“இளாவுக்கு கல்யாணம் ஆகிடுச்சா?” திகைத்துப் போய் இளவரசியை பார்த்தாள். அவளின் முகத்தில் எந்த சலனமும் இல்லை. வெறுமென நின்று இருந்தாள்.
“சொல்லு.. என்னவோ பெருசா உன் அண்ணிக்கிட்ட கேட்டுட்டு இருந்தியே பெட் ஷேரிங்கை பத்தி.. அதை பத்தி கேட்க உனக்கு அசிங்கமா இல்ல.. கொஞ்சம் கூட கூசல” கேட்ட பெரிய மனுசியை மீண்டும் பார்த்தாள் தேனருவி.
“அப்பாடா.. நமக்கு ஒரு சப்போர்ட் கிடைச்சு இருக்கு” எண்ணிக் கொண்டவள் உள்ளுக்குள் சற்றே மகிழ்ந்துக் கொண்டாள்.
ஆனால் இந்த மகிழ்வுக்கு பிறகு பெரும் வேதனை சூலப்போகிறது என்று தெரியாமல் போனது தேனருவிக்கு.
“நல்லா கேளுங்க ஆன்டி.. அண்ணனும் தங்கச்சியும் கல்யாண ஆன நாள்ல இருந்து என்னை போட்டு பாடா படுத்தி எடுக்குறாங்க.. சட்டியில போட்ட கடுகா என்னை வெடிக்க வைக்கிறாங்க.. இவ அண்ணன் என்னன்னா என் உதட்டை கடிச்சு வக்கிறான். இடுப்ப கில்லி வைக்கிறான். கழுத்துல கடிச்சு உயிரை எடுக்குறான்.. கேட்டா என் தங்கச்சிக்கு தெரியனும்னு சொல்றான். இவ என்னன்னா பேசவே கூலி கேட்டுக்கிட்டு மௌனசாமியாரா திரியிறா.. மூஞ்சில ஒரு உணர்ச்சியுமே இல்லாம என் காயங்களை பார்த்துக்கிட்டு இருக்கா..” மனதுக்குள் புலம்பியவள், முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளவே இல்லை. ஆனால் உள்ளுக்குள் அத்தனை சந்தோசமாக இருந்தது தேனருவிக்கு.
“எனக்கும் சப்போட்டுக்கு ஆள் இருக்கு. இன்னும் நல்ல நல்ல வார்த்தைகளா போட்டு திட்டுங்க ஆன்டி.. என் மனசு இப்ப தான் குளிர்ந்து போய் இருக்கு.. நீங்க திட்டுறதை கேட்டு என் காது ரெண்டும் பூரிச்சு போச்சு” எல்லாமே மனதுக்குள் தான் சொல்லிக் கொண்டாள். கடுகளவு கூட வெளியே காட்டிக் கொள்ளவில்லை.
“உன் கிட்ட தான் கேட்டுட்டு இருக்கேன்.. இப்படி ஜடம் மாதிரி நிக்கிறியே.. சொல்லு. ஒண்ணுத்துக்கும் உதவாத உன்னை காசு பணத்தை காட்டி என் மகனை வளைச்சு போட்ட மாதிரி இந்த பெண்ணையும் வளைச்சு போட்டுடீங்களா?” உன்னை தான் எதுக்கும் பிரயோசனம் இல்லாமல் என் மகன் தலையில கட்டி விட்டான்னு பார்த்தா இப்போ இன்னொரு பெண்ணையும் கல்யாணம்ன்ற பேர்ல கூட்டிட்டு வந்து கொடுமை பண்ணிட்டு இருக்கீங்களே உங்களுக்கு எல்லாம் கொஞ்சமும் வெட்கமாவே இல்லையா? எங்க உன் அண்ணன் எங்க போய் ஒளிஞ்சுக்கிட்டான். அவனெல்லாம் ஒரு ஆம்பளையா?” அத்தனை ஆற்றாமையாக அவர் சீறினார்.
“ஆத்தாடி.. என்னா பேச்சு பேசுறாங்க.. இன்னும் நாலு திட்டு திட்டுங்க மேடம் அவரை. காது குளிர கேட்டுக்கிறேன்” மனதுக்குள்ளே சொல்லிக் கொண்டாள் தேனருவி.
“என்னடி ஜடம் மாதிரி நிக்கிற.. உன் கிட்ட தான் பேசிட்டு இருக்கேன்.. கூப்பிடு உன் நொண்ணனை. என் மகன் வாழ்க்கையை பாழடிச்சது போதாதுன்னு இன்னொரு பெண்ணோட வாழ்க்கையையும் பாழடிக்க பார்க்குறீங்களே நீங்க எல்லாம் உருப்புடுவிங்களா? உங்களுக்கு எல்லாம் எப்படி சோறு தண்ணி உள்ள இறங்குது. பாவிங்களா பாவிங்களா..” அவர் மேலும் பேசிக் கொண்டே போக, அவருடைய மகன் மட்டும்,
“ம்மா ப்ளீஸ்.. எதுக்கு இப்படி எல்லாம் பேசிட்டு இருக்கீங்க.. விடுங்க..” என்று அவன் தன்மையாக சொல்ல,
“விடுறதா..? விடுறதுக்கா நான் இவ்வளவு தூரம் வந்தேன்.. அவன் கல்யாணம் பண்ற விசயம் மட்டும் எனக்கு முன்னாடியே தெரிஞ்சு இருந்து இருந்தா எப்படியாவது அரும்பாடு பட்டாவது இந்த கல்யாணத்தை நடக்க விட்டு இருக்க மாட்டேன்.. பாவி பயலே.. நேக்கா என்னை அமெரிக்காவுக்கு அனுப்பி வச்சுட்டியேடா.. இப்போ பாரு உன்னால இன்னொரு பெண்ணோட வாழ்க்கையும் பறிப்போய் நிக்கிது..” என்று தன் மகனையும் சகட்டு மேனிக்கு திட்டினார்.
“ம்ம்மா” அவன் தவிப்பாக இளவரசியை பார்த்தான். அவனின் முகத்தில் இருந்த தவிப்புக்கு எதிர் விளைவாக இளவரசியின் முகத்தில் எதுவுமே இல்லை. அதை பார்த்த தேனருவிக்கு எதுவும் புரியவில்லை.
“என்ன இவ இப்படியே நிக்கிறா?” எண்ணினாள்.
“பாரு பாரு.. எப்படி நிக்கிறான்னு பாரு.. ஒரு மலையையே முழுசா முழுங்கி ஏப்பம் விடுரவ மாதிரி எதுக்கும் அசையாம நிக்கிறதை பாரு” என்று கரித்துக் கொட்டினார் அவர். அதற்கும் இளவரசி எந்த பாவனையும் காட்டவில்லை.
அப்படியே தான் நின்று இருந்தாள். ஆனால் அவளின் பார்வை மொத்தமும் அவளின் கணவன் மீது மட்டும் தான் இருந்தது.
தேனருவிக்கு தலையும் புரியவில்லை காலும் புரியவில்லை. வந்த அம்மாவோ மலையமானையும் இளவரசியையும் இன்னும் திட்டிக் கொண்டு இருந்தது.
“செத்த பொணம் கூட எரிக்கும் போது சூடு தாங்காம எழுந்திரிக்கும் ஆனா நீ செத்த பொணம் கூட கிடையாது” என்று அவர் அதிகமாக பேசி விட,
“போதும் நிறுத்துங்க” என்று தேனருவி அதட்டி இருந்தாள்.
அந்த கனம் தான் மலையமானும் உள்ளே நுழைந்து இருந்தான். அவன் வருவதை அவள் பார்க்கவே இல்லை.
“இதுக்கு முன்னாடி நீங்க பேசுனது வேற.. ஆனா செத்த பொணத்தோட ஒரு சுமங்கலி பெண்ணை சேர்த்து வச்சு பேசுறீங்களே.. நீங்களும் ஒரு பொண்ணு தானே.. எப்படி இப்படி பேச உங்களுக்கு மனசு வந்துச்சு..” கேட்டவளை ஏளனமாக பார்த்த அவரோ,
“உனக்கு அவளை பத்தி என்ன தெரியும்னு நீ இப்படி வரிஞ்சு கட்டிக்கிட்டு வக்காலத்து வாங்க வர்ற.. அவ யாரு என்னன்னு தெரியுமா உனக்கு. நான் இன்கா பேச வந்தது கூட உன் நல்லதுக்கு தான்” என்றார் அவர்.
“என் நல்லதுக்கு பேச நீங்க யாரு.. அப்படியே பேசி இருந்தா கூட நீங்க இளாவோட அண்ணன் கிட்ட பேசி இருக்கணும். இல்லையா ஒரு மருமகளா நீங்க அவக்கிட்ட பேசி இருந்தா திட்டி இருந்தாக் கூட நானும் சரின்னு போய் இருப்பேன். ஆனா நீங்க ஒரு பொணத்தோட ஒரு பெண்ணை இணைச்சு பேசுனது எந்த விதத்திலும் சரி இல்லை. அதை நான் கேட்டும் கேட்காம போனா அதைவிட பாவம் வேறு எதுவும் இருக்காது” என்றவளை தீர்க்கமாக பார்த்த அவர்,
“அவ ஒரு ஜடம் அது உனக்கு தெரியுமா?” என்றார்.
“ஜடம்னா..?” அவாள் புரியாமல் அவரை பார்த்தார். அதுவரை அமைதியாக இருந்தவன் “ஜஸ்ட் ஷட் அப்..” மலையமான் அவ்வளவு வேகமாக கத்தி இருந்தான். அவனது சத்தத்தில் அந்த வீடே ஆட்டம் கண்டுப் போனது.
அவனது கோவத்திலும் சத்தத்திலும் தேனருவிக்கு அடி வேர் வரை பயம் துளிர்த்தது.
“எதுக்கு ப்பா இப்போ இப்படி சத்தம் போடுற..?” ரொம்ப கூலாக கேட்ட தங்கை மாமியாரை வெறித்துப் பார்த்தான் மலையமான்.
“இங்க எதுவும் இல்லாததை சொல்லலையே..” நக்கலாக சொன்னவர், தேனருவி பக்கம் திரும்பி,
“ஜடம்னா என்ன விளக்கம் தெரியுமா? புருசன் கூட படுக்காம, அவன் தொட்டாலும் உருகாம..” என்று அவர் ஆரம்பிக்க,
“ஷட் அப் ஷட் அப்.. ஷட் அப்...” ஆவேசமாக, கோவமாக, ஆத்திரமாக, பட்டமாகப் முகம் சிவக்க கத்தினான் மலையமான். அவன் போட்ட சத்தத்தில் தேனருவிக்கு நெஞ்சே ஒரு கணம் நின்றுப் போனது.
எதுக்கு இத்தனை ஆவேசம் இத்தனை கோவம், பதட்டம் என தேனருவி மலையமானை பார்த்தாள். அவன் மொத்தமாய் தீப்பிடித்துப் போய் இருப்பதை பார்த்தவளுக்கு தொண்டை குழிக்குள் உயிர் வந்து துடித்தது. நெருப்பின் குழம்பு அவனின் கண்களில் தெரிய விக்கித்துப் போனாள். இவ்வளவு கோவப்படுகிறான் எனில் அவனின் தங்கையை ஜடம் என்று சொன்னதற்காக மட்டும் தான் இருக்கும் என புரிந்தது.
இளவரசியின் வாழ்க்கையை வைத்து தான் இங்கு இத்தனையும் நடந்துக் கொண்டு இருக்கிறது என்பது புரிந்தது. ஆனால் அதன் தீவிரம் என்ன ஏது என்று எதுவும் தெரியவில்லை.
மௌனமாய் இருப்பதே சிறப்பு என்று வாயை இறுக்கமாக மூடிக் கொண்டாள் தேனருவி. அதற்கு நேரமாராய் மலையமான் எரிமலையின் சீற்றத்துடன் பொங்கி சீறிக் கொண்டு இருந்தான்.





