலர் சொல்லி அவளை நோகடித்தார்கள்.
ஆனாலும் அவளின் வைராக்கியம் மட்டும் குறையவே இல்லை. வெளியூரில் இருந்த ஒரு மருத்துவமனையில் மட்டும் தான் அவளின் தந்தையை அனுமதித்து வைத்தியம் பார்க்க சம்மதித்தார்கள்.
அந்த மருத்துவர் வேறு யாரும் இல்லை இவளை போலவே இருக்கும் சுபஸ்ரீ தான்... அவளின் உதவி மட்டும் இல்லை என்றால் நிஜமாகவே செவுனப்பனை புதைத்த மண்ணில் புள் முளைத்து இருக்கும்..
தன் தந்தையின் மருத்துவ செலவுக்காக இரண்டு ஏக்கார் நிலத்தை வெறும் இருபத்தி ஐந்து லட்சத்துக்கு விற்று அவருக்கு வைத்தியம் பார்த்தாள். அதோடு வீடு கட்ட வைத்திருந்த பணத்தையும் எடுத்து செலவு செய்தாள்.
மேற்கொண்டு வந்த செலவுக்கு அவர்களின் மருத்துவமனையிலே தினமும் கூட்டி துடைக்கும் வேலையை செய்து கழித்து பணத்தை கட்டினாள்.
மலைச்சாமி அதை பார்த்து பதறி போனார்.
“என்ன கண்ணு நீ போய் இந்த வேலையெல்லாம் பார்த்துக்கிட்டு... என்கிட்டே ஒரு வார்த்தை சொல்லி இருந்தா என் தலையை அடமானம் வச்சாவது ஏதாவது செய்து இருப்பேன் ல...”
“அதுக்கு தான் மாமா சொல்லல... உங்களுக்கும் ஒரு குடும்பம் இருக்கு. உங்க பொண்ணு கல்யாணத்துக்கு தயாரா இருக்காங்க... அண்ணன் இப்போ தான் படிக்க மேல் ஊருக்கு போய் இருக்காங்க. இந்த நேரம் உங்களை சிரம படுத்த விரும்பல... அங்க காட்டு வேலை செஞ்சேன். இங்க இந்த வேலை செய்யிறேன். அவ்வளவு தான் மாமா வித்யாசம்..”
“அதுவும் இல்லாம எத்தனையோ மருத்துவமனையை ஏறி இறங்கி பார்த்தேன். ஒருத்தரும் என் அய்யனுக்கு மருத்துவம் பார்க்க முன் வரல... ஆனா இங்க இருக்குறவங்க பணத்தை வாங்கிக்கிட்டாலும் அதுக்கேத்த மாதிரி மருத்துவம் பார்க்குறாங்க... எனக்கு அது போதும் மாமா... ஆனா இந்த விசயத்தை அய்யன் கிட்டக்க மட்டும் சொல்லிடாதீங்க... ரொம்ப வெசனப்படுவாங்க.” சொன்னவள் அந்த தளம் முழுவதும் கூட்டி துடைக்க சென்றாள்.
இதையெல்லாம் மலைச்சாமி சொல்ல சொல்ல ஆத்தாமார்கள் இருவரிடமும் பெருத்த மெளனம் நிலவியது.
“ஒருவழியா செவுனப்பனை தேத்தி ஊருக்கு கூட்டி வந்துச்சு பாப்பா... அதுக்கு பிறகு முழுநேர ஒய்வு குடுத்து அவளே தனியாள இருந்து உழைச்சி அவ்ங்கப்பனை காப்பாத்தினா...”
“சொல்றதுக்கு ரொம்ப சுலபமா இருக்கும் ஆத்தா... ஆனா அவ பட்ட கஷ்டம் அவளுக்கு மட்டும் தான் தெரியும். காசு இல்லாத ஏழைகளுக்கு ஒவ்வொரு நொடியும் நரகம் தான். அதுவும் மருத்துவ செலவுன்னு காலை வச்சுட்டா போதும். ஒவ்வொரு நொடியும் மற்றவர்களின் அவமானமும் கிண்டலும் கேலிக்கும் ஆளாகணும். பொழிலியும் ஆளானா...”
“ஆனா அதையெல்லாம் ஒரு நாளும் தன் தகப்பன் கிட்ட இன்னவரையிலும் அவ காண்பிச்கிக்கிட்டதே இல்லை. ரொம்ப திடமான பொண்ணுத்தா.” என்று பெருமையுடன் சொன்னார்.
“அதுக்கு பிறகு இங்க எப்படி வந்தாங்க...” ராக்காயி கேட்டார்.
“அந்த மருத்துவம் பார்த்த பொண்ணுக்கு பொழிலி இன்னும் காசு குடுக்கணும் போல அதனால செவுனப்பன் முழுதும் குணமாகி நல்லா பேசியவுடன் வீட்டுக்கு கூட்டிட்டு போக சொல்ல, அவங்களுக்கு குடுக்க காசு இல்ல. அப்போ இவங்க இருந்த ஊருக்கு பக்கத்து ஊரு தான் அந்த மருத்துவரோட சொந்த ஊரு... அதனால அங்க அவங்க நிலத்துக்கு வேலைக்கு போக ஆரம்பிச்சது பொழிலி...”
கொஞ்ச நாளுக்கு முன்னாடி வந்து பொழிலி,
“அங்க வேலை அதிகம். அதனால அங்கேயே தங்கி வேலை பார்க்கணும்னு சொல்லி கிளம்பி போச்சு... செவுனப்பனும் தெரிஞ்சவங்கன்னால சம்மதிச்சான். இல்லன்னா விட்டுருக்க மாட்டான்...”
“அப்புறம் ஒரு வாரத்துக்கு முந்தி என்கிட்டே வந்து அந்த வீட்டை வித்து தர சொல்லி கேட்டுச்சு. அப்படியே வேற ஊருக்கு போறேன்னு சொன்னாங்க... நான் தான் கையோட இங்க வரசொல்லி கூட்டிட்டு வந்தேன் ஆத்தா...” மலைச்சாமி சொல்ல சொல்ல ராக்காயி பிச்சாயிக்கு மலைப்பாய் இருந்தது.
அங்கு வேலைக்கு வந்த சமயம் தான் தங்களது பேரன் பொழிலியை பார்த்து இருப்பான் என்று கணித்தார்கள். இந்த ஒரு மாதமும் தங்களது வீட்டில் இருந்ததை சொல்லாமல் வேலைக்கு என்று சொல்லி வைத்திருக்கிறாள் என்றும் யூகித்தார்கள்.
சாதரணமாக இருக்கும் ஒரு பெண்ணுக்குள் இவ்வளவு துணிச்சல் எப்படி என்று வியந்து தான் போனார்கள். ஆனால் மலைச்சாமிக்கும் தெரியாமல் இதில் இன்னும் ஏதோ ஒரு சிக்கல் இருக்கிறது என்று அறிந்துக்கொண்டார்கள் வயதில் மூத்தவர்கள்.
“மருத்துவம் பார்த்த அந்த பொண்ணுக்கு இன்னும் பணம் குடுக்கணும் போல. அதான் பாப்பா அவங்க அய்யா கிட்ட நகை எடுக்குறேன்னு பொய் சொல்லிட்டு வீட்டை வித்த பணத்தை கொண்டு போய் அவங்கக்கிட்டயே குடுத்துட்டு வந்துச்சு. இப்போ பெருசா எந்த வருமானமும் இல்லை.”
“எந்த சேமிப்பும் இல்ல.. வார கூலிய வச்சு ரெண்டு பேரும் வாழ்ந்துக்கிட்டு இருக்காங்க ஆத்தா...” என்று அவர் முடித்தார்.
Nice





