“இங்க வா குட்டி” என்று அழைத்து போய் ஒரு பொம்மையின் அருகில் நிறுத்தினான்.
“இப்போ உங்களுக்கு என்ன வேண்டும். எதுக்கு என்னை கூப்பிட்டீங்க” என்று கேட்டாள்.
“இத பாரேன்” என்று அந்த பொம்மை போட்டு இருந்த புடவையை காட்டினான். அப்பொழுது தான் அந்த புடவையை பார்த்தாள். மினுமினு என்று மின்னும் ட்ரான்ஸ்பரன்ட் சிந்தட்டிக் சேலையில் சின்ன சின்ன கை வேலைப்பாடு நிறைந்து இருந்த அந்த புடவையை விட்டு அவளால் கண்களை எடுக்கவே முடியவில்லை.
அதோடு அந்த புடவையை தொட்டு பார்த்தவளுக்கு அதன் மென்மையும், மிருதுவும் மிகவும் பிடித்துப் போனது. விலையை பார்த்தாள். “அம்மாடி...” என்று அதிர்ந்துப் போனாள்.
சுற்றிலும் பார்க்க அப்பொழுது தான் அது மிக விலை உயர்ந்த பிரத்யேகமான பொட்டிக் ஷாப் என்று புரிந்தது. அந்த புடவையின் தனித்த நிறம் இன்னும் வெகுவாக கவர்ந்தது. வெங்காய சருகு வண்ணத்தில் இருந்தது.
“அழகா இருக்கு” என்றாள் அவளையும் மீறி.
“அதனால தான் இதை எடுத்தேன்” என்றவன் பில் போட போனான். இதுக்கெதுக்கு என்னை கூப்பிடனும் என்று முறைத்து விட்டு எல்லோரும் இருக்கும் இடத்துக்கு வந்துவிட்டாள். அதன் பிறகு வீட்டுக்கு வந்தவள் ஒழுங்காக சாப்பிடாமல் பெயருக்கு கொறித்து விட்டு மேலே மாடிக்கு வந்து விட்டாள்.
இத்தனை வருடம் கடந்துப் போன எல்லாவற்றையும் நினைத்து பார்த்தவளுக்கு கண்களில் கண்ணீர் நிறைந்தது. தனிமைக்கு மட்டுமே அவளின் அழுகையை பார்க்கும் உரிமை உள்ளது.
தலையணைக்கு கூட அந்த உரிமை கிட்டியது இல்லை. ஏனெனில் படுத்த உடன் தூங்கும் ரகம் இவள். எனவே அவளின் கண்ணீர் அவளது தனிமையான பொழுதுகளில் மட்டுமே...!
வாடைக்காற்று பதமாக வீச அவளது வேதனையை இன்னும் அதிகமாக்கியது. தொண்டையை அடைத்த உணர்வை என்ன செய்து போக்க என்று தடுமாறி ஏங்கிப் போனாள்.
இது எப்போதுமே தீராத தாகம் போல அவளுள் இந்த சோகம் உடனிருக்கும் போல... இருளை வெறித்துக் கொண்டு இருந்தவளுக்கு யாரோ வரும் அரவம் கேட்க சட்டென்று கலங்கிய கண்களை அழுந்து துடைத்துக் கொண்டு எப்பொழுதும் போல இருக்கும் நிமிர்வை கொண்டு வந்து அசால்ட்டாக நிற்பது போல நின்றுக் கொண்டாள்.
“தூங்கலையா” வேறு யார் அவளை கேட்பார் பெருவளத்தானை தவிர...
“தூக்கம் வரல...”
“ஓ...” என்றவன் வேறு எதுவும் அவள் பேசுவாள் என்று பார்க்க அவளோ வாயை திறப்பேனா என்று அழுத்தமாக நின்றாள்.
அவளது மௌனம் எப்பொழுதும் இயல்பு தான் என்பதால் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல்,
“இந்தா” என்று ஒரு பார்சலை நீட்டினான்.
அதை வாங்காமல் “என்ன இது?” என்று மட்டும் கேட்டாள்.
“பிரிச்சி பாரு” என்றான். ஆதினி முறைத்தாள்.
“உன்கிட்ட சின்னதா கூட விளையாட முடியாது” என்று சிரித்தவன், அவனே கைப்பட அந்த கவரை பிரித்தான். உள்ளே அவள் மனம் கவர்ந்த புடவை இருந்தது.
“இது உனக்கு தான்” என்றான். ஆதினி மகிழ எல்லாம் இல்லை.
“எனக்கு எதுக்கு?” புருவம் சுருக்கினாள்.
“நீ எனக்காக எவ்வளவோ செய்து இருக்க.. ஆனா உனக்காக நான் எதுவும் செய்தது இல்லை. அதோட இன்னைக்கு எல்லோரும் அவங்கவங்க பங்குக்கு ஏதோ ஒன்றை வாங்கிட்டாங்க. நீ தான் எதுவும் வாங்கலையே அது தான் உனக்காக இதை வாங்கினேன்... முதல் முறையா அலுவலகம் போகும் பொழுது இதை கட்டிட்டு போ” என்றான்.
அவனையும் அந்த புடவையையும் ஒரு பார்வை பார்த்தவள்,
“எனக்கு புடவை வாங்கி குடுக்கணும்னா அது எனக்கு வர போற கணவனா தான் இருக்கும். வேற யார்க்கிட்டயும் என்னால புடவை வாங்க முடியாது. சாரி” என்றவள் கீழே இறங்கி போய் விட்டாள். இப்படி ஒரு பதிலை சொன்ன ஆதினியை விசித்திரமாக பார்த்தான்.
ஒவ்வொரு தீபாவளிக்கும் இவன் தான் வைகுண்டத்தின் குடும்பத்துக்கே துணி எடுத்து தருவான். அப்பொழுது எல்லாம் ஒன்றும் சொல்லதவள் இன்றைக்கு எடுத்து குடுக்க இப்படி சொல்கிறாளே என்று புரியாமல் பார்த்தான்.
சஞ்சுக்கும் சரி குமுதாவுக்கும் சரி எத்தனையோ புடவை எடுத்து கொடுத்து இருக்கிறான். ஏன் ஆதினிக்கும் எடுத்து இருக்கேனே என்று யோசித்தவனுக்கு அப்பொழுது தான் அவன் எடுத்துக் கொடுத்த எதையும் அவள் உடுத்துவதே கிடையாது என்று புரிந்தது. ஏனெனில் அவன் எடுத்து கொடுத்த சுடிதார் எல்லாம் ஒன்று கனிகா அணிந்து இருப்பாள். இல்லை என்றால் சஞ்சு அணிந்து இருப்பாள். சில நேரம் புடவையாக இருந்து இருந்தால் குமுதா கூட அதை அணிந்து இருக்கிறார்.
இப்பொழுது தான் அவளின் நோக்கமே புரிந்தது பெருவளத்தானுக்கு. அப்போத்துல இருந்தே இவ தெளிவா தான் இருந்து இருக்கா.. என்று பெருமூச்சு விட்டான். ஆனாலும் அவளின் கொள்கை மீது மரியாதை வந்து இருந்தது.
“இந்த வீட்டுல எல்லோரையும் புருஞ்சுக்கிட்டேன் ஆனா இந்த பெண்ணை மட்டும் என்னால புருஞ்சுக்கவே முடிய மாட்டிக்கிது..” பெருமூச்சு விட்டான்.
அவன் கைகளில் இருந்த புடவையை ஒரு பார்வை பார்த்தவன் அதை யாருக்கும் கொடுக்க மனமில்லாமல் தனியே எடுத்து வைத்து விட்டான். இங்கே வந்தால் அவன் பயன்படுத்தத் என்று தனியாக ஒரு சின்ன அலமாரி இருந்தது. அதில் போய் இந்த புடவையை பத்திரமாக வைத்துவிட்டு கூடத்துக்கு வந்தான்.
அனைவரும் தூங்கி இருந்தார்கள் இவன் மாடிக்கு போகும் பொழுதே... அதனால் கூடத்தில் யாருமில்லை. அடுப்படியில் சத்தம் கேட்க அங்கு எட்டிப் பார்த்தான். ஆதினி தான் நின்றிருந்தாள்.
“என்ன பண்ற குட்டி?” அடர்ந்து இருந்த அமைதியை கிழித்துக் கொண்டு பெருவளத்தானின் குரல் கேட்டது.
“காபி போடுறேன்” என்றாள்.
“எனக்கும் ஒரு கப் போடு”
“ஏன் தூங்குற நேரத்துல..”
“மணல் லோடு வருது. அதை இறக்க போகணும்”
“ம்ம்ம்” என்றவள் அவனுக்கும் சேர்த்தே காபியை போட்டாள்.
“ஆமா வேலையில நீ எப்போ ஜாயின் பண்ணனும்” கேட்டான்.
“நம்ம விருப்பம் தான். ஒரு மாதம் வரையிலும் நேரம் குடுத்து இருக்காங்க”
“ஓ... அப்போ சரி அதுக்குள்ள எனக்கு ஒரு உதவி பண்றியா?” கேட்டான்.
என்ன என்பது போல அவனை பார்த்தாள். “இல்ல நீ சொன்னதுனால ஷோ ரூம் மாதிரி ரெடி பண்ணிட்டேன். இப்போ கஸ்டமர் அதிக பேர் வராங்க... நீ வந்து உன்னோட ஒப்பினியன குடுக்குறியா?”
“இதுக்கெதுக்கு நான் வரணும். கஸ்டமர் கிட்டயே அவங்களோட சட்டிஸ்பெக்ஷன கேளுங்க”
“இல்ல” என்று அவன் அவளை ஒரு பார்வை பார்த்தான்.
“வரேன்” என்று சொன்னவள் அவனிடம் ஒரு கப்பை நீட்டினாள்.
“அதோட அப்பா உன்னை நாளைக்கு வர சொன்னாரு... வரியா குட்டி..?” கேட்டான்.
“இல்ல வேலை இருக்கு” என்றவளை கெஞ்சலுடன் பார்த்தான்.
“அவரால இவ்வளவு தூரம் ட்ராவல் பண்ணி வர முடியாததுனால தான் உன்னை கூப்பிடுறாரு...” என்றான்.
அவளால் மறுக்க முடியவில்லை. அதென்னவோ திருமணம் ஆன இந்த மூன்று ஆண்டுகளில் மாதத்துக்கு ஒருமுறை அவரை போய் பார்த்து விடுவாள்.





