அவளிடம் காதலை விட ஒரு தேடுதல் தான் அதிகம் இருந்தது. உணர்வு குவியல்களில் இருந்து விலகியவனது சிந்தனை சட்டென்று முகிழ்க்க,
அவளது செயலுக்கு ஒத்துளைத்தானே தவிர அவன் எதுவும் செய்யவில்லை. ஒருகட்டத்துக்கு மேல் தளர்ந்தவள் அவன் நெஞ்சிலே சாய்ந்துக்கொண்டாள்.
விழிகளில் கண்ணீர் நிரம்பி இருந்தது அவளுக்கு. ஆனால் அதை அவனுக்கு காட்டாமல் மறைத்தாள். பாண்டியன் வில்லாதி வில்லன் அந்த வில்லுக்கே தலைவன் என்று அறியாதவளாய் போனாள்.
அவளை பற்றி சிறிய விசயம் கூட அவனது கண்ணுக்கு தப்பாது. அப்படி இருக்கையில் அவளது கண்ணீரா அவனுக்கு தெரியாமல் இருக்கும். அவளது கண்ணீரை கண்டவனுக்கு உள்ளுக்குள் ஏதோ ஒன்று உறுத்தியது.
“ஏன்டி கடிச்சு இரத்தம் வர வச்சது என் வாய... இதுல உன் கண்ணுல நீரு வருது பாரு அதத்தான்டி என்னால ஏத்துக்க முடியல... என்னடி கருணை மழையா...? இல்ல கருணை மழையா...?” அந்த நிகழ்வை ஒன்னுமில்லாமல் ஆக்கிவிட்டான்.
அதன் பின்பே பொழிலிக்கு நிம்மதியானது. எங்கே அவன் கண்டுக்கொள்ளுவானோ என்று பயந்து போனாள்.
அவளது பயத்தையும் கண்டுக்கொண்டான் ஆனால் எதையும் அவளிடம் கேட்டுக்கொள்ளவில்லை.
அவளின் வீட்டிற்கு போக வேண்டுமா என்றும் கூட கேட்டான் அடிக்கடி. ஆனால் அவள் தான் “இப்போ போகவேண்டாம். போனா இப்போ உங்களை மதிக்க மாட்டாங்க. அவங்களே இறங்கி வரட்டும் பிறகு பார்த்துக்கலாம்...” என்று முடித்துவிட்டாள்.
அதை எண்ணி பார்த்தவனுக்கு ஒருவேளை அவளது வீட்டு நினைவா என்று தோன்றியது. ஆனால் அதற்கான உணர்வுகளும் அவளிடம் இல்லாமல் போக கொஞ்சம் குழம்பி தான் போனான்.
அதன் பிறகு அவளை ஆழ்ந்து கவனிக்க ஆரம்பித்தான். அவனது கவனிப்பை ஆரம்பத்தில் உணராதவள் போக போக உணர தொடங்க, அடிவயிற்றில் பயம் பிடித்துக்கொண்டது.
ஆனால் அதை விட அவன் மீது கொண்டுள்ள காதல் அவளை அசைத்து பார்க்க, வருவது வரட்டும் என்கிற எண்ணத்துக்கு வந்துவிட்டாள்.
அதனால் அவளது போக்கில் எந்த மாற்றமும் காண முடியாமல் இன்னும் குழம்பி தான் போனான் பாண்டியன்.
ஆலையை விட்டு வீடு வந்த நேரம் மகன் அவனது காலை கட்டிக்கொள்ள, தூக்கிக்கொண்டவன் தன்னவளை தேடினான்.
பூக்களை தொடுத்துக்கொண்டு வாசலிலே அமர்ந்து இருந்தாள் இரு ஆத்தாமார்களோடு..
“வாய்யா, போ ஆத்தா தண்ணி குடு...” என்று அவளை பாண்டியனை கவனிக்க சொல்ல, ஒரு சிலுப்பளோடு உள்ளே சென்றாள்.
“என்ன ஆச்சு பாண்டியா.. எதுக்கு உணர பொண்டாட்டி இப்படி சிலுத்துக்கிட்டு போறா...”
“அது ஒண்ணும் இல்ல ஆத்தா... அவ பாண்டியம்மா வீட்டுக்கு போறேன்னு சொன்னா நான் வேணான்னு சொன்னேன். அதான் கோவம்...” என்று சொல்லியவன் தனதறைக்கு விரைந்தான்.
அனைவரும் சொல்லி வைத்தது போல ஒன்றையே சொல்ல, பொழிலி தான் பாண்டியம்மா வீட்டுக்கு செல்லும் எண்ணத்தை கை விட வேண்டி வந்தது.
பொழிலி போகாததால் பாண்டியம்மாளின் நாத்தனார் நந்தினி பாண்டியனின் வீட்டுக்கு வருகை தந்தாள். அதை அங்கு இருந்த யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் வீடு தேடி வந்தவளை சிறப்பாகவே வரவேற்றார்கள்.
பாண்டியன் “வா நந்தினி...” என்பதோடு ஒதுங்கி கொண்டான். மாறன் மட்டும் அவ்வப்பொழுது அவளிடம் பேசிக்கொண்டு இருந்தான்.
அவளது நாகரிக தோற்றம் பொழிலிக்கு ஏதோ ஒன்றை நினைவுப்படுத்த, உள்ளுக்குள் ஒடுங்கி போனாள். பாண்டியனிடம் இரவு பொழுதுகளில் அதிகம் ஒன்டினாள்.
ஆனாலும் வெளியே இயல்பாக இருப்பது போலவே காட்டிக்கொண்டாள். அந்த சமயம் தான் வயக்காட்டு அம்மனுக்கு திருவிழா வந்தது.
அதையொட்டி ஆத்தாமார்கள் இருவரும் பொழிலியை பாண்டியனிடமிருந்து விலகி இருக்க சொன்னார்கள்.
பாண்டியன் “ஏய் இதெல்லாம் ரொம்ப அதிகம் டி... இன்னும் நாலு நாள் இருக்கே... அதுக்குள்ள எதுக்குடி பேச்சு வார்த்தை கூடாதுன்னு சொல்றாங்க... முடியாது. ராவுக்கு நீ பக்கத்துல இல்லன்னா தூக்கமே வராதுடி. ஒழுங்கா இந்த சம்பரதாயத்தை எல்லாம் மாத்த சொல்லு...” என்று அவளின் முந்தானையை பிடித்து இழுத்துக்கொண்டு விளையாடிக்கொண்டு இருந்தவனை பார்க்கும் பொழுது சின்ன பாண்டியனை விட இவன் இன்னும் சிறுவனாய் அவளின் கண்களுக்கு தென்பட்டாள்.
“இந்த கோயில் சடங்க பத்தி என்னை விட உங்களுக்கு தான் அதிகம் தெரியும். நீங்களே இப்படி சொன்னா எப்படிங்க... நமக்கு படியளக்குற சாமிங்க. அதுக்காக நாம ஒரு ஒருவாரம் பிரிஞ்சி இருக்குறதுல தப்பு இல்ல...” என்று சிரித்தவள், அவனுக்கான ஒவ்வொரு வேலையையும் அவள் பார்த்து பார்த்து செய்தாள்.
வயக்காட்டு அம்மன் திருவிழா என்பது விவசாயம் செய்யும் இடத்தில் கூடாரம் எதுவும் இல்லாமல் மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து அருள் புரியும் தாய்.
வயல்களோடு தான் அந்த தாயின் வசிப்பிடம் இருக்கும். வருடத்தின் ஒவ்வொரு விளைச்சலின் போதும் அவரவர்களுக்கு ஏற்றவாறு அள்ளி அள்ளி விளைச்சலை கொடுக்கும் அன்னைக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்வது வழக்கம். அது இங்க மட்டும் இல்லை. விவசாயம் செய்யும் ஒவ்வொரு இடத்திலும் காட்டு கோயில் என்று ஒன்று இருக்கும்.
இடத்துக்கு தக்கவாறு பெயர் மாறுபடுமே தவிர, திருவிழாக்கள் மாறுபடுவது இல்லை. வழிபாட்டு முறையும் மாறுபடுவது இல்லை.
வழிபாட்டு முறையில் அறுவடை செய்ததை பொங்கல் வைப்பது தான் எல்லா இடத்திலும் சிறப்பு.
ஒரே ஒரு வேல் கம்பை நட்டு வைத்து கூட வழிபாடு செய்வார்கள். அதே போல சற்று பெரிய தனம் கொண்டவர்கள் என்றால் சிலை வைத்து கும்பிடுவார்கள் அவ்வளவே.
இங்கு பாண்டியரின் வயக்காட்டு அம்மன் சற்று பெரிய அளவில் இருந்தார். சுத்து பட்டு மக்களுக்கும் இவர் அருள் புரிவதோடு, கேட்கும் வரங்களை தந்து மகிழ்வித்துக்கொண்டு இருக்கிறார். அதனால் இந்த திருவிழாவுக்கு கூட்டமும் அதிகம் வரும்.
பலர் வேண்டுதல் வைத்து அது நிறைவேறியவுடன் வந்து வேண்டுதலின் படி, முடி காணிக்கை, பால் குடம் எடுத்தல், தீச்சட்டி எடுத்தல், தீ மிதித்தால், அளவு குத்துதல், மடி பிச்சை எடுத்தல், மண் சோறு உண்ணுதல், ஆணி மிதித்தல், தேங்காய் உடைத்தல், உடலில் மாவிளக்கு போடுதல் என்று ஏகப்பட்ட வேண்டுதல்கள் நடக்கும்.
அந்த அந்த நாளுக்கான வேண்டுதலில் போது வந்து நிறைவேற்றி செல்வார்கள் பக்தர்கள்.
ஐந்து நாட்களுக்கு முன்பு கொடி ஏற்றி, காப்பு கட்டி பூந்தோரணம் கட்டி திருவிழா அமோகமாக நடைபெற ஆரம்பித்தது.
பாண்டியனின் குடும்ப கோயில் என்பதோடு இவர்கள் வீட்டிலிருந்து செய்து வந்த தாலி வாங்கி தான் அம்மன் கழுத்தில் போடவேண்டும். அதன் பின்பு தான் திருவிழா ஆரம்பமும் ஆகும்.
அதன் படி வெள்ளியம்பலத்தார் தாலியை பாண்டியன் மற்றும் பொழிலி கைகளில் கொடுத்து பூசாரியிடம் கொடுக்க சொல்ல, பொழில் பாண்டியனை பார்த்தாள்.
“நீ என் பொண்டாட்டிடி... இந்த உரிமையை முன்னாடி இருந்தவளுக்கு கூட நான் குடுக்கல... மனசார எடுத்து குடு... நாம புள்ளை குட்டியோட, உன் மேல தீராத அன்போட பல வருஷம் தலைச்சி வாழ்வோம்டி...” பாண்டியன் இப்படி சொல்லவும் பூம் பொழிலி மாதுமையாளுக்கு ஒரு நொடி உடல் சிலிர்த்து அடங்கியது.
Nice





