தேனருவியின் மனநிலை எப்படி இருக்கும் அவள் எப்படி துடித்துப் போய் இருப்பாள், உள்ளுக்குள் எத்தனை வேதனை கண்டு இருப்பாள் என்பதை பற்றி எல்லாம் கொஞ்சமும் கவலை கொள்ளாமல் தன் கையை தட்டி விட்டுப் போன மனைவியின் மீது அத்தனை கோவம் முகிழ்த்தது மலையமானுக்கு.
“எவ்வளவு திமிர்” என்று ரௌத்திரமாக நின்றான். அவனது கோவத்தை சட்டை செய்யாமல் தங்கை வேறு டைவேர்ஸ் பத்தி பேசி இருக்க இன்னும் கோவம் வந்தது. அந்த கோவத்தோடு தேனருவி இருந்த அறைக்கதவை கோவமாக தட்டினான்.
அவனது தட்டலில் அத்தனை கோவம் அடங்கி இருந்தது. அதை இந்த பக்கம் புரிந்துக் கொண்டவளுக்கு நெஞ்சில் நீர் வற்றிப் போனது.
“ப்ளீஸ் கொஞ்ச நேரம் நான் தனியா இருக்கணும்” என்றாள்.
“அழதானே போற.. அதை அங்க வந்து அழு” என்றான் அழுத்தமாக.
“உங்களுக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையா..?” அழுது சிவந்த முகத்துடன் கதவை திறந்து அவனை பார்த்து ஆத்திரமாக கேட்டாள்.
“இல்ல” என்றவன், “வா” என்று விட்டு மேலே போய் விட்டான். இவளுக்கு போகவே மனம் வரவில்லை. ஆனால் அவன் சிவந்து கருத்துப் போய் இருந்த முகத்தை பார்த்து என்ன நினைத்தாளோ அவனின் பின்னோடு மாடி ஏறிவிட்டாள்.
தன் அறையில் இருந்து இதை பார்த்த இளவரசிக்கு ஒன்றும் புரியவில்லை. உதட்டை பிதுக்கிக் கொண்டு போய் விட்டாள்.
தங்களின் அறைக்கு வந்து சேர்ந்த தேனருவி அவனை நிமிர்ந்தும் பார்க்காமல் அப்படியே படுக்கையில் போய் சுருண்டுக் கொண்டாள். அழுகை என்றாள் அப்படி ஒரு அழுகை. அவளின் முதுகு குலுங்குவதை பார்த்த மலையமானுக்கு எரிச்சல் வந்தது.
“இப்ப எதுக்கு நீ இப்படி அழுதுட்டு இருக்க?” கடுப்பானான். அவனது பேச்சை கேட்ட தேனருவிக்கு கோவம் என்றால் கோவம் அப்படி ஒரு கோவம் வந்தது.
“உங்க மனசுல நீங்க என்ன நினைச்சுக்கிட்டு இருக்கீங்க.. இவ்வளவு நடந்த பிறகும் ஒருத்தி அழலன்னா அவ மனுசியே இல்ல.. நான் ஒரு சாதாரண மனுசி.. என்னால நடந்துப் போன சம்பவங்களை எல்லாம் அவ்வளவு ஈசியா எடுத்துக்க முடியல. அதனால அழுகை வருது.. எனக்கு ஒன்னும் பிழிஞ்சு பிழிஞ்சி அழணும்னு அவசியம் இல்ல.. என் தலை எழுத்து எனக்கு தானாவே அழுகை வந்து தொலையுது.. அதுக்கு நான் என்ன பண்ணட்டும்..” என்று கேட்டவளை கூர்ந்துப் பார்த்தான்.
அவளின் விழிகளில் மருதாணி அள்ளிப்பூசியது போல செக்க சிவந்துப் போய் இருந்தது.
“ப்ச் டிராமா பண்ணதா” என்றான்.
“என்ன ட்ராமா பண்றனா?” அதிர்ந்துப் போய் விட்டாள்.
“பின்ன இப்படி அழுது அழுது தானே நீங்க எல்லோரும் கணவன் கிட்ட எல்லாத்தையும் சாதிச்சுக்குறீங்க” என்றவனை முறைத்துப் பார்த்தவள்,
“அப்படி இதுவரை அழுது உங்கக்கிட்ட நான் என்னத்தை சாதிச்சுக்கிட்டேன் சொல்லுங்க” என்று எழுந்து அமர்ந்து விட்டாள். அவளின் கண்களில் இருந்து வரும் கண்ணீர் நின்றுப் போனது.
அதை ஒரு பார்வை பார்த்தவன்,
“இனிமே சாதிச்சுக்கலாம் இல்லையா?” என்று விதாண்டாவாதம் பேசியவனை கண்டு ஏகத்துக்கும் எரிச்சல் மண்டியது.
“நீங்க எல்லாம் மனுசனே இல்லை.. இரும்பு ரகம், அரக்க குணம் கொண்ட மனுசன். உங்க கூட எல்லாம் பேசுறதே நேர விரயம் தான்” வசைபாடினாள்.
“அதுக்கூட பரவாயில்ல.. ஆனா நீ அழுது சாதிக்க நினைக்கிறது தான் கடுப்பா வருது” என்று அதிலே நின்றவனிடம் பேசுவது வீண் என்று புரிந்துக் கொண்டவள் திரும்பி படுத்துக் கொண்டாள். அவளின் அழுகை முற்றிலும் மட்டுப் பட்டு இருந்தது.
தான் பேசுவதற்கு அவள் பதில் எதுவும் குடுக்காமல் இருப்பதை பார்த்து கடுப்பு வந்தது. “திரும்புடி” என்றான்.
“எனக்கு தூக்கம் வருது..” என்றாள்.
“மத்திய நேரத்துல உனக்கு என்ன தூக்கம் வேண்டி கிடக்கு” என்றவன் அவளை தன் புறம் இழுத்துக் கொண்டான்.
“ஐயோ படுத்தாதீங்க... தனியா இருக்கணும்னு கேட்டேன். அதுக்கு விடல.. அழுக விட சொன்னேன். அதுக்கும் விடாம இப்படி என்னை ஏன் படா படுத்தி எடுக்குறீங்க?” கேட்டவள், வேகமாய் அவனை விட்டு எழுந்து உப்பரிகை பக்கம் போய் வெளிப்பக்கம் கதவை தாழிட்டுக் கொண்டு சுவரில் சாய்ந்து கால்களை கட்டிக் கொண்டு முகத்தை புதைத்துக் கொண்டாள்.
அவனுக்கு அருகில் அவளால் நொடி நேரம் கூட இருக்க முடியவில்லை. மூச்சு முட்டும் உணர்வை கொடுத்தான். அதனாலே அவள் விலகி வந்தாள். ஆனால் அவள் விலகிப் போனதில் இன்னும் மூர்க்கம் ஆனவன் கதவை போட்டு உதைத்து தள்ளினான். நல்ல வேளைக்கு கதவு உடையவில்லை.
ஆனால் அவனின் ஒவ்வொரு உதைக்கும் கதவு அதிர்ந்துக் கொண்டே இருந்தது. அதில் இவளது உடல் தூக்கி வாரிப் போட்டது.
அன்று முழுவதும் உணவு நீர் என எதுவும் இல்லாமல் அப்படியே கிடந்தவள், இரவு அவன் நன்றாக தூங்குவதை உறுதி செய்தவள் எழுந்து சத்தமில்லாமல் அந்த வீட்டை விட்டு வெளியே போனாள்.
அப்படி அவள் வாசல் தாண்டும் நேரம் “மொத்தமா போறதுன்னு முடிவு பண்ணிட்டியா?” என்ற குரல் கேட்க, திகைத்துப் போனவள் திரும்பி பார்த்தாள்.
மலையமான் தான் தன் கால்களை அழுத்தமாக ஊன்றி நின்றுக் கொண்டு இருந்தான். அவனை அந்த நேரம் எதிர் பார்க்காதவள் மொத்தமும் பயந்துப் போனாள்.
அதுவும் அவனிடம் மத்தியம் இருந்த அழிச்சாட்டிய உணர்வுகள் எல்லாம் வடிந்து தீர்க்கத்துடன் நின்று இருந்தான். அது தானே மிகவும் ஆபத்து. அதை நொடியில் புரிந்துக் கொண்ட பொழுதும் இனி ஒரு கணமேனும் இங்கு இருக்கக் கூடாது என்று எண்ணியே கிளம்பி இருந்தாள்.
முழித்து இருந்தால் தன்னை அனுப்ப மாட்டன் என்று அவன் தூங்கும் வரை பொறுத்து இருந்து வெளியே வந்தாள். ஆனால் இவன் இப்படி பின்னோடு வருவான் என்று எதிர் பார்க்காதவள் மின்சாரம் தாக்கியது போல செயல் இழந்து நின்றாள்.
“உன் கிட்ட தான் கேட்கிறேன் பதில் சொல்லுடி” அடிக்குரலில் அவன் கர்ஜிக்க,
“ஹாங்..” தடுமாறியவள் பின் தீர்க்கமாக, “ஆமாம்” என்றாள்.
“அப்போ போறதுக்கு முன்னாடி என் கிட்ட வாங்கின பணத்தை பைசா மிச்சம் இல்லாம எண்ணி வச்சுட்டு கிளம்பு” என்றான்.
“ஆரம்பத்துல இருந்து சொல்றேன்.. நீங்க குடுத்த பணத்தை நானோ எங்க அப்பாவோ வாங்கவே இல்லை. பிறகு எதுக்கு நான் திருப்பி குடுக்கணும்?” என்றவளை அழுத்தமாக பார்த்தவன்,
“உனக்கு ரெண்டே ஆப்ஷன் தான். ஒன்னு நீ இந்த வீட்டுல இரு.. இல்லன்னா என் பணத்தை எண்ணி வச்சுட்டு கிளம்பு. அதை விட்டுட்டு இந்த டிமிக்கி குடுக்குற வேளையெல்லாம் வச்சுக்கிட்ட நான் மனுசனா இருக்க மாட்டேன். போடி உள்ள” என்று அவளின் கழுத்தை பிடித்து உள்ளே தள்ளி கதவை தாழிட்டவன்,
“சீக்கிரம் மேல வா.. இல்ல அதுக்கும் சேர்த்து அனுபவிப்ப” சிங்கமாய் அவளை பயமுறுத்தி விட்டுட்டு அவன் வேக எட்டுடன் போய் விட, விக்கித்து நின்றாள் தேனருவி.
“இங்க இருந்து தப்பிக்கவே வழி இல்லையா கடவுளே? என்னை இப்படி ஒரு சிக்கலில் மாட்டி விட்டுட்டியே.. நான் எப்படி இந்த சிங்கத்தின் குகையில வாழுவேன்..” வேதனையுடன் எண்ணியவளை மேலிருந்து ஒரு பார்வை பார்த்த்தான். அவ்வளவு தான் அவனது பார்வையில் அரண்டுப் போனவள் படபடவென்று மாடிப்படி ஏற ஆரம்பித்து விட்டாள்.
அறைக்குள் நுழையவே அத்தனை அச்சமாக இருந்தது. அதற்காக வெளியவே நிற்க முடியாதே.. நல்ல வேலைக்கு இருக்கிற கடுப்பில் அடிச்சு கன்னத்தை உடைக்காமல் அப்படியே விட்டுட்டு போய் விட்டான் என்பதில் சற்று ஆசுவாசமாகிக் கொண்டவள் பயத்துடன் உள்ளே நுழைந்தாள்.
உள்ளே நுழைந்தவளை அடிக்கண்களால் அழுத்தமாக பார்த்தானே தவிர அவளிடம் எதுவும் பேசவில்லை. அமைதியாக இருந்தான். அந்த அமைதியை பையன் படுத்திக் கொண்டவள் போய் படுக்கையில் விழுந்து போர்வையை தலையோடு போர்த்திக் கொண்டாள்.
அதன் பிறகு பயத்துடனே படுத்து இருந்தவள் எப்பொழுது தூங்கினாளோ அவளுக்கு தெரியவில்லை. ஆனால் விடிந்து வெகு நேரம் கழித்தே எழுந்தாள் தேனருவி.
எழுந்து கீழே செல்ல மனமில்லை. என்ன செய்வது என்று ஒன்றுமே புரியவில்லை. முழுக்க தன்னை சிறை செய்து விட்டதாக தோன்றியது அவளுக்கு.. உடனடியாக அவள் சீனுவிற்கு போனை போட்டாள்.
பல குழப்பங்களுக்கு அவரிடம் தீர்வு கிடைக்கும் என்று தோன்றியது. அடுத்து தான் என்ன செய்ய வேண்டும் என்பதற்க்கான தீர்வு அவர் சொல்ல போற தகவலில் தான் அடங்கி இருக்கும் என்று தோன்றியது.
எனவே அவருக்கு போனை போட்டாள். அவர் சொன்ன தகவல்கள் எல்லாவற்றையும் சேர்த்து கோர்த்துப் பார்த்தவளுக்கு நெஞ்சில் அத்தனை பாரம் ஏறி அமர்ந்துக் கொண்டது. அடுத்து அவள் செய்ய வேண்டியது என்ன என்று புலப்பட்டது. அதன் அடிப்படியில் அடுத்து வந்த பொழுதுகளை நகர்த்தினாள்.





