சிறை செய்து அடைத்து வைப்பது போல தன்னை தாலி கட்டி அழைத்து வந்து இருந்த கணவனின் பிடியில் இருந்து தப்பிக்கும் மார்கத்தை அவள் தேடியே சீனுவிற்கு போனை போட்டாள். ஆனால் சீனுவிடம் பேசிய பொழுதும் இளாவின் மாமியார் பேசியதையே தான் அவரும் சொன்னார்.
அதற்காக அப்படியே விட முடியாதே.. இதற்கு தீர்வு எல்லாம் ஒரே ஒருவனிடம் மட்டும் தான் கிடைக்கும் என்று புரிந்துக் கொண்டவள், அலுவலகம் முடிந்து வந்த மலையமானின் முன்னாடி இரு கைகளையும் கட்டிக் கொண்டு தீவிரத்துடன் நின்றாள் தேனருவி. அவன் பேச பேச அவளுள் அத்தனை பாரம் ஏறிக்கொண்டது.
மத்திய பொழுது சீனு மாமாவிற்கு அழைத்து பேசியது கண் முன் வந்தது.
“ஹலோ மாமா” என்று அவள் ஆரம்பிக்க,
“என்னை மன்னிச்சுடு ம்மா” என்றார் எடுத்த உடனே.
“ப்ச் மாமா.. இதை நீங்க முன்ன பேசும் போதே கேட்டுட்டீங்க.. அதனால மீண்டும் மீண்டும் மன்னிப்பு கேட்டு என்னை குறுக வைக்காதீங்க” என்றாள் தேனருவி.
“அது உன் நல்ல மனசு ம்மா. ஆனா நான் அப்படி இல்ல..” என்றார்.
“ப்ச் மாமா.. ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க?” அதட்டியவள்,
“தனுஷ் இப்ப எங்க இருக்கான்னு எதுவும் டீட்டேயில் தெரிஞ்சதா மாமா?” தவிப்புடன் கேட்டாள்.
“தெரியலயே ம்மா.. அந்த படுபாவி மட்டும் என் கையில் கிடைக்கட்டும் நானே அவனை கொன்னு போடுறேன்” என்று ஆத்திரத்தில் சீறினார்.
“கொன்னு போடுறதுக்கா அவனை தவமா தவம் இருந்து பெத்தீங்க?” கண்டித்தவள்,
“மாமா எனக்கு ஒரு விசயம் சொல்லுங்களேன்” கொஞ்சம் கெஞ்சலாகவே ஆரம்பித்தாள்.
“என்னன்னு சொல்லுமா. எனக்கு தெரிஞ்ச எல்லாத்தையும் சொல்றேன்” என்றார் அன்பு மிகுதியுடன்.
“அது.. அது” என்று கொஞ்சம் தடுமாறியவள்,
“எதுக்காக என் வீட்டுக்காரர் கிட்ட இருந்து பணம் வாங்குநீங்கன்னு தெருஞ்சுக்கலமா மாமா?” கேட்டாள்.
“என் பொண்டாட்டிக்கு எது செய்யிறதா இருந்தாலும் அது என் காசுல தான் செய்யணும். அவ அப்பா வீட்டு காசுல இருந்து ஒரு பொருள் கூட இங்க என் வீட்டுக்கு வரக்கூடாதுன்னு ரொம்ப பிடிவாதம் பண்ணாரும்மா. அவரு அந்த மாதிரி நின்னாருன்னா உன் அப்பா அதக்கு மேல.. என் பொண்ணுக்கு நான் செய்யாமா வேற யார் செய்வா.. கல்யாணத்துக்கு பிறகு அவர் பொண்டாட்டிக்கு அவர் என்ன வேணாலும் செஞ்சு போட்டுக்கட்டும். அதை யாரும் தடுக்க வர மாட்டாங்க. ஆனா கல்யாணத்துக்கு நான் தான் செய்வேன் என் பொண்ணுக்கு. என் பொண்ணோட கெளரவம் அது. அதை எந்த இடத்திலும் நான் விட்டுக் குடுக்க மாட்டேன்னு உன் அப்பா உறுதியாக சொல்லி விட்டார். எனக்கும் வேற வழி இல்லம்மா.. நல்ல குடும்பம், நல்ல வசதியான இடம். என் நண்பனோட பொண்ணுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைஞ்சதுன்னா அதை விட வேற என்ன வேணும் சொல்லு...”
“அதனால உன் அப்பாக்கிட்ட மாப்பிள்ளை காசு குடுத்ததை மறைச்சுட்டேன். அதே போல உன் வீட்டுக்காரர் கிட்டயும் அவர் குடுத்த காசுல தான் இந்த கல்யாணம் நடக்குதுன்னு சொல்லிட்டேன்..”
“பணத்துனால ஒரு கல்யாணம் நடக்காம இருக்கக் கூடாதுன்னு தான் இந்த விசயத்தை மறைச்சு வச்சுட்டேன்.. ஏம்மா எதுவும் பிரச்சனையா?” என்று கேட்டார் சட்டென்று சுதாரித்து.
“இல்ல.. இல்ல மாமா.. என்ன பிரச்சனை வாரப்போகுது.. என் வீட்டுக்காரரும் அவரின் தங்கச்சியும் என்னை அப்படி நல்லா பார்த்துக்குறாங்க...” என்று மகிழ்வான குரலில் சொன்னவள்,
“ஆமா கேட்கணும்னு நினைச்சேன் மாமா. உங்களுக்கு எப்படி என் வீட்டுக்காரரை தெரியும்?” அவருக்கே தெரியாமல் அவரின் வாயை கிண்டி கிழறினாள்.
“அதுவா நான் அவங்க அப்பா இருந்தப்பவே அவர் கிட்ட சைட் பிசினெஸ் பண்ணிக்கிட்டு இருந்தேன்மா.. அதுல வந்த பழக்கம் தான். ஆனா இப்ப வரை சின்ன சின்ன உதவி செய்வாரு.. மத்தபடி பெருசா எந்த பழக்கமும் இல்ல.. ஆனா அடிக்கடி பார்த்துக்குவோம். அவரு எதுவும் பேச மாட்டாரு.. அவரு சின்ன வயசுல இருக்கும் போதே அவரோட அப்பா அம்மா ரெண்டு பேரும் இறந்துட்டாங்க.. சின்ன பிள்ளையை கையில் வைத்துக் கொண்டு தனியா நிற்கும் அவரை பார்க்கும் போது எல்லாம் மனசு பிசையும். அதனாலயே அவர்கிட்ட அவர் விரும்பலன்னாலும் ஏதாவது பேசுவேன்..” என்றார்.
“ஆக அப்பவே அவரு ரொம்ப இறுக்கமா இருந்து இருக்காரு” மனதில் எண்ணிக் கொண்டாள்.
“ரொம்ப இறுக்கமாவே இருப்பாரு.. யார் கிட்டயும் பேச மாட்டாரு. கம்பெனி மீட்டிங்னா கூட தேவைக்கு பேசுவாரே தவிர வாயை திறக்க மாட்டாரு..” என்றவர்,
“அவர் இன்னும் அதிகம் இறுக்கமானது அவரின் தங்கை வாழ்க்கையில் தான்” என்றார் உறுக்கமாக.
தன் காதுகளை இன்னும் கூர் தீட்டிக் கொண்டவள்,
“என்ன மாமா சொல்றீங்க?” கேட்டாள். ஏற்கனவே இளவரசியின் மாமியார் சில பல விசயங்கள் சொல்லி இருந்தார் தான். ஆனால் அவளுக்கு இதை விட அதிகம் தெரிந்துக் கொள்ள வேண்டி இருந்தது. அதனாலே கேட்டாள்.
“நான் சொல்றதை விட உன் அத்தை சொல்லுவா..” என்று போனை அவரின் மனைவிடம் நீட்டினார்.
“அத்தை..” என்று அவள் ஆரம்பிக்க,
“எப்படி கண்ணு இருக்க? நல்லா இருக்கியா?” அவளின் நலனை விசாரித்துக் கொண்டவர்,
“என்னத்தை சொல்றது கண்ணு.. அந்த பொண்ணுக்கு இப்படி ஒரு நோவு இருக்கும்னு நாங்க கனவுல கூட நினைச்சு பார்த்து இருக்கல.. ஆசை ஆசையா தன் தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணி வச்சாரு நம்ம மாப்பிள்ளை.. ஆனா போன சுறுக்குலையே மறுபடியும் அண்ணன் வீட்டுக்கு வந்திடுச்சு..” என்றார் கவலை தேய்ந்த குரலில்.
“என்ன அத்தை சொல்றீங்க?”
“ஆமாம் ம்மா. அந்த பிள்ளைக்கு ஏதோ உணர்வு கோளாறாம்.. தாலி கட்டுன புருசன் தொட்டா கூட உணர்வு வராதாம். படுக்கையில கூட மரக்கட்டை மாதிரி தான் இருந்ததாம். இத்தனைக்கும் தன் பிரெண்டையே தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணி வச்சாரு உன் வீட்டுக்கறாரு. இருந்தும் என்ன பிரயோசனம். தாம்பத்தியம்னா என்னன்னு தெரியல.. ஒரு பொண்ணா லட்ச்சணமா எப்படி நடந்துக்கணும்னு தெரியலையாம்.. மண்ணு மாதிரி இருக்குமாம்..” என்றார்.
“உங்களுக்கு எப்படி அத்தை இதெல்லாம் தெரிஞ்சுது..?”
“வேற யாரு இளவரசியோட மாமியார் தான் சொன்னா.. அவ எனக்கு நல்ல பழக்கம்.. அதனால இளாவ பத்தி எல்லாமே சொல்லுவா. தனியா பிள்ளை பேக்க கூட ஏற்பாடு பண்ணிட்டாங்களாம். ஆனா உன் வீட்டுக்கரார் போய் தடுத்துட்டாராம்.. என்னவோ போ. அந்த புள்ள வாழ்க்கை இப்படி போயிடுச்சு. அப்ப தான் மாமா உன் வீட்டுக்கராருக்கு புத்திமதி சொன்னாரு”
“தனியா வளர்ந்த பிள்ளைனால குடும்பத்துக்குள்ள எப்படி நடந்துக்குறதுன்னு எதுவும் புரியாம இருக்கும். முதல்ல நீ ஒரு கல்யாணத்தை பண்ணி அவ கண்ணு முன்னாடி குடும்பம் நடத்துனா எல்லா சரியா வரும். நீங்க ரெண்டு பேரும் வாழறதை பார்த்து அவ மனசுக்குள்ளும் ஒரு மாற்றம் வரும்னு அறிவுரை வழங்குனாங்க. மாமா மட்டும் இல்ல.. அவங்க உறவுல இருக்குற பெரியவங்களும் சொல்லி இருக்காங்க. அதுக்கு பிறகு தான் உன்னை கல்யாணம் பண்ணினாரு உன் வீட்டுக்காரர்” என்றார் விளக்கமாக.
“அதுவும் உன்னை கைக்காட்டியது உன் மாமா தான். அம்மா இல்லன்னாலும் நீ ரெண்டு தங்கச்சி தம்பி கூட எவ்வளவு ஒத்துமையா வாழுற.. அவங்களை எப்படி பார்த்துக்குற.. அதனால நீ அந்த குடும்பத்துக்கு போனா அவங்களுக்கு ஒரு நல்லது நடக்கும் தானே..” என்று அவர் கேட்க,
தலை தானாக ஆடியது.
“அதுவும் இல்லாம அவரோட தங்கச்சிக்கு இப்படி ஒரு பிரச்சனை இருக்குன்னு உன் அப்பாக்கிட்ட தெளிவா சொல்லி இருக்காரு போல” என்று அவர் மேலும் சொல்ல, தேனருவியின் நெற்றி யோசனையில் சுறுங்கியது.
“என்ன அத்தை சொல்றீங்க?” அதிர்ந்துப் போய் கேட்டாள்.
“ஆமாம் தேனு. நான் எதையும் உங்ககிட்ட மறைக்கல. மறைச்சு கல்யாணம் பண்ணனும்னு எனக்கு எந்த அவசியமும் இல்ல.. உங்க பொண்ணை அதுக்கேத்த மாதிரி நடந்துக்க சொல்லுங்கன்னு அதிகாரமா சொல்லி இருப்பாரு போல.. அதுல அண்ணனுக்கு கொஞ்சம் சடைவு தான். ஆனா உன் வீட்டை பார்த்த பிறகு அண்ணனனுக்கு முழு திருப்தி. அதுக்கு பிறகு தான் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாரு” என்று அவர் சொல்ல,
“ம்ம்ம்” என்று கேட்டுக் கொண்டாள்.
“ஆக இந்த கல்யாணம் முழுக்க முழுக்க அவனின் தங்கைக்காக மட்டுமே நடந்து இருக்கிறது இல்லையா?” எண்ணிக் கொண்டவள் மலையமானின் முன்னாடி வந்து நின்றாள்.
தன் முன் தீர்க்கமாக வந்து நின்ற பெண்ணவளை பார்த்த மலையமான், புருவம் தூக்கி என்ன என்பது போல கேட்டான்.
“பேசணும்” என்றாள் உறுதியாக.
“ப்ச்” சலித்துக் கொண்டவன்,
“எனக்கு உன் கிட்ட கொஞ்சம் கூட பேச விருப்பம் இல்ல..” என்றான் முகத்தில் அடித்தது போல.. அதை கேட்ட தேனருவிக்கு நெஞ்சில் சுருக்கென்று வலி எழுந்தது. அதை மறைத்துக் கொண்டு, அவனை கூர்மையாக பார்த்தவள்,
“உங்க தங்கையை பற்றி தான் பேசணும்.. சோ பேசலாமா?” கேட்டாள். அதில் இன்னும் புருவம் சுறுக்கியவன்,
“அவளை பத்தி பேச நீ யாரு?” திமிராக கேட்டவனை முறைத்துப் பார்த்தவள்,
“இப்படியே பேசிட்டு இருந்தா அவ கண்டிப்பா குணமாக மாட்டா” என்றாள் கோவத்தை கட்டுப் படுத்திக்கொண்டு.
“ஏய்.. அவ ஒன்னும் பேஷன்ட் இல்ல” நரம்புகள் புடைக்க பேசியவனின் கோவம் ஒரு சகோதரனாய் அவளை ஈர்க்கவே செய்தது.
ஆனால் அதற்காக அப்படியே விட முடியுமா என்ன.. வலிக்க வலிக்க முள்ளை பிடுங்கினால் மட்டுமே காலை காப்பாற்ற முடியும் என்கிற நிலையில் வலியை பொறுத்து தானே ஆகணும். முதல்ல இவனுக்கு வைத்தியம் பார்த்தால் மட்டுமே இளாவை காப்பாற்ற முடியும். இல்லை என்றால் இருவரும் இப்படியே தான் வாழ்ந்து மடிவார்கள் என்று நொடியில் புரிந்துக் கொண்ட தேனருவி அதற்கான முயற்சியை கையில் எடுத்துக் கொண்டாள்.
அதற்கு மலையமான் முதலில் ஒத்து வரவேண்டும். அதற்காகவே இவனிடம் பேச வந்தாள். ஆனால் அவன் முறுக்கிக்கொண்டு நிற்க சுவரில் முட்டும் நிலை தான் தேனருவியின் நிலை.
“ப்ளீஸ்.. உங்க தங்கச்சியை நான் தவறா சொல்லல.. அவ பேஷன்டும் கிடையாது..” தேனருவி சொல்ல,
“நீ என்னடி என் தகச்சிக்கு செர்டிபிகேட் தர்றது.. அவளுக்கு எந்த குறையும் இல்ல.. அவ பரிபூரணமான நலத்துடன் தான் இருக்கா” என்றவனை வைத்துக் கொண்டு தேனருவியால் எதுவும் செய்ய முடியவில்லை. தலையை தான் பிடித்துக் கொள்ள முடிந்தது.
தொடரும்..





