அதை பார்த்த உடன் தன்னவனின் நினைவு வர, விழிகளில் நீர் படலம். லேசாக தூரவும் ஆரம்பிக்க, முந்தானையை எடுத்து தலையில் போட்டுக்கொண்டு வேலையை ஆரம்பித்தாள்.
அப்படி முந்தானையை எடுத்து தலையில் போடும் பொழுது அப்பன் மகன் இருவரது நினைவும் அவளை வந்து தீண்டி சென்றது.
இந்த முந்தானைக்கு தான் இருவரிடமும் எவ்வளவு போராட்டம் நடக்கும்... இரவு பொழுது தூங்க போகும் நேரம் பொழிலி இயல்பாக தன் முந்தானையை எடுத்து கொற்கையனுக்கு போத்தி விட்டு தட்டி கொடுத்து தூங்க வைப்பாள்.
அதை பாண்டியன் பெரும் கடுப்புடன் பார்ப்பான். இவள் கள்ள சிரிப்பு சிரிப்பாள். அதென்னவோ அவனை இப்படி சீண்டி விட்டு பார்க்கும் பொழுது அவ்வளவு ஆனந்தமாக இருக்கும் அவளுக்கு.
நக்கலாக அவனை பார்த்து ஒரு சிரிப்பு சிரிப்பாள். ‘சின்னவன் தூங்கட்டும் பிறகு இருக்குடி உனக்கு...’ கடுப்படிப்பான். கொற்கையன் தூங்கிய அடுத்த நொடி முந்தானையை பிடித்து தன் கைகளில் வைத்துக்கொள்வான்.
“அவனோட போய் போட்டி போடுறீங்கங்க நீங்க... ரொம்ப மோசம்.”
“அடியேய் இது என்னோட உரிமை. உடமை... நீ தான் உன் முந்தானையால் அவனை போத்தி தூங்க வச்சி இப்போ அது இல்லாம இந்த சின்ன வாண்டு தூங்க மாட்டிக்கிறான்.. இனி இதை இவனுக்கு பழக்காதடி.” பொறாமையில் பொங்கியவனை ரசித்து பார்ப்பாள்.
அந்த நிகழ்வை மீட்டியவளின் கரம் தலை மீது இருந்த முந்தானையை எடுத்து இடுப்பில் சொருகிக் கொண்டது.
“இது எனக்கு கூட சொந்தம் கிடையாது. இதுக்கு உடமை பட்டவங்க பெரிய பாண்டியும் சின்ன பாண்டியும் தான்..” தனக்குள் பதில் சொல்லிக்கொண்டவள் வேலையில் கவனம் வைத்தாள்.
அன்று இரவு செவுனப்பன் திண்ணையில் படுத்து தூங்கி போக, உள்ளே படுத்து இருந்த பொழிலிக்கு சிறிதும் தூக்கமே இல்லை...
கடைசியாக பாண்டியன் சொன்ன வார்த்தைகளிலே சிக்கி சின்னாபின்னமாகி இருந்தாள். அவன் சென்று ஒரு நாள் கூட முழுதாக ஆகவில்லை. ஆனால் நெஞ்சு முழுசும் அவன நினைவுகள் தான்... அவனோடு வாழ்ந்த வாழ்க்கையை எண்ணி பார்த்தவளுக்கு விழிகளில் கண்ணீர் தடம்...
“நீ கொடுத்த முத்தமெல்லாம்
நெஞ்சுக்குள்ள மறைச்சு வச்சேன்...
நெஞ்சுக்குள்ள மறைச்சு வச்சே
அது வளருதய்யா வயித்துக்குள்ள...
போதும் அந்த ஒரு நிமிஷம்...
போதும் அந்த ஒரு ஸ்பரிசம்...
மனசுக்குள்ள ரசிச்சுக்கிட்டே
நான் வாழ்ந்திடுவேன் பலவருசம்...
மாமா உன் மூச்சு பட்டு
மொட்டு ஒண்ணு பூவாச்சு...
மாமா உன் முத்தம் பட்டு
இரத்தம் இப்ப தேனாச்சு...
ஒன்ன தான் நினைச்சேன்
உள்ளுக்குள் தவிச்சேன் தூங்காமலே...” என்ற பாடல் எங்கோ ஒலித்துக்கொண்டு இருந்தது... அதை செவியுற்றவளுக்கு அவளுக்கு மிகவும் நெருக்கமாகி போனது அந்த பாடல் வரிகள்.
அருவி கரையில் நடந்த ஜலக்ரீடமும் அதனையொட்டி பாண்டியனிடமிருந்து விலகி வந்ததும் கண் முன் எழுந்தது..
எவ்வளவு இன்பமான நாட்கள் அவை... பாண்டியனிடம் சொன்னது போல அவளுக்கு முதலில் அருவெறுப்பாக தான் இருந்தது. ஆனால் பசும்பூன் பாண்டியன் காட்டிய அன்பில் கரைந்து தான் போனாள்.
ஒவ்வொரு இரவும் ஒவ்வொரு கதை சொல்லும்... அத்தனையிலும் அவனது அன்பும் காதலும் தான் இருக்கும். எல்லா இடத்திலும் அவளது இருப்பு அவனுக்கு இருக்கணும்.
அவளது வாசம் அவனை தொடர்ந்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று அவள் மீது முழு ஆக்கிரமிப்பு செய்து இருந்தான். அதை அவனுக்கு தெரியாமலே இவள் ரசித்துக்கொண்டு இருந்தாள். தன்னவளை மிக இயல்பாக ரசித்து ரசித்து தன்னுள் சேகரித்து வைத்திருந்தான்.
ஆளே ரசனையானவன் தான். இல்லையென்றால் தேனிலவுக்கு உலகில் கோடி இடம் இருக்கையில் அவனது மலையருவிக்கே கூட்டி செல்வானா...?
மலையில் சின்னதாய் ஒரு அறைக் கொண்ட மர வீடு... அவ்வளவு தான். வேறு எதுவும் பெரிதாக இல்லை. அங்கு ஆபத்தான மிருகங்கள் எதுவும் கிடையாது. ஏனெனில் அதை சுற்றி விவசாயம் செய்யும் வயல்கள் மட்டுமே சூழ்ந்து இருந்தது. அதை பெரிய கரடு என்றும் சொல்லலாம்... இல்லை என்றால் மலை குன்று என்றும் சொல்லலாம்.
ஆடு மேய்ப்பவர்கள் கூட கீழே இருந்து மேய்த்துவிட்டு சென்றுவிடுவார்கள். மேலே யாரும் வர மாட்டார்கள்.
இயற்கை எழிலோடு அழகாக மிகவும் கம்பீரமாக வீற்றிருந்தது அந்த குறிச்சி கரடு மலை. மலையின் அடிவாரத்தில் ஒரு பகுதில் மட்டும் சில மூலிகை வகை செடிகள் பயிரிடப்பட்டு இருந்தது.
அதன் வாசம் கொட்டும் அருவியின் பேரிரைச்சலில் முட்டி மோதி ஈரத்தோடு சேர்ந்து மலை பூவின் வாசமும் அதனுடன் சேர்ந்து ஒரு புது வாசத்தை பரப்பி அவ்விடத்தை சூழ்ந்து நிறைந்து இருந்தது.
அதை அனுபவித்துக்கொண்டே மேலே ஏறி சென்றார்கள். வந்தததே மாலை பொழுதாகிவிட நெருப்பை மூட்டி வெளிச்சம் வரவைத்துவிட்டு சில தீ பந்தங்களை அங்கும் இங்கும் சொருகி வைத்துவிட்டு மர வீட்டின் உள்ளே சென்றார்கள்.
பொழிலி அது போல் பார்த்ததே இல்லை...
“எப்படிங்க இது மரத்துல இப்படியே நிக்கிது... கீழ விழுந்துடாது... நாங்கல்லாம் சாதாரணமா வீடு கட்டவே நிலத்துக்குள்ள அவ்வளவு கல்லு போட்டு கட்டுவோம். இடு என்னன்னா எந்த பிடிப்பும் இல்லாம இப்படி இருக்கு... அங்கும் இங்கும் நடந்தா ஆடுமாங்க... பயமா இருக்குங்க கீழ போயிடலாமா...?” பயத்துடன் பாண்டியானிடம் கேட்டாள்.
“ஏய் இது அப்படி இல்லடி... ரொம்ப பெரிய மரத்தோட ரொம்ப பெரிய கிளையில தான் இந்த மர வீடு கட்டி இருக்கிறோம். இது அப்படி எல்லாம் கீழ விழாது. அதோட நீ எவ்வளவு குதிச்சாலும் இது ஒண்ணுமே ஆகாது... அவ்வளவு உறுதி வாய்ந்தது... அந்த காலத்துல வீடு கட்டும் போது விட்டம் போட்டு தானே வீடு கட்டுவாங்க...”
“ஒரு கிளையில செஞ்ச பத்து தூணே அவ்வளவு பெரிய வீட்டை தாங்குது... உயிரோட உறுதியா இருக்கிற இந்த கிளை தாங்காதா... நம்மள மாதிரி இன்னும் பத்து பதினைந்து பேர் வந்தாலும் இந்த மரம் தாங்கும்...” என்றான்.
அவளுக்கு மரத்திலான இந்த வீட்டை கண்டு அவ்வளவு வியப்பாய் போனது.
“ச்ச நாம தான் தப்பு பண்ணிட்டோம்.. இவ்வளவு நாளா காச சேர்த்து வச்சதுக்கு பதிலா நாலு மரத்தை நட்டு இருக்கலாம்... அசால்ட்டா நாலு வீடு கட்டி இருக்கலாம். ஒரு வீட்டுல நாம இருந்துட்டு, மத்த மூணு வீட்டை வாடகைக்கு குடுத்து இருந்து இருக்கலாம்... காசுக்கு காசும் ஆச்சு... மாச வருமானம் வந்த மாதிரி இருக்கும்.” என்று தன் மண்டையை தட்டி சிந்தித்தாள்.
“ஏங்க அப்போ மரத்தை வச்சு இருக்கிறவங்கள்லாம் மரத்துல வீடு கட்டி வாடகைக்கு குடுக்கலாம் இல்ல...” தன் அறிவு திறமையை அவனிடம் கடை பரப்ப..
“அப்படி பண்ணலாம் தான். ஆனா அதுல கொஞ்சம் சிக்கல் இருக்குடி...” என்று அதை பற்றி அவன் அரைமணி நேரம் பாடம் எடுக்க, இவளும் “உம்” கொட்டிக்கிட்டு கதை கேட்டுக்கொண்டு இருந்தாள்.
“அவ்வளவு தான்...” என்று இவன் முடிக்க, அவளுக்கு இன்னும் சந்தேகம் தீர்ந்த பாடில்லை...
“ஏங்க அப்போ...” என்று இவள் ஆரம்பிக்க,
“அடியேய் உன்னை இங்க எதுக்கு கடத்திக்கிட்டு வந்தேன் தெரியுமா...? அதை விட்டுட்டு மத்த எல்லாத்திலையும் சந்தேகம் கேக்குறியே...? உனக்கே இது நியாயமா படுதா...?” கத்தியவன், அவளை போர்வைக்குள் இழுத்துக்கொண்டு அறையின் உள்ளே எரிந்துக்கொண்டு இருந்த தீ பந்தத்தை அனைத்துவிட்டு தன்னவளுடன் சேர்ந்து தன் மோக தீயை வளர்த்தான்.
Nice





