மலையமானின் நெஞ்சில் எழுந்த சின்ன முறுவல் அவனின் மனைவியை பற்றி என்று எண்ணினால் அது மிகவும் தவறு. அவனின் இதமான மன நிலைக்கு காரணம் அவனின் தங்கை மட்டுமே..
அவளாக அவளின் கூட்டை விட்டு வெளியே வந்து சிறிது நேரம் தேனருவியோடு அமர்ந்து இருக்கிறாளே.. அது எவ்வளவு பெரிய விசயம். எவ்வளவு பெரிய மாற்றம்.. எப்படியும் அவன் எதிர்பார்த்த மற்றம் வெகு விரைவில் வந்து விடும் என்று இப்பொழுதே மகிழ்ந்துப் போனான். அந்த நிறைவோடு மனைவி பரிமாற சாப்பிட்டு முடித்தான்.
அடுத்த நாள் மாலையில் வீட்டுக்கு வரும் பொழுது அதிசயத்திலும் அதிசயமாக மலையமான் மல்லிகைப்பூ வாங்கி வந்து தேனருவியிடம் நீட்டினான்.
இவள் ஏற்கனவே தோட்டத்தில் பறித்து தொடுத்து வைத்து இருந்த பூவை தலையில் வைத்து இருக்க, இதை எங்கே வைக்க என்று எண்ணி பிரிட்ஜில் வைக்க போக, அவன் முகத்தில் தீயின் ஜுவாலை அதிகமாக வீச,
“எதுக்கு இப்படி முறைக்கிறாரு..” திகைத்தவள் அவனை புரியாது பார்க்க, அவன் கண்ணை கட்டினான்.
அதை சரியாக புரிந்துக் கொண்டவள், மாலையில் ஆசையாக தொடுத்த பிச்சி பூ சரத்தை தலையில் இருந்து கழற்றி விட்டு அவன் கையால் வாங்கிக் குடுத்த மல்லிகையில் இருந்து பாதி எடுத்து சூடிக் கொண்டாள். மீதியை அவனின் தங்கையிடம் நீட்டினாள்.
அவள் புரியாமல் பார்க்க,
“உங்க அண்ணா வாங்கிட்டு வந்தது. வச்சுக்கோங்க” என்றாள்.
“ப்ச்” சலித்தாள்.
“பூவுக்கு கூடவா சலிச்சுக்குவா.. என்ன பொண்ணோ தெரியால” நினைத்துக் கொண்டவள்,
“திரும்புங்க நான் வச்சு விடுறேன்” என்றாள். இளவரசி திரும்பவே இல்லை. ஆனால் அவளின் பார்வை தேனருவியின் கையில் இருந்த பூக்களின் மீதே இருந்தது.
“இப்படி பார்த்தா நான் என்ன பண்றது..?” புரியாமல் தன் கையில் இருந்த பூக்களை மேசை மீது வைத்து விட்டு போய் விட்டாள்.
இப்பொழுதும் இளவரசியின் பார்வை அந்த பூக்களின் மீது தான் இருந்தது. மலையமானும் அந்த நிகழ்வை பார்த்துக் கொண்டு தான் இருந்தான்.
தன் தங்கையின் தலையில் பூக்களை சூடி விடுவாள் என்று தான் எண்ணி இருந்தான். ஆனால் தேனருவி அப்படி செய்யாமல் மேசையில் வைத்து விட்டு போனது அவனுக்குள் கோவத்தை முகிழ்க்க செய்ய வேகமாய் அவளை தேடித் போனான்.
“உன் மனசுல என்னடி நினைச்சுக்கிட்டு இருக்க.. நீ பெரிய இவளா? நீ மட்டும் நல்லா மினுக்கிக்கிட்டு தலையில பூவை வச்சுக்கிட்டல்ல.. ஏன் என் தங்கச்சிக்கு வச்சு விட்டா கொறைஞ்சி போயிடுவியா? நானும் பேசக்கூடாதுன்னு பார்த்தா நீ ஓவரா தான்டி போற.. உனக்கென்ன மனசுல பெரிய மகாராணின்னு நினைப்பா? என் கையாள உன் கழுத்துல தாலி ஏறிட்டா நீ இந்த வீட்டுக்கே மகராணி ஆகிடலாம்னு நினைச்சியா? நீ உன் வீட்டுல எப்படி இருந்தன்னு மறந்து போச்சா? பிச்சக்கார நாய்க்கு இவ்வளவு திமிரா?” என்று அவன் வார்த்தையை விட்டுவிட தேனருவி நிலை குத்திய கண்களால் அவனை நிமிர்ந்துப் பார்த்தாள்.
அவளின் பார்வையில் ஒரு கணம் திகைத்தாலும்,
“இப்படி பார்த்தா நீ பிச்சக்காரி இல்லன்றது ஆகிடுமா? என்னை பொறுத்தவரை நீ பிச்சைக்காரி தான். உன் கழுத்துல தாலி கட்டுனதுனால மட்டும் நீ பணக்காரி ஆகிட முடியாது.. எல்லாம் கொஞ்ச நாளுக்கு மட்டும் தான். நான் சொல்ற படி நடந்துக்கிட்டா நீ இந்த வீட்டை விட்டு போகும் பொழுது ஜீவனாம்சமா கொஞ்சம் பணம் குடுப்பேன். இல்லன்னா நாயை அடிச்சு துரத்துற மாதிரி துரத்தி விட்டுடுவேன்” நாக்கில் நரம்பில்லாமல் அவன் மேலும் மேலும் விசத்தை கொட்டினான்.
எல்லா பேச்சுகளையும் காதில் வாங்கிக் கொண்டவளுக்கு நெஞ்சில் ஆணி அடித்தது போல அத்தனை வலி எடுத்தது. இனி ஒரே ஒரு நிமிடம் கூட இந்த வீட்டில் இனி வாழ முடியாது என்கிற நிலைக்கு அவளை தள்ளி இருந்தான்.
ஆனாலும் அவள் இந்த வீட்டில் வாழ காரணம் அவளின் குடும்பம் மட்டுமே.. அவர்களின் மகிழ்வுக்காக இந்த நரகத்தில் வாழ துணிந்து நிற்கிறாள். ஏன் அவள் அந்த மேசையில் பூக்களை வைத்து விட்டு வந்தாள் என்கிற காரணத்தை கூட அவன் சொல்ல விடவில்லை.
இளவரசி வைத்து விடு, வேண்டாம் என எந்த சொல்லுமே உதிர்க்கவில்லை. அதனால் இவளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. எனவே தான் மேசையின் மீது வைத்து விட்டு வந்தாள். வேண்டுமென்றால் அவளே வைத்துக் கொள்வாளே என்று.. ஆனால் அதற்கு மலையமானிடம் இருந்து இவ்வளவு பேச்சுக்கள் வரும் என்று கொஞ்சமும் எதிர்பார்த்து இருக்க வில்லை.
இவளும் எதிர்த்து பேசி இருந்து இருக்கலாம். உன் தங்கச்சி கல்லு மாதிரி உட்கார்ந்து இருந்தாளே.. ஏன் வாயை திறந்து வச்சி விடுன்னு சொல்ல வேண்டியது தானே.. அட்லீஸ்ட் சொல்ல வேணாம்.. உன்னை மாதிரி கண்ணை காட்டி இருந்தால் கூட அவளின் தலையில் வைத்து விட்டு இருந்து இருப்பேன்.
அவளிடம் ஒரு சமிக்சையும் இல்லாமல் நான் எப்படி செயல் படுவது என்று. அதோடு என் கணவன் எனக்கு மட்டும் தான் வாங்கி வந்து இருக்கிறான். நான் எதற்காக அவனின் தங்கைக்கு குடுக்க வேண்டும் என்று கேட்டு இருக்கலாம்.
ஆனால் அவளின் வளர்ப்பு அப்படி எல்லாம் எதுவும் கேட்கவில்லை. அவளின் எந்த நியாயங்களும் அவனிடம் மறுக்கப்பட்டவையாகவே இருக்கிறது. இனிமேலும் மறுக்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
விண்டுப் போன மனதுடன் தன்னை கூர் முனையால் குத்தி குத்தி கிழித்து தொங்க விடும் கணவனை தீர்க்கமாக பார்த்தாள்.
“என் தங்கச்சிக்காக மட்டும் தான் உன்னை கல்யாணம் பண்ணேன். அவளுக்காக நீ செய்யலன்னா அப்புறம் நீ எதுக்கு? உன் கழுத்துல தாலி எதுக்கு?” என்று கேட்டவனின் பேச்சில் இப்பொழுதே அவளை வீட்டை விட்டு அனுப்பி விடுவேன் என்ற பொருள் புதைந்து இருக்க தேனருவி அசையவே இல்லை. அவனையே விழி எடுக்காது பார்த்து நின்றாள்.
“இன்னொரு முறை இப்படி பண்ணுன அப்புறம் நான் மனுசனா இருக்கா மாட்டேன்” என்று கர்ஜித்தான்.
“நீ இப்பவே மனுசனா இல்லையே..” எண்ணியவள் அடிபட்ட இதயத்தோடு இரவு முழுவதும் தூங்காமல் கிடந்தாள். முதல் வேலையாக அவன் வாங்கிக்குடுத்த பூவை தன் தலையில் இருந்து கழற்றி வைத்தாள்.
வீசி எறியத்தான் மனமும் கையும் துடித்தது. ஆனால் அவன் செய்த தவறுக்கு இந்த பூக்கள் என்ன பாவம் செய்தது. இதை ஏன் தண்டிக்க வேண்டும் என்று பொறுமையாக கழற்றி வைத்து விட்ட பிறகே படுத்தாள். நாளுக்கு நாள் சொல்லம்புகள் அவளின் இதயத்தை குத்தி குத்தி கிழித்து சல்லடையாக்கிக் கொண்டு இருந்தது. அவளை மிகவும் பலவீனமாகிக்கொண்டு இருந்தன.
எவ்வளவுக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக தந்தையின் வீட்டில் இருந்தாளோ அதற்கு நேர்மாறாக தன் மகிழ்ச்சியை தொலைத்து விட்டு நடைப்பிணமாக மாறி இருந்தாள். அவளின் கடமை என மலையமான் கைக்காட்டிய அத்தனையையும் எந்த கேள்வியும் இல்லாமல் செயலாற்றினாள்.
மேலும் ஒரு மாதம் முழுதாக கடந்து இருந்த நிலையில் தான் அந்த சம்பவம் நடந்தேறியது. அவளின் அத்தனை கேள்விகளுக்கும் ஒட்டு மொத்த விடையாய் இதோ அந்த சம்பவம்.
அன்றைக்கு காலையில் அண்ணன் தங்கை இருவருக்கும் உணவு பரிமாறி, கணவனின் இதழ் முத்தங்களை சகித்துக் கொண்டு, அவனை வழியனுப்பி வைத்து விட்டு உண்ண அமர்ந்தாள்.
அவளுக்கு என்று தனியாக காரச்சட்னி செய்து முறுகலாக தோசை சுட்டுக் கொண்டு அமர்ந்து சாப்பிட ஆரம்பிக்க,
அவளுக்கு எதிரில் இளவரசி வந்து அமர்ந்தாள். அவளை நிமிர்ந்தே பார்க்கவில்லை தேனருவி. எப்படியும் அவள் எதுவும் பேசப்போவது இல்லை. பிறகு எதற்கு நிமிர்ந்துப் பார்த்துக் கொண்டு என்று போனை பார்த்துக் கொண்டே அவள் சாப்பிட்டுக் கொண்டு இருக்க,
“தேனு” என்றாள் முதல் முறையாக.
“ஹாங்..” என்று அதிர்ந்துப் போனாள் தேனருவி. இவளா என்னிடம் பேசியது.. அதுவும் என் பெயரை சொல்லி.. இவளுக்கு என் பெயர் எல்லாம் தெரியுமா? கேள்விகள் முளைத்தது.
“இங்க வாழ பிடிச்சு இருக்கா?” என்று கேட்டாள்.
“ங்கே..” என்று விழிக்கத்தான் முடிந்தது அவளால். “புரியல” என்றாள் தேனருவி.
“ப்ச்..” சலித்தவள், “என் அண்ணன் கூட எல்லாம் ஓகேயா?” என்றாள்.
“ஹைய்யோ இவ ஏன் இப்படி இருக்குறா? இதெல்லாமா ஒருத்தி கேக்குறது..” புலம்பியவள், பொத்தாம் பொதுவாக தலையை ஆட்டினாள்.
“ஐ மீன் பெட் ஷேரிங்” என்று இளவரசி குறிப்பிட்டு கேட்க, தேனருவிக்குள் சுறுக்கென்று முள் தைத்தது. கல்யாணம் ஆகாத பொண்ணு இப்படி எல்லாம் கேட்காலாமா? அதுவும் அண்ணிக்கிட்ட போய்.. கடவுளே.. தனக்குள் முகிழ்த்த கோவத்தை கட்டுப் படுத்திக் கொண்டு அவளை முறைத்துப் பார்த்தாள்.
அவளின் அனல் அடிக்கும் பார்வையை கூர்ந்துப் பார்த்த இளவரசிக்கு என்னவோ போல் ஆனது.
“அவளோட பெட் ஷேரிங் பத்தி தெரிஞ்சா மட்டும் நீ உன் புருசனோட வாழ்ந்துடுவியா?” நக்கலான ஒரு குரல் கேட்க, பட்டென்று திரும்பிப் பார்த்தாள் தேனருவி.
ஐம்பது வயது தக்க ஒரு பெண்மணி நின்று இருந்தார். அவருக்கு அருகில் வாட்டசாட்டமாக ஒருவன் நின்று இருந்தான்.
“யார் இவங்க?” தேனருவி முணகினாள்.
அது அவருக்கு கேட்டு விட்டதோ என்னவோ,
“என்ன யாருன்னு தெரியலையா? நான் தான் இவளோட மாமியார். இவன் தான் அவளோட தாலி கட்டுன புருசன்..” சொல்ல, தேனருவிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.
“இளாவுக்கு கல்யாணம் ஆகிடுச்சா?” திகைத்துப் போய் இளவரசியை பார்த்தாள். அவளின் முகத்தில் எந்த சலனமும் இல்லை. வெறுமென நின்று இருந்தாள்.
“சொல்லு.. என்னவோ பெருசா உன் அண்ணிக்கிட்ட கேட்டுட்டு இருந்தியே பெட் ஷேரிங்கை பத்தி.. அதை பத்தி கேட்க உனக்கு அசிங்கமா இல்ல.. கொஞ்சம் கூட கூசல” கேட்ட பெரிய மனுசியை மீண்டும் பார்த்தாள் தேனருவி.
“அப்பாடா.. நமக்கு ஒரு சப்போர்ட் கிடைச்சு இருக்கு” எண்ணிக் கொண்டவள் உள்ளுக்குள் சற்றே மகிழ்ந்துக் கொண்டாள்.
ஆனால் இந்த மகிழ்வுக்கு பிறகு பெரும் வேதனை சூலப்போகிறது என்று தெரியாமல் போனது தேனருவிக்கு.





