இவ்வளவு நாளும் கொற்கையனை கண்ணும் கருத்துமாக இடுப்பிலிருந்து இறக்காமல் பார்த்துக்கொண்டவள் சட்டென்று காணாமல் போனவுடன் அந்த சிறுபாலகனால் அதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
“போ என்கிட்டே பேசாத... நான் உன்னோட காய்...” என்று அவன் முறைத்துக்கொண்டு முகத்தை தூக்கி வைத்துக்கொண்டான்.
“டேய் அம்மா ஊசி போட போனேன்டா.. உன்னை கூட்டிட்டு போனா பொறவு உனக்கும் போட்டுடுவாங்கன்னு தான் உன்னை விட்டுட்டு போனேன்டா..”
“இல்ல நீ பொய் சொல்ற.. நான் உன்னை எங்கெல்லாம் தேடுனேன் தெரியுமா...?” என்றவன், சட்டென்று கண்கள் கலங்கி,
“படுக்கைக்கு கீழ, தோட்டத்துல, சமையல் கட்டுல குளிக்கிற தாவுல, மாடியிலன்னு எல்லா இடத்துலையும் தேடுனேன்... ஆனா நீ எங்குமே இல்ல தெரியுமா? உன்னை தேடிக்கிட்டே இருந்தேன்...” என்று விசும்பல்களுடன் சொல்லி உதட்டை பிதுக்கி கண்ணீருடன் சொன்னவனை கண்டு இவளது கண்களில் கண்ணீர் அரும்பு கட்டியது.
“இல்லடா தங்கம். அம்மா இனி உன்னை விட்டுட்டு எங்கயும் போக மாட்டேன்...” என்று இறுக அணைத்துக்கொண்டவள் குற்ற பார்வை பார்த்தாள் பெரிய பாண்டியனை.
அவனோ அங்கு எதுவுமே நடக்காததுபோல மெத்திருக்கையில் அமர்ந்து தே தண்ணி குடித்துக்கொண்டு இருந்தான்.
“செய்யிறதெல்லாம் செஞ்சுட்டு தோரணைய பாரு...” முணகியவள்,
“நீ வாடா செல்லம்... நீயும் நானும் தோட்டத்துல விளையாடலாம்.. கொற்கையன் என்ன சாப்பிடீங்க...” கேட்டுக்கொண்டே அவன் சாப்பிட்டேன் என்று சொல்லியும் சாதம் போட்டு குழைய வேகவிட்ட பருப்பில் கடுகு, சீரகம், மல்லி இலை, கருவேப்பிளை, பூண்டு, பெருங்காயம், மஞ்சள் தூள், உப்பு, அரை பச்சைமிளகாய் மற்றும் நெய் போட்டு தாளித்து சாதத்தில் போட்டு பிசைந்து, வேகவைத்த உருளைக்கிழங்கை சீரகம் போட்டு தாளித்து எடுத்துக்கொண்டவள் அவனோடு விளையாடியபடி அவனுக்கு தெரியாமலே முழு சாதத்தையும் ஊட்டி விட்டாள்.
முதல் வாய் ஊட்டும் பொழுது வேணாம் என்று சொன்னவன் அதன் பிறகு அவள் ஊட்ட ஊட்ட அவளின் இடுப்பிலும் கைகளுக்கு உள்ளேயும் கால்களுக்கு இடையிலும் ஓடியாடி விளையாண்டுக்கொண்டு கதை பேசியபடி உண்டு முடித்தான்.
அதிலே தெரிந்தது கொற்கையன் தன்னை எவ்வளவு தேடி இருக்கிறான் என்று. அவன் அறியாமல் விழிகளில் வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டாள்.
அதை கண்ட ஆத்தாமார்களுக்கு விழிகளில் நீர் நிறைந்து போனது இருவரின் பாச பிணைப்பையும் கண்டு. அந்த அளவு கொற்கையன் அவளை தேடி இருந்தான்.
கொற்கையனை அழைத்துக்கொண்டு செல்லலாம் என்று இருவருமே எண்ணினார்கள். ஆனால் ராக்காயும் பிச்சாயும் தான் தடுத்துவிட்டார்கள்.
“இல்ல ஆத்தா நான் கூட்டிட்டு போறேன்...” மாதுமையாள் அடம் பண்ண,
“இங்க தான் இத்தனை பேரு இருக்கமே. பத்தாததுக்கு இந்தா இந்த நந்தினி புள்ள இருக்கு. அதெல்லாம் நாங்க சாமாலிச்கிக்குவோம்... நீ வெசனப்படாம போ ஆத்தா...” என்று அவளை வழியனுப்பி வைத்தார்கள்.
“ஏங்க நீங்களாவது ஆத்தாங்க கிட்ட சொல்லுங்க... நீங்க சொன்னா தான் கேட்பாங்க.” பசும்பூண் பாண்டியனை துணைக்கு அழைத்தாள்.
“அதான் பார்த்துக்குறேன்னு சொல்றாங்கல்ல... பொறவென்ன வா... வானம் இருட்டிக்கிட்டு வருது. மழை தூர்ரதுக்குள்ள அங்கன போய் சேரணும். வெரசா வா...” என்று அவளை இழுத்துக்கொண்டு சென்றுவிட்டான்.
அவன் ஒரு வார்த்தை சொல்லி இருந்தால் கண்டிப்பாக ஆத்தாமார்கள் எதிர்த்து ஒன்றும் செய்து இருக்கமாட்டார்கள். கொற்கையனும் அவளிடமே இருந்து இருப்பான்.
இப்பொழுது தனக்கான அவனுடைய தேடலை கண்டு கொண்டவளுக்கு பாண்டியன் மீது ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது.
“செய்யிறதும் செஞ்சுட்டு பந்தா வேற... வந்த உடனே வீட்டுலையும் இருக்குறது இல்ல... ஆலை வேலைன்னு கிளம்பிடுறது.... வரட்டும் இன்னைக்கு எதுவும் கிடையாதுன்னு கட்டிலை வெளிய போட சொல்றேன்...” அவனை திட்டிக்கொண்டே தன் மகனை கவனித்தாள்.
சின்னவனும் தன் தந்தையை சிறிதும் கண்டுக்கொள்ளாமல் இரவு உணவு உண்டுவிட்டு தன் அம்மாவை கட்டிப்பிடித்துக்கொண்டு அவள் மீது கால்களை போட்டு இறுக்கிக்கொண்டு அவளின் முந்தானையை பொத்திக்கொண்டு, அவள் சொல்லும் கதைகளை கேட்டுக்கொண்டு இருந்தான்.
வீட்டுக்கு உள்ளே வந்த பாண்டியன் கடும் கோவத்தில் இருந்தான் வாசலில் அவளை காணோம் என்றவுடன்...
“இவளை...” பற்களை நறநறவென கடித்துக்கொண்டே அங்கும் இங்கும் தேடினான். அவனது தேடலை கண்ட ராக்காயி,
“உன் பொஞ்சாதி உன் மகனை தூங்க வைக்க மேல போயிருக்கா...” என்றார்.
அந்த நேரம் வந்து “நீ வந்து சாப்பிடுய்யா...” என்று மீனாச்சி அழைக்க, அவரை முறைத்து பார்த்தார் பிச்சாயி.
“ஏய் கூருக்கெட்டவளே அவனுக்கு அவன் பொஞ்சாதி வந்து சாப்பாடு போடுவா... நீ நமக்கு மட்டும் எடுத்து வை...” என்றவர் மேலும்,
“ம்ஹும் மருமக பார்த்து இருக்கா பாரு நல்லா அவள மாதிரியே... முப்பத்தி ஐந்து வருஷம் ஆச்சு வீட்டுக்கு வந்து இன்னும் எது செய்யனும் எது செய்ய கூடாதுன்னு தெரியல... அது சரி இவ வீட்டுக்கு வந்தே தான் அறுபது வருஷம் ஆச்சு... இவளே இன்னும் கூருல்லாம தானே இருக்கா... போறவெப்படி இவ மருமகக்கிட்ட எதிர் பார்க்குறது...” சாடை பேச்சை ஆரம்பிக்க,
“ஆமா இவ ரொம்ப கூரோட தான் இருக்கா... மத்தவள பேச வந்துட்டா... அடியேய் நீ தான்டி மருமவ மருமவன்னு தலையில தூக்கி வச்சுக்கிட்டு திரிஞ்ச... பின்ன அவளுக்கு எப்பிடிடி கூரு வரும்... உன்ன மாதிரி முளைக்காம அரை வேக்காடா தான் இருப்பா...” ராக்காயி தன் வெண்கல தொண்டையை திறந்து பதில் பேச, மீனாச்சி பாவமாய் அவர்களின் இருவரிடையே மாட்டிக்கொண்டு முழித்தார்.
ஏனெனில் அதில் அதிகம் டேமேஜ் ஆவது அவர் தானே... வெள்ளியம்பலத்தார் தொண்டையை செருமிக்கொண்டு வர, கூடவே வடிம்பலம்ப நின்ற பாண்டியரும் வர, அத்தோடு அவர்களின் பேச்சு நின்றது.
பாண்டியன் தன் தகப்பனிடமும் தாத்தாவிடமும் சிறிது நேரம் பேசிவிட்டு, தன் தம்பி மாறன் பூபதி பாண்டியனிடம் இந்த நாட்களில் என்ன நடந்தது என்று கேட்டுக்கொண்டான்.
அவனும் பவ்யமாக சொல்ல, நந்தினி அங்கு நடக்கும் செயல்களை பார்வையாளராகா இருந்து பார்த்துக்கொண்டு இருந்தாள்.
மேலே கோவத்துடன் வந்த பாண்டியன் தாயும் சேயும் தூங்கும் அழகை கண்டு ஒரு கனம் ரசித்து தான் நின்றான்.
“கொற்கையன்...” பாண்டியன் அழைக்க,
“அய்யா...” என்று துள்ளி குதித்துக்கொண்டு ஓடினான்.
“அடேய்... பாவி பயளே... இவ்வளவு நேரமும் உன் கிட்ட என்னடா சொல்லிக்கிட்டு இருந்தேன்... அப்பன் வந்தவுடனே உன் புத்திய காமிக்கிற பத்தியா...?” கடுப்படித்தாள்.
“போடி அவன் என் மகன்... அப்படி தான் இருப்பான்...” என்று அவனை தலைக்கு மேல் வைத்து சுத்தி பிடித்தான்.
“டேய் அந்த ஆளால தான் நீயும் நானும் இவ்வளவு நாள் பிரிஞ்சி இருந்தோம்.. மறந்துட்டியா..? போயும் போயும் அந்த ஆள் கிட்ட பேசுறியே...?” பாண்டியனை முறைத்துக்கொண்டே பொழிலி சொல்ல, அவளையும் ஒரு கையால் வளைத்து பிடித்தவன்,
“என்னடி பையன் கிட்ட போட்டு குடுக்குறியா...?”
“ஆமா...” என்றாள் திமிராக.
“இரு இவன் தூங்கட்டும்... இந்த திமிரை அடக்குறேன்..” என்றான்.
“ஏற்கனவே அடக்கியாச்சு.. அதனால புதுசா ஏதாவது பண்ணுங்க...” சிலுப்பியவள் மகனை வாங்கி இடுப்பில் வைத்துக்கொண்டு கீழே சென்றாள். போகும் பொழுது நீண்டு தொங்கிய அந்த சடையை இழுத்தான்.
“ஆ... வலிக்கிறது விடுங்க...” என்று திரும்பி சொல்ல,
“வலிக்கிறதுக்கு தான் பிடிக்கிறேன்... மரியாதையா இங்க வாடி...” என்று இரண்டு எட்டு எடுத்து வைத்தவளை மீண்டும் தன் கை வளைவுக்குள் நிறுத்தியவன் மகனின் காதுக்கு கேட்காமல் அவளின் காதோரம் சரிந்து ரகசியம் பேசினான். அதில் அவளது முகம் குப்பென்று சிவந்து போனது.
“ச்சீ போய்யா...” குங்குமமாக சிவந்தவள், அவனை தள்ளிவிட்டு மகனோடு கீழே விரைந்தாள். அவளது நாண புன்னகையை கண்டு மனம் விட்டு சிரித்தவன் அன்றிரவு அவளை கொண்டாடி தீர்த்தான். கூடவே கீழே அவன் வரும்பொழுது நிற்காததர்க்கும் சேர்த்து தண்டனை கொடுத்தான் பாண்டியன்.
Nt t





