அதையெல்லாம் கவனிக்காமல் ஆதினி தலைக்குனிந்து உணவை உண்டுக்கொண்டு இருந்தாள். அவளின் அமைதி பெருவளத்தானை புருவம் உயர்த்த வைத்தது. இவ்வளவு நேரம் அவன் வருவதற்கு முன்பு வரை அவளின் சத்தம் கேட்டுக்கொண்டு இருந்தது.
அவன் வந்த உடனே அவளது இதழ்கள் மௌனத்தை கடைபிடிக்க என்னவோ ஒரு மாதிரி ஆனது அவனுக்கு.
“ஏன் என்கிட்டே இந்த ஒதுக்கம்?” என்று கடுப்பானவன் விரைவில் சாப்பிட்டு விட்டு வெளியே போய் விட்டான். அவன போகும் வரை அமைதியாக உண்டவள் அவன் அந்த பக்கம் போனவுடன் சரளமாக பேசினாள்.
அதையும் பெரியவர்கள் இருவரும் கவனித்துக் கொண்டார்களே தவிர எதையும் தெரிந்தது போல காட்டிக் கொண்டார்கள் இல்லை.
கடையில் இருந்து வாங்கி வந்த பொருட்களை கடை பரப்பியவள், அதை வைத்து தங்கள் மூவருக்கும் சுவையாக சமைக்க ஆரம்பித்தாள்.
“நீயே என்னைக்காவது ஒரு நாள் தான் வர்ற. வர்ற அன்னைக்கும் இப்படி அடுப்படியில வேகணுமாடா?” அலுத்துக் கொண்டார் விசாகன்.
“அதெல்லாம் ஒண்ணும் சிரமம் இல்ல மாமா. அது தான் நீங்க உதவி பண்றீங்களே...” என்றவள் வாணியையும் வீல் சேரில் உட்கார வைத்து அடுப்படிக்கு தள்ளிக்கொண்டு வந்தாள்.
அப்படியே உணவு மேசையின் அருகில் அணைவாய் இருத்தியவள் தான் கட்டி இருந்த சேலையின் முந்தானையை இடுப்பில் சொறுகிக்கொண்டு அவள் இலாவகமாக சமைக்க விசாகன் வேணும் என்கிற அளவுக்கு அவளுக்கு உதவி செய்துக் கொண்டு இருக்க பின்னாடி ஏதோ கீழே விழுந்து உடையும் சத்தம் கேட்டது.
மூவரும் பதைத்துப் போய் திரும்பி பார்க்க அங்கே பெருவளத்தான் தான் தன் கையில் இருந்த கண்ணாடி டம்ளரை தவறி கீழே விட்டு இருந்தான். அவனை அந்த நேரம் எதிர்பார்க்காதவர்கள்,
“தம்பி நீ வெளியே போகலையா...?” கேட்டார் அவனின் தந்தை..
ஆக்சுவலி இந்த கேள்வி ஆதினியின் கண்களில் தான் ஒளிர்ந்தது. அதை படித்த பெருவளத்தானுக்கு என்னவோ போல் ஆனது. தான் இந்த இடத்தில் அதிகப் படியோ என்ற உணர்வு அவனது பெற்றவர்களே உருவாக்கி இருந்தார்கள். அதை ஏற்க முடியாமல் நெஞ்சுக்குழி அவனுக்கு ஏறி இறங்க அவனது உணர்வுகளை படித்தவளுக்கு ஏனோ தடுமாறிப் போனாள்.
அவன் மனமே இல்லாமல் அவ்விடத்தை விட்டு வெளியே போக, சட்டென்று விசாகனுக்கு கண்ணை காட்டினாள் ஆதினி.
“தம்பி வேலை இல்லையா...? இல்லன்னா வாயேன் நாம இப்படி ஒண்ணா வேலை செய்து சமைச்சி ரொம்ப நாள் ஆச்சு... இன்னைக்கு ஒரு மாற்றமா ஆதினியும் நம்ம கூட இருக்கா...” என்று விசாகன் தன் மகனின் முதுகை பார்த்து கேட்டார். தந்தையின் குரலில் ஒரு கணம் அப்படியே நின்றான்.
முன்பு கேட்ட கேள்விக்கு தான் இந்த சமாதனம் என்று புரிந்தது. ஆனாலும் அவனாலும் இந்த இடத்தை விட்டு போக முடியவில்லையே... அதனால் பெருமூச்சு விட்டு தன்னை சமாதனம் செய்துக் கொண்டவன் இயல்பான முக பாவத்துடன் திரும்பி வந்தான்.
சின்ன இடம் தான் ஆனால் ஏனோ அவ்விடத்தில் அப்படி ஒர் உயிரோட்டம் இருந்தது...! “நான் காய் எதுவும் கட் பண்ணி தரவா ஆதினி?” அவளிடம் கேட்டான்.
அவள் அடுப்படி பக்கம் திரும்பி நின்று இருக்க, அவளின் அருகில் இவனும் போய் நின்றுக் கொண்டான். விசாகன் உணவு மேசை நாற்காலியில் அமர்ந்து இருந்தார். அவரை ஓட்டினார் போல சக்கர நாற்காலியில் அவரின் கணவன் உரித்துக் கொண்டு இருந்த பூண்டை வாங்கி சின்னதாய் வெட்டிக் கொண்டு இருந்தார்.
“என்னென்ன வெரைட்டி செய்ய போற?”
“சிக்கென் ரோஸ்ட், சிக்கென் சூப், சிக்கென் எக் மிளகு சாப்ஸ், கொஞ்சமா பிரியாணி, ரைத்தா, அண்ட் நம்ம பேவரட் கேர்ட்ரைஸ்...” என்றவளுக்கு நம்ம என்ற சொல் மிக இயல்பாக வந்து உதித்ததை கண்டு தன் நாக்கை கடித்துக் கொண்டவள் முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளாமல் மிக இயல்பாக இருப்பது போலவே இருந்தாள்.
அவளை எப்படி ‘நம்ம...’ என்ற சொல் பாதித்ததோ அதே போல பெருவளத்தானையும் பாதித்தது. சடுதியில் அவனது கண்கள் அருகில் இருந்தவளை நிமிர்ந்துப் பார்த்தான். ஆனால் அதற்குள் தான் ஆதினி தன்னை சுதாரித்துக் கொண்டாளே. பிறகு எப்படி அவளை ஆராய முடியும்.
“தனக்கு ஏன் இந்த ஆராய்ச்சி... இதுல என்ன விகல்ப்பமா இருக்க போகுது.” என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டவன்,
“நான் சிக்கென் கட் பண்ணி தரேன்” என்று அவன் அந்த வேலையை செய்ய, கொஞ்ச கொஞ்சமாய் அங்கு கலகலப்பு தொற்றிக் கொண்டது. பெரும்பாலும் விசாகனும் ஆதினியும் தான் பேசிக்கொண்டு இருந்தார்கள்.
“நீ இவ்வளவு பேசுவன்னு இந்த மூணு வருடத்துல இன்னைக்கு தான் தெரிஞ்சுக்கிட்டேன்” என்று நீண்ட அமைதிக்கு பிறகு பெருவளத்தான் சொல்ல அதன் பிறகு ஆதினி எதுவும் பேசவில்லை.
சட்டென்று அவளிடம் தோன்றிய மௌனத்தை வெறுத்தவன்,
“நீ உன் இயல்பை தொலைச்சுக்கிட்டு இருக்க ஆதினி. ஏன் உங்க வீட்டுல எல்லோர்கிட்டயும் சிரித்து பேச வேண்டியது தானே. உங்க அக்காக்களும் அம்மாவும் உன்னை அமுக்குணின்னு சொல்லிட்டே இருக்காங்க. நான் அப்படி இல்லன்னு நீ சொல்ற மாதிரி எல்லோர்க்கிட்டையும் சிரித்து பேசலாமே. ஏன் தேவையில்லாம இந்த முகமூடி” என்று கேட்டு விட்டான்.
அவனது இயல்பு இது தான். பட்டு பட்டென்று போட்டு உடைத்து விடுவான். அதுவரை இயல்பாக இருந்தவள் பெருவளத்தான் இப்படி கேட்டு விடவும் ஒரு கணம் கண்களை மூடி அமைதி காத்தவள் பின் எப்பொழுதும் போல அவனுக்கு ஒரு முறைப்பைக் கொடுத்தாள்.
“நீ சொல்ற மாதிரி எல்லோர்க்கிட்டயும் ஒரே மாதிரி இருக்க முடியாது தம்பி. யார் யாருக்கு எங்க இயல்பா இருக்க முடியுதோ அங்க மட்டும் தான் அவர்களால் இயல்பா மூச்சு விடவே முடியும்.” என்றார் அவனை பொருள் நிறைந்த பார்வை பார்த்து.
அவரின் பார்வையில் இருந்த பொருளும் புரியவில்லை. அவரின் சொல்லில் இருந்த பொருளும் புரியவில்லை.
“புரியலப்பா” என்றான்.
“உனக்கு புரியவே வேணாம் கண்ணா” என்று எண்ணிக்கொண்டார் வாணி.
“சிலருக்கு சில விடயங்கள் புரியாமல் இருப்பதே நலம் தம்பி. அவங்கவங்க எங்க இயல்பா இருக்காங்களோ அப்படியே விட்டுடனும். மீறி வளைச்சா ரெண்டா உடைந்து போயிடும். அதுக்கு பிறகு எவ்வளவு ஒட்ட வச்சாலும் ஒட்டவே முடியாது” என்று சொன்னவரை நிமிர்ந்து பார்த்தாள் ஆதினி.
அவளை பார்த்து அன்புடன் சிரித்தவர்,
“அது போல தான் நம்ம ஆதினியும். அவளை அவள் போக்குல விடு. மீறி வளைக்க நினைச்சா அவ உடைந்து போயிடுவா” என்றார்.
“என்னை விட அவகிட்ட அதிகம் பழகியது இல்லை. மாதத்துல ஒரு நாள். அதுவும் மூணு மணி நேர சந்திப்பு. அவ்வளவு தான். ஆனா நீங்க என்னவோ அவ பிறந்து வளர்ந்தது முதற்கொண்டு அவக்கூட இருந்த மாதிரி பேசுறீங்கப்பா”
“சிலரை எவ்வளவு நாள் பார்த்து பழகுறோம்ன்றது முக்கியம் இல்லப்பா... எந்த அளவு அவங்களை புரிஞ்சுக்குறோம்ன்றதுல தான் இருக்கு” என்று வாணி சொல்ல,
“ம்மா”
“உங்க அம்மா சொல்றது அவ்வளவும் உண்மை. சில விசயங்களை அதன் போக்கில் விட்டுடனும்” என்றார் விசாகன்.
அதன் பிறகு பெருவளத்தான் அதை பற்றி எதுவும் பேசவில்லை. ஆனால் அவளோடு வாயாடவும் அவனால் இருக்க முடியவில்லை. எல்லோரிடமும் வளவளத்துகொண்டே இருந்தான்.





