“நல்லா பேசுற ஆதினி...” என்று சொன்னவனை கடுப்புடன் பார்த்தவள்,
“நீயெல்லாம் திருந்தாத கேஸ். நான் என்ன சொல்றேன். இந்த மக்கு என்னத்த சொல்லுது பாரு” என்று வாய்க்குள் முணகி விட்டு சோபாவில் பின்னாடி சரிந்து படுத்து விட்டாள்.
“ஆமா இண்டர்வியூல என்ன கேள்வி கேட்டாங்க?” ஆர்வத்துடன் கேட்டான்.
“கேள்வியெல்லாம் எதுவும் கேட்கல. இடத்தோட அளவு கொடுத்துட்டு எப்படி இதுல பாலம் கட்டுவீங்க. டிசைன் பண்ணுங்கன்னு சொன்னங்க. எல்லோரும் டிசைன் பண்ணாங்க. நான் டிசைனோட சேர்த்து எவ்வளவு எஸ்டிமேட் ஆகும்னு அந்த கால்குலேஷனும் குடுத்தேன். செலக்ட் பண்ணிட்டாங்க.” என்றாள்.
“சூப்பர் குட்டி” என்று அவன் பாராட்ட,
“உங்களுக்கு தான் தேங்க்ஸ் சொல்லணும்.. நீங்க தானே சிமென்ட். ஜல்லி, மணல், கம்பி ரெட், அதனோட தரம் எல்லாம் சொல்லுவீங்க. அதனால தான் இந்த வேலை கிடைச்சது. சோ ஒன்ஸ் அகைன் தேங்க்ஸ்” என்றாள்.
ஆம் பெருவளத்தான் சிறிய அளவில் கட்டுமானத்துக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வைத்து வியாபாரம் செய்துக் கொண்டு இருக்கிறன். சொந்த தொழில். மூலதனம் எல்லாம் அவனுடைய உழைப்பு மட்டும் தான். ஓடி ஓடி காண்ட்ராக்ட் எடுப்பான். மொத்தமாக கொடுக்கும் பொழுது லாபம் கிட்டும். வேலையாட்களுக்கு கூலி போக மாதத்துக்கு சேமிப்பு மட்டும் ஒரு தொகை நிற்கும். வேலைக்கு ஆட்கள் இருந்தாலும் சட்டையை கழட்டி போட்டுவிட்டு இவனும் அவர்களோடு இறங்கி வேலை செய்வான். சிமென்ட் மூட்டை எல்லாம் இரண்டு இரண்டாக தூக்கி லாரியில் போடுவான்.
மேலே கூலிங் செட், ஆச்பரா சீட், ஆலபுல்லா கல், கடப்பா கல் என தொடங்கி டைல்ஸ், மார்பில் வரை அனைத்தையும் வைத்து இருந்தான். கேட்கும் பொழுது ஆர்டர் போட்டு வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து விடுவான்.
நட்டம் என்று பெரிதாக இதில் எதுவும் இல்லை. ஆர்டர் போட்டுவிட்டு வாடிக்கையாளர் வேண்டாம் என்று போய் விட்டாலும் அடுத்த வாடிக்கையாளரிடம் விற்று விடுவான். அழுகி போற பொருள் இல்லை என்பதால் லாபம் கணிசமாகவே நின்றது.
கம்பி தூக்கும் பொழுது, கூலிங் சீட் இறக்கும் பொழுதும் உடம்பில் அங்கும் இங்கும் கிழிக்க நேரிடும். அப்படி இரத்தத்ததையும் வியர்வையையும் சிந்தி உழைத்த பணத்தை கரியாக்கும் வேலையில் ஈடுபட்டு இருக்கும் குடும்பத்தை திருத்த முடியாமல் தலையில் கைவைத்து அமர்ந்து விட்டாள்.
முதல்ல இவனை திருத்த முடிஞ்சா தானே அவர்களை திருத்த முடியும். இவனே திருந்தாமல் இருக்க பிறகு அவர்கள் எங்கிருந்து திருந்துவது. சலித்துக் கொண்டாள்.
ஒரு வழியாக பர்சேஸ் முடித்துக் கொண்டு அனைவரும் வர சாப்பிட கேண்டீன் செல்ல,
“ஏம்மா வீட்டுல தான் மீனு, கோழி, ஆடுன்னு சமைச்சி வச்சுட்டு வந்து இருக்கீங்களே. பிறகு இங்க எதுக்கு...?” என்று கேட்ட ஆதினியை யாரும் கண்டுக்கொள்ளவே இல்லை.
“கடவுளே...” என்று முணகியவளுக்கு கோவம் கோவமாய் வந்தது. இப்படி தாம் தூம் செலவு செய்ய எப்படி தான் மனம் வருகிறதோ. அதுவும் வீட்டுக்கு வந்த மாப்பிள்ளையின் தயவில்... முணகியவளுக்கு உணவு தொண்டை குழிக்குள் செல்ல மறுத்தது.
அவளுக்கு என்ன பிடிக்கும் என்று பெருவளத்தான் பார்த்து பார்த்து ஆர்டர் பண்ணினான். ஏனெனில் அவளை தவிர அனைவரும் அவர்களுக்கு என்ன வேண்டுமோ போய் வாங்கி விட்டு வந்து சாப்பிட அமர இவள் மட்டும் அசையவே இல்லை.
அதனால் பெருவளத்தானே அவளுக்கு சேர்த்து வாங்கிக்கொண்டு வந்தான். அவளுக்கு பிடித்த பிரான் பிரை, சாம்பார் ரைஸ், சிக்கென் லாலிபப் என வாங்கிக்கொண்டு வந்தான்.
அவனுக்கும் ஒரு கப் சாம்பார் ரைஸ் வாங்கிக்கொண்டான். அதென்னவோ இருவரின் டேஸ்ட்டும் ஒன்று போலவே இருக்கும்.
மற்றவர்கள் எல்லாம் நான் வெஜ் வாங்கி இருக்க இவர்களோடு பகிர்ந்துக் கொள்ளவில்லை. இவன் சாப்பிட ஆரம்பிக்க தனக்காக வாங்கி இருந்த பிரான் வருவலையும் சிக்கேனையும் பாதி எடுத்து அவனுக்கு கொடுத்து விட்டு இவள் சாப்பிட ஆரம்பிக்க இதழ்களில் ஒரு புன்னகை எழுந்தது பெருவளத்தானுக்கு.
என்னதான் அவள் சிடுசிடுவென்று இருந்தாலும் அவனது வயிறை ஒரு நாளும் அவள் வாட விட்டதே இல்லை. தனக்காக அவன் எப்பொழுதும் பெரிதாக எதுவும் செய்துக் கொள்ள மாட்டான். ஆனால் கனிகா ஏதாவது செய்தால் தடுக்க மாட்டான். கனிகா அவனுக்கு இன்றுவரை எதையும் செய்தது இல்லை. அதனால் ஆதினி செய்வதில் மனம் குளிர்ந்துப் போனான்.
மற்றபடி அவளின் மீது எந்த உணர்வும் அவனுக்கு தனித்து வந்ததில்லை. ஆனால் ஆதினிக்கு அவன் மீது இருக்கும் உணர்வுகளை வார்த்தையால் வடிக்க இயலாது. அதை காட்டாமல் அவனை விட்டு தள்ளி நின்றாள் பெண்.
அனைவரும் உண்டு முடிக்க மாலில் உள்ள தியேட்டருக்கு சென்றார்கள். படம் கொஞ்சம் நன்றாக இருக்க அனைவரும் அதில் மூழ்கிப் போனார்கள். அப்பொழுது யாரோ காலை உரசுவது போல் இருக்க பின்னல் திரும்பி பார்த்தாள் ஆதினி.
வயதான ஒரு ஆள். கடுப்பானது அவளுக்கு அவளை தொட வந்த காலை தன் செருப்பு காலால் நன்றாக நசுக்கி விட்டவள்,
“கொன்னுடுவேன்” என்று மிரட்டிவிட்டு மீண்டும் படம் பார்க்க ஆரம்பிக்க, இந்த முறை அவளின் இருக்கையின் உள்ளே கை வர பார்க்க பின்னால் திரும்பி அந்த ஆளை முறைத்துப் பார்த்தாள்.
“டேய்...” என்று அவள் ஆரம்பிக்கும் முன்பே இரண்டு சீட் தள்ளி அமர்ந்து இருந்த பெருவளத்தான் ஓங்கி ஒரு குத்து விட்டு இருந்தான் அந்த ஆளின் முகத்திலே. அதை எதிர் பாராதவள் அவனை திகைத்துப் பார்த்தாள். இந்த மனிதன் எப்பொழுது இதை கவனித்தார் என்பது போல பார்த்தாள்.
“ஏய் அறிவு இல்லை. கைவைக்கிற வரை சும்மாவே இருந்தியா... முன்னவே சொல்றதுக்கு என்ன” என்று அவளிடம் எரிந்து விழுந்தான் பெருவளத்தான்.
முதல் முறை அவனது கோவத்தை நீண்ட நாட்கள் கழித்துப் பார்க்கிறாள். அந்த இருட்டில் அவனின் முகத்தை ஆழ்ந்து பார்க்க எந்த தடையும் இல்லாமல் போக வைத்த கண்ணை வாங்காமல் அவனை பார்த்தாள். இருவரும் இருக்கையை விட்டு எழவும் நடுவில் அமர்ந்து இருந்த இரு அக்காக்களும் ஆதியின் அருகில் இந்த பக்கம் அமர்ந்து இருந்த தம்பியும் அப்பாவும் எழுந்துக் கொண்டார்கள்.
எழுந்தவர்கள் ஆதினியை திட்டிக்கொண்டு இருந்த பெருவளத்தானை பார்த்தார்கள். அவன் இவளை திட்டிக்கொண்டே அந்த ஆளை எட்டி அடித்துக் கொண்டு இருந்தான்.
அவன் முகம் சடுதியில் சிவப்பாக மாறி இருநத்தை கண்டவளுக்கு நெஞ்சில் பனிச்சாரல் வீசியது போல இருந்தது. அதை முகத்தில் காட்டிக் கொள்ளாமல்,
“ப்ச் நானே அவனை ஹேண்டில் பண்ணி இருப்பேன். நீங்க அடிச்சு இப்போ எல்லோருக்கும் தெரிஞ்சு போச்சு” என்று கடுப்படித்தவள் படம் பார்க்க தன் இடத்தில அமர்ந்துக் கொண்டாள்.
“இவ்வளவு திமிர் ஆகாதுடி உனக்கு. உனக்காக தான் மாமா சண்டை போடுறாரு...” என்று சொன்ன கனிகாவை முறைத்துப் பார்த்தவள்,
“நான் சொன்னனா சண்டை போட சொல்லி... அவரா சண்டை போட்டா நான் என்ன பண்றது” என்று தோளை குளுக்கியவள் ஸ்க்ரீன் புறம் பார்வையை கொண்டு போய் விட்டாள்.
“உன்ன...” என்று கனிகா ஏதோ பேச வர,
“ப்ச் அவளை விடு கனி... நீ இந்த பக்கம் வா” என்று அவளை அவளின் அம்மா புறம் நகர்த்தி விட்டுட்டு அதே போல வைகுந்தனை இடமாற்றி விட்டவன் எல்லோரையும் இடமாற்றி வைத்தான். ஆனால் ஆதினியை மட்டும் இடம் மாற்றவில்லை. அவளை எழுந்துக்கொள்ள சொன்னால் கண்டிப்பாக முறைப்பாள் என்று தெரியுமே அதனால் அவளை தவிர அனைவரையும் இடமாற்றி விட்டவன் சரியாக ஆதினியின் அருகில் வந்து அமர்ந்துக் கொண்டான் இவன்.





