“சொல்லுப்பா ஆதினியை எதுவும் சொல்லிட்டியா? ரொம்ப நல்ல பிள்ளை ப்பா. அந்த பொண்ணு ஏற்கனவே நொந்துப் போய் இருக்கு. நீயும் உன் பங்குக்கு அந்த பிள்ளையை நோகஅடிச்சிடாத ப்பா” என்ற விசாகனின் பேச்சை புரிந்துக் கொள்ள முடியாமல் பிரம்மை பிடித்தது போல அப்படியே நின்றான் சிறிது நேரம்.
பிறகு ஆதினியின் முகம் கண் முன் வர அப்பொழுது தான் உயிர் மீண்டும் வந்தது போல தன் வண்டிசாவியை எடுத்துக் கொண்டு ஆதினியை பின் தொடர்ந்து ஓடினான் பெருவளத்தான். அவன் அப்படி தலை தெறிக்க ஓடுவதை பார்த்த பெரியவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.
அதன் பிறகு கொஞ்சம் சுதாரித்து,
“நாம ஆதினிக்கிட்ட ஆல்பம் கேட்டு இருக்க கூடாதோ வாணி” என்று வேதனையுடன் கேட்டார் விசாகன்.
“எனக்கும் அப்படி தான் தோணுதுங்க. அதனால தான் பிள்ளை....” என்று அவர் தடுமாற,
“ப்ச்...” என்று தங்களையே நொந்துக் கொண்டார்கள் இருவரும்.
இங்கே கண்மண் தெரியாமல் வண்டியை ஓட்டிக் கொண்டு போன ஆதினி எதிரில் வந்த லாரியை கொஞ்சமும் கவனிக்காமல் அதை இடிப்பது போல கொண்டு போனவளை பின்னாடி இருந்து தொண்டை வலி எடுக்க,
“ஹேய் ஆதினி முன்னாடி லாரி வருது பாரு... வண்டியை ஒடித்து இடப்பக்கமா திருப்புடி. ஹைய்யோ எதையும் காதிலே வாங்காமல் போறாளே.. ஆதினி ஆதினி மாமன் கூப்பிடுறது காதில விழுதா இல்லையாடி” என்று அடி வயிற்றில் இருந்து குரல் எழுப்பி ஆதினியை அழைத்துகே கொண்டு இருக்க அவளுக்கு அவனுடைய சத்தம் எல்லாம் எதுவுமே காதில் விழாத அளவுக்கு அவளின் மனமும் மூளையும் நடந்த சம்பவத்திலே உறைந்துப் போய் இருந்தது.
அந்த நிகழ்வில் இருந்து அவளால் வெளிவரவே முடியவில்லை. மீண்டும் ஒருமுறை பெருவளத்தானின் இரசனையான முகம் வந்துப் போக அப்படியே கண்ணை மூடிக் கொண்டாள். விழிகளின் ஓரம் கண்ணீர் கோடாக வழிந்த வண்ணமாகவே இருந்தது.
அப்பொழுது பெரிதாக ஒரு ஹாரன் சத்தம் கேட்க சட்டென்று திகைத்து உடல் அதிர விழிகளை திறந்துப பார்த்தாள். எதிரே உயிரை குடிக்கும் வாகனமாய் ஒரு லாரி வர ஒரு கணம் என்ன நினைத்தாளோ இதழ்களில் ஒரு வறண்ட புன்னகை அரும்ப அப்படியே அந்த லாரியில் கொண்டு போய் மோதுவது போல தன் வண்டியை அந்த லாரியை நோக்கி செலுத்தினாள்.
அவளது எண்ணத்தை பின்னிருந்து அறிந்துக் கொண்டானோ என்னவோ பெருவளத்தான் தன் வண்டியின் வேகத்தை சடுதியில் ஏற்றி அவளுக்கு அருகில் பக்கவாட்டில் வந்தவன் ஒரு கணம் தான் எதிர்கொள்ள போகும் விளைவுகளை எண்ணியவன் அடுத்த நிமிடம் தன் முழு பலத்தையும் இடது காலில் திரட்டி அவளை வண்டியோடு எட்டி ஒரு உதை உதைக்க, ஆதினியின் வண்டி பாதை மாறி பக்கவாட்டில் இருந்த மண் சாலைக்கு திரும்பியது.
இதெப்படி என்று அவள் உணர்ந்து யார் இதை செய்தது என்று திகைத்தவள் பின்னாடி திரும்பி பார்க்க பெருத்த சத்தத்துடன் லாரியின் அடியில் பெருவளத்தான் உருண்டுக் கொண்டு இருந்தான்.
அவனது சட்டையை வைத்து அது யார் என்று உணர்ந்தவள்,
“மாமா....” என்று அடிவயிற்றில் இருந்து பீரிட்டு வந்தது ஆதினியின் அழுகை குரல். அந்த குரலை கேட்டுக் கொண்டே பெருவளத்தானின் கண்கள் மூடியது. அடர்ந்த மீசை மறைத்து இருந்த அவனின் இதழ்களில் ஒரு மலர்ச்சியான புன்னகை அரும்பியது. எதை எண்ணி அவனது முகம் மலர்ந்தது என்று அவனுக்கு மட்டுமே வெளிச்சம்.
வண்டியை அப்படியே போட்டுவிட்டு சிதைந்துப் போன உள்ளத்துடன் அலறியடித்துக் கொண்டு பெருவளத்தானை நோக்கி ஓடினாள். வரும் பொழுதே அவளின் கால்களில் இருந்த செருப்பு திசைக்கு ஒன்றாய் சிதறிப்போய் கால்களில் முட்களும் கற்களும் குத்தி கீறி பதம் பார்த்து இருக்க, அதை சட்டை செய்யும் மன நிலையில் அவள் இல்லை.
லாரிக்கு அடியில் பெருவளத்தான் மாட்டிய உடனே லாரி சடன் ப்ரேக் போட்டு நிறுத்தி இருக்க அதற்குள் சுற்றி இருந்த ஆட்கள் எல்லோரும் ஓடி வந்து இருந்தார்கள். எல்லோரையும் விலக்கி விட்டுட்டு கண்கள் குளமாக நெஞ்சு வறண்டுப் போக லாரிக்கு அடியில் இருந்தவனிடம் ஓடினாள் ஆதினி.
“ம்மா இது ஆக்சிடென்ட் கேஸ் ம்மா நீ பாட்டுக்கு உள்ள போய் மாட்டிக்காத” என்று அங்கிருந்தவர்கள் எல்லோரும் எச்சரிக்க,
“அவர் என்னோட மாமா... ப்ளீஸ் அவரை காப்பாத்துங்க. உங்க கால்ல விழுறேன்” என்று அங்கிருந்தவர்களின் காலில் விழ,
“நோ நீ யாரோட கால்லயும் விழக்கூடாதுடி... நீ ராணிடி” என்றவனின் குரல் யாருக்குமே கேட்காமல் போனது.
“ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க. எனக்கு அவர் வேணும்..” என்று எல்லோரையும் கையெடுத்து கும்பிட்டாள் கண்ணீரும் கதறலுமாக...
“நீ யார் கிட்டயும் கெஞ்ச கூடாதுடி” என்று பெருவளத்தானின் விழிகள் மயக்கத்தையும் மீறி மல்லுக்கட்டிக்கொண்டு அவளிடம் சொல்ல விழைந்தது. ஆனால் அவனால் சொல்ல முடியவில்லை.
அவளின் கெஞ்சலில் அங்கு இருந்த சிலருக்கு மனம் இரங்க, லாரியின் அடியில் சிக்கி இருந்தவனை எல்லோரும் சேர்ந்து இழுத்து போட்டு மருத்துவமனைக்கு கூட்டி செல்ல அவளுக்கு உதவி செய்தார்கள்.
உத்திரம் கொட்டி கொண்டு இருந்த வலது கையை தூக்கிப் பிடித்துக் தன் நெஞ்சோடு வைத்துக் கொண்டவளின் கண்ணீர் நிற்கவே இல்லை. “என்னை எதுக்கு காப்பாத்துனீங்க... என்னை காப்பாத்த வந்து தானே உங்களுக்கு இந்த நிலை... ஐயோ இப்போ அக்காவுக்கு நான் என்ன பதில் சொல்வேன். கடவுளே இப்படி உதிரம் கொட்டுதே. உடம்பெல்லாம் எவ்வளவு காயமாகி இருக்கு.. எல்லாம் என்னால தான்” என்று தன் தலையிலே அடித்துக் கொண்டாள் வேதனையுடன்.
“அடிச்சுக்காத குட்டி” என்று சொல்ல தான் விழைந்தான் ஆனால் பெருவளத்தானால் முடியவில்லை. அவனை மடியில் போட்டுக் கொண்டு கண்ணீரில் கரைந்தவளின் நேசத்தை கண்டு மீண்டும் அவனது இதழ்களில் புன்னகை மலர்ந்தது.
உடம்பெங்கும் வலி, கணு கணுக்கு வலி தான். ஆனால் ஏனோ ஆதினியின் மடியில் இருந்ததால் அவனுக்கு அந்த வலியெல்லாம் தெரியவில்லை போல.
ஒருவழியாக மருத்துவமனையில் அவனை சேர்த்து விட்டவளுக்கு உயிரே இல்லை. விபத்து தீவிர சிகிச்சை பிரிவில் அவனை அனுமதித்தவர்கள் முன்பணம் கட்ட சொல்ல அவளின் கையில் எதுவுமே இல்லை என்று அப்பொழுது தான் உணர்ந்தாள்.
அடுத்த நொடி எதையும் யோசிக்காமல் அவள் கழுத்தில், கையில், விரலில், காதில் என போட்டு இருந்த அத்தனை தங்கத்தையும் பொட்டு தங்கத்தையும் விடாமல் கழட்டியவள் ரிஷப்ஷனில் கொண்டு போய் கொடுத்தாள்.
“இல்லம்மா இதெல்லாம் இங்க எடுக்க மாட்டோம்... பக்கத்துல தான் அடகு கடை. அங்க போய் வச்சுட்டு பணமா மாத்திட்டு வாங்க” என்றவர்களிடம் கை கூப்பியவள் யார் என்ன என்று தெரியாதவர்களிடம் மொத்த நகையை கொடுத்து,
“என்னால அவங்களை விட்டு நகர முடியாது ப்ளீஸ்” என்று கண்ணீருடன் கேட்டவளை கனத்த மனதுடன் பார்த்தவர்களுக்கு நெஞ்சில் ஈரமும் இரக்கமும் இருக்கும் போல அவர்களே நகையை பணமாக மாற்றி பெருவளத்தானின் மருத்துவ செலவுக்கு போக மீதியை அவளிடம் கொடுத்தார்கள்.
அவர்கள் கையில் திணித்த பணத்தை கூட சட்டை செய்யாமல் மூடிய அறையின் வாசலிந முன்பு தவமிருந்தாள் கண்ணீருடன். ஆதினிக்கு நெஞ்சமெல்லாம் அடைத்துக் கொண்டு வந்தது. இரத்த வெள்ளத்தில் பெருவளத்தானை பார்த்தவளுக்கு உலகமே இருண்டுப் போனது. இனி அவன் கண் விழித்தால் மட்டுமே இனி அவளின் உலகு மெல்ல மெல்ல பூபாளத்தை காணும்.
இல்லை என்றால் அது என்றுமே சூனியம் நிறைந்த பூலோகம் தான். சுவற்றில் சாய்ந்து முகத்தை மடியில் புதைந்து இருந்தவளுக்கு கண்ணீர் மட்டும் நிற்கவே இல்லை. பற்றுகோலாய் இருந்த கழுத்து சங்கிலியை தடவி பார்க்க அங்கு இருந்த வெறுமை அவளை இன்னும் கலவரப் படுத்த வேகமாய் எழுந்தாள்.
என்ன நடந்தது என்று என எல்லாவற்றையும் ஒரு கணம் ரீகேப் ஓட்டிப் பார்த்தவளுக்கு எல்லாவற்றையும் கழட்டிக் கொடுத்தது நினைவுக்கு வர வேகமாய் ரிஷப்ஷனுக்கு ஓடினாள்.
“சி... சிஸ்....டர் சிஸ்டர்” என்று அடித்து பிடித்து வந்தவள் சங்கிலி என்று சைகை செய்ய, அந்த பெண் புரிந்துக் கொண்டவளாய்,
“எல்லாவற்றையும் வச்சு தான்ங்க பணத்தை புரட்டினேன். இந்தாங்க இரசீது. குடுக்க மறந்துட்டேன்” என்று சொன்னவள் அதை எடுத்து நீட்ட,
அவளின் ஒட்டு மொத்த உலகமும் மீண்டும் இருண்டுப் போனது. இதழ்களில் மீண்டும் விரக்திப் புன்னகை. எல்லாமே ஒற்றை நொடியில் இழந்துப் போனது போல ஒரு உணர்வு. ஒன்றுமே இல்லாததை அந்த நொடியில் உணர்ந்தவள் இருந்த ஆர்பாட்டம் எல்லாம் வடிந்துப் போய் மீண்டும் பெருவளத்தான் அனுமதித்து இருந்த அறையின் முன்னாடி வந்து அமர்ந்தாள்.





