“இப்ப எப்படி போறது? ஹாஸ்பிட்டல் பில் வேற பே பண்ணனுமே... கையில ஒத்த பைசா இல்லை” பெரிதும் கலங்கிப் போனாள். யாரும் இல்லாத அனாதையை போல அந்த கணம் தன்னை உணர்ந்தாள். நெஞ்சுக்குள் அத்தனை வலி எடுத்தது.
“அப்பாவை கூப்பிட்டுக்கலாமா?” ஒரு கணம் யோசித்தாள். தன்னை இந்த மாதிரி அனாதராவான நிலையில் பார்த்துவிட்டால் அவ்வளவு தான் அவர் உடைந்தே போய் விடுவார். அதுக்கு நாமலே ஏதாவது ஏற்பாடு பண்ணிக்கலாம் எண்ணியவள் அந்த அறையை விட்டு வெளியே வந்து நேராக ரிஷப்ஷனுக்கு சென்றாள்.
அவளின் அப்பா ஆசையாக வாங்கிப் போட்ட சின்ன செயினை கழற்றி மேசையில் வைத்தவள்,
“என் கிட்ட பணம் எதுவும் இல்ல.. இப்போதைக்கு இந்த செயினை வச்சுக்கோங்க.. நான் பணத்தை ஏற்பாடு பண்ணிட்டு வந்து இந்த சங்கிலியை வாங்கிக்கிறேன்” என்று சொன்னவளை பார்த்த ரிஷப்ஷனிஸ்ட்டு,
“நீங்க மிஸ்ஸஸ் பாரி மலையமான் தானே” என்று கேட்டாள்.
“ம்ம்” தலையை மட்டும் ஆட்டினாள்.
“நேத்திக்கே உங்க பில் எல்லாத்தையும் அவரோட பியே செட்டில் பண்ணிட்டாங்க மேடம்.. இந்த செயின் தேவையில்லை” சொல்ல, எடுத்துக் கொண்டவள் வெளியே வர ஆட்டோவை கை காட்டினாள்.
அதற்குள் மேடம் மேடம் என்று மலையமானின் பியே அவளின் பின்னோடு வந்தான். அவன் யாரென்றே அவளுக்கு தெரியவில்லை.
“மேடம் நான் மலையமான் சாரோட பியே.. உங்களுக்காக தான் கார் காத்துக்கிட்டு இருக்கு.. வாங்க மேம் அதுல போகலாம்” என்றான் பணிவாக.
“இல்ல பரவாயில்ல.. நான் ஆட்டோல போய்க்கிறேன்” வந்து நின்ற ஆட்டோவில் ஏறிக்கொண்டாள். அவளின் கண்கள் ஏகத்துக்கும் கலங்கி இருந்தது. “சாக கிடக்கும் பொழுது கூட இவங்க யாரும் துணைக்கு வர மாட்டாங்க போல. இவரை நம்பி தானே என்னை எங்க அப்பா கல்யாணம் பண்ணிக் குடுத்தாரு. அதுக்காக கூட வந்து ஒரு எட்டு பார்க்கல. நான் செத்துப் போனா கூட வர மாட்டாரு போல” விழிகளில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.
அவள் போன ஆட்டோவை பார்த்த பியே வேகமாக மருத்துவமனைக்குள்ளே ஓடினான். நேற்றைக்கு எப்படி அந்த காத்திருப்போர் அறையில் அமர்ந்து இருந்தானோ அதை போல தான் இன்றைக்கும் அமர்ந்து இருந்தான் பாரி மலையமான்.
நேற்றிலிருந்து அவன் அந்த இடத்தில் இருந்து கொஞ்சமும் அசையவே இல்லை. தேனருவி அறையை விட்டு வெளியே வந்தது, அவள் சங்கிலியை வைத்து பணம் கட்ட முனைந்தது, ஆட்டோவில் ஏறிப்போனது எல்லாவற்றையும் பார்த்தானே தவிர அவளை தடுக்கவே இல்லை.
முதலில் இப்படி ஒருத்தன் நேற்றிலிருந்து தனக்காக அசையக்கூட இல்லாமல் அமர்ந்து இருப்பதே அவளுக்கு தெரியவில்லை. பிறகு எங்கிருந்து அவனை பார்ப்பது. அழுதுக் கொண்டே அவள் வீட்டில் போய் இறங்க, மலையமான் நிதானமாக தன் காரில் அவளை பின் தொடர்ந்து வீட்டுக்கு வந்தான்.
உடம்பெல்லாம் அடித்துப் போட்டது போல அத்தனை வலித்தது அவளுக்கு.. பேசாமல் கண்களை மூடி படுத்து விட தான் எண்ணினாள். ஆனால் பசி வயிற்றை கிள்ளியது.
கொஞ்சமே கொஞ்சம் ரசத்துல சாப்பிட்டா தெம்பாக இருக்கும் போல இருந்தது. ஆனால் அதை கேட்டு வாங்கி சாப்பிட தன்மானம் இடம் தரவில்லை. பட்டினியாக அந்த படுக்கையில் படுத்துக் கொண்டாள்.
அந்த நேரம் கதவை திறந்துக் கொண்டு உள்ளே வந்தான் மலையமான். சத்தம் கேட்டு இவள் நிமிர்ந்துப் பார்த்தாள். மலையமானின் தோற்றம் கண்டு புருவம் சுருக்கினாள்.
நேற்றைக்கு போட்டு இருந்த அதே உடை. ஆனால் எப்பொழுதும் இருக்கும் நேர்த்தி அவனிடம் கொஞ்சமும் இல்லை. அணிந்து இருந்த கோட் கசங்கிப் போய் கிடந்தது. கழுத்தை நேர்த்தியாக அலங்கரித்து இருக்கும் டை பாதி உருவி இடையில் தொங்கிக்கொண்டு இருந்தது. கண்கள் இரண்டும் சிவந்துப் போய், தலை கலைந்து ஏதோ பஞ்சத்தில் அடிபட்டவன் போல இருந்தான்.
அவ்வளவு சுத்தமாக நேர்த்தியாக இருப்பவன் இன்றைக்கு இப்படி ஒரு தோற்றத்தில் இருப்பதை பார்த்து இவளுக்கு நெஞ்சுக்குள் என்னவோ போல் ஆனது. ஆனால் வெளியே காட்டிக் கொள்ளாமல் வெறுமென படுக்கையில் படுத்துக் கொண்டாள்.
படுத்தவளை சட்டை செய்யாமல் தன் உடைகளை கலைந்து விட்டு துண்டை கட்டிக் கொண்டவன் குளியல் அறைக்குள் நுழைந்துக் கொண்டான்.
“இதென்ன என்னைக்கும் இல்லாம என் முன்னாடி உடை கலையறாரு.. எப்பவும் உள்ள தானே அவிழ்ப்பாரு.. எதுக்கு இந்த திடீர் மாற்றம்.. ஒன்னும் விளங்கலையே” முணுமுணுத்துக் கொண்டவள், திரும்பி படுத்துக் கொண்டாள்.
சிறிது நேரத்திலே அவளின் நாசியில் சுட சுட ரசத்தின் வாசம் வீச,
“ப்ச்.. பசியில இருக்கும் போது தான் இந்த மாதிரி ஸ்மெல் எல்லாம் வரணுமா?” என்று வயிற்றை பிடித்துக் கொண்டு சுருண்டுப் படுத்துக் கொண்டாள்.
“மேம்..” என்ற சத்தத்தில் திரும்பிப் பார்த்தாள். அறைக்கதவு திறந்து இருக்க பணிப்பெண் வெளியே நின்று இருந்தாள். கையில் தட்டுடன்.
“உங்களுக்கு ரசத்துல உணவு குடுக்க சொல்லி சார் சொன்னாங்க.. எடுத்துட்டு வந்து இருக்கேன்.. சாப்பிடுங்க மேடம். ஏதாவது உதவி வேணும்னா கேளுங்க” என்றவளிடம் மறுக்கப் போக, அதற்குள் குளியல் அறையை திறந்துக் கொண்டு மலையமான் வந்தான்.
அந்த பெண் உணவை வைத்து விட்டு நிமிர்ந்துக் கூட பார்க்காமல் ஓடிவிட்டாள்.
“எதுக்காக இந்த புது கருணை?” தேனருவியின் நெஞ்சம் விம்மியது. வீம்புக்காக அவள் சாப்பிடாமல் மீண்டும் படுத்து விட, மலையமான் கொஞ்சமும் கண்டுக்கொள்ளவே இல்லை அவளை. அவன் பாட்டுக்க கண்ணாடி முன்பு போய் நின்று தலையை வார ஆரம்பித்து விட்டான்.
இவளுக்கு தான் பசிக்கு முன்னாடி வீம்பு பண்ண முடியவில்லை. உடலெல்லாம் வெடவெடவென்று வந்தது. உணவு உண்டால் மட்டுமே எழுந்து நடமாட முடியும் என்கிற அளவுக்கு சோர்ந்துப் போய் இருந்தாள். அதனால் தட்டு தடுமாறி எழுந்து குளியல் அறைக்குள் போய் குளித்து விட்டு வந்தாள்.
வெறும் துண்டு மட்டுமே கட்டி இருந்தாள். மாற்று உடை எடுத்துப்போக மறந்து இருக்க, கணவன் கிளம்பி இருப்பான் என்று வெளியே வந்தாள்.
அவனோ போனை பார்த்துக் கொண்டு கட்டிலில் அமர்ந்து இருப்பதை பார்த்து இன்னும் உடம்பு வெடவெடவென்று வந்தது.
“அய்யய்யோ இப்ப என்ன பேச்செல்லாம் கேட்க வேண்டி வருமோ” பயந்து கலங்கிப் போய் நின்றாள் கதவை பிடித்துக் கொண்டு.
கதவை திறந்தவள் வெளியே வராமல் அங்கேயே நிற்பதை உணர்ந்தவன் தலையை தூக்கிப் பார்த்தான்.
வெறும் துண்டுடன் கண்களில் அதீத பயத்துடன் நிற்பதை பார்த்தவன், எதுவும் சொல்லாமல் எழுந்து உப்பரிகை பக்கம் போய் விட்டான். போகும் பொழுது கதவை சாற்றவும் மறக்கவில்லை.
மலையமானின் இந்த செயலை கண்டு இவள் தான் மின்சாரம் தாக்கியது போல திகைத்து நின்றாள்.
“என் புருசனா இது..” மலைத்து நின்றாள்.
“இந்நேரத்துக்கு சென்னை கூவமே இவர் வாயில நர்த்தனம் ஆடி இருக்குமே.. எப்படி இவ்வளவு ஈசியா விட்டாரு. என்னை மயக்க பார்க்கிற, என்னை வளைச்சு போடா பார்க்கிறன்னு என்னென்னவோ பேசி இருப்பாரே.. இந்த மனுசனா அமைதியா போறது.. என்ன ஆச்சு இவருக்கு...” யோசித்தபடியே அவசரமாக உடையை மாற்றியவள், அதை விட அவசரமாக உணவை எடுத்து உண்டாள்.
“இன்னும் கொஞ்சம் வேணும் போல இருக்கே” எண்ணிய நேரமே, உணவோடு பணிப்பெண் வந்து நின்றாள். கொஞ்சம் கூச்சத்துடனே அந்த உணவை தட்டில் போட்டுக் கொண்டாள் தேனருவி.
“ஹாட் வாட்டர் இருக்கு ம்மா.. டேப்லெட்ஸ் இதுல இருக்கு. சாப்பிட்டுட்டு போட்டுகோங்க” என எல்லாவற்றையும் எடுத்து வைத்து விட்டு அந்த பெண் போக,
நெற்றி சுருக்கினாள் இவள். “நான் எந்த டேப்லேட்டும் வாங்கவே இல்லையே.. பிறகு எப்படி வந்தது?” எண்ணியவள் கதவை திறந்துக் கொண்டு உள்ளே வந்த மலையமானை பார்த்தாள்.
அவன் செய்து இருக்கக் கூடும் என்று கொஞ்சமும் நம்பிக்கை இல்லை அவளுக்கு. ஆனால் அவள் மீது அக்கறை கொள்ளக் கூடிய ஆளும் வேறு யாரும் இல்லை. எனவே ஒரு யூகத்தில் இவனாகத் தான் இருக்கும் என்று எண்ணினாள்.
உள்ளுக்குள் லேசாக ஒரு நெகிழ்வு அவன் மீது அந்த கணம் தோன்றியது. அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் தலையை குனிந்து சாப்பிட ஆரம்பித்தாள். “நன்றி எல்லாம் சொல்ல மாட்டேன்” தனக்குள் முணகிக் கொண்டாள்.
அவளின் நன்றியை எதிர் பார்த்தா இரவெல்லாம் ஒரு பொட்டு தூக்கம் இல்லாமல், அத்தனை கொசுக்கடியில் கண் விழித்து கிடந்தான். இல்லையே..
உப்பரிகையில் இருந்து வந்தவன் நேரே கீழே போய் விட்டான். உடல் நலத்தை பற்றி விசாரிக்கவில்லை. இப்ப எப்படி இருக்கு என்கிற கேள்வி இல்லை. அவளை பார்க்கக் கூட இல்லை. பிறகு எங்கிருந்து அவளிடம் பேசுவது.
போனவன் சாப்பிட அமர, இளவரசி அவ்விடம் வந்தாள்.
“ரெண்டு பேரும் நேத்திக்கு வீட்டுல இல்ல போலையே..?” கேட்டாள்.
“ம்ம் அவளுக்கு உடம்பு சரியில்ல. ஹாஸ்ப்பிட்டல்ல சேர்த்து இருந்தேன்” என்றான்.
“ஓ...” அது மட்டும் தான் அவளிடம் இருந்து வந்த ரியாக்ஷன். மற்றபடி அவள் அலட்டிக் கொள்ளவில்லை. இவன் போட்டு சாப்பிட ஆரம்பித்து விட்டான். அவள் பரிமாறவெல்லாம் இல்ல. மீண்டும் அறைக்குள் நுழைந்துக் கொண்டாள். போகும் தங்கையை ஒரு பார்வை பார்த்தவனுக்கு உணவு தொண்டை குழியில் சிக்கிக் கொண்டது. மேற்கொண்டு சாப்பிட முடியவில்லை. அப்படியே கையை கழுவிக் கொண்டு மீண்டும் மேலே வந்தான்.
அதற்குள் தேனருவி மாத்திரையை போட்டு படுத்து இருந்தாள். அவளுக்கு அருகில் இவன் காலை நீட்டி அமர்ந்து பின்னால் சாய்ந்துக் கொண்டான். போனில் கை விளையாடிக் கொண்டு இருந்தது. ஆனால் அவனது கவனம் எல்லாம் எங்கோ இருந்தது.
ஒரு நாள் கூட இப்படி சோம்பி போய் அவன் அமர்ந்ததே இல்லை. அப்படி ஓய்ந்து போய் அமர்ந்த நேரம் அவனின் ஞாபகத்திலே இல்லை. ஓட்டம் ஓட்டம் ஓட்டம் மட்டுமே அவன் இதுவரை அறிந்தது.
இன்றைக்கு அந்த ஓட்டம் அழுத்துப் போய் விட்டதோ என்னவோ.. எதுவும் செய்ய பிடிக்கவில்லை. யாரையும் பார்க்கப் பிடிக்கவில்லை. வியாபாரம் செய்ய பிடிக்கவில்லை. பணத்தை பெருக்கப் பிடிக்கவில்லை. ஒரு நிமிடத்தை கூட வீணாக்காமல் எல்லா நேரத்தையும் பணமாக்கிக் கொண்டு ஓடிக்கொண்டே இருப்பவனுக்கு மொத்தத்தில் எதுவுமே பிடிக்காமல் போனது.
காரணம் அவன் நெஞ்சில் புதிதாக முளைத்து இருந்த வெற்றிடம்..
அந்த வெற்றிடத்தை எதை கொண்டு நிரப்ப என்று தெரியாமல் தள்ளாடிக் கொண்டு இருக்கிறான் மலையமான். அந்த மலையமானுக்கு கைக்கொடுப்பாளா தேனருவி?
தொடரும்..





