ஆதினியின் ஆலோசனை படி ஐந்து ஏக்கர் நிலத்தையும் தன் தொழிலுக்கு பயன்படுத்தி இருந்தான் பெருவளத்தான். இந்த தொழிலுக்கு அவ்வளவு பெரிய இடம் வேண்டாமே.. என்று யோசித்து அங்கும் இங்குமாய் போட்டு இருந்த பொருகளை எல்லாம் ஒழுங்கு செய்து வைக்க சொன்னாள் அவள்.
அவளின் யோசனை படி வேலையாட்களை செய்ய சொன்னவன் அவனும் அவர்களோடு சேர்ந்து வேலை செய்தான். கிட்டத்தட்ட இரண்டு இரண்டரை ஏக்கர் மீதம் இருந்தது. அதில் அறை ஏக்கரை அதிக பொருள் வரும் நேரம் பயன்படுத்த என்று ஒதுக்கி வைக்க சொன்னவள் மீதமுள்ள இடத்தை கார் நிறுத்த வாடகைக்கு விட சொன்னாள்.
பெருவளத்தான் கடை இருந்த இடம் மிகவும் பரபரப்பான இடம். அதோடு அங்கு கார் நிறுத்த இடம் இல்லாமல் சற்று தொலைவில் நிறுத்தி விட்டு தான் பஜாருக்கு வரவேண்டி இருந்தது. அதோடு அப்படி நிறுத்தப் படும் கார்களுக்கு பாதுகாப்பு அதிகம் இல்லாததால் பெரும் அவஸ்த்தைக்கு உள்ளானார்கள் பொதுமக்கள்.
எனவே அதை கவனித்து சீரோ இன்வேஸ்மென்டில் வருமானத்துக்கு வழி சொன்னவளின் மீது பெரும் மதிப்பு வந்தது.
அவளது யோசனை படி அனைத்தும் செய்தான்.
“முதல்ல வெறும் தரையா இருக்கட்டும். அதுக்கு பிறகு வருகிற கூட்டத்தை பொருத்து சிமென்ட் போட்டு அடுக்கு மேல அடுக்கு போட்டு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் ல இருக்குற போல வெறுமென தளம் மட்டும் போட்டு ஐந்து ஆறு தளம் போட்டு கட்டிடலாம் என்று சொன்னாள்.
“எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிற” என்று பெருவளத்தான் வியந்து கேட்க,
“சிவில் இஞ்சினியருக்கு படிச்சா ஒற்றை அடியை கூட வீணாக்க மனது வராது” என்று சொன்னாள்.
அதன் படி அடுத்த நாளே ஒரு போர்டு ஒண்ணு ரெடி பண்ணி “கார் பார்க்கிங்.. வாடகைக்கு நிறுத்தலாம்” என்று ரெடி செய்து போட்டான். சிறிது நேரத்திலே அந்த இடம் முழுவதும் ஹவுஸ் புல். அதோடு நிறைய பேர் கார் நிறுத்த வந்து கேட்டுக்கொண்டே இருக்க ஒரே நாளில் அந்த தொழில் பிக்கப் ஆனது. அவளது யோசனையால் அவனுக்கு அதில் நல்ல வருமானம் வந்தது.
அதே போல அந்த இடத்தை இரண்டாக பிரித்து பில்லர் போட்டு ஐந்து தளம் உருவாக்கினான். இன்னொரு இடத்தை வெறுமென விட்டவன், இந்த தளம் ரெடியான பிறகு இதை பார்க்கிங் வசதி வைத்துக் கொண்டவன் வெறுமையாக விட்டு வைத்திருந்த இடத்தில் புதிதாக பில்லர் போட்டு தளம் எடுத்தான்.
முன்பு ஒரே நேரத்தில் எழுபது முதல் என்பது கார் வரை கார் நிறுத்தி இருந்தான். ஆனால் இப்பொழுது முன்னூற்றி ஐம்பது முதல் நானூறு வரை கார் ஒரே நேரத்தில் நிறுத்த முடியும். உள்ளே எந்த வகையிலும் இடிக்காத வண்ணம் பாதைகள் போடப்பட்டு அதற்கு என ஆட்களை போட்டு நீட்டாக மெயின்டெய்ன் பண்ணினான்.
அதிலும் அவனுக்கு லாபாம் அதிகம் வந்தது. ஆனாலும் அவன் ரொம்ப சிம்பிலாகவே இருந்தான்.
முன்புறம் கடையை வைத்துக் கொண்டு பின் பக்கத்தை பார்க்கிங்க்காக ஒதுக்கி இருந்தான் ஆதினியின் ஆலோசனை படி. அதன் பிறகு கடையை ஒரு பார்வை பார்த்தவள்,
“டிஸ்ப்ளே மாதிரி வைக்கலாம் இல்லையா...?” என்று அவள் கேட்டாள். அங்கு இருந்த கட்டுமானப் பொருட்களை எல்லாம் கண்டு.
“ஏன் இப்படி இருந்தா என்ன... நல்ல இல்லையா...?”
“நல்ல இருக்கு. ஆனா கொஞ்சம் லுக் வைஸ் டல் அடிக்கிது” என்றவள் சில ஷோ ரூம்ங்களுக்கு கூட்டிக்கொண்டுப் போனாள்.
அவனும் பார்த்து இருக்கிறான் தான். ஆனால் அது தேவையில்லை என்று விட்டு விட்டான். இப்பொழுது இவள் சொல்லவும் செய்து பார்த்தால் என்ன என்று தோன்ற அதன் படி ஷோ ரூமை ரெடி செய்தான்.
அதன் பிறகு வருகிற கஸ்டமர்கள் எந்த சங்கடமும் இல்லாமல் வந்து போவதை பார்த்தான். ரைட் பொருள் வாங்குறாங்களோ இல்லையோ அவங்களுக்கு முதல்ல ஒரு நம்பிக்கையான உணர்வை கொடுக்கணும் என்று தோன்றியது.
கடையாக இருந்த பொழுது வேலைக்கு இருக்கும் பையன்கள் அங்கும் இங்கும் நின்று இருப்பார்கள். அதனால் வருகிற கஸ்டமர் கொஞ்சம் அசவுகாரியமாக உணர்ந்தார்கள்.
ஏனெனில் அவர்களின் மத்தியில் கொஞ்சம் விலையை குறைத்து கேட்க கூட சங்கடப்பட்டுக் கொண்டு வேறிடம் சென்று இருக்கிறார்கள்.
ஆனால் இப்பொழுது தனிப்பட்ட அறையில் அவர்களது பேச்சு வார்த்தை இருக்க எந்த வித கூச்சமும் இல்லாமல் அவர்களின் மனதில் உள்ளதை கேட்டு தெளிந்துக் கொண்டார்கள். அதோடு வருமானமும் சற்று அதிகம் வந்தது. அதை மனப்பூர்வமாக உணர்ந்துக் கொண்டவன் ஆதினிக்கு பெரும் நன்றியை சொன்னான்.
அவளோ அதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. எனக்கு தோணினதை சொன்னேன். அவ்வளவு தான். என்று கடந்து போய் விடுவாள். ஆனால் அவனை கடந்து போவது தான் அவளுக்கு பெரும் வேதனையாக இருந்தது.
இப்பொழுது வரையிலும் கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக தன் அக்காவின் கணவனாக அவனை பார்த்த பொழுதும் அவளின் மனம் மாறவில்லை. வேதனையும் தீரவில்லை.
அனைவரும் வீடு வந்து சேர்ந்தார்கள். இரவு உணவை சாப்பிட்டு விட்டு அனைவரும் தூங்க செல்ல ஆதினி மட்டும் தூங்கப் போகாமல் மொட்டை மாடிக்கு சென்றாள். அவளின் மனம் போலவே வானவெளியும் வெறுமையாக இருந்தது. மெல்லிய காற்று வந்து அவளை தீண்ட அந்த தீண்டல் கூட அவளை காயப்படுத்துவது போல இருக்க கண்களை மூடிக் கொண்டாள்.
பெருவளத்தான் புடவை கடைக்குள் நுழைந்த உடன் ஆதினி திரும்பிக் கொண்டாள். ஆனால் உள்ளே போனவன் ஆதினி என்று அழைக்க அவளுக்கு கேட்டாலும் காது கேட்காதவள் போல திரும்பாமல் அழுத்தமாக நின்றிருந்தாள்.
ஆனால் கனிகாவோ அவளை அழைத்து,
“மாமா கூப்பிடுறாங்க என்னன்னு பாரு” என்று அவளை போக சொன்னாள்.
வேறு வழியில்லாமல் ஆதினி பல்லைக் கடித்துக் கொண்டு அந்த கடைக்குள் நுழைந்தாள். அவளின் முகம் கடுகு போட்டால் வெடிக்கும் நிலையில் இருந்ததை கண்டு கொள்ளாமல்,
“இங்க வா குட்டி” என்று அழைத்து போய் ஒரு பொம்மையின் அருகில் நிறுத்தினான்.
“இப்போ உங்களுக்கு என்ன வேண்டும். எதுக்கு என்னை கூப்பிட்டீங்க” என்று கேட்டாள்.
“இத பாரேன்” என்று அந்த பொம்மை போட்டு இருந்த புடவையை காட்டினான். அப்பொழுது தான் அந்த புடவையை பார்த்தாள். மினுமினு என்று மின்னும் ட்ரான்ஸ்பரன்ட் சிந்தட்டிக் சேலையில் சின்ன சின்ன கை வேலைப்பாடு நிறைந்து இருந்த அந்த புடவையை விட்டு அவளால் கண்களை எடுக்கவே முடியவில்லை.





