துண்டை வாங்கிக்கொண்டு போனவனிடம் “ஏங்க டீ குடிச்சுட்டு போகலாம்ல” என்று சத்தம் குடுத்தாள் மகிழ்வதனி.
“முன்னாடி வந்தவங்களுக்கு கை நீட்டாம இங்க டீ போடப்போறியாடி?”
“அதுக்காக வெறும் வயித்தோட எப்படி அவ்வளவு தூரம் போவீங்க.. இருங்க ரெண்டு நிமிசத்துல போட்டு தரேன்” என்றாள்.
“சரி போடு” என்றவன் அடுப்படியிலே நின்றுக்கொண்டான் வெற்றி.
“பிஸ்கட் எதுவும் எடுத்து தரவாங்க”
“அதெல்லாம் வேணாம்” என்றவன், “உங்க அம்மாவ பாப்பா வச்சுக்கிட்டு கொஞ்சம் தள்ளியே இருக்க சொல்லு. இல்லன்னா தனத்துக்கிட்ட குடுக்க சொல்லு. கும்பல்ல பிள்ளையை விட்டுட்டு நிக்காத” என்றான்.
“ம்ம்” என்றாள்.
“ம்ம் ம்முன்னு சொல்லிட்டு அவளை விட்டுடாத.. பிள்ளைக்கு ஏதாவது வந்துட போகுது”
“சரிங்க மாமா” என்றாள் கொஞ்சமே கொஞ்சம் குரல் உயர்த்தி. அவளை முறைத்தான்.
“நான் பிள்ளையை பார்த்துக்குறேன்.. நீங்க ஒழுங்கா போயிட்டு வாங்க.. அப்பாவுக்கும் மாமாவுக்கும் செருப்பை எடுத்துட்டு போங்க. அங்க போய் கலட்டிக்கலாம். அப்பாவுக்கும் மாமாவுக்கும் ஆணி காலிருக்கு”
“அதெல்லாம் நான் பார்த்துக்குறேன். நீயும் கையில முந்தானையை வச்சுட்டு இழவு கேளு. வெறும் கையா நிக்காத.. கும்பல்ல உன்னையும் சேர்த்துக்கிட்டு அழுவாங்க. அதனால அவங்களை விட்டு தள்ளியே உன் அக்கா கூட நில்லு. அவ தான் கும்பலுக்கு போக மாட்டா. அதனால நீயும் அவளோடவே இரு” என்றான்.
“சரி” என்று டீயை பதமாக ஆற்றி அவனுக்கு கொடுத்தாள்.
“நீயும் குடிடி” என்று பாதியை அவளுக்கு கொடுத்தான். இருவரும் குடித்து விட்டு வெளியே வர, எல்லோரும் இவர்களை சூழ்ந்துக் கொண்டு அழுதார்கள்.
அம்மா, அத்தை, பெரியம்மா, சித்தி என எல்லோரும் அழ இவளுக்கும் அழுகை வந்தது. அதுவும் வெற்றியை பார்க்க பார்க்க இழந்துப் போன வாழ்க்கை கண் முன் வர அழுகை வந்தது.
அவள் விடாமல் அழுவதை பார்த்து அவளை நெருங்கி வந்தவன், “ப்ச் எதுக்குடி அழுவுற... நான் இன்னும் செத்துப் போகல...” என்றான். அவனது அந்த சொல்லில் உதடு பிதுங்கி இன்னும் அழுகை வந்தது அவளுக்கு. ஆனால் அவன் முன்பு அழமுடியதே..
உதட்டை கடித்து தன் அழுகையை அடக்கிக் கொண்டவள்,
“உங்க வாயில நல்ல வார்த்தையே வராதா மாமா” ஆதங்கப் பட்டாள்.
“அப்ப உன் வாயை மூடிட்டு சும்மா இரு”
“ம்கும்” என்றவள் அவனை விட்டு நகர்ந்து நின்றுக் கொண்டாள்.
சிறு பிள்ளையில் இருந்தே இருவரும் இப்படி தான் நெருங்கி இருப்பார்கள். அதனால் அவர்களை யாரும் தவறான கண்ணோட்டத்தோடு பார்க்கவில்லை. புதிதாய் நெருக்கம் காட்டினால் தவறாக பட்டு இருக்குமோ என்னவோ..
மகிழிடம் மட்டும் வெற்றி இப்படி தான் நடந்துக் கொள்வான் என்று தெரியுமே. அதையும் மீறி அவனிடம் கேட்டு வாங்கிக் கட்டிக்கொள்ள யாரும் முன்வரவில்லை.
“பாட்டியை இனி வெளியே வச்சுடலாம்.. இடம் பத்தாது” என்று தாத்தா சொல்ல அதன் படி பாட்டியை ஆளுக்கு ஒரு பக்கம் பிடித்து வெளியே வைத்தார்கள்.
நல்ல சாவு என்பதால் எப்படியும் சாயங்காலம் தான் எடுப்பார்கள். அதனால் அதற்குள் எல்லா ஏற்படும் செய்துவிடலாம் ஏற்பாடு செய்தார்கள்.
“ஏன்டி நீ கோடி துணி எடுக்கணுமா?” அவளிடம் வந்து கேட்டான் வெற்றி.
“ஆமாம் மாமா பேத்தி முறையில்ல”
“சரி அப்போ வா.. போய் எடுத்துட்டு வந்திடலாம்” என்றான்.
“இருங்க அத்தைக்கும் எடுக்கணும்... அப்படியே யார் யாருக்கு எடுக்கனும்னு கேட்டுட்டு வந்திடுறேன்” என்றாள்.
“அதுவும் சரி தான்...” என்றவன் டூவீலர் இருக்கும் இடத்துக்கு விரைந்தான்.
மகிழ் கோடி துணி எடுக்க போறேன் என்று சொல்ல, மற்றவர்களும் எடுக்கணும் என்று சொல்லி பணம் கொடுத்து விட்டார்கள்.
“என் இங்கயே எடுத்தா போதாதா... டவுனுக்கு தான் போகணுமாக்கும்” என்று இறந்து போன பாட்டியின் மருமகளான பாட்டி நொடித்துக் கொண்டார். அதென்னவோ அவரின் மாமியாரை பாட்டிக்கு பிடிக்கவே பிடிக்காது.
“பட்டு சீலை தான் பாட்டி கோடித்துணியா போடனும்னு. கிழவி இந்த வீட்டோட ஆலமரம் இல்லையா... அது இல்லன்னா நாமாலம் இல்ல...” என்று அவரை சமாதனம் செய்து வெளியே வந்தாள் மகிழ்வதனி.
“எத்தனை பேருக்கு” என்றான்.
“முப்பது புடவை எடுக்கணும்” என்றாள்.
“அது சரி” என்றவன், தன் தம்பி கிள்ளியையும் அழைத்து பட்டாசு, ராச மாலை வாங்கி வர சொன்னான்.
“நேத்திக்கே சொல்லிட்டேன் டா... டெம்போல வச்சு எடுத்துட்டு வந்திடு.. பெரிய மாலையோட இன்னும் முப்பது மாலையும் சேர்த்து வாங்கிடு. தட்டுக்கு வைக்கணும்” என்றான்.
“சரிண்ணா”
“கூட வேலனையும் கண்ணனையும் கூட்டிக்கடா”
“சரிண்ணா” என்றவன் “அண்ணா நீங்க புடவை மட்டும் எடுத்துட்டு வந்திடுங்க. தட்டுக்கு வைக்க வேண்டிய மத்த சாமான்களை எல்லாம் நாங்களே வாங்கிடுறோம்” என்றான் கிள்ளி.
“சரிடா... கவனமா போயிட்டு வாங்க” என்றவன் அவனிடம் ஒரு இலட்சம் ரூபாயை கொடுத்தான்.
“கண்ணா” என்று அங்கு சென்றவனை கூப்பிட்டான்.
“சாப்பாடு வந்து இறங்கிடுச்சாடா?”
“ஏழு மணிக்கு வந்திடும்னு ஹோட்டல் காரன் சொன்னான் ண்ணா... வண்டி காரனுக்கு போன் பண்ணி கேட்டேன்.. வந்துட்டு இருக்காம்” என்றான் கண்ணன்.
“சரி... தண்ணி கேன் வந்து இறங்கிடுச்சா?”
“இருபது கேன் இறக்கி இருக்கான் மாமா. இன்னும் ஐம்பது கேன் பேக்டரில இருந்து எடுத்துட்டு வரேன்னு சொல்லி இருக்கான்” என்று வந்தான் வேலன்.
“முருகேசன் கிட்டன் சொல்லி டீ காபி எல்லோருக்கும் குடுக்க சொல்லிடுடா..” என்று கூறிவிட்டு “ஏறுடி சீக்கிரம் போயிட்டு வந்திடலாம்.. பிறகு வந்து தண்ணி எடுக்க காவேரி ஆத்துக்கு போகணும்” என்றவன்,
“டேய் மாலை வாங்கிட்டு சீக்கிரம் வாங்க.. தண்ணி எடுக்க போகணும். டெம்போக்கு சொல்லிட்ட தானே”
“அதெல்லாம் வந்திடும் வெற்றி... நீ முதல்ல போயிட்டு வாய்யா” தாத்தா சொன்னார்.
“சரிங்க தாத்தா.. நீங்க ரொம்ப நேரம் நிக்காம நிழல்ல போய் உட்காருங்க” என்றவன் தந்தையை அழைத்து தாத்தாவை பார்த்துக்க சொல்லி சொல்லி விட்டு சென்றான்.
அவனுக்கு பின்னோடு அமர்ந்தவள் அவனை பிடிக்காமல் வண்டியின் கம்பியை பிடித்து வர,
“மரியாதையா என் தோளை பிடிடி” என்று காய்ந்தான். பின் என்ன நினைச்சானோ மறுபடியும் வண்டியை வீட்டுக்கு திருப்பினான்.
“என்ன ஆச்சு மாமா” என்று கேட்டவளுக்கு பதில் சொல்லாமல் வண்டியை நிறுத்தி விட்டு உள்ளே போனவன் வரும் பொழுது சஞ்சுளாவோடு வெளியே வந்தான்.
“அவ எதுக்குங்க? இங்கயே இருக்கட்டுமே” என்றவளை சட்டை செய்யாமல் வண்டியின் முன்பக்கம் அமரவைத்தவன் அம்மாவுக்கும் பிள்ளைக்கும் நடுவில் அமர்ந்துக்கொண்டு வண்டியை கிளப்பினான்.
“ஐ ஜாலி” என்று பிள்ளை அழகாக மகிழ்ந்துப் போக மகிழ் அதன் பிறகு எதுவும் சொல்லவில்லை.
நேராக வண்டியை உயர்தரம் வாய்ந்த உணவகத்துக்கு விட்டான்.
“இங்க எதுக்கு... சேலை எடுக்க போகலாம்ங்க” என்றாள்.
“ப்ச் சாப்பிட்டுட்டு போகலாம்”
“கிழவி அங்க செத்து போய் கிடக்கு”
“அதுக்காக சாப்பிடாம தூக்கி போட சொல்லி கிழவி ஒன்னும் சொல்லல.. நீயும் நானும் பசி தாங்குவோம் புள்ள தாங்குமாடி. அவளுக்கு ஊட்டி விட்டுட்டு நீயும் சாப்பிடு” என்றான்.
“அப்போ நீங்க”
“கிழவிக்காக உன் சார்பா விரதம் இருக்கேன்” என்றான் நக்கலாக.
அவனை முறைத்தவள், மகளுக்கு பொங்கல் வாங்கி ஊட்டி விட்டவள் ஆனியன் தோசை ஒன்றை வாங்கி அவனுக்கு ஊட்டி விட்டாள்.
அவளின் கைபிடியில் இருவரும் நன்றாக சாப்பிட்டார்கள். அவர்கள் சாப்பிட்டு முடிக்கவும் அவளுக்கு பிடித்த பூரி வாங்கி கொடுத்தான்.
மூவரும் சாப்டுட்டு விட்டு சேலை பார்க்க கடைக்கு சென்றார்கள்.
“ஆமா கடை இருக்குமா எந்த நேரத்துக்கு?”
“ம்ம் பிரெண்ட் கடை இருக்கு.. திறக்க சொல்லி இருக்கேன்” என்றான். அதன் பிறகு கடை வர,
அங்கு முப்பது சேலை வேற வேற வண்ணத்தில் வாங்கிக்கொண்டு வெளியே வரவே ஒன்பது மணி ஆனது.
“இன்னும் வேற எதுவும் வாங்கனுமாடி”
“ஆமாம் தலைக்கு அரப்பு, எண்ணெய்இதெல்லாம் வாங்கணும்” என்றாள்.
அதையும் கையேடு வாங்கிக் கொண்டவன்,
“பொறி வாங்குங்க” என்றாள். சாலையில் இறைக்க பொறியும் வாங்கிக்கொண்டு வெளியே வர, கிள்ளிக்கு போன் செய்து அவனை வர சொல்லி சொன்னான் வெற்றி.
அவனும் வந்து விட்டான் எல்லா சாமானையும் எடுத்துக் கொண்டு. அந்த வண்டியிலே மத்த சாமானையும் போட்டு விட்டவன்,
“முன்னாடி போங்க... பின்னாடி வரோம்” என்று அவர்களை முன்னால் போக சொன்னவன்,
வண்டியின் பின்னாடி இவர்கள் மூவரும் வந்தார்கள்.
சஞ்சுளா அவனிடம் வாய் பேசிக்கொண்டே வந்தாள். மகிழ் தான் அமைதியாக வந்தாள்.
“ஏன் பாப்பா உங்கம்மா பேச மாட்டாளா?” வம்பிழுத்தான்.
“அம்மா பேசுங்கம்மா அப்பா பேச சொல்றாரு ல” என்றாள் மகள்.
“ஏது அப்பாவா? இந்த சம்பவம் எப்போ நடந்தது” கண்ணாடியில் அவனை முறைத்தாள்.
“நீ புடவை எடுக்கும் கேப்புல” கண்ணாடியில் தெரிந்தவளை பார்த்து கண்ணடித்தான்.
அவள் பல்லை கடித்தாள்.
“விளையாடாதீங்க மாமா”
“நான் ஏன்டி விளையாட போறேன். புள்ளைக்கிட்ட போய் விளையாடுவனா...” கேட்டவன், “சீக்கிரம் மனசை மாத்திக்கிற வழியை பாருடி.. நீ தான் மாறனும்.. நான் இல்ல” அழுத்தம் திருத்தமாக சொன்னான். மகிழிடம் பெருமூச்சு மட்டுமே வந்தது.
வீடு வந்து விட அதன் பிறகு வேலை அவர்களை இழுத்துக்கொண்டது. வந்தவர்களை சாப்பிட வைத்து அனுப்பவே ஏழு ஆள் பிடித்தது. பந்தி பரிமாற இன்னும் ஆட்கள் பிடித்தது.
பாட்டியோடு இருக்க, வந்தவர்களுக்கு கை கொடுக்க, ஒப்பாரி வைத்து அழுக, மயானத்துக்கு ஏற்பாடு செய்ய, என ஆளாளுக்கு அவர்களுக்குள் பிரித்துக் கொண்டு எல்லாவற்றையும் சிறப்பாக செய்துக் கொண்டு இருந்தார்கள்.
இரண்டு மூன்று பேர் இருக்கும் வீட்டிலே அத்தனை சண்டை நடக்கும். இங்கோ ஒரு பட்டாளமே இருந்தது. ஆனால் ஒரு சண்டை சச்சரவு இல்லாமல் அவ்வளவு நேர்த்தியாக ஒவ்வொரு வேலையையும் செய்துக் கொண்டு இருந்தார்கள். அதுவும் அங்காளி பங்காளி சண்டைகள் இழுக்க பார்த்தாலும் பெரியவர்கள், வெற்றி, கிள்ளி, திருமுருகன், முருகேசன் என அவர்களை திசை திருப்பி ஒரு சண்டையும் இல்லாதவாறு எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டார்கள்.
ஊரே ஆச்சரியப்பட்டு போனது. “ஊருக்கே படியளந்த மகராசி” என்று பாட்டியை கொண்டாடினார்கள். “அதற்கு ஏற்றார் போல அவங்க வம்சமும் வாச்சி இருக்கு” என இவர்களையும் வாழ்த்தினார்கள்.
தனம் அத்தையிடம் வந்து “மாமா வேட்டி ரொம்ப கரையா இருக்கு.. மாத்த சொல்லி சொல்லுங்க அத்தை” என்றாள் வெற்றியை பார்த்து.
“உள்ள சிவப்பு பை இருக்கு அதுல நீயே எடுத்து குடு பாப்பா.. என் நாத்தனார் குடும்பம் வந்து இருக்கு.. அதுங்களை கவனிக்கலன்னா மூஞ்சை தூக்கி வச்சுக்குங்க” என்றார்.
“சொன்னது குத்தமா?” என்று ஆகிப்போனது அவளது நிலை.
“மாமா” என்றாள் வெற்றியை பார்த்து.
“என்னடி” என்று மேல தாளத்துக்கு மட்டும் இல்லாது ட்ரம்ஸ் செட்டுக்கும் பணம் குடுத்துக் கொண்டு இருந்தவன் அவளிடம் வந்தான்.
“வேட்டி கரையா இருக்கு மாமா.. வேற கட்டிட்டு கிளம்புங்க. எல்லோரும் தண்ணி எடுக்க போக ரெடியா இருக்காங்க” என்றாள்.
“சரி போய் எடுத்து குடு” என்றான்.
“அதானே தானா ஒன்னத்தையும் எடுக்க தெரியாது” வாய்க்குள் முணகிக்கொண்டே உள்ளேப் போனவள் அத்தை சொன்ன பையை எடுத்து அதில் இருந்த வேட்டியை எடுத்து அவனிடம் நீட்டினாள்.
அவள் தோளில் தன் தோளில் இருந்த துண்டை எடுத்து போட்டவன் சட்டையையும் கழட்டி போட்டான். அவள் முன்னாடி கொஞ்சமும் வெட்கமே இல்லமல் வேட்டியை அவிழ்த்து அவளின் இன்னொரு தோளில் போட்டவன் புது வேட்டியை இடுப்பில் இறுக்கி கட்டினான்.