சாதரணமாக இருக்கும் ஒரு பெண்ணுக்குள் இவ்வளவு துணிச்சல் எப்படி என்று வியந்து தான் போனார்கள். ஆனால் மலைச்சாமிக்கும் தெரியாமல் இதில் இன்னும் ஏதோ ஒரு சிக்கல் இருக்கிறது என்று அறிந்துக்கொண்டார்கள் வயதில் மூத்தவர்கள்.
“மருத்துவம் பார்த்த அந்த பொண்ணுக்கு இன்னும் பணம் குடுக்கணும் போல. அதான் பாப்பா அவங்க அய்யா கிட்ட நகை எடுக்குறேன்னு பொய் சொல்லிட்டு வீட்டை வித்த பணத்தை கொண்டு போய் அவங்கக்கிட்டயே குடுத்துட்டு வந்துச்சு. இப்போ பெருசா எந்த வருமானமும் இல்லை.”
“எந்த சேமிப்பும் இல்ல.. வார கூலிய வச்சு ரெண்டு பேரும் வாழ்ந்துக்கிட்டு இருக்காங்க ஆத்தா...” என்று அவர் முடித்தார்.
அவரது பேச்சில் இரு ஆத்தாமார்களுக்கும் நடந்த ‘சம்பவத்தின் அடிப்படையில் பொழிலி எந்த தவறும் செய்யவில்லை என்று அறிந்தவர்கள் முழுக்க முழுக்க தன் தகப்பனுக்காகவும் அந்த பெண்ணிடம் பட்ட நன்றி கடனுக்காகவும் தான் பாண்டியனை திருமணம் செய்து இருக்கிறாள் என்று புரிந்தது.
இதையெல்லாம் ஒரு மறைவில் நின்று கேட்டுக்கொண்டு இருந்த பாண்டியனுக்கு கண்களில் இருந்து உதிரம் விழாதது தான் குறை.
வீட்டில் அவன் படுத்து இருக்கும் பொழுது,
பொழிலி “எப்போ ஊருக்கு போக போறீங்க...” என்று கேட்டதற்கு முறைத்துக்கொண்டே பதில் சொன்னவன்,
அதற்கு மேல் அவள் கேட்ட கேள்வியில் ஓங்கி அவளது கன்னத்தில் அறைந்துவிட்டு வேகமாய் தன் ஆத்தாக்கள் இருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தான்.
அப்பொழுது தான் மலைச்சாமி பேசுவது கேட்டு அப்படியே நின்றுவிட்டான் மறைவில். அதன் பிறகு அவர் பேசுவதை கேட்டு மனம் நொந்து போனான்.
தன்னவள் அவளது வாழ்க்கையில் இப்படி ஒரு துன்பத்தை அனுபவித்து இருக்கிறாள் என்று அறிந்தவன் அருகில் இருந்த மரத்தில் ஓங்கி பல குத்துக்களை விட்டு தன் ஆத்திரத்தை குறைத்துக்கொள்ள முயன்றான்.
ஆனால் அவனது ஆத்திரமும் கோவமும் கொஞ்சமும் மட்டுப்படவே இல்லை. இப்படி உன்னதமானவளின் நெஞ்சில் என்ன இருக்கிறது என்று அறியாமல் தான் அவளை நெருங்கியது மிகப்பெரிய தவறாய் உணர்ந்தான்.
இதோ இப்பொழுது கூட அவளுக்கு எவ்வளவு இக்கட்டை தான் உருவாக்கி இருக்கிறோம் என்று அறிந்தவனுக்கு கட்டலாய்(கஷ்டமாய்) போனது.
அதோடு அவள் இன்னும் ஏதோ ஒரு சங்கடத்தில் மாட்டி இருப்பது போல உணர்ந்தான். அது என்ன என்று எப்படி கண்டு பிடிப்பது என்று யோசித்துக்கொண்டே வீடு வந்து சேர்ந்தான்.
வீட்டில் கொற்கையனோடு விளையாடிக்கொண்டே அடுப்படியில் சமைத்துக்கொண்டு இருந்தாள். அவன் வரும் அரவம் கேட்டு திரும்பி பார்த்தாள்.
எல்லோரின் மனத்திலும் அடுத்த கட்டம் எப்படி நகரும் என்று தங்களுக்குள் புலம்பினார்கள். வெளியே எதையும் காட்டிக்கொள்ளவில்லை.
பாண்டியனின் அமைதி பொழிலியை ஏதோ செய்ய சமைத்துக்கொண்டே,
“என்ன ஆச்சுங்க... ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க...” கேட்டாள் அவனது முகத்தில் இருந்த யோசனையை கண்டு.
அவளை கூர்ந்து பார்த்தான். லேசாக நைந்து போன ஒரு சேலை. முடியை கொண்டையாக வளைத்து போட்டு இருந்தாள். நெற்றியில் ஒரு வட்ட போட்டு, காதில் சின்ன தோடு, காலில் தேய்ந்து போன ஒரு கொலுசு.. கைகளில் நாலைந்து கண்ணாடி வளையல் வேறு எதுவும் இல்லை.
ஆனால் அந்த இயல்பான தோற்றம் கூட ஈர்த்தது. அதை விட அவளின் பக்குவமும் நெஞ்சுக்கொள்ளா அவள் அப்பாவின் மீது வைத்திருக்கும் பாசமும் அவனை அடியோடு புரட்டி போட்டது.
அப்போ செவுனப்பனிடம் தன் மனைவியை விட்டு போவது தான் வழியா...? இல்லை என்னோடு இழுத்துக்கொண்டு போவதா...? அவளின் மன உணர்வுகள் என்ன சொல்கிறது என்று அறிய வேண்டுமா...? பலவாறு குழப்பிக்கொண்டு இருந்தான்.
ஏற்கனவே செவுனப்பனுக்கு மரியாதை கொடுத்து தான் அவளிடம் இருந்து விலகி இருந்தான். அதுவும் அவளே கேட்டாள் இருவரும் மிக நெருக்கமான நிலையில் நேற்றைக்கு இருக்கும் பொழுது.
“என்ன ஆச்சு... இது மட்டும் போதுமா என்று...” அவன் தான் மழுப்பலாக ஏதோ சொல்லி அவளை சமாளித்தான்.
அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் வாழ்க்கையில் முதல் முறை தடுமாறினான். எல்லாமே இயல்பாக போய்க்கொண்டு இருக்கிறது என்று பொழிலியை நம்ப வைத்தான்.
ஆனால் அவனுக்குள் ஒரு கேள்வி இருந்துக்கொண்டே இருந்தது. அதோடு வெள்ளியம்பலத்தாரும் போன் மேல் போன் போட்டுக்கொண்டு இருந்தார்.
“என்ன தம்பு நடக்குது வீட்டுல... நீங்க பாட்டுக்க அங்க போய் இருக்கீங்க. பத்தாதற்கு குழந்தையையும் கூட்டிட்டு போயிட்டீங்க. இங்க மருமக மட்டும் தனியா இருக்கு... உங்களுக்குள்ள எந்த பிரச்சனையா இருந்தாலும் ஒண்ணா இருந்து சரி பண்ணுங்க. மருமக பிள்ளை ஒரு மாதிரி தனியா இருக்கு...” என்று சொல்ல,
பாண்டியன் தலையை பிடித்துக்கொண்டான்.
இதை யாரிடம் சொல்லி தீர்வு காண்பது என்று தடுமாறி போனான். அப்பொழுது ராக்காயி பொழிலிக்கு நல்ல எண்ணை தேய்த்து குளிக்க வைக்க கிணற்று அடிக்கு அழைத்து சென்று குளிக்க வைக்க, அவளுக்கு தாங்கள் எவ்வளவு முக்கியம் என்று புரிந்தது.
இந்த ஒரு வாரத்தில் அவள் தன்னை விட்டு பிரிந்து வந்ததில் சற்று மெலிந்து போய் இருந்தாள். இன்னும் இந்த பிரிவு அதிகமானால் ஒரு நாள் அவள் காணாமல் போனாலும் போக வாய்ப்பு இருக்கு என்று அறிந்தவன் அவளிடம் மனசு விட்டு பேச முடிவு எடுத்தான்.
அதோடு பொழிலியும் பாண்டியனோடு பேச முடிவெடுத்தாள். இதற்க்கு மேலும் தாமதிக்க முடியாது. ஏனெனில் கைமாறு இன்னும் பாக்கி இருக்கு எண்ணியவள், அந்த கைமாறை சரிவர செய்ய முடிவெடுத்தாள்.
அன்றிரவு அனைவரும் உறங்கிய பின் அவனை எழுப்பினாள். அவள் வருவாள் என்று அறிந்தவன் விழித்தே இருந்தான். அவள் வந்து எழுபவும் ஒன்றும் சொல்லாமல் எழுந்து அந்த வைக்கோல் போர் மீது ஏறி அமர்ந்தான். அவளும் அவனருகில் சென்று சற்று இடைவெளி விட்டு கால்களை கட்டிக்கொண்டு அமர்ந்தாள்.
அவன் என்னென்ன பேச வேண்டும் என்று ஏற்கனவே முடிவு செய்து இருந்தான். ஆனால் அதற்க்கு வேலையில்லாமல் பொழிலியே ஆரம்பித்தாள்.
தலைக்கு மேல் இருந்த வெண்ணிலாவை ஏக்கத்துடன் பார்த்தவள், மெல்லிய புன்னகையுடன்,
“மாமா என் வாழ்க்கையில சில விஷயங்கள் நான் எதிர்பார்க்காத வகையில் நடந்து போயிடுச்சு... கை மீறி சென்ற விசயங்களை என்னால என்னை கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால அதன் போக்கிலே நானும் போயிட்டேன்.. அப்படி தான் நீங்களும் என் வாழ்க்கையில வந்தீங்க...” என்று அவனது முகத்தை பார்த்தாள்.
பாண்டியன் எதுவும் பேசவில்லை. முழுமையாக அவளையே பேசவிட்டான்.
“இப்போ நான் உங்களை விட்டு போகணும்ங்கற நிலையில இருக்கேன். ஆனா நீங்க என்னை விட மாட்டேன்னு என் கூடவே இருக்கீங்க...”
“உங்க அன்பு எனக்கு புரியுது. ஆனா அதை ஏத்துக்குற நிலையில நான் இல்லங்க.. கொஞ்ச காலம் நான் உங்க கூட இருக்கணும்னு எனக்கு வித்திச்சு இருக்கு. அவ்வளவு தான் நம்ம உறவுன்னு நான் நினைக்கிறேன்...”
“இதுக்கு மேல உங்க பாதை வேறு, என் பாதைவேறுன்னு நாம விலகி போறது தான் நம்ம ரெண்டு பேரத்துக்கும் நல்லதுங்க. உங்க கூட என்னை இருக்க வச்சு என்னை உங்களை பாரமா நினைக்க வச்சுடாதீங்க... இப்போ வரையிலும் என் மனசுல எந்த நினைப்பும் உங்க மேல இல்லை.”
“இனி அது வரவும் வராது. இந்த நிமிஷம் நீங்க என்னை விட்டு விலகுனா உங்க மேல எனக்கு ஒரு மதிப்பு வரும். அப்படி இல்லன்னா என் மனசுல இருந்து உங்களை வெறுக்குற நிலைக்கு வரலாம்... எது உங்களுக்கு விருப்பமோ அதை பண்ணுங்க...” என்றாள் திடமாக.
இதற்கு முன்பு தான் இழுத்தால் இழுத்த இழுப்புக்கு வளைந்து கொடுக்கும் பெண்ணவள் இவள் இல்லை என்று அறிந்தான்.
“அப்போ என்னை பத்தி உன் மனசுல எந்த சலனமும் இல்லையா...?” விவரமாக அவன் டி போடுவதை தவிர்த்து விட்டான்.
அதை உணர்ந்துக்கொண்டவளுக்கு மனதில் வலி எழுந்தது.
“நிஜம் சொல்லவா...? போய் சொல்லவா..?” இரவின் நிசப்தத்தை கிழித்துக்கொண்டு வந்தது அவளது குரல்.
“உண்மையையே சொல்லு...” என்றான் எதையும் தாங்கி கொள்வேன் என்பது போல அவனது குரல் மருத்து போய் இருந்தது.
- Nice





