அவன் மீது விழுந்தவளின் தேகம் சரியாக அவனது முகத்தில் இருக்க, வெட்கம் பிடுங்கி தின்றது அவளுக்கு.
“ஐயோ விடுங்க மாமா...” என்று அவனது பிடியிலிருந்து விலக பார்த்தாள். ஆனால் உடும்பு பிடி பிடித்து இருந்தவன் தலைக்கு மேல் அவளை இன்னும் உயர்த்தி, சேலை மறைத்து இருந்த அவளது இடையை விலக்கி, தன் முகத்தை அங்கு பதித்தவன், மீசை முடியால் கோலம் போட்டான்.
அதில் கூச்சம் கொண்டு தூண்டில் மீனாய் அவள் துள்ள, அவளை இன்னும் துடிக்க விட்டு பார்க்க ஆசை கொண்டான் அந்த காதல் அரக்கன்.
“மாமா விடுங்க மாமா... அம்மா முடியல... மாமா...” என்று அவள் கதற, அவன் இன்னும் இன்னும் தன் மீசை முடிக்கொண்டு அவளை வதைத்து எடுத்தான். அவனை அடக்க முடியாமல் அவள் துடிதுடித்து போனாள்.
அவனது ஆளுகையிலே தான் அவள் இருந்தாள். எவ்வளவு சீண்டி சிலிர்க்க வைக்க முடியுமோ அந்த அளவு அவளை சீண்டி சிலிர்க்க வைத்தான்.
அளவுக்கொல்லா காதலை அவளிடம் வைத்ததுனாலோ என்னவோ அவள் முழுவதும் அவன் தான் என்று எண்ணினான்.
அதனால் தான் இவ்வளவு சேட்டை அவளிடம் செய்தான். அதை அறிந்துக்கொண்டவளுக்கு அவனது கையின் பொருளாக இருக்கவே ஆசை கொண்டாள்.
“சட்டையப் போட்டுவிடுடி...” அதிகாரம் பண்ணினான்.
“சட்டைய கூட போட தெரியாதா உங்களுக்கு...” என்றபடி அவனை நெருங்கி சட்டையை போட்டுவிட்டு, பொத்தான்களை அணிவித்தவள், விலகி செல்ல,
“தலை சீவிவிடு...” என்று அடம் செய்தான்.
“உங்களுக்கு கொற்கையனே தேவலாம் போலங்க...” என்று அவனது தொடுகையை ரசித்தபடியே அவனுக்கு தலை சீவி விட்டு, நெற்றியில் திருநீரை வைத்து அழகு பார்த்தாள்.
“எப்படிடி இருக்கான் உன் புருஷன்...” கண்சிமிட்டி கேட்டான்.
அவனது முறுக்கிய மீசையை இரு பக்கமும் பிடித்து இன்னும் முறுக்கி விட்டவள்,
“என் புருசனுக்கு என்ன குறை... அவரு இந்த மண்ணுக்கே அரசன்... சும்மா வேந்தனாட்டாம் எவ்வளவு கம்பீரமா இருக்காரு பாருங்க..” என்று கண்ணாடியில் அவனது தோற்றத்தை காட்டினாள்.
அவளது பாராட்டில் உள்ளம் குளிர்ந்தவன்,
“நிஜமாவடி...” ஏனோ அவளது வாய் வார்த்தையை இன்னும் கேட்க வேண்டும் போல இருந்தது.
“ஆமா மாமா... மாமாவோட நீங்க பஞ்சாயத்து பண்ணும் பொழுது நம்ம ஊரு எல்லையில இருக்க வீரய்யன் சாமி போலவே இருப்பீங்க. அதுவும் இந்த முறுக்கி விட்ட மீசைக்கும், உங்க கம்பீரத்துக்கும் அப்படி இருக்கும். நீங்க அப்படி கெத்தா உங்க புல்லட்டு வண்டியில போகும் போது பொண்ணுங்க கண்ணு எல்லாம் உங்க மேல தான் இருக்கும். அதை விட என்கிட்டே நீங்க காட்டும் நெருக்கமும் அன்பும் உரிமையும் சொல்ல வார்த்தையே இல்லை மாமா... மனசு பூரா நிறைஞ்சி போய் இருக்கீங்க... மகராசன் மாதிரி தான் என் கண்ணுக்கு நீங்க தெரியிறீங்க மாமா...” என்றாள்.
அவளது வாய்மொழிகள் எல்லாம் அவனுள் இறங்கி உயிர் வரை சிலிர்க்க செய்தது. அவன் மகுடம் தரிக்காத மன்னவன் தான். ஆனாலும் அதை தன் பெண்ணவளின் வாய் மொழியால் கேட்கும் பொழுது வரும் திமிரே வேறு தான் அல்லவா..
திமிரோடு, கெத்தும் பெருமையும் ஒன்று சேர்ந்தது அவனுள். அதை கண்டு கொண்டவளுக்கு மனம் பாகாய் உருகியது.
ஊரே போற்றும் நிலையில் இருக்கும் இவருக்கு என் சொல்லில் வரும் பாராட்டு தான் பெருமை தருக்கிறதா..? அந்தளவுக்கா என்னை நேசிக்கிறார்...? கண்களெல்லாம் கலங்கிக்கொண்டு வந்தது. தன் மீது அவன் கொண்டுள்ள நேசத்தை உணர்ந்து...
அதன் பிறகு அனைவரும் கிளம்பி கோயிலுக்கு சென்றார்கள். அங்கு நெருங்கிய சொந்தங்களுடன் சுத்துப்பட்டில் உள்ள அத்தனை ஊர் காரர்களும் மீனாச்சியம்மையின் புகுந்த வீட்டு சொந்தங்களும், ராக்காயி பிச்சாயி உடைய புகுந்த வீட்டு சொந்தங்களும், நின்ற பாண்டியரின் அங்காளி பங்காளி ஒண்ணுவிட்ட சொந்தம் ரெண்டுவிட்ட சொந்தம்னு எல்லா உறவு மக்களும் வந்து சேர, கறிவிருந்து ஆரம்பம் ஆனது.
அரிசி மூட்டைகள் மட்டும் ஐந்து ஆறு லாரியில் வந்து இறங்கியது. அது கூட பத்துமோ பத்தாதோ என்று இன்னும் இரண்டு லாரிகளில் வெள்ளியம்பலத்தார் அரிசியை இறக்கினார்.
அவ்வளவு சிறப்பாக நடைபெற்றது விருந்து.
“எல்லாம் சரிதாப்பா... ஆனா வாய்க்கு ருசிக்க கொஞ்சம்...” என்று ஒரு பெரிய தலை ஆரம்பிக்க,
அவரை தொடர்ந்து இன்னும் சில தலை கட்டுகள், “இன்னைக்கு ஒரு நாலாவது ஊருக்குள்ள சரக்கு அடிக்க அனுமதி குடுக்கலாமே...” என்று கேட்க,
நின்ற பாண்டியரும் வெள்ளியம்பலத்தாரும் பார்த்த பார்வையில் கப்சிப் என்றானது சலம்பிய கூட்டங்கள்.
“அந்த கருமம் வேணான்னு தான் ஊருக்குள்ள கட்டுப்பாடே போட்டு வச்சு இருக்கேன்... இதுல என் வீட்டு விருந்துலயே வந்து சரக்கு கேக்குறீங்க... குடிங்க உங்களை யாரும் குடிக்க வேணான்னு நான் சொல்லல... ஆனா ஊருக்குள்ள குடிக்க கூடாது. நாம சட்ட திட்டத்த மதிச்சா தான் நமக்கு கீழ இருக்குறவன் மதிப்பான்.. பதினெட்டு பட்டிக்கு அந்தாள போயி என்னவோ பண்ணிக்கோங்க...” என்று கடுமையுடன் சொன்னார் அம்பலத்தார்.
“இல்லைங்க ஒரு ஆர்வத்துல கேட்டுபுட்டோங்க... மனசுல வச்சுக்காதீங்க...” என்று கேட்ட அத்தனை தலைகளும் பின் வாங்க, நின்ற பாண்டியர் மீசையை முறுக்கிக்கொண்டார்.
குடியால் பல உயிர்களும், குடும்பங்களும் பலியாவதை தடுக்க மிக கடுமையான சட்ட திட்டங்களை போட்டு இருந்தார் நின்ற பாண்டியர். அதை அழகாக கொண்டு சென்று எல்லா மக்களையும் வழிநடத்திக்கொண்டு இருக்கிறார் வெள்ளியம்பலத்தார்.
பெரிய சன திரளே அங்கு இருக்க, ஊர் திருவிழாவுக்கு கடை போடுபவர்கள் எல்லோரும் வந்து தங்களது கடையை அங்கு இடம் பார்த்து வரிசையாக போட்டு வியாபாரம் செய்ய ஆரம்பித்தார்கள்.
அதையெல்லாம் பார்த்துக்கொண்டு வந்த பொழிலிக்கு வியப்பாய் இந்தது.
“என்னங்க இது... கரிவிருந்துக்கு போய் திருவிழா கடையெல்லாம் வந்து இருக்கு. அதோட வகை வகையான இராட்டினம் எல்லாம் வந்து இருக்கு...” கேட்டாள்.
“நம்ம கல்யாணத்துக்கு முதல் நாளே இந்த கடையெல்லாம் வந்துடுச்சு... அம்மணி தான் குனிஞ்ச தலையை நிமிர்த்தவே இல்லையே... அப்புறம் எப்படி தெரியும்...” நக்கலாக சொல்லியபடி வண்டியை ஓட்டிக்கொண்டு இருந்தான்.
அவனது நக்கலில் பின்னால் இருந்த படி முன்னால் இருந்த கண்ணாடியில் தெரிந்த அவனது முகத்தை பார்த்து முறைத்தாள்.
கண்களில் கூலர் அணிந்து இருந்தான். அவனோடு சின்ன பாண்டியனும் தெரிய அவனது கண்களிலும் கூலர் இருந்தது.
மூவரும் ஒரே வண்ண உடை. பார்க்கவே அவ்வளவு அம்சமாய் இருந்தது. கோயிலுக்கு போகும் நடை பாதையில் போய் கொண்டு இருக்கும் பொழுதே அனைவரும் அவர்களுக்கு வணக்கம் வைத்துக்கொண்டு வர, பசும்பூண் பாண்டியன் அனைவருக்கும் தலையசைத்துக்கொண்டே வந்தான்.
பொழிலிக்கு அவ்வளவு பெருமையாய் இருந்தது. அவளது முகத்தில் தென்பட்ட உணர்வுகளை கண்டவனுக்கு இன்னும் இவளை பெருமையாய் உணரவைக்க வேண்டும் போல இருந்தது.





