“நீ ஊட்டி விடுறியா...?” அந்த வாண்டு கேட்டது.
“ஊட்ட தெரியாது பரவாலையா...?”
“ம்ம்ம்...” என்றவன் அவளது முந்தானையை மட்டும் விடவில்லை.
“அது எப்படி தான் அப்பனுக்கும் மகனுக்கும் என் முந்தானை மட்டும் பிடிக்குதோ...? தெரியல...” என்று முணுமுணுத்தபடியே அந்த அறையை விட்டு வெளியே வர, எல்லோரும் நிலை குத்திய கண்களோடு அவர்கள் இருவரையும் பார்த்தார்கள்.
பாண்டியன் தன் மகனின் கையில் இருந்த முந்தானையையும் அம்மா மகன் இருவரையும் மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டு இருந்தான்.
அவனது பார்வையில் ஜெர்க்கானவள் சின்ன பாண்டியனின் கைகளில் இருந்த முந்தானையை வாங்கி தன் இடுப்பில் சொறுகிக்கொண்டாள்.
அதில் அவளது இடை மெலிதாக தெரிய அவனது பார்வை வஞ்சனை இல்லாமல் அங்கேயே நிலைத்து நின்றது. அதில் கூச்சம் கொண்டவள் நன்றாக இழுத்து தன் இடுப்பை மறைத்துக்கொண்டாள்.
“தனியா மாட்டுடி... வெடக்கோழிய உரிக்கிற மாதிரி உரிக்கிறேன்...” அவன் வாயசைத்து சொல்ல, அவளது உடல் வெளிப்படையாகவே ஆட்டம் கண்டது.
“மசமசன்னு நிக்காம ஆளுங்க எல்லாம் நகருங்க... பொண்ணை கொஞ்சம் காத்தோட்டமா இருக்க விடுங்க... ஏத்தா அந்த பழத்தை கொண்டா...” என்று ராக்காயி தன் மருமகளை ஏவ,
மீனாச்சியம்மை மணமக்களுக்கு பாலும் பழத்தையும் கொண்டு வந்து கொடுக்க, பாண்டியன் உண்டுவிட்டு அவளிடம் கொடுக்க, பரிதாபமாய் அதனை பார்த்தாள்.
பத்தாதற்கு அவனது மகன் வேறு, “சாப்பிடுடி...” என்று அவளது வாயில் திணிக்க வேறு வழியில்லாமல் அவள் உண்டாள்.
அதனை நேரடியாக பார்க்காவிட்டாலும் உணர்ந்துகொண்டவன், அவ்விடம் விட்டு நகர்ந்து சென்றுவிட்டான்.
அவன் சென்றவுடன் தான் அவளுக்கு நெஞ்சில் நிம்மதி எழுந்தது. ஆனால் சுற்றி இருந்த அவனது சொந்தக்காரர்கள் எல்லாம் அவளை கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கொண்டு இருந்தார்கள்.
கண்கள் கலங்கிவிடுமோ என்று அஞ்சினாள். ஆனாலும் அதை எதிர்கொள்ளவே செய்தாள்.
“உன் வீட்டுல இருந்து ஏன் யாரும் இங்க வரவே இல்லை... யாருக்கோ கல்யாணம் மாதிரி கால்ல வெண்ணி தண்ணி ஊத்திட்டு அப்படியே பட்டுக்காம போயிட்டாங்க...”
“அவங்களுக்கு எல்லாம் இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லையா..? இல்ல எங்க பாண்டியன தான் புடிக்கலையா...? இந்த மாதிரி ஒரு மவராசன் கிடைக்க உங்களுக்கு குடுத்து வச்சு இருக்கு. அதை கொண்டாட துப்பு இல்லியே...” ஒரு வயதான கிழவி முறைத்துக்கொண்டே அவளிடம் கேட்க,
அவளால் பதில் சொல்லவே முடியவில்லை. புகுந்த வீட்டில் நிலைத்து நிற்பது பிறந்த வீட்டு சீரும் ஆளு அம்பு படையும் தான்.
ஆனால் இது அத்தனையும் மாதுமையாளுக்கு வாய்க்கப் பெறவில்லை.
“மாத்து துணியாவது கொண்டு வந்தியா...? இல்ல அதுவும் உன் புருஷன் தான் எடுத்து தரணுமா..?” நக்கலாய் அந்த கும்பலில் இருந்த சிறுசு கேட்டு விட, அடக்கி வைத்திருந்த கண்ணீர் கன்னத்தில் இறங்கியது.
அந்த நேரம் அவளது தோளில் அழுத்தமான கரம் பதிந்து அணைத்துக்கொண்டது அத்தனை பேரின் மத்தியிலும்.
“நான் தான் அவளை கட்டுன துணியோட வரசொன்னேன். என் பொண்டாட்டிக்கு எது இருந்தாலும் அது நான் தான் செய்யணும். இவ வீட்டுல இருந்து ஒரு தூசி வந்தா கூட இந்த பசும்பூண் பாண்டியனுக்கு அவமனாம். அந்த அவமானத்தை என் பொண்டாட்டி எனக்கு தரல... இனி தரவும் மாட்டா...” என்ற கர்ஜனையான குரலில் பாண்டியன் அத்தனை பேருக்கும் பதில் சொல்ல, அதன் பிறகு அவ்விடத்தில் எந்த சலசலப்பும் ஏற்படவில்லை.
ஒரு நொடியில் தன் அவமானத்தை எல்லாம் துடைத்து எறிந்தவனை ஏறெடுத்து பார்த்தாள். அவளின் பார்வையை எதிர் நோக்கியவன் சட்டென்று கண்ணடிக்க அவள் முகத்தை திருப்பிக்கொண்டாள்.
“இப்படியே முகத்தை திருப்பிக்கிட்டு இருடி... இரவுக்கு கழுத்தை திருகி கழுகுக்கு போடுறேன்...” பல்லைக்கடித்து தன் கோவத்தை காட்ட, அவள் பதறிப்போனாள்.
“எவடி அவ எங்க வீட்டு பொண்ண நடு முத்தத்துல நிக்க வச்சி கேள்வி கேக்குறவ... ஏங்கடி வந்தமா விருந்து சாப்பிட்டமான்னு போகாம இப்போ தான் உறண்ட இழுத்துக்கிட்டு இருக்கீங்க..” ராக்காயி கேட்க,
“உங்க எல்லோரோட வண்டவாளத்தை நான் பந்தி வைக்கவா...? ஒருதவளுக்கும் உருத்து கிடையாது எங்க வீட்டு புள்ளைய பேச... போங்கடி பொறவால பந்தி போய்க்கிட்டு இருக்கு... வந்த வேலைய பாருங்கடி...” பிச்சாயியும் ஒரு அதட்டல் போட, அங்கிருந்த மொத்த கும்பலும் காணமல் போய் இருந்தது நொடியில்.
இல்லையென்றால் அங்கிருக்கும் அத்தனை பேரின் மானத்தையும் ஒற்றை நொடியில் சந்தி சிரிக்க வைத்து இருப்பார்களே இரு கிழவிமார்களும். அவர்களின் வாய்க்கு பயந்துக்கொண்டு வம்பு வளர்க்க வந்தவர்கள் எல்லாம் ஓடியே போய் இருந்தார்கள்.
“ஏட்டி மீனாச்சி உன் மருமவள உள்ளார கூட்டிட்டு போ... சாப்பிட ஏதாவது குடு... பேரன் பேத்தியே எடுத்தாச்சு இன்னும் எல்லாமும் சொல்லி சொல்லி தான் செய்யிவா...” ராக்காயி மருமகளை கடிய,
“அவ என்ன பண்ணுவா முன்னேறு எப்படியோ அப்படி தானே பின்னேறு இருக்கும்...” என்று ஜாடையாய் பிச்சாயி தன்னக்கு போட்டியாய் வந்த சகக் கிழத்தி ராக்காயியை வைய,
“அடியேய் இந்த ஜாடை மாடை பேச்செல்லாம் இங்கன வேணாம் சொல்லிட்டேன்.. ஏதோ நான் முன்னால வந்த மாதிரி பேசாதடி... ஆக்கங்கெட்ட கோட்டி...” பதிலுக்கு இவர் தாக்க,
“அடியேய் நான் கோட்டின்னா நீ யாருடி பெரிய தஞ்சாவூரு ராணியா...? இருவரும் மும்மரமாக சண்டை போட்டுக்கொண்டு இருக்க, மீனாச்சியமை வேகமாய் வந்து தன் மருமகளை பாண்டியனின் அறைக்குள் அழைத்து சென்றார்.
“கண்ணு கொஞ்ச நேரம் இங்கனவே இரு... ஆகாரத்தை இங்கனவே எடுத்துட்டு வந்து தர சொல்லுறேன்... மாத்து துணி எடுத்துட்டு வரேன்... அது வர பேரன உன் கூடவே வச்சுக்க...” என்றவர் தன் இடுப்பில் இருந்த பொற்கையனை அவளிடம் கொடுத்துவிட்டு செல்ல, அவளது மடியில் உரிமையுடன் ஏறி அமர்ந்தவன்,
“பசிக்கிது ஊட்டி விடுறேன்னு சொன்னியே...?” சின்ன வாண்டு கேள்விக்கேட்டது.
“அப்பத்தா எடுத்துட்டு வரேன்னு சொன்னாங்கடா. கொஞ்ச நேரம் பொறு. அப்பத்தா வர்ற வரை நாம விளையாடலாம்...” என்று சொல்லி அவனை அங்கு இருந்த குறுங்கண்ணோரோம் அழைத்து சென்றாள்.
“இங்க இருந்து பாரு... தூரத்துல மலை உச்சி தெரியுதா அது தான் குறிச்சி மலை... அதுல ஒரு அருவி இருக்கு... நாம ஒரு நாள் அதுக்கு போகலாம்...”
“அருவின்னா என்ன..?”
“அதுவா தண்ணி தான். ஆனா அங்க நிறைய இருக்கும்.. நாம அதுல போய் குளிக்கலாம் ஒருநாளு...” என்று அவனுக்கு ஆசை காட்ட, அவளின் கழுத்தோரம் சூடான மூச்சுக்காற்று பட, அடிவயிற்றில் பயம் பிடித்துக்கொண்டது.
தொடரும்..
Nice





