இதோ அதோ என்று மூன்று மாதங்கள் கடந்து இருந்தது தேனருவி தகப்பனின் வீட்டுக்கு வந்து. இடையில் டைவேர்ஸ் பேப்பர் வந்தது. மகளை ஒரே ஒரு பார்வை தான் பார்த்தார். சத்தமில்லாமல் தேனருவி கை எழுத்து போட்டு திருப்பி அனுப்பியவள்,
வேலை தேடும் பணியை தொடங்கினாள்.
“எதுக்குமா இவ்வளவு அவசரம்?” கேட்ட மணிவாணனை பார்த்தவள்,
“சும்மா இருக்க முடியலப்பா இவ்வளவு நாளும் அந்த வீட்டுல இதை தான் செஞ்சேன். இனிமேட்டுக்கும் சும்மா இருந்தா என்னை நானே மறந்து போயிடுவேன்” என்றவளை கண்களில் கண்ணீர் நிறைக்கப் பார்த்த தகப்பன் பெண்ணவளின் விருப்பத்துக்கு தலையசைத்து வழி விட்டு நின்றார்.
தங்கைகள் இருவருக்கும் அக்காவின் வாழ்க்கை இப்படி பாதியிலே முடிந்து விட்டதே என்று பெரும் கவலை சூழ்ந்தது. ஆனால் அவர்களை அதட்டி உருட்டி அவர்களின் பணியை கவனிக்க வைத்தவள், தம்பியை தேற்றுவது தான் அவளுக்கு பெரும் பாடாய் போனது.
“என்னால தானே உன் வாழ்க்கை இப்படி ஆகிடுச்சு. நான் தெரிஞ்சு அந்த கம்பெனிக்கு போகலக்கா. அங்க போனதுக்கு பிறகு தான் இது மாமா கம்பெனின்னே தெரிஞ்சுது. அப்பவும் நான் இன்டெர்வியூ அட்டென் பண்ணாம வெளில வந்திடலாம்னு கேட்டேன். ஆனா ரூல்ஸ் படி உள்ள வந்துட்டா இண்டெர்வியூ முடிஞ்ச பிறகு தான் வெளியே போகணும்னு சொல்லிட்டாங்க க்கா.. இல்லன்னா நான் அப்பவே வெளியில வந்து இருப்பேன்” என்று புலம்பியவனுக்கு அவள் எப்படி சொல்லி புரிய வைப்பது.
இது இவனால் நிகழ்ந்த நிகழ்வு அல்ல என்று. இவன் அந்த நிறுவனத்துக்கு போனாலும் போகவில்லை என்றாலும் இன்னும் சிறிது நாளில் இது நடந்து தான் இருக்கும்.
என்ன அப்போ காரணம் சொல்ல முடியாமல் இவள் தான் தடுமாறி இருப்பாள். ஆனால் அவளை இந்த விசயத்தில் தத்தளிக்க விட கடவுளுக்கு மனம் வரவில்லை போல. அதனால் தானோ என்னவோ மணிவாணன் மூலமாகவே அவளின் திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி போட்டு விட்டார்.
தம்பியை தேற்றி வேறு ஒரு வேலையை தேட சொல்லி பணித்தவள், தன் செர்டிபிகேட்ஸ் எல்லாவற்றையும் தூசி தட்டி எடுத்து இவளும் வேலை தேட சென்றாள்.
இதோ அதோ என்று நாட்கள் தான் ஓடியதே தவிர அவளுக்கு வேலை கிடைக்க குதிரை கொம்பாகிப் போனது. நன்மாறனுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்க அவன் போக ஆரம்பித்து விட்டான்.
இவளுக்கு தான் எதுவும் சிக்கவில்லை. வீட்டில் சும்மாவே இருக்க அவளால் முடியவில்லை. வீட்டை அலங்காரம் செய்ய தொடங்கிய நேரம் சின்னதாய் ஸ்பார்க் அடித்தது அவளுள்.
தன் வீட்டு மொட்டை மாடிக்கு வேகமாக ஓடினாள்.
“என்ன கண்ணு.. என்ன ஆச்சு” என்று பதறிப்போய் தகப்பன் பின்னாடியே ஓடி வந்தார் மூச்சு வாங்க.
தந்தையை அலைய விட்டுட்டமோ என்று குன்றிப் போனவள்,
“சாரிப்பா” மன்னிப்பு கேட்டவள், தன் திட்டத்தை அவள் சொல்ல தகப்பனுக்கு அத்தனை வியப்பு.
“பாப்பா உன்னால முடியுமா?” ஆச்சரியமாக பார்த்தார்.
“முடியும் ப்பா..” என்றவளின் கண்களில் தெரிந்த ஆர்வம் கண்டு,
“உனக்கு சரின்னு தோணுனா நீ அதையே செய் ம்மா. உனக்கு உறுதுணையா நான் இருக்கேன்” என்று அவர் நம்பிக்கையாக சொல்ல,
“தேங்க்ஸ் ப்பா” என்றவள், அதன் பிறகு முழுமையாக தன் திட்டத்தை அவள் உரைக்க, வியப்புடன் கேட்டுக் கொண்டவர், அடுத்த நாளே மொட்டை மாடியில் இரண்டு அறைகள் கட்ட ஏற்பாடு செய்து விட்டார்.
அதற்குள் தேனருவி அடிமட்ட வேலைகளை எல்லாம் செய்ய ஆரம்பித்து விட்டாள். இதோ அடுத்த இரண்டு மாதத்தில் திறப்பு விழா வைத்து அந்த இரண்டு அறையையும் அலுவலக அறையாக மாற்றிவிட்டாள். முன்புறம் ரிஷப்ஷன், பின் பக்கம் இருக்கும் அறை மிக நீண்டதாக ஒர்க் பண்ண எதுவாக இருக்குமாறு பார்த்துக் கொண்டாள்.
அந்த திறப்பு விழாவுக்கு இளா வந்தாள் கணவன் வீட்டினரோடு. அதை எதிர்பார்க்காத தேனருவிக்கு அத்தனை மகிழ்வாக இருந்தது. அதுவும் வளைகாப்பு முடிந்து இருந்தது போல. கைகளில் அவ்வளவு கண்ணாடி வளையல்கள். அதன் கூட வைரம் தங்கம் வளையல்கள் மின்னியது. அதிலே தெரிந்துப் போனது மலையமான் தன் ஸ்டேட்டஸை இதிலும் காட்டி இருக்கிறான் என்று.
“கையை குடு தேனு.. உன் ஐடியா சூப்பர்.. நம்ம வீட்டு லுக்கையே நீ அவ்வளவு சூப்பரா பண்ணி இருந்த. சோ உன்னால இதை இன்னும் சிறப்பா செய்ய முடியும். பிசினெஸ் உமனுக்கு என்னோட மனம் கனிந்த வாழ்த்துக்கள்” என்று அவளை தோளோடு தோள் சேர்த்து அணைத்து தன் மகிழ்வை வெளிப்படுத்தினாள் இளவரசி.
இளவரசி மாமியாரும் மனமார வாழ்த்தினார். மாதவனும் வாழ்த்தி விட்டு,
“நீ எனக்கு தங்கச்சி மாதிரி. அதனால ஒரு அண்ணனா உனக்கு எந்த நேரத்திலும் உதவி செய்ய நான் இருப்பேன் ம்மா. தயங்காம நீ என் கிட்ட கேட்கணும்” என்றான் நெஞ்சில் இருந்து. தேனருவி தலையை மட்டும் ஆட்டிக்கொண்டாள்.
அன்றைய கடை திறப்பு விழா அவ்வளவு இனிதாக நடந்து முடிந்தது. தேனருவி “ஸ்பார்க் லுக்” என்ற பெயரில் கடை ஆரம்பித்து இருந்தாள். அதை ஆன்லைனில் பிரபல படுத்தினாள்.
சும்மா பொழுது போக்காக ஆரம்பித்த அவளது வேலை இன்று அவளுக்கு சோறு போடும் வேலையாக மாறிப்போனது. யூடியூப் பார்த்து காமெடியாக ரீல்ஸ் செய்வது போல,
“இந்த வீடு இதுக்கு முன்னாடி இப்படி இருந்தது.. இப்போ இப்படி இருக்கு” என்று அவள் முன்பு மாற்றி அமைத்த பக்கத்து வீட்டுகளின் தோற்றத்தை எல்லாம் கேமராவில் பதிவு செய்து இருந்தாள்.
அதை வைத்து இதோ இப்பொழுது ஆன்லைனில் சைட் ஆரம்பித்து கார்ட் அடித்து அலுவலகமும் திறந்து விட்டாள்.
ஜஸ்ட் ஸ்க்ரீன் என்று விடாமல், அந்த ஸ்க்ரீனில் என்னென்ன மாற்றங்களை செய்யலாம், அதை எந்தெந்த கலர் காமிநேஷனில் செய்யலாம் என்று அவள் வீடியோ எடுத்து போட்டாள். அதோடு அதை எப்படி கஸ்ட்டமைஸ் பண்ணுவது என்றும் போட்டாள்.
வீடியோவுக்கு வீடியோவும் ஆச்சு.. அலுவலகத்துக்கு நல்ல விளம்பரமாகவும் ஆனது.
ரொம்ப இல்லை என்றாலும் சிறிய அளவில் அவளுக்கு ஆடர்கள் வந்தது. இவளே கஸ்ட்டமைஸ் பண்ணுவதால் உடம்பு வலி எடுத்தது. ஆனால் மனதின் வலிக்கு முன்பு இந்த வலியெல்லாம் பெரிய வலியாக அவளுக்கு படவில்லையோ என்னவோ.. தன் உடலை வருத்தி வேலையில் அதிக முனைப்போடு ஈடுபட்டாள்.
வெறும் சின்ன சின்ன அளவுக்கே வேலை கிடைத்தது. ஆனாலும் அதை முழு மனதுடன் செய்தாள். ஆனால் இது மட்டும் போதாது என்று அவளின் உள்ளுக்குள் சொல்லிக் கொண்டே இருக்க,
புதிதாக வடிவமைக்கும் வீட்டுக்கோ அலுவலகத்துக்கோ ப்ரீயாக செய்து தருவதாக ஆர்டர் வாங்கினாள். மெட்டிரியல்க்கு மட்டும் பணம் குடுத்தால் போதும் என்று வாங்கி இவளே மெய் வருத்தி தன் மொத்த உழைப்பையும் போட்டாள்.
ஒரு சிலர் இவளின் உழைப்பை பார்த்து அவளுக்கு உண்டான கூலியை குடுத்தார்கள். ஆனால் ஒரு சிலர் நீ தானே ப்ரீன்னு சொன்ன அதனால பணம் குடுக்க முடியாது என்றே சொல்லி விடுவார்கள். இவள் அதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் புன்னகையுடன் கடந்து விடுவாள்.
இவர்களின் மூலம் சின்ன ஆடர் வந்தாலும் ஓகே தானே.. என்று எண்ணிக் கொள்வாள். “யாராவது டிசைனர் யாருன்னு கேட்டா என் கார்டை மட்டும் குடுத்துடுங்க” பணிவாக சொல்லிவிட்டு வந்து விடுவாள்.
அப்படி சில பல ஆடர்ஸ் அவளை தேடி வந்தது. அவளுக்கு அது போதுமே.. மனமகிழ்வுடன் அனைத்தையும் ஏற்று செய்ய ஆரம்பித்தாள். வெறும் சுவராக கண்ணாடியாக இருக்கும் அறை அவளின் கைப் பட்டதும் அனைத்தும் வண்ணங்களில் குளித்து புது மெருகு ஏறி வெறும் அறை சொர்கமாக மாறிப்போனது. மிகப்பெரிய பெரிய அலுவலகங்கள், மால்கள் என அனைத்தில் இருந்தும் அவளுக்கு அழைப்புகள் வர ஆரம்பித்தது.
“நான் இன்டிரியர்.. என்னோட நீங்க டையப் வச்சுக்க முடியுமா?” என்று ஒரு இளைஞன் வர, இவளுக்கு பெரும் தயக்கமாக இருந்தது. தந்தையை ஒரு பார்வை பார்த்தாள்.
அவர் கண்ணை மூடி சம்மதம் சொல்ல, ஏற்றுக் கொண்டாள். அதன் பிறகு இன்டிரியருடன் சேர்ந்து இவளும் பல புது புது கட்டிடங்களுக்கு வேலை செய்ய கற்றுக் கொண்டாள். ஒரு கட்டிடத்தின் வேலை முடியவே இவளுக்கு இரண்டு மாதங்கள் முழுதாக எடுத்து விடும்.
“விக்ரம்.. நீங்க எடுக்குற எல்லா இன்டிரியர் கான்ட்ராக்ட்டுக்கும் என்னை சஜஸ்ட் பண்றீங்க ஓகே. ஆனா என்னால முடியல.. ஒரே கட்டிடம் தான். அதுக்குள்ள போனா ஆயிரம் ரூம்ஸ் வச்சு என்னை வச்சு செய்யிறாங்க.. என்னால முடியல” என்று சலுகையாக அவனிடம் வாயாடினாள்.
“உனக்கு என்ன கஷ்ட்டம்.. நீ சொல்ற டிசைனை அப்படியே கஸ்ட்டமைஸ் பண்ண உன் ஆட்களும் என் ஆட்களும் ரெடியா இருக்காங்க.. பிறகு என்ன முடியல..” என்றவனை முறைத்துப் பார்த்தாள்.
“எனக்கு தனிப்பட்ட ஆடர் வேற வருது விக்ரம்”
“சோ வாட். அதை ட்ராப் பண்ணிடு” என்றவனை இன்னும் முறைத்துப் பார்த்தவள்,
“உன்னோட டையப் வச்சது என்னோட பிசினேசை இன்னும் உயர்த்த தான். இழுத்து மூடிட்டு போக இல்ல. அதோட நான் ஆரம்பிச்சது இந்த சின்ன சின்ன வேலைகளால தான்” என்றவளின் நேர்மை அவனுக்கு பிடித்துப் போக, சிரித்தவன்
“உன்னால முடியும் தேனு. இந்த நிலைக்கு வர நீ எவ்வளவு பாடு பட்டன்னு எனக்கு நல்லாவே தெரியும். சும்மா உன்னை சீண்டி விட்டேன். மற்றபடி வேற ஒன்னும் இல்லை. இன்னும் ஆட்களை நீ சேர்த்துக்கோ. எத்தனை பேர் வச்சு வேணாலும் உன்னால சமாளிச்சு சம்பளமும் குடுக்க முடியும்” என்று அவளின் திறமை மீது உள்ள நம்பிக்கையில் சொன்னவன்,
“உனக்கு இன்னொரு குட்நியூஸ் சொல்லவா? நாம கஸ்ட்டமைஸ்க்கு இப்போ ரொம்ப ஈசியா ஆப் ரெடி பண்ணிட்டு இருக்கோம். உனக்கே உனக்காக ஒரு ஆப்.. அதுல நீ எக்ஸ்ப்ளைன் பண்ணா போதும்” என்றவனின் பேச்சில் ஒரு கணம் திகைத்துப் போனவள்,
“விக்ரம் என்ன சொல்ற?” மகிழ்ந்துப் போனாள்.
“எஸ்.. நீ சொன்ன ஐடியாவ வச்சு உனக்காக ஆப் ரெடி ஆகிட்டு இருக்கு. இதுல கஸ்ட்டமரே டிசைன் பண்ணிக்கலாம். பட் ட்ரையல் மட்டும் தான். ப்ரீ கிடையாது” ஒரு பிசினெஸ் மேனாக அவன் சொல்ல முழுதாக கேட்டுக் கொண்டாள்.
இதோ அதோ என்று தேனருவி பிசினெஸ் ஆரம்பித்து முழுதாக இரண்டு வருடங்கள் ஓடி விட்டது. இப்பொழுது அவளின் வாழ்க்கை தரமே வேறு. அந்த ஊரிலே பெரிய வீட்டை கட்டி இருந்தாள் தேனு. அதில் தானதை தம்பி இருவருடன் வசித்து வருகிறாள். அவளின் அலுவலகத்தில் சுழல் நாற்காலியில் கம்பீரமாக ஓனராக அமர்ந்து இருக்கிறார் மணிவாணன்.
தம்பியோ விக்ரமுடன் சேர்ந்து பில்டிங் காண்ட்ராக்ட் எடுத்து பணி செய்துக் கொண்டு இருக்கிறான். இரண்டு தங்கைகளுக்கும் திருமணம் செய்து வைத்து விட்டாள். முதல் தங்கையான மதியை விக்ரமுக்கே கல்யாணம் செய்துக் கொடுத்தாள். செங்கொடிக்கு தங்களின் உறவில் இருந்தே நல்ல வரனாக பார்த்து முடித்தார்கள்.





