ஆசையாக மகளின் வீட்டுக்கு வந்த மணிவாணனுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. மனித இரக்கம் கொஞ்சமும் இன்றி மாட்டை அடிப்பது போல அவனின் முறம் மாதிரி இருந்த கையால் மகளை அடிக்க கண்டு பெற்றவரின் நெஞ்சு துடிதுடித்துப் போனது.
“அம்மாடி” என்று தோளில் கிடந்த துண்டால் வாயை போத்திக் கொண்டார்.
தன் மகளால் தவறு ஏதும் நேர்ந்து இருக்குமோ என்றே ஒரு கணம் எண்ணினார். ஆனால் அவரின் மாப்பிள்ளை பணம் காசு அந்தஸ்த்து என்று பேதம் பார்த்து பேசியதை கேட்டவுடன் பெற்றவரால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.
“ஆத்தா நீ இவ்வளவு கட்டலை(கஸ்டத்தை) இங்க இந்த வீட்டுல அனுபவிச்சுக்கிட்டு இருக்கன்னு அப்பனுக்கு தெரியாம போயிடுச்சு சாமி. தெரிஞ்சு இருந்தா அப்பா உன்னை இங்க ஒரு கணம் கூட விட்டு இருந்து இருக்க மாட்டனே..” நெஞ்சு கலங்கிப் போனவர், மகளை தன் பக்கம் இழுத்துக் கொண்டு நெஞ்சோடு அணைத்துக் கொண்டு கதறினார்.
அவரின் கதறல்களை எல்லாம் பார்த்த மலையமானுக்கு அனைத்தும் டிராமாவாக பட, “ப்ச் இந்த சென்டிமென்ட் ட்ராமா காட்டுற வேலையெல்லாம் இங்க வேணாம். உங்க நடிப்புக்கு ஆஸ்க்கார் விருது குடுத்தாலும் நான் நம்ப மாட்டேன். முதல்ல மகளை கட்டி குடுத்து ஒட்டிக்கப்பார்த்த. அடுத்து மகனை கம்பெனிக்கு அனுப்பி அவன் மூலமா ஆதாயம் பார்க்க வர்ற..” என்றான்.
அவனது பேச்சை மணிவாணன் காதிலே வாங்கிக் கொள்ளவில்லை.
“தினம் தினம் நீ இப்படி தான் வாழ்ந்துக்கிட்டு இருக்கன்னு எனக்கு தெரியாம போயிடுச்சே ராசாத்தி.. நீ இங்க துடிக்க துடிக்க வாழ்ந்து இருக்க, அங்க அப்பன் நீ நல்லா வாழ்ந்துக்கிட்டு இருக்கன்னு ல்ல நினைச்சேன். எங்களுக்காக நீ எதுக்கு கண்ணு பாரம் சுமந்த? அப்பாவுக்கு பாரமாகிடுவோன்னு நினைச்சுட்டியா? அப்பா உன்னை அப்படி நினைப்பேனா தங்கம்” என்று மேலும் கதறியவரை கண்டு வேதனையில் குமைந்துப் போனாள்.
எந்த விசயம் எல்லாம் தகப்பனுக்கு தெரியக்கூடாது என்று எண்ணி மறைத்து வைத்து இருந்தாளோ அது அத்தனையும் தகப்பனுக்கு தெரிந்துப் போனதில் இன்னும் வேதனை கொண்டாள்.
“அப்படி எல்லாம் எதுவும் இல்லப்பா” என்று வாய் வார்த்தையால் கூட அவளால் தகப்பனை சமாதனம் செய்ய முடியவில்லை.
தன் மகளின் நிலையை எண்ணி ஒரு கணம் கலங்கிப் போனவர் அடுத்த நிமிடமே நிமிர்ந்து கம்பீரமாய்,
“இனி ஒரு நிமிடம் கூட நீ இந்த வீட்டுல இருக்கக் கூடாது பாப்பா...” என்று மகளின் கையை பிடித்து அழைத்துக் கொண்டு சென்று விட்டார்.
தவறு செய்து இருந்தாள் கூட அடிப்பது நியாயம். அதுவுமே மிகத்தவறு தான். ஆனால் பொருளாதார ஏற்ற தாழ்வுகளை வைத்து ஒரு கணவன், கட்டிய மனைவியை ஏளனமாக பரிகாசம் செய்து கேலி கூத்து ஆக்கி அவளை மனதளவில் டார்ச்சர் செய்து அடித்து துன்புறுத்தும் பொழுது எந்த தகப்பனுக்கும் மீசை துடிக்கும் தான்.
அந்த துடிப்பு மனிவாணனுக்கும் வந்தது. மருமகனை ஒரு பொருட்டாக கூட கருதாமல் மகளின் கையை பிடித்துக் கொண்டு வெளியே போய் விட்டார்.
அதை கொஞ்சமும் எதிர் பார்க்காத மலையமான் ஒரு கணமே திகைத்துப் போனான்.
அடுத்த நிமிடம் மனைவியின் கையை பிடித்து நிறுத்தியவன்,
“என்னய்யா ரொம்ப பேசுற, அப்படி எல்லாம் இங்க இருந்து அவளை கூட்டிட்டு போக முடியாது. அவ என் பொண்டாட்டி. அவளுக்கு நான் தாலி கட்டி இருக்கேன். தாலி மட்டும் இல்ல அவளை காசு குடுத்து வாங்கி இருக்கேன். நானா அனுப்பினா மட்டும் தான் அவ இங்க இருந்து போக முடியும். இல்லன்னா அவ வாழ்நாள் முழுக்க இங்க சிறை இருந்து ஆகணும். அப்படி நீங்க அவளை கூட்டிட்டு போகணும்னா என்கிட்டே வாங்குன காசை பைசா மிச்சம் இல்லாம வச்சுட்டு உங்க பெண்ணை கூட்டிட்டு போங்க. ஏன்னா இன்னும் அவ அவளா தான் இருக்கா. அது ஒன்னு போதாதா நான் எவ்வளவு ஜென்டில் மேனா இருக்கேன்னு” என்றான் தெனாவட்டாக.
ஆரம்பத்தில் சொன்னது கூட ஏதோ ஒரு மன நிலையில் ஏற்றுக் கொண்டாள். ஆனால் பெண்ணை பெற்ற தகப்பனிடம் எதை சொல்லக்கூடதோ அதை அவன் சொன்னதை கேட்ட தேனருவிக்கு ஆயிரம் தேள்கள் ஒன்றாய் அவளை கொட்டியது போல உணர்ந்தாள். கண்களில் நிற்காமல் கண்ணீர் சுரந்தது.
தகப்பனை அவளால் நிமிர்ந்துக் கூடப் பார்க்க முடியவில்லை.
அப்பொழுது கூட அவன் செய்யும் தவறு அவனுக்கு கொஞ்சமும் உறைக்கவே இல்லை. சிலருக்கு தன் புத்தி. ஒரு சிலருக்கு சொல் புத்தி, இன்னும் சிலருக்கு நன்றாக பட்டால் தான் புத்தி. மலையமான் கடைசி வகையை சேர்ந்தவன். பட்டு அனுபவித்து வந்தால் மட்டுமே புத்தி வரும். இல்லை என்றால் யாரும் இல்லாத தனி மரமாகத்தான் அலைவான்.
வாழ்க்கையில் எது முக்கியம் என்று மிகவும் மோசமாக அனுபவித்து வந்த பிறகு தான் தெரிய வரும். அதுவரை அவனுக்கு எதுவும் விளங்கபோவது இல்லை.
“எது என் மகளை காசுக்கு வித்தனா?” என்றதிலே அவர் நெஞ்சை பிடித்துக் கொண்டார். இதில் அவளின் மகள் வாழவே இல்லை என்று தெரிய வந்து விட மனிதரின் மொத்த உயிரும் போய் விட்டது. இதற்காகவா மகளை பார்த்து பார்த்து கல்யாணம் செய்து வைத்தார்.
இந்த ஒற்றை சொல்லுக்காகவா ஊர் மெச்ச கன்னியாதனம் செய்து வைத்தார். இல்லையே.. ஒவ்வொரு பெற்றவர்களுக்கும் அவர்களின் உச்ச பட்ச ஆசையே தங்களின் பேரப் பிள்ளைகளை கண்டு விட மாட்டமா என்பது தானே.. இங்கு அதற்கே வழியில்லாத பொழுது என்ன பேசுவது.. எதை பேசுவது என்று ஒன்றுமே புரியவில்லை பெரியவருக்கு.
எல்லாம் ஒரு நிமிடம் தான். அதுவரை நெகிழ்ந்து வேதனையில் குமைந்து நைந்து போய் இருந்த மணிவாணன் தன் முழு உயரத்துக்கும் நிமிர்ந்து நின்று மருமகனை தன் கூறிய விழிகளால் குத்தி கிழித்தார். வார்த்தையாலும் கிழிக்க ஆரம்பித்தார்.
“என்னய்யா சொன்ன என் மகளை காசுக்கு உனக்கு வித்தனா? என்ன பேச்சு பேசுறீர். என் மக என் மானத்துக்கு சமமானவ. அவளை காசுக்கு வித்தனா என் மானத்தை நானே காசுக்கு வித்த மாதிரி. நான் செத்ததுக்கு சமம்” என்றவரின் பேச்சு அவனது காதிலே விழவில்லை.
“ரொம்ப நடிக்கதைய்யா” என்று அவன் மேலும் பேச வர,
பொங்கி எழுந்து விட்டார் மணிவாணன்.
“நிறுத்துய்யா உன் பாட்டுக்கு என்ன வேணாலும் பேசணும்னு பேசாத.. நான் பேச ஆரம்பிச்சா உன்னால தாங்க முடியாது. எப்போ என் மகளை நீ கை நீட்டி அடிச்சியோ அப்பவே நீ என் மனசுல இருந்து இறங்கிட்ட.. இனி உனக்கு என்னடா மரியாதை வேண்டி கிடக்கு” என்றவரின் பேச்சில் பெருங்கோபம் எழ,
“என்னய்யா என்னையவே டா போட்டு பேசுற. நான் யாரு தெரியுமா? என் அந்தஸ்த்து என்னன்னு தெரியுமா? காசுக்காக மகளை வித்த நீ பேசுறியா? அன்பு பாசம்னா என்னன்னு தெரியாத நீ என்னை பத்தி பேசாத. உனக்கு அந்த அருகதை இல்ல” மலையமான் கண்கள் சிவக்க அவரின் சட்டையை பிடிக்க வர,
அவனின் கையை தட்டி விட்ட மணிவாணன்,
“இது தான் உன் புத்தி. உனக்கு முதல்ல அன்பு பாசம்னா என்னன்னு தெரியுமா? நீ காசு பணத்தை வச்சு அன்பை எடை போடுற. ஆனா நான் அப்படி இல்ல..” என்றவர்,
“உன்கிட்ட இருக்க காசு பணத்தை பார்த்தா நான் என் பொண்ணை உனக்கு கட்டி குடுத்தேன்.. இல்லவே இல்ல.. உன் தங்கச்சிக்கு உள்ள குறைபாட்டை வெளிப்படையா சொல்லி என் மகளால உன் தங்கை வாழ்க்கையில மாற்றம் வரும்னு நீ கேட்டுக்கிட்டே பாரு. அந்த ஒரு காரணத்துக்காக மட்டும் தான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சேன். தங்கச்சி மேலையே இந்த அளவுக்கு பாசம் வச்சு இருக்கியே. அப்போ வரப்போற பொண்டாட்டியை எப்படி எல்லாம் பார்துக்குவன்னு நினைச்சு என் பொண்ணை உனக்கு கல்யாணம் கட்டி குடுத்தேன்.
ஆனா அதை சாக்கா வச்சுக்கிட்டு நாங்க உன் கூட ஒட்டிக்கணும்னு கனவுல கூட நாங்க நினைச்சுப் பார்த்தது இல்ல.. அந்த ஈனப்புத்தி எங்க பரம்பரைக்கே கிடையாது. அப்ப கூட நீ சொன்னது உண்மையா பொய்யான்னு தெரியாம என் பெண்ணை கல்யாணம் கட்டிக் குடுக்க கூடாதுன்னு உன் வீட்டுக்கு வந்து பார்த்தேன். உன் தங்கச்சியை வந்து பார்த்த பிறகு கூட உள்ளுக்குள் ஒரு நெருடல் தான். ஆனா நீ ஒரு மரத்தை வெட்டாம அதை வச்சே வீடு கட்டி இருந்த பாரு அதுல நீ சின்ன உயிருக்கு கூட தூரோகம் பண்ண மட்டன்னு நம்பி என் மகளை உனக்கு கல்யாணம் பண்ணிக் குடுத்தேன். அவளை கடைசி வரை நல்லா பார்துக்குவன்னு நம்பினேன்.
ஆனா இப்ப தான் தெரியுது.. அது உன் பணக்கார செழுமைக்காக விட்டு வச்ச மரம்னு.. அது மேல உனக்கு துளிக் கூட பற்று இல்லன்னு இந்த நிமிடம் நல்லா புரிஞ்சுக்கிட்டேன். மனிதாபி மானம் இல்லாம என் பொண்ணுக்கிட்ட நடந்துக்கிட்ட உன்னை இனியும் நான் மாப்பிள்ளைன்னு சொன்னா என் நிழலே என்னை காரி உமிழ்ந்து விடும்.. நீயாச்சு உன் பணமாச்சு.. நீ இப்படி பணம், காசு, அந்தஸ்த்துன்னு அலையிறியே அது எல்லாம் என் மக கால் தூசிக்கு கூட வராது. உனக்கு அவளை பற்றி இன்னும் முழுசா தெரியல.. தெரிய வரும் பொழுது நீ நீயா இருக்க மாட்ட” என்றவர் அவ்வளவு நேரம் கம்பீரமா பேசியவர்,
மிகவும் தளர்ந்து போய், “உன் கூட என் மக புள்ளையும் குட்டியுமா வாழ்வான்னு தான் கல்யாணம் பண்ணி வச்சேன். ஆனா நீ என் மகளை உன் தேவைக்கு மட்டும் பையன் படுத்திக்கிட்டு இப்படி சக்கையா தூக்கி எறிவன்னு நான் நினைக்கல. உன் தங்கச்சி மட்டும் கணவன் குழந்தைன்னு நல்லா வாழனும். ஆனா உன்னை மட்டுமே நம்பி வந்த என் மகள் ஒண்ணுமே இல்லாம இருக்கணும்னு நினைச்சுட்ட இல்ல..” சொன்னவர்,
வீருக்கொண்டு “இப்ப சொல்றேன் கேளு. உன் கண்ணு பார்க்க என் மகளை நான் சீரும் சிறப்புமா ஒருத்தனுக்கு கல்யாணம் பண்ணி குடுத்து அவ கை நிறைய மடி நிறைய புள்ளை குட்டியோட வாழ்ற வாழ்வை நீ பார்ப்ப.. அப்ப தெரியும் எப்பேர் பட்ட மாணிக்கத்தை நீ தொலைச்சு இருக்கன்னு. என் பொண்ணு யாருக்கும் கிடைக்காத அறிய பொக்கசம். நீ தவற விட்டுட்ட இனி உனக்கு அவ எப்பவும் கிடைக்க மாட்டா” என்றவர்,
“நீ எவன் கிட்ட உன் பணத்தை குடுத்தியோ அவன் சட்டையை பிடிச்சு கேளு. அதை விட்டுட்டு என்கிட்டயோ என் மகக்கிட்டையோ பணம்னு வந்து நிற்காத. அதுக்கு நாங்க பதில் சொல்லனும்னு எந்த அவசியமும் இல்ல. மீறி தொல்லை பண்ணினா வரதட்சனை கொடுமைன்னு கேஸ் குடுத்து உன்னை நாரடிக்கவும் தயங்க மாட்டேன்” என்று அவனை மிரட்டியவர் தன் மகளை அழைத்துக் கொண்டு அந்த பெரிய மாளிகையை விட்டு போய் விட்டார்.
அது வரை வெளிச்சமாய் இருந்த மாளிகை பெண்ணரசி அந்த வீட்டை விட்டு போகவுமோ என்னவோ ஆடம்பரத்தை தனக்குள் கொண்ட வீடு சடுதியில் இருள் சூழ்ந்துப் போனது.
இவ்வளவு நடந்த பிறகும் தேனருவி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவளின் மௌனம் மிகப்பெரியது என்று அந்த மாங்கா மடையனுக்கு புரியவில்லை. அதை இனி கலைப்பது அவ்வளவு சுலபம் இல்லை என்றும் அறியவில்லை.
மூன்று முடிச்சால் இணைந்த இந்த இருவரும் இனி இரு துருவங்களாக மாறி இருப்பார்கள்.. என்று இணையுமோ இந்த இரு துருவமும். பொறுத்திருந்து பார்ப்போம்..





