“இப்படி தான்டி எனக்கும் இருக்கும்.. மரியாதையா என்னையும் உன் நெஞ்சுல போட்டு கவனி. உன் அப்பன் கிட்ட உண்மையெல்லாம் சொல்லிடுவேன்... நீ என்னை கல்யாணம் பண்ணி ஏமாத்தி பாதியில விட்டுட்டு வந்துட்டன்னு சொல்லுவேன்.” என்று மிரட்டினான்.
“அப்படி சொல்லுடா எங்க சிங்கக்குட்டி... என்ன ஏத்தம் இருந்தா எங்களை இன்னும் வான்னு ஒரு வார்த்தை கேக்கல...” பிச்சாயி இன்னும் அவனை ஏத்தி விட, பாண்டியன் மிக பாசமாய் தன் மனைவியை பார்த்தான்.
அதில் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டவள் “வாங்கன்னு கேட்க மாட்டேன். என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோங்க...” முறைத்துக்கொண்டு அந்த பக்கம் திரும்பிக்கொண்டாள்.
அதில் கோவம் வர வேகமாய் அவளை தன் புறம் திருப்பினான்.
அவனது கையை தட்டிவிட்டு அவனை முறைத்து பார்த்தாள்.
“இந்த எகத்தாளம் எல்லாம் இங்க வேணாம் ஒழுங்கு மரியாதையா அவங்களை வாங்கன்னு கூப்பிடுடி...” அதட்டினான்.
“முடியாது. அவங்க மட்டும் வேர்ல வெண்ணி தண்ணி விட்ட மாதிரி பேசுவாங்க. நாங்க மட்டும் வாங்கன்னு கூப்பிடணுமாக்கும். என்னால முடியாது...”
“எத நாங்க வேர்ல வெண்ணி தண்ணி விட்ட மாதிரி பேசுறமா...? அது சரி தான். அப்படி பேசுற அளவுக்கு உன் போக்கு இருக்கே... அதுக்கு என்னடி சொல்லுவ...” பிச்சாயி கொக்கி போட,
அவள் மெளனம் சாதித்தாள்.
“இப்போ பேசுடி. இப்போ பேசு... என் பேரனை கல்யாணம் பண்ணி அம்போன்னு விட்டுட்டு வந்து இங்க உக்கார்ந்து நீலி கண்ணீர் வடிக்கிறியாக்கும். இந்த பம்மாத்து காட்டுற வேலையெல்லாம் என்கிட்ட வச்சுக்காத சொல்லிட்டேன்...”
“இன்னவரையிலும் நீ மாமியார் கொடுமைய கேள்வி பட்டு இருப்ப... ஆனா இனிமே இந்த ஆத்தாமர்களோட கொடுமைய அனுபவிக்க போற...” என்று போட்டிருந்த கொண்டையை அவிழ்த்து முடியை நன்கு கொதி விரித்து விட்டு, இடது கையால் முடியை பற்றி ஒரு பக்கமிருந்து ஆரம்பித்து அடுத்த பக்கம் வரை தட்டு தட்டு என்று தட்டி மீண்டும் கோடாலி கொண்டையாக போட்டு சபதம் முடித்தார் ராக்காயி.
அதை பார்த்துக்கொண்டு இருந்த பொழிலிக்கு பொசுபொசுவென்று வந்தது.
“இந்த முறைக்கிற வேலையெல்லாம் இங்கன வேணாம்... உன் புருசனுக்கு அப்பனையே நாங்க தான் பெத்து போட்டோம். உன் ஆட்டம் செல்லுதா இல்ல எங்கன ஆட்டம் செல்லுதான்னு பார்க்கலாம்டி...” என்று பிச்சாயும் சொல்ல கண்ணை கட்டிக்கொண்டு வந்தது அவளுக்கு.
ஆக மொத்தம் அவளை வச்சு செய்ய போறது உறுதி என்று அறிந்தவளுக்கு பக்கு பக்கு என்று இருந்தது...
“போதும் போதும் உன் திருட்டு முழிக்கு என் பேரன் வேணா மயங்குவான் நாங்க அசைய மாட்டோம்...” ராக்காயி ஆரம்பிக்க
“எத என் முழி திருட்டு முழியா...?” கோவத்துடன் கேட்டாள்.
“ஆமா எப்படா ஓடிபோல்லான்னு உன் கண்ணு அங்கயும் இங்கயும் அலைஞ்சிக்கிட்டு இருக்கு பாரு... அப்போ உன் முழி திருட்டு முழி தானே...” பிச்சாயி முடிக்க
“ம்கும் இதுல மட்டும் ரெண்டு பேரும் நல்லா ஒத்து போயிடுங்க... தாத்தான்னு வரும் பொழுது ரெண்டு பேரும் மயிறு பிடி சண்டை பொண்டுங்க...” தோளை லேசாக வெட்டிக்கொண்டு சொன்னாள்.
“அடியேய் நாங்க ரெண்டு பேரும் அடிச்சுக்கிட்டாலும் எங்க புருஷனை விட்டு ஒத்த நாள் தனிச்சு இருந்தது இல்ல... அதும் உன்னை மாதிரி ஊரை விட்டு ராத்திரியோட ராத்திரியா ஓடி போனது இல்ல...”
“நா ஒண்ணும் ராத்திரி ஓடிப்போகல...”
“ஓடிப்போன சிறுக்கிக்கு பகல் என்ன ராவு என்ன...? விளக்கம் சொல்ல வந்துட்டா பெருசா” ஆத்தாமார்கள் இருவரும் சேர்ந்து பேச, அவர்களின் பேச்சுக்கு பொழிலியால் கொஞ்சம் கூட ஈடு கொடுக்கவே முடியவில்லை.
அந்த காலத்து கிழவிங்கன்னா சும்மாவா... எதிர்க்க நிக்கிற ஆளை ஓட ஓட விரட்டிட மாட்டாங்க...
“ஐயோ சாமி ஆளை விடுங்க...” என்று மகனோடு அடுப்படிக்குள் தஞ்சம் புகுந்தாள்.
பாண்டியன் இருவரையும் பார்த்தான்.
“அய்யாரு உன் பொண்டாட்டி மனசு பூர நீயும் உன்ற மகனும் தான் நிறைஞ்சி இருக்கீங்க... வெசனத்தை விடு... புள்ளை ஏதோ சிக்கல்ல இருக்கு. நாமள்லாம் உறவுன்னு முதல்ல அவ மனசுல பதியவைக்கலாம்...” பிச்சாயி சொல்ல,
“இல்லடி அவ மனசுல நாமெல்லாம் உறவுன்னு பதிஞ்சி போய் இருக்கு. அதனால தான் நம்மளை எதிர்த்து ஒத்த வார்த்தை புள்ளை தவறா பேசல... பாண்டியனையும் விரட்டி அடிக்கல... கொற்கையனை எப்படி நெஞ்சோட அனைச்சிக்கிட்டா பத்தியா...? அவ மனசு அவளுக்கு எதிரா இருக்கு... பார்க்கலாம்... அவளே சொல்லட்டும்..” ராக்காயி சொல்ல மூவரும் அவளை அவள் போக்கிலே விட எண்ணினார்கள். ஆனால் முற்றும் முழுவதும் அப்படி விட முடியாதே கையிற்றை தங்களின் கைகளில் வைத்துக்கொண்டார்கள்.
செவுனப்பன் மளிகை சாமானோடு வர, காலை நேர சமையல் வேக வேகமாய் செய்தாள் விறகடுப்பில். அவள் செய்யும் பாங்கும் விறகடுப்பை இலாவகமாக கையாள்வதை கண்டும் இவளுக்கு இது நல்ல பழக்கம் என்று எண்ணினார்கள்.
உணவு முடித்து கூடத்தில் எடுத்து வைத்தவள் அனைவரையும் சாப்பிட வர சொல்ல,
“முதல்ல பாண்டியனுக்கும் உன் அப்பாவுக்கும் போடு. பொறவு நாங்க சாப்பிடுக்குறோம்..” ஆத்தாமார்கள் சொல்ல,
“அய்யோ எனக்கு என்னங்கம்மா அவசரம் முதல்ல நீங்க உண்ணுங்க. பொறவு நான் உண்ணுக்குறேன். அதுவுமில்லாம தென்னை மட்டை எடுக்க ஆளுக வரேன்னு சொல்லி இருக்காங்க. அவுகளை போய் பார்த்து அனுப்பிட்டு தான் வந்து உண்ணனும். நீங்க உண்ணுங்க தாயி...” செவுனப்பன் சொல்ல,
“எத நீ வெறும் வயித்துல வேலை பார்ப்ப... அதா நாங்க வேடிக்கை பார்கணுமாக்கும். சரி தான்... என்ற மவனுக்கு மட்டும் இந்த சேதி போச்சு. அவ்வளவு தான் எங்களை ஆத்தாமாருங்கன்னு கூட வச்சி பாக்க மாட்டான்... அதனால நீ சாப்பிட்டுட்டு போய்யா...” என்று அவரை திண்ணையில் அமரவைத்து அவரோடு பாண்டியனும் வந்து அமர இருவருக்கும் ராக்காயி பிச்சாயியே பரிமாறினார்கள்.
“அய்யோ ஆத்தா நீங்க போயி... புள்ளைய கூப்பிடுங்க அது போடும்...” அவர் கூச்சமாக சொல்ல, அது வரை குனிந்து நின்று பரிமாறியவர்கள் அவருக்கு நேரா அமர்ந்து,
“ஏன்யா எங்களை பார்த்தா உம்ம பெத்த ஆத்தா மாதிரி தெரியலையா...?” பிச்சாயி கேட்க,
செவுனப்பனின் விழிகளில் கண்ணீர் நிறைந்தது.
“ஆத்தா...” என்றார் தளுதளுப்பாக.
“உனக்கும் ஆத்தா தான்யா நாங்க... கூச்சப்படாம சாப்பிடுய்யா.” என்று அவருக்கு பார்த்து பார்த்து பரிமாற மன நிறைவுடன் சாப்பிட்டார்.
ஏனெனில் சிறு வயதிலே தன் தாய் தந்தையை பறிகொடுத்தவர் ஒற்றை பிள்ளையாக வளர்ந்தார். அதன் பிறகு பருவம் வந்த பின் பொழிலியின் அன்னை அவரை பார்த்துக்கொண்டார். ஆனால் அவரும் செவுனப்பனின் வாழ்வில் பாதியிலே சென்றுவிட பொழிலியை கூட இவர் தான் கவனித்துக்கொண்டார்.
பொழிலிக்கு விவரம் தெரியவர, அதன் பிறகு அவள் தான் தன் தந்தையை கவனித்துக்கொண்டாள். அதுவும் கண்ணும் கருத்துமாக. தன் தந்தைக்கு ஒன்று என்றாள் தன் மூச்சை கூட நிறுத்தி விடும் அளவுக்கு அவளது அன்பு இருந்தது.
அதை அறிந்துக் கொள்வானா பாண்டியன்.
Nice





