மங்கள வாத்தியங்கள் நிறைந்து ஒலிக்க அந்த கல்யாண மண்டபமே உற்சாகத்திலும் மகிழ்விலும் திளைத்து இருந்தது.
பதினெட்டு பட்டிக்கும் தலைவரான வெள்ளியம்பலத்தார் அவர்களின் மகனான பசும்பூண் பாண்டியனுக்கும் பூம்பொழிலுக்கும் வெகு விமர்சையாக அவர்களது குலதெய்வ கோவிலில் திருமணம் நடைபெற்றுக்கொண்டு இருந்தது.
அரக்குநிற கூரைப்பட்டில் அரக்கு நிற ரவிக்கையில் தங்க நகைகள் பூட்டி அலங்காரத்தில் கண்ணை கவரும் அம்மனாக வந்து பாண்டியனின் அருகில் அமர்ந்தாள்.
பசும்பூண் பாண்டியன் இம்மண்ணின் மைந்தனவன். நம் நாட்டுக்கே உரிய வீரமும் திமிரும் கம்பீரமும் ஒருங்கே வாய்க்கப்பெற்றே மிடுக்கான தோற்றத்துடன் முறுக்கிய மீசையில் நம்ம ஊர் காவல் தெய்வமான கருப்பசாமி போல இருந்தான்.
திருமணத்திற்க்காக மேல் சட்டை அணியாமல் வெறும் துண்டை மட்டும் ஒரு பக்க தோளில் போட்டு இருந்தவனது தோற்றத்தை கண்டு உள்ளுக்குள் பயந்து போய் ஒடுங்கி அமர்ந்து இருந்தாள்.
பாண்டியனோ அவளது பயத்தை சட்டை செய்யாமல் வணங்கா முடியுடன் கர்வமாக அமர்ந்து வந்தவர்களை வரவேற்கும் விதமாக தலையசைத்துக்கொண்டு இருந்தான்.
இறுகிய இதழ்கள் அவனது முரட்டு தனத்தை காட்டிக்கொண்டு இருந்தது. அதற்கு மேல் தீட்சயம் நிரம்பிய அவனது கண்களோ அங்கு நடக்கும் பல நிகழ்வுகளை கூர்ந்து கவனித்துக்கொண்டு இருந்தது.
அதை விட தன் அருகில் அச்சத்துடன் அமர்ந்து இருந்தவளை சிறிதும் ஏறெடுத்து பாராமல் அவளின் இடையை ஒரு கையால் அழுந்த பற்றி,
“பயந்து போய் இருக்காம ஒழுங்கா நேரா நிமிர்ந்து உட்காருடி.. இல்ல இங்கயே உன்னை கடிச்சு வச்சிடுவேன்...” பல்லைக் கடித்துக்கொண்டு யாருக்கும் கேட்காமல் சொன்னவனது குரலில் இன்னும் பயந்து போனவள் வழிகளில் நிரம்பிய நீரோடு நிமிர்ந்து அமர்ந்தாள்.
“நீ என்ன முரண்டு பிடிச்சாலும் இந்த கல்யாணம் நடந்து தான்டி தீரும்... உனக்கான முடிவுகள் எல்லாம் இனி என் கையில தான்டி...” என்று மிரட்டியவன்
நல்ல நேரம் வர, நாதஸ்வரம் வாசிக்கப்பட மேளதாளங்கள் முழங்க பூம்பொழிலின் கழுத்தில் மங்கலநாணை முடிந்தான் பசும்பூண் பாண்டியன்.
மன வேதனையுடன் அவனது தாலியை வாங்கிக்கொண்டாள் வேறு வழியில்லாமல். ஆனால் அவளை சுற்றி இருந்தவர்களுக்கு அவளை பாண்டியனின் மனையாளாக பார்க்க விருப்பமில்லை. கடமையே என்று அவர்களின் மீது பூவும் மஞ்சள் அரிசியும் கலந்த ஆசிர்வாத பொருளை எறிந்துவிட்டு சட்டென்று கிளம்பி சென்றுவிட்டனர்.
அவர்கள் சென்றதை மனம் கலங்க பார்த்தவளின் விழிகளில் கண்ணீர் சட்டென்று இறங்கியது. ஆனால் அதை நொடியில் துடைத்து எறிந்தவன்,
“இன்னைக்கு அழாதடி... நாளையில இருந்து உன்னோட துணை கண்ணீர் மட்டும் தான்... அதனால இன்னைக்கு வீணாக்காதடி...” எச்சரித்தவன், பதினெட்டு பஞ்சயாத்திலிருந்து வந்து இருக்கும் ஊர் பெரியவர்களை பார்த்து தலையசைத்து வரவேற்க...
மந்திரம் சொல்லுபவர் நெருப்பை மூன்று முறை வளம் வர சொல்ல, எழுந்து வலம் வந்தார்கள். கால்விரலில் மிஞ்சி போட சொல்ல அவளது உள்ளங்காலை தன் முரட்டு தனம் நிறைந்த கைகளால் பற்றி அவளது விரல் நோகாமல் பற்றி போட்டுவிட்டான்.
அதன் பிறகு வந்தவர்கள் விருந்து உண்ண செல்ல,
வெள்ளியம்பலத்தானும் மீனாச்சியம்மையும் சேர்ந்து வந்தவர்களிடம் திருமண தாம்பூலம் கொடுத்து, மூன்றாவது நாள் “கறிவிருந்து வந்துடுங்க” என்று சொல்லி வழியனுப்பி வைத்தார்கள்.
பாண்டியனின் உடன் பிறந்த தங்கை பாண்டியம்மாவும் அவளது கணவன் சுந்தரமும் மணமக்களின் அருகிலே இருந்து அவர்களுக்கு உதவி செய்துக்கொண்டு இருந்தார்கள்.
அவர்களின் இரண்டு பிள்ளைகளையும் சுந்தரத்தின் பெற்றோர் பார்த்துக்கொள்ள,
வெள்ளியம்பலத்தானின் தாய்மார்கள் ராக்காயி பிச்சாயி இருவரும் பாண்டியனின் மூன்று வயது மகனை இடுப்பில் இடுக்கிக்கொண்டு அங்கும் இங்கும் அலைந்துக்கொண்டு இருந்தார்கள்.
வந்த ஆட்கள் எல்லாம் சென்றுவிட, நெருங்கிய சொந்தங்கள் மட்டும் இவர்களுடன் வீடு வந்து சேர்ந்தார்கள்.
மணமக்களுக்கு ஆரத்தி எடுத்து நாத்தனார் கேலிகள் எல்லாம் செய்து அதன் பின்பே வீட்டுக்குள் விட்டனர்.
மனம் கொள்ளா வேதனையுடன் அந்த வீட்டின் உள்ளே காலடி எடுத்து வைத்தாள் பொழிலி... அடுத்து என்ன செய்வது என்ற கேள்வி அவளின் ஆழ்மனதில் எழுந்து பயமுறுத்தியது.
அதை விட பயம் கொள்ள வைத்தது பாண்டியனின் வீடு.. மிக பழமையான புகழ் வாய்ந்த அரண்மனை தான் பாண்டியனின் வீடு. சுத்து பட்டிக்கே பெரிய வீடுன்னு சொன்னா இது தான்.
சட்டென்று அவள் வசித்த வீடும் இந்த அரண்மனையையும் ஒப்பிட்டு பார்த்தவளுக்கு பயத்தை விட கண்ணீர் தான் வந்தது. ஆனால் அவளை கண்ணீர் சிந்த விடாமல் மீனாச்சியம்மை தெய்வ படங்கள் நிறைந்த அறைக்கு அழைத்து சென்று விளக்கை ஏற்ற சொன்னார்.
பாண்டியனோடு சென்று விளக்கை ஏற்றி விழிகள் திறந்து அங்கிருந்த தெய்வங்களை மனமாற கும்பிட்டவளின் புடவை முந்தானை இழுபட்டது.
பக்கென்று இருந்தது... திரும்பி பார்த்தாள். பாண்டியன் தான் தன் முகத்தில் வழிந்த வியர்வையை துடைத்துக்கொண்டு இருந்தான். கூரைபுடவை மிக மிருதுவாக இருந்ததாலும் பருத்தி நூலால் நெய்து இருந்ததாலும் அவனது வியர்வை துளிகளை நன்கு உள்ளிளுத்துக்கொண்டது.
துடைத்தவன் இன்னும் அதிகமாக இழுக்க அவனது அருகில் நெருங்கி நிற்க வேண்டி வந்தது. மேல் சட்டை அணியாத அவனது மார்பில் வழிந்த வியர்வையையும் அவன் துடைத்துகொள்ள, இன்னும் அவனோடு நெருங்கி நிற்க வேண்டிய நிலை வந்தது.
பாண்டியன் வேண்டும் என்றே இன்னும் அவளது முந்தானையை பிடித்து இழுக்க எதிர்பாராமல் அவனது நெஞ்சிலே போய் விழுந்தாள் பூம்பாவை.
“ஹும்... ஒரு இழுப்புக்கு கூட தாங்க மாட்டிக்கிறடி... ராவு பொழுதுக்கு எப்படி தான் ஈடு குடுக்க போறியோ...” காதோரம் கூறி, அவளின் இடையை இறுக்கிப் பிடித்து,
“ஆனாலும் நீ தாங்கி தான்டி ஆகணும்... எவ்வளவு தைரியம் இருந்தா இந்த கல்யாணம் வேணான்னு சொல்லுவா..” என்று மிரட்டலாய் சொல்லிவிட்டு சென்றான்.
அவனது அந்த பேச்சில் பெண்ணவளுக்கு சொல்ல முடியாத பயம் நெஞ்சில் பரவியது... கடவுளையே பார்த்துக்கொண்டு இருந்தாள். அப்பொழுது மீண்டும் அவளது புடவை தலைப்பு இழுபட வேகமாய் திரும்பி பார்த்தாள். அங்கு பாண்டியனின் மகன் பொற்கைப் பாண்டியன் நின்று இருந்தான்.
அவனை என்ன என்பது போல பார்த்தாள்.
“நீ எனக்கு அம்மாவா...?” அந்த சின்ன பாண்டி கேள்வி கேட்டான்.
அவனது உயரத்துக்கு முட்டியில் அமர்ந்து,
“அப்படின்னு யாரு சொன்னா...?” இவள் கேள்வி கேட்டாள்.
“எல்லாரும் தான். ஆனா நீ சொல்லு...” என்றான் விவரமாக.
“எனக்கு தெரியல டா... உனக்கு என்ன தோணுது..” என்றாள்.
“எனக்கும் ஒண்ணும் தோணல...” இதழ்களை பிதுக்கி அவன் சொல்ல, அவனது உச்சி முடியை சிலுப்பி விட்டவள்,
“ஏன் சோர்ந்து போய் இருக்க... சாப்பிட்டியா...? தூங்கலையா...?” என்று கேட்டாள்.
“நீ ஊட்டி விடுறியா...?” அந்த வாண்டு கேட்டது.
“ஊட்ட தெரியாது பரவாலையா...?”
“ம்ம்ம்...” என்றவன் அவளது முந்தானையை மட்டும் விடவில்லை.
“அது எப்படி தான் அப்பனுக்கும் மகனுக்கும் என் முந்தானை மட்டும் பிடிக்குதோ...? தெரியல...” என்று முணுமுணுத்தபடியே அந்த அறையை விட்டு வெளியே வர, எல்லோரும் நிலை குத்திய கண்களோடு அவர்கள் இருவரையும் பார்த்தார்கள்.
பாண்டியன் தன் மகனின் கையில் இருந்த முந்தானையையும் அம்மா மகன் இருவரையும் மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டு இருந்தான்.
எதே இவனுக்கு ஆல்ரெடி பையன் இருக்கா😳😳😳😳😳
இதை நா படிச்சது போல இருக்கே....முன்னாடியே site la வந்து இருக்கா ரைட்டர்????
எதே இவனுக்கு ஆல்ரெடி பையன் இருக்கா😳😳😳😳😳
இதை நா படிச்சது போல இருக்கே....முன்னாடியே site la வந்து இருக்கா ரைட்டர்????
வந்து இருக்கு டா ரீரன் இது
nice start





