தம்பியோ விக்ரமுடன் சேர்ந்து பில்டிங் காண்ட்ராக்ட் எடுத்து பணி செய்துக் கொண்டு இருக்கிறான். இரண்டு தங்கைகளுக்கும் திருமணம் செய்து வைத்து விட்டாள். முதல் தங்கையான மதியை விக்ரமுக்கே கல்யாணம் செய்துக் கொடுத்தாள். செங்கொடிக்கு தங்களின் உறவில் இருந்தே நல்ல வரனாக பார்த்து முடித்தார்கள்.
தேனருவியின் வாழ்க்கை அப்படியே தான் இருக்கிறது. பகல் எல்லாம் வேலை வேலை என்று அலைபவள், இரவில் மட்டும் அவளின் நெஞ்சில் இரகசிய அறையில் பதுங்கி இருக்கும் கள்வனின் நினைவில் கரைந்துப் போவாள்.
தன் செயலின் மீது அவளுக்கே அத்தனை ஆத்திரம் பிறக்கும். ஆனால் அவளையும் மீறி அவளின் நெஞ்சில் அவனின் நினைவு எழுகையில் அவளால் அதை சுத்தமாக தடுக்க முடியவில்லை. எதை கொண்டு மலையமானின் நினைவுகளை அடக்க என்று தெரியாமல் தடுமாறி கரைந்துப் போவாள்.
ஆரம்ப காலக்கட்டத்தில் தான் மலையமானை மறந்து வாழ அவ்வளவு கடினமாக இருந்தது பெண்ணவளுக்கு. முன்பு இருந்த தாக்கம் இப்பொழுது அதிகம் இல்லை தான் ஆனாலும் அவனை முழுமையாக மறந்து விட்டாள் என்று சொல்ல முடியாது. ஏனெனில் அவள் கொண்ட காதல் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வளர்ந்தது இல்லையா? கண்ணில் படாத எதுவும் கருத்தில் பதியாது என்ற வாக்குக்கு ஏற்ப மலையமானின் நினைவுகள் முன்பு போல அவளை அதிகமாக அழுத்துவது இல்லை.
ஆனால் தினமும் அவனை எண்ணாமல் அவளின் பொழுதுகள் நகரவே நகராது தான். எவ்வளவு அவமானப் பட்டாலும் அசிங்கப்பட்டாலும் இந்த காதலுக்கு மட்டும் கண்ணே கிடையாது போல.. மதியாதார் தலை வாசல் வைத்து தான் படுக்கும் இந்த காதல் மட்டும். என்ன மானங்கெட்ட காதலோ..
அதற்காக அவன் வாழ வா என்று அழைத்தால் உடனே ஓடிப்போகும் மன நிலையிலும் அவள் இல்லை. இனி ஒரு பொழுதும் அவனை தப்பி தவறிக்கூட தன் வாழ்நாளில் பார்த்து விடவே கூடாது என்று தான் கடவுளிடம் கோரிக்கை வைக்கிறாள்.
அவன் மீது அவ்வளவு வெறுப்பு குவிந்துப் போய் கிடக்கிறது. வெறுப்பு என்பதை தாண்டி பயமும் அவனின் ஏளன பேச்சுகளை கண்டு ஒவ்வாமையும் தான் அதிகம். எனவே மலையமானின் மீதான காதல் ஒரு பக்கம், வெறுப்பு ஒரு பக்கமும் அவளின் நெஞ்சில் நிரம்பி போய் கிடக்கிறது.
அதை எல்லாம் கலைந்து விட்டு மலையமான் அவனின் நெஞ்சில் முழுமையாக ஊடுருவ முடியுமா என்பது எல்லாம் மிகப்பெரிய கேள்வி குறிதான்.
இளவரசி கூட அவளின் வளைகாப்புக்கு அழைப்பு விடுத்தாள், குழந்தை பேருக்கு அழைப்பு விடுத்தாள். ஆனால் தேனருவி அசையவே இல்லை.
“உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் இளா.. ஆனா எனக்குன்னு ஒரு கெளரவம் இருக்கு. அதை யாருக்காகவும் என்னால விட்டுக் குடுக்கவே முடியாது.. சோ ப்ளீஸ்” என்று தேனு சொல்ல,
“உன் உணர்வுகளை நான் மதிக்கிறேன் தேனு. நீ இல்லாத என் விழாக்கள் எப்பொழுதும் குறையாக தான் இருக்கும். நான் இந்த உலகத்துல அதிகம் நேசிக்கிற ஆள் நீ ஒருத்தி தான்” என்றவள்,
“நீ என்னை தேடி வர வேண்டாம்.. ஆனா நான் உன்னை தேடி வரலாம் தானே” என்று கேட்டவள், அவளின் அனுமதிக்கு கூட காத்து இருக்காமல் தேனு வீட்டு வாசலில் வந்து நின்று விட்டாள் இளவரசி.
மலையமானுக்கு தங்கையின் செயலில் கொஞ்சமும் விருப்பம் இல்லை.
“என்ன இளா இது.. ஆடு பகை, குட்டி உறவுன்ற மாதிரி நேசம் பாராட்டிட்டு இருக்க” அவன் கடிந்துக் கொள்ள,
“இன்னைக்கு நான் ஒரு நல்ல வாழ்க்கை வாழறேன்னா அதுக்கு முழுக்க முழுக்க காரணம் தேனு மட்டும் தான். அவளை ஒதுக்கி வச்சுட்டு நான் வாழ்ந்தா, கண்டிப்பா நான் நல்லா வாழவே மாட்டேன். நான் செய் நன்றி மறக்காம இருக்கணும்னு நினைக்கிறேன் அண்ணா” என்றவள் கணவனை அழைத்துக் கொண்டு தேனுவை அடிக்கடி போய் பார்த்து விட்டு வருவாள்.
வளைகாப்பின் பொழுது இளா தேனுவை தேடிப்போய் வளையல் போட்டுக்கப் பார்த்தாள். ஆனால் மலையமான் அவளை விடவில்லை.
இளாவோ மாமியாரிடம் சொல்லி ஒன்பதாம் மாதம் தேனுவின் வீட்டுக்கு போய் அவளின் கையால் வளையல்களை போட்டுக் கொண்டு வந்தாள். மலையமானால் பல்லை மட்டுமே கடிக்க முடிந்தது.
தேனுவை பார்த்து விட்டு ஒரு நாள் அவளுடன் ஒன்றாக இருந்து விட்டு வருபவள் அண்ணனிடம் அவளை பற்றி மூச்சு விட மாட்டாள். இவனும் தலைகீழாக நின்றுப் பார்ப்பான் தன் வறட்டு கௌரவத்தை விடாமல். ஆனால் இளவரசி வாயை திறக்க மாட்டாள்.
மாதவன் கூட “கல்லு மனசுடி உனக்கு. உன் அண்ணனை ரொம்ப தான் அலையவிடுற” என்பான்.
“எனக்கு இல்ல கல்லு மனசு என் அண்ணனுக்கு தான். அவனா இறங்கி வரணும் மாதவன். அப்போ தான் அவனோட வாழ்க்கை ஆரம்பிக்கும். இல்லன்னா கடைசி வரை தேனருவியை பற்றி அண்ணன் புரிஞ்சுக்கவே மாட்டார். அதோட ஒருத்தர் மட்டுமே தொடர்ந்து சேக்ரிபைஸ் பண்ணிட்டே இருந்தா எதிர்பாரா நேரத்துல வாழ்க்கை ரொம்ப உடைஞ்சிடும். ஏற்கனவே டைவேர்ஸ் வரை போயிடுச்சு. இனி எதா இருந்தாலும் அவங்களே டைரெக்ட்டா பேசிக்கட்டும். தெரிஞ்சுக்கட்டும் இடையில நாம எதுக்கு?” என்று கேட்ட இளவரசியின் புரிதலில் மாதவன் வியந்து போய் மனைவியை பார்த்தான்.
அவள் சொல்வதும் சரி தானே.. தேனருவியே எல்லாவற்றையும் விட்டுட்டு வரணும்னு எதிர் பார்ப்பது முட்டாள் தனம் என உணர்ந்துக் கொண்டவன் அமைதியாக வேடிக்கைப் பார்க்க தொடங்கி விட்டான்.
மலையமானோ அதே வீம்பில் தான் இன்னும் இருந்தான். நீங்களா அவளை பற்றி ஏதாவது சொன்னா சொல்லுங்க இல்லன்னா எனக்கு எந்த அவசியமும் இல்லை அவளை பற்றி தெரிஞ்சுக்கணும்னு என்று பிடிவாதத்தின் உச்சியில் இருந்தான்.
அவன் மட்டுமே வசிக்கும் பெரிய மாளிகை. ஆடம்பரங்களை உள்ளடக்கி எல்லோரையும் வயிறெரிய வைக்கும் பணக்கார பகட்டு வீடு. ஆனால் அதில் இருக்க வேண்டிய ராணி இல்லாமல் வெறிச்சோடிப் போய் உணர்வுகள் இழந்து ஒளி இழந்து, ஒலி இழந்து காட்சி தர வீட்டுக்கு வரவே மலையமானுக்கு அப்படி ஒரு கசப்பாக இருந்தது.
தங்கையின் வீட்டுக்கு போய் தங்கையின் மகவை தூக்கி வைத்துக் கொண்டு இருப்பவன் பாதி இரவுக்கு மேல் தான் தன் வீட்டுக்கே வருவான்.
எல்லாம் இருந்து ஏதோ ஒன்றை இழந்தவனாய் அவன் இருந்தான். ஆனால் அதை ஒத்துக்கொள்ள தான் அவனது தன்மானம் இடம் கொடுக்கவில்லை. இன்னும் வறட்டு பிடிவாதத்திலும் வீம்பிலுமே நின்றுக் கொண்டு இருக்கிறான்.
அதுவும் சீனு மாமா கொண்டு வந்து அவன் முன்னாடி பல கட்டுப் பணத்தை வைத்து விட்டு சென்றதில் இருந்து இன்னுமே வீம்பு வந்து ஒட்டிக் கொண்டது.
“என் மீது தான் தவறு தம்பி. மணிக்கு இந்த பணத்தை பற்றி எதுவும் தெரியாது. அவன் மகளை உங்களுக்கு விற்கவெல்லாம் இல்லை. நான் தான் இந்த கல்யாணம் நல்லபடியா நடக்கணும்னு நீங்க குடுத்த பணத்தை நான் என் வீட்டுல வச்சு இருந்தேன். கல்யாணம் நல்லபடியா நடந்து முடிஞ்ச பிறகு உங்கக்கிட்ட குடுத்துடலாம்னு இருந்தேன். ஆனா அதுக்குள்ள என் மகன் உங்க பணத்தை எடுத்துக்கிட்டு ஓடிப்போயிட்டான். எனக்கு அந்த நேரம் என்ன செய்யிறதுன்னு தெரியல. தேனுக்கிட்ட மட்டும் உண்மையை சொல்லி மன்னிப்பு கேட்டேன்” என்றவரின் கூற்று எல்லாம் அவனுக்கு பெரிய விசயமாகவே படவில்லை.
ஜஸ்ட் லைக் தட் என்று எடுத்துக் கொண்டான். ஆனால் இது தேனருவிக்கும் அவளது குடும்பத்துக்கும் எவ்வளவு பெரிய அவமாரியாதையை தேடி தந்தது என்று அவனுக்கு புரியவில்லை. வீரியமும் புரியவில்லை.
கண்களை மூடி தன் இருக்கையில் அமர்ந்து இருந்தவனின் விழிகள் படிந்து இருந்தது என்னவோ மானிட்டர் ஸ்க்ரீனில் தான். அதில் மிக எளிமையான தோற்றத்தில் ஒரு பக்கமாக முடியை எடுத்து போட்டுக் கொண்டு நின்று இருந்தாள்.
சிவப்பு நிற சேலை.. அவளின் நிறத்துக்கு இன்னும் எடுப்பாக இருப்பது போல தோன்ற,
“உன்னை ரசிச்சு ஒன்னும் இதுல வைக்கலடி.. உன்னை மறந்துடக் கூடாதுன்னு வச்சு இருக்கேன். கையில வசமா சிக்குன நீ தொலைஞ்ச” கறுவியவன் மேசை மீது இருந்த தேனருவியின் விசிட்டிங் கார்ட்டை இரு பக்கமும் புரட்டி புரட்டி பார்த்து வெஞ்சினத்துடன் சிரித்தான்.
மேடம் பெரிய பிசினெஸ் உமன் ஆகிட்டியோ.. விடக்கூடாதே... தாடையை நீவி விட்டுக் கொண்டவன் மனதில் எந்த பேய் வந்து குடி புகுந்ததோ இனி என்ன செய்ய காத்து இருக்கானோ.. பாவம் பெண்ணரசி.





