“கண்ணு நீ கை பிள்ளைக்கு ஊட்டலாமுள்ள... பெரியவங்களால புள்ளை பின்னாடி ஓட முடியாது இல்ல...” சாப்பிட்டுக்கொண்டே அவர் சொல்ல, அந்த அவர் வாயிலிருந்து வருவதற்காகவே காத்திருந்தவள்,
“இதோப்பா...” என்று கொற்கையனுக்காக தனியாக செய்திருந்த உணவை எடுத்துக்கொண்டு வயல் பக்கமும் தோப்பு பக்கமும் சென்று ஊட்டிவிட ஆரம்பித்தாள்.
அவளை அப்படி பார்க்கும் பொழுது செவுனப்பனின் நெஞ்சில் தன் மகளுக்கு விரைவாக கல்யாணம் பண்ண வேண்டும் என்று முடிவெடுத்தார்.
“ரொம்ப நாளாச்சுங்க்த்தா இப்படி சாப்பிட்டு... வயிறும் மனசும் நிறைஞ்சி போய் கிடக்கு...” என்று சொன்னார்.
“என்னய்யா இப்படி சொல்லிப்போட்ட. இனி நெதமும் எங்க கையாளயே சாப்பிடுய்யா...” இரு தாய் கிழவிகளும் நெகிழ்ந்து போய் சொல்ல, அதை கேட்டுக்கொண்டு வந்தவளுக்குக்கு கண்கள் இரண்டும் கண்ணீரில் மிதந்தது.
“ஆத்தா உங்களுக்கு யாரும் தெருஞ்சவுங்க இருந்தா நம்ம புள்ளைக்கு ஒரு பையனை பாருங்க... வயசு ஆகிக்கிட்டே இருக்கு. காலாகாலத்துல ஒருத்தன் கையில பிடுச்சி குடுத்தா எனக்கு கவலை இல்லை... நான் இருக்குறவரை என் பொண்ணுக்கு கவலை இல்லை..”
“ஆனா நான் இல்லன்னா என் பிள்ளைக்கு நிழலுக்கு ஒதுங்க கூட ஒரு துணை இல்லை.. ஒரு தூண் கூட இல்லைங்க...” சொன்னவரின் கண்கள் கலங்கி போனது.
“அய்யா...” என்று அதட்டல் போட்டவளின் விழிகளும் கலங்கி இருந்தது.
“என்னப்பா நீ நல்ல விசயம் பேசிக்கிட்டு இருக்கும் பொழுது எதுக்கு கண்டதையும் பேசுற... என் பேரன் மாதிரி அம்சமா உன் புள்ளைக்கு நாங்க மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் முடிக்கிறோம் சரியா...? நீ மனசை போட்டு குழப்பிக்காத...” என்றவர்கள் பொழிலியிடம் திரும்பி,
“அய்யாரு தான் வெசனப்படுறாருன்னா நீயும் கூட சேர்ந்துக்கிட்டு ஒப்பாரி வைப்பியாக்கும்...? நாங்கல்லாம் இல்ல.. எல்லாத்தையும் நாங்க பார்த்துக்குறோம்... நீ முதல்ல கண்ணை துடை. புள்ளைக்கு சோறு ஊட்டுனியா...? வா நீயும் வந்து சாப்பிடு.. சோறு திண்ணு ஒரு வாரம் ஆனது போல இருக்க...” என்று கொட்டு வைத்தார் பேச்சிலே.
அதுவரை கலங்கி போய் இருந்தவள் இவர் இப்படி சொன்னவுடன் பதறி போய் முறைத்து பார்த்தாள்.
‘அதானே என்னடா இவுக போய் இம்பிட்டு அக்கறையா பேசுறாங்கலேன்னு நினைச்சேன்... இந்தா கடைசியா என்னை நொண்டி நொங்கு எடுத்துட்டாங்கள்ள...’ வாய்க்குள் முணகியவள், அவர்களின் அருகில் வந்து அமர்ந்தாள் கடுப்புடன்.
“மூஞ்சை ஏன்டி இப்படி வச்சு இருக்க. வயசுப்புள்ள நல்லா சிரிச்சு லட்சணமா இருக்குறது இல்ல... இப்படியா முசுட்டு தனமா இருக்குறது...” என் மேலும் காலை வாரினார் பிச்சாயி. அவள் ஒரு பார்வை அவரை பார்க்க,
“கண்ணு பெரியவங்க சொல்றாங்கல்ல எதுக்கு மூஞ்சியை இப்படி வச்சு இருக்க... ஒழுங்கா நேசமா வை...” என்று மென்மையாக சொன்னார்.
அவரின் சொல்லில் அன்பு மட்டுமே இருக்க கண்டு பிச்சாயி ராக்காயியை ஒரு பார்வை பார்த்தார்.
அவர் பெரு மூச்சு விட்டு கண்ணை மூடி திறந்தார்.
அந்த நேரம் மலைச்சாமி வர, இவர்கள் மூவரும் வந்து இருப்பதை கண்டு வியந்து போனார்.
“வாங்க ஆத்தாங்களா.. பெரிய அய்யாரு சொகமா...? சின்ன அய்யாரை அழைச்சிக்கிட்டு தான் வந்தீகளா...?” என்று பணிவாக அவர் வரவேற்க,
“நல்லா இருக்காக மலை... நீ எப்படி இருக்க. இப்போ தான் தோப்பு பக்கம் வர்றியா...?”
“ஆமங்க ஆத்தா... நம்ம செவுனப்பன் வந்ததுல இருந்து எனக்கு ஒத்த வேலையை கூட மிச்சம் வைக்கிறது இல்ல... எல்லா வேலையும் அவனே இழுத்து போட்டு செய்யுறான். சொன்னாலும் காதுல போட்டுக்கவே மாட்டிகிறான்...” என்று தன் சிநேகிதனை பற்றி பெருமையாய் சொன்னார்.
“அப்போ இனி உனக்கு இங்க வேலை இல்லன்னு சொல்லு...” என்று சிரிக்க
“ஐயோ ஆத்தா... அடி மடியிலயே கை வைக்கிறிங்களே...” இவரும் சிரித்தார்.
“ஆகட்டும்... வா வந்து நீயும் சாப்பிடு...” ராக்காயி கூப்பிட,
தயக்கம் எதுவுமில்லாமல் கைகளை கழுவிக்கொண்டு வந்து திண்ணையில் அமர்ந்தார்.
“அப்போ நீ உண்டுட்டு வாடா... நான் முன்னாடி போய் ஆளுகளை என்னன்னு பாக்குறேன்...” என்று சொல்லிவிட்டு செவுனப்பன் செல்ல, மலைக்கு உணவு பரிமாறினாள் பொழிலி.
அவர் சாப்பிட்டுட்டு வேலையை பார்க்க செல்ல, அதன் பிறகு பெண்கள் மூவரும் அமர்ந்து உணவு உண்டார்கள். மதிய சமையலுக்கு காய்களை பறிக்க பொழிலி போக,
“அந்த வேலையை நாங்க பார்த்துக்குறோம்.. நீ என் பேரனை கவனி..” என்று சொல்லிவிட்டு கூடையை எடுத்துக்கொண்டு தோட்டத்து பக்கம் சென்றார்கள் இருவரும்.
வீட்டின் உள்ளே பேரமைதி நிலவியது.
சின்ன சின்ன பொருட்களை வைத்துக்கொண்டு கொற்கையன் விளையாட, அதை வேடிக்கை பார்த்துக்கொண்டு அவன் அருகில் அமர்ந்து இருந்தாள். பாண்டியன் அவளின் அருகில் தலையணையாக இரு கைகளையும் கட்டிக்கொண்டு படுத்து இருந்தான்.
இருவரும் எதுவும் பேசவில்லை. பொழிலிக்கு இந்த சூழ்நிலையை எப்படி கையாள்வது என்று தெரியவில்லை.
பாண்டியன் தான் இங்கு இருக்கும் செய்தியை யாரிடமும் சொல்லி இருக்கமாட்டான் என்று எண்ணினாள். ஆனால் வந்த அன்றைக்கே இவன் சொல்லியதோடு, இரவோடு இரவாக கிளம்பியும் வர சொல்லி இருப்பதை கண்டவளுக்கு நெஞ்சில் பாரம் ஏறி அமர்ந்தது.
தான் செய்த செயல்களின் வீரியம் இப்பொழுது தான் புரிந்தது. இந்த விஷயம் மட்டும் தன் தகப்பனுக்கு தெரிந்தால் என்ன ஆகும் அவரின் நிலை... எண்ணி பார்க்கும் பொழுதே மூச்சை அடைத்துக்கொண்டு வந்தது.
தன் தந்தைக்கு எவ்வளவு பெரிய துரோகத்தை செய்து இருக்கிறேன். கடவுளே... என்று நொந்தவள் பாண்டியனை பார்த்தாள்.
அவனிடம் எந்த அசைவும் இல்லை. தனிமையில் தான் இருக்கிறார்கள். இதுவே முன்பு இருந்த பாண்டியன் என்றால் இந்நேரம் இந்த தனிமைக்கு அவனது படுக்கை தன் மேனியாக தான் இருந்து இருக்கும் எண்ணியவள், அவனை லேசாக தொட்டாள்.
“ம்ம்ம்” என்றானே தவிர அவனிடம் வேறு எதுவும் பெரிதாக அசைவு இல்லை.
“எப்போ ஊருக்கு போக போறீங்க...” மெல்ல கேட்டாள்.
“நீ எப்போ என்னோட வரியோ அப்போ...” என்றான் அலுங்காமல்.
அதை கேட்டவளுக்கு கண்களில் கண்ணீர் நிரம்பி தளும்பியது. “என்னை புரிஞ்சுக்க மாட்டீங்களா மாமா...?”
“நீ மட்டும் என்னை புரிஞ்சு வச்சு இருக்கியா என்ன...?” கடுப்பான குரலில் இவன் கேட்க,
“மாமா நான் எவ்வளவு பெரிய செஞ்சோற்று கடன்ல மாட்டி இருக்கேன் தெரியுமா...? என்னால அந்த நன்றிய மறக்கவே முடியாது... மறந்தா நான் மனுசியே இல்ல.. நான் மனுசியா இருக்க விரும்புறேன்... என்னை என் போக்குல விடுங்க மாமா...” கெஞ்சினாள்.
“உனக்கு உன் செஞ்சோற்று கடன் முக்கியம்னா எனக்கு என் வாழ்க்கை முக்கியம் பொழிலி... நீ தான் என் வாழ்க்கைன்னு நான் வாழ்ந்துக்கிட்டு இருக்கேன்... நீ இல்லன்னா என்னால நினைச்சி கூட பார்க்க முடியல... எனக்கு நீ வேணும் அவ்வளவு தான்.” என்றான் இறுதி முடிவாக.
அதில் தளர்ந்து போனாள்.
Nice





