தங்கை பேசுவதை கேட்ட மலையமானுக்கு நெஞ்சில் அப்படி ஒரு நிம்மதி பிறந்தது. மனதிலும் வயிறிலும் பால்வார்த்தது போல ஆனான். இனி அவனின் தங்கை வாழ்க்கை நலமுடன் ஆரம்பித்து விடும் என்ற பரவசம் வந்து விட்டது அவனுக்கு.
தங்கை வாழ்வதை பகிர்ந்துக் கொள்ள தன் மனைவியை தேடினான் மலையமான். ஆனால் தேனருவி செய்த செயல் கண் முன் வந்து அவனை தடுத்து விட்டது.
“பெரிய உத்தமி மாதிரி அன்னைக்கு அவ்வளவு சீன போட்டா. ஏன் எனக்கு உரிமை இல்லையா? நான் அவளை தொடக்கூடாதா? தொட்டா கரைஞ்சு போயிடுவாளாக்கும்..” மலையமானின் உள்ளம் குமுறிக் கொண்டு இருந்தது.
அதை அவளிடம் வெளிப்படுத்த விரும்பவில்லை. ‘உனக்கு அவ்வளவு இருந்தா எனக்கும் இவ்வளவு இருக்கும்டி..’ பொரிந்து தள்ளினானே தவிர அவளை நாடவில்லை.
மெல்ல மெல்ல இளாவின் வாழ்வில் மாற்றம் ஏற்ப்பட தொடங்கியது. அதற்கு மிக முக்கிய காரணம் தேனருவி என்றால் மிகையில்லை. இரு ஆண்களும் அலுவலகம் கிளம்பிய பிறகு இரு பெண்களும் சேர்ந்து சமையல் செய்வது, கதை பேசுவது, துணிகளை அடுக்கிக் கொண்டே வாழ்வியலை பேசிக்கொண்டே இருப்பார்கள். வாய் ஓயவே ஓயாது.
வேலை செய்யும் பணியாளர்கள் கூட அண்ணியும் நாத்தனாரும் இவ்வளவு ஒற்றுமையா இருப்பதை வியந்துப் போனார்கள். கண் வைத்தார்கள்.
மாலையில் பூக்களை பறித்து இளாவுக்கு தேனருவியே தலை சீவி பூச்சூடி விட்டு அழகு பார்ப்பதை ஒரு நாள் மலையமான் பார்த்து விட்டான். அந்த நொடி அவன் என்ன நினைத்தான் என்று அவனுக்கு மட்டுமே தெரியும். கண்கள் லேசாக கலங்கியதோ என்னவோ..
விழி எடுக்காது தேனருவியை பார்த்தான். முதுகை துளைக்கும் பார்வையை உணர்ந்தவள் சட்டென்று திரும்பி பார்த்தாள். ஒருவரையும் காணோம்.
அது தானே அவராவது என்னை பார்ப்பதாவது.. எண்ணியவள் இளாவிடம் கவனத்தை வைத்தாள்.
“உன் கையாள சாப்பிடனும் போல இருக்கு தேனு” இளா சொல்ல, இரவு உணவை அவளுக்கு ஊட்டி விட்டாள். அதை பார்த்த மலையமானுக்கு தான் உள்ளம் கொதித்துப் போனது.
முன்பு எல்லாம் இவனை வைத்து தான் இளாவை சரி கட்டுவாள். எப்பொழுது இளா மனம் விட்டு தேனுவோடு பேச ஆரம்பித்தாளோ அப்பொழுதிருந்தே மலையமானை கொஞ்சமும் கண்டுக் கொள்ளவில்லை தேனருவி.
அதுவும் இவனுக்கு ஊட்டிய பிறகு தான் இளாவுக்கு ஊட்டியே விடுவாள். இப்பொழுது தன்னை எதற்காகவும் அவள் நாடவில்லை என்பதோடு தன்னை முற்றிலும் ஒதுக்கி வைத்துவிட்டவளை போல நடந்துக் கொண்டவளை கண்டு அத்தனை ஆத்திரம் எழுந்தது அவனுக்குள்.
விழிகள் சிவக்க தேனருவியை பார்த்தான். அவளோ அவனை கண்டுக் கொள்ளாமல், இளாவுக்கு ஊட்டி விட்டபடி இளாவோடும் மாதவனோடும் பேசிக் கொண்டு இருந்தாள்.
அதில் இவனுக்குள் பெரும் புகைச்சலை கிளப்பி விட பாதி உணவில் எழுந்து விட்டான். அதை கூட அவள் கவனிக்காமல் தங்கையிடமே மும்மரமாக இருப்பதை பார்த்து கோவத்தின் உச்சிக்கு சென்று விட்டான்.
வேகமாக அறைக்கு சென்று விட்டான். அவன் போவதை விழியோரம் பார்த்தும் பராமலாய் கவனித்துக் கொண்டவளுக்குள் நெஞ்சில் ஒரு பாரம் எழுந்தது. அவனது தட்டில் உணவு அப்படியே இருப்பதை பார்த்து பெருமூச்சு விட்டாள்.
அவளுக்கும் சாப்பிட தோன்றவில்லை. இளாவை சாப்பிட வைத்து அனுப்பியவள், பாலை எடுத்துக் கொண்டு அவளின் அறைக்கு வந்தாள்.
அங்கே குறுக்கும் நெடுக்குமாக பின்னால் கைகளை கட்டிக் கொண்டு அலைந்துக் கொண்டு இருந்தவனை பார்த்தவள்,
“பால் கொண்டு வந்து இருக்கேன்” என்று சொல்லி மேசை மீது வைத்து விட்டு குளிக்க மாற்று துணியோடு குளியல் அறைக்குள் புகுந்துக் கொண்டாள்.
தான் சாப்பிடவில்லை என்பதை கவனித்து இருக்கிறாள் அதனால் தான் பால் எடுத்துட்டு வந்து இருக்கிறாள் என்று மகிழ்ந்தவனின் கோவம் மட்டுப் பட்டது. ஆனால் அதை அவனது கையில் கொடுக்காமல் மேசை மீது வைத்து விட்டு போக அடங்கி இருந்த கோவம் இன்னும் அதிகமாக பெருகியது.
“இவளுக்கு எவ்வளவு திமிர் இருக்கணும்.. ஏன் மேடமால பாலை கையில குடுக்க முடியாதோ? அந்த அளவு ஏத்தம் ஏறிப்போய் கிடக்கு.. வெளில வரட்டும் இன்னைக்கு ஒண்ணுல ரெண்டு பார்த்திடுறேன்” என்று கறுவியவன் பாலை சீண்டக் கூட இல்லை.
குளித்து முடித்து வெளியே வந்தவள் மேசை மீது பார்வையை ஓட்டினாள். பால் இன்னும் அப்படியே தான் இருந்தது. ஆக சுத்தமாக இவருக்கு தன்னை பிடிக்கவில்லை என்று முடிவு கட்டியவள், அவனை நிமிர்ந்துப் பார்த்தாள். அவனும் அவளை தான் பார்த்துக் கொண்டு இருந்தான்.
“உங்கக்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றாள்.
அவன் என்ன ஏது என்று எதுவும் கேட்கவில்லை. அதே போல அவள் மீது இருந்த பார்வையையும் விலக்கவில்லை. அதையே சம்மதமாக எடுத்துக் கொண்டவள்,
“உங்க தங்கை இப்போ கொஞ்சம் கொஞ்சமாக ரெக்கவர் ஆகிட்டு இருக்கா. இன்னும் ரெண்டு மூணு மாசத்துல முழுசா குணம் ஆகிடுவா. சோ நீங்க என்னை இங்க கூட்டிட்டு வந்ததற்கான வேலையை முடிச்சுட்டேன்னு நினைக்கிறேன்..” என்று அவனை பார்த்தாள். அவன் முன்பை விட தீவிரமாக அவளை பார்த்தானே தவிர வாயே திறக்கவில்லை.
“அதனால நான் கிளம்புற நேரம் வந்திடுச்சுன்னு நினைக்கிறேன். அதுக்கு முன்னாடி பிராப்பரா நாம டைவேர்ஸ்க்கு அப்ளை பண்ணிட்டா பெட்டர். என் சார்பா உங்க சொத்துலையோ இல்ல வருமானத்துலையோ ஒரு பைசா கூட வேண்டாம்.. அதை நோட் பண்ணியே பைல் பண்ணிடுங்க” என்றாள்.
அடக்கி வைத்து இருந்த கோவம் மலையமானுக்குள் இன்னும் பெருகிப் போக இறுகிப்போய் நின்றான். அவளை பார்வையால் துளைத்தான்.
அவனது பார்வை வீச்சை தாங்கா முடியாமல் முகத்தை திருப்பிக் கொண்டவள்,
“இனி நமக்குள்ள எதுவும் இல்லன்னு நினைக்கிறேன். இனி இந்த பொய்யான உறவுக்கு உயிர் குடுக்கணும்னு எந்த அவசியமும் இருக்காது. சோ பெட்டர் நாம நல்லா பிரெண்டா..” என்று சொல்ல வந்தவள்,
“சாரி உங்க பிரெண்டா இருக்க கூட ஒரு தகுதி வேணும் இல்லையா? எனக்கு அந்த தகுதி கூட இல்ல.. ஒரு வழிப்போக்கனா நாம பிரிஞ்சிடலாம். அது தான் பெட்டார்” என்றாள் தொண்டை அடைக்க.
தன் வலிகளை உள்ளடக்கிக் கொண்டவள், அந்த அறையை விட்டு எழுந்து எப்பொழுதும் அவள் தஞ்சமாகும் மரத்தினடிக்கு சென்றாள். அவளின் காலை தழுவி செல்லும் நீரில் மனம் குளிராமல் கண்ணீரை கட்டுப் படுத்திக் கொண்டு அமர்ந்து இருந்தாள் இரவெல்லாம்.
அவன் முந்திக்கொள்வதற்கு முன்பு தான் முந்திக் கொண்டால் வலி அவ்வளவாக இருக்காது என்றே இந்த பேச்சை ஆரம்ம்பித்தாள். மலையமான் பிரிவை பற்றி பேசி இருந்தால் நிச்சையம் இவள் தாங்கி கொள்ள மாட்டாள். ஏனெனில் அந்த அளவுக்கு அவனை விரும்பி விட்டாள்.
காதலன் வாழ சொல்லி கூப்பிட்டால் அது வேற, ஆனால் பிரிவை பற்றி பேசினால் எந்த காதலியால் தான் அதை தாங்கிக் கொள்ள முடியும். எனவே இவள் முந்திக் கொண்டாள்.
இவளின் நிலை இப்படி. இவளின் பேச்சை கேட்ட மலையமானோ எரிமலை சீற்றத்தின் உச்சியில் இருந்தான்.
“அவ்வளவு திமிராகிடுச்சா உனக்கு.. ஒண்ணும் இல்லாத உனக்கே இவ்வளவு ஏத்தம் இருந்தா எனக்கு எவ்வளவு இருக்கும். நீ என்னடி என்னை டைவேர்ஸ் பண்றது. நான் பண்றேன்டி உன்னை. இனி உனக்கும் எனக்கும் எந்த காலத்துக்கும் எந்த உறவும் இல்லை. இனி நீ யாரோ நான் யாரோ” என்று முடிவெடுத்தவன், அதே வேகத்தில் வக்கீலை பார்த்து டைவேர்ஸ்க்கு அப்ளை பண்ணி விட்டு வந்து விட்டான்.
அவனது வேகத்தை கண்டு தேனருவிக்கு கண்கள் எல்லாம் கலங்கியது. ஏதோ ஒரு நம்பிக்கை உள்ளுக்குள் ஒட்டிக் கொண்டு இருந்தது அவளுக்கு.
“நாம ஏன் சேர்ந்து வாழ கொஞ்சம் முயற்சி பண்ணக்கூடாது” என்று மலையமான் கேட்க மாட்டான் தான் ஆனால்,
“இல்ல நாம டைவேர்ஸ் எல்லாம் செஞ்சுக்க வேண்டாம்.” என்று அவன் சொல்லுவான் என்று எதிர் பார்த்தாள். அவளின் எதிர்பார்ப்பில் ஒரு லாரி மண்ணை அள்ளிப்போட்டு நிரப்பிவிட்டான்.
தாமரை இலை தண்ணீர் போல இருவரும் ஒட்டாமலே வாழ்ந்தார்கள் அடுத்த இரண்டு மாதாமும். இதற்கு இடையில் இளா கரு சுமந்து இருக்கும் விசயம் கேள்விப்பட்டு எல்லோருக்கும் அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது.
மலையமானின் மகிழ்ச்சிக்கு ஒரு அளவே இல்லாமல் போனது. அதை எப்படி காட்ட என்று தடுமாறியவன் தேனருவியை இழுத்து அவளை இறுக்கமாக கட்டிக் கொண்டவன், அவளின் கழுத்தில் அழுத்தமாக முகம் புதைத்துக் கொண்டவனின் உடல் நடுங்கியது. சூடான கண்ணீர் அவளின் தோளை நனைத்தது.
“ஹையோ.. என்ன இது சின்ன பிள்ளை மாதிரி..” சொன்னால் கூட அவளின் விழிகளிலும் கண்ணீர் நிரம்பியது. அவனின் முதுகை ஆதரவாக தடவிக் கொடுத்தாள். தலையை கோதி விட்டாள்.
ஆனாலும் அவனால் அவ்வளவு சீக்கிரத்தில் அந்த உணர்வுகளில் இருந்து வெளியே வரமுடியவில்லை. அதை புரிந்துக் கொண்டவள் அவனை விலக்கவே இல்லை. தன்னுடனே இருத்திக் கொண்டாள்.
அவனின் சந்தோசம் மூச்சை அடக்க செய்து ஒரு கட்டத்துக்கு மேல் தாங்க முடியாமல் போக அவளின் கழுத்தில் பற்களை கொண்டு அழுத்தமாக கட்டித்து வைத்து விட்டான்.
அதை எதிர் பார்க்காத தேனருவி “அம்மா” என்று அலறிவிட்டாள். அப்பொழுதும் அவளை விட்டு விலகாமல் அவளின் முகத்தில் இன்னும் தன் முகத்தை அழுத்தமாக புதைத்துக் கொண்டவன்,
“ப்ளீஸ் என்னை தள்ளி விட்டுடாத.. என்னால தாங்க முடியாது” சொன்னவன் மீண்டும் அவளிடம் அழுத்தமாக புதைந்துக் கொண்டான்.
சின்ன குழந்தை எப்படி அதீத மகிழ்ச்சியில் தாயை கடித்து வைக்குமோ அதே போல இவனும் தேனருவியை கடித்து வைத்தான். சுல்லென்று வலித்தாலும் அவனின் மகிழ்ச்சியை காட்டுகிறான் என்று புரிந்துக் கொண்டவளுக்குள் மலையமான் இன்னும் அதிகமாக ஊடுருவிப் போனான்.





