பின் பக்கம் விறகு அடுப்பில் எப்பொழுதும் சமையல் வேலை நடந்துக்கொண்டே இருக்கும். பணியாளர்களுக்கு என்று தனியாக தாங்கும் வீடு அந்த வளாகத்திலே இருந்தது.
எல்லா கூடத்திலிருந்தும் நன்றாக ஒடுங்கி இருக்கும் அந்த வீட்டு மனிதர்களுக்காக இருக்கும் அறைகள். ஒவ்வொன்றும் பெரிது பெரிதாக இருக்கும். கீழே தாத்தாவுக்கும், வெள்ளியம்பலத்தானுக்கும் அறைகள் இருந்தது. அதை தொடர்ந்து சாமி அறையும், சமையல் கூடமும், மளிகை சாமான்கள் இருக்கும் பெரிய குடோனும், வேற்று ஆள் வந்து தங்க பல அறைகளும், அலுவலக அறைகளும் நிறைந்து இருந்தது தரை தளம்.
மேல் தளத்தில் பாண்டியம்மாவுக்கும் மாறன் பூபதிக்கும் அறைகள் இருந்தது.
அதில் பசும்பூண் பாண்டியனுக்கு மட்டும் இன்னும் சில அறைகள் அதிகமாக இருந்தது. அந்த அரண்மனை முழுவதும் பழங்கால கற்களால் கட்டி இருந்தார்கள். ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு பின்பும் அந்த அரண்மனை எந்த சேதமும் இன்றி மிக கம்பீரமாக பழமை மாறாமல் அப்படியே இருந்தது.
அந்த அரண்மனையில் பல கற் தூண்களில் சிற்பங்கள் செய்துக்கப்பட்டு இருந்தது. அந்த மனையில் வேலை செய்வதற்கே ஐம்பது பேர் தினமும் வருவார்கள். அது இல்லாமல் இருநூறு ஏக்கர் நஞ்சை நானூறு ஏக்கர் புஞ்சை நிலத்தில் வேலை செய்ய ஒரு நாளைக்கு குறைந்தது நூறு பேரிலிருந்து ஐநூறு பேர் வரை வந்துக்கொண்டு இருப்பார்கள்.
இவர்களுக்கு என்றே தனி ஏரி இரண்டு மூன்று இருக்கிறது. அதைவிட கல்லு கரடு நிறைந்த மலைகள் தொடர்ச்சியாக ஐந்து ஆறு இருக்கிறது.
அதில் இரண்டு அருவியும் இருக்கிறது. மலையை சுற்றி மாந்தோப்பும் தென்னந்தோப்பும் இருக்கிறது. அருவியிலிருந்து ஓடி வரும் தண்ணீர் ஏரியில் நிறைந்து வழிந்துக்கொண்டு இருக்கும். அதிலிருந்து தான் பாதி நிலங்களுக்கு நீர்பாய்ச்சுகிரார்கள்.
அதில்லாமல் எழுபது கிணறுகளும் இருக்கிறது. மழைக்காலங்களில் வரும் மழைநீரை சேகரிக்க தனியாக ஐந்து ஏக்கர் பரப்பளவில் ஒரு மழைநீர் சேகரிப்பு மையமும் இருக்கிறது.
மிக பெரிய சமஸ்த்தனத்தை கொண்டவர்கள் தான் இந்த பாண்டியன் குடும்பம். வெளியே இவர்களுக்கு பாண்டிய வம்சம் என்ற பெயர் இருக்கிறது. ஆனாலும் எந்த வித ஆடம்பரமும் இன்றி சாதரான மக்கள் போலவே நட்புடன் பழகுவார்கள்.
விவசாயம் மட்டும் இல்லாமல் பல தொழில்கள் இவர்கள் செய்துக்கொண்டு இருக்கிறார்கள். இரும்பு தொழிற்ச்சாலை, மர தொழிற்ச்சாலை, அரிசி ஆலை, கரும்பு ஆலை, பருத்தி ஆலை, மீன் பண்ணை, தானிய கிடங்குகள் என்று சொல்லிக்கொண்டே போகலாம். அந்த அளவுக்கு பல தொழிற்ச்சாலைகளை தன் வசம் வைத்திருந்தார்கள்.
செலவச்செழிப்பில் இவர்கள் தான் முன்னோடி.
பஞ்சாயத்தை முடித்துவிட்டு ஆண்கள் உணவு உண்ண அமர, அவரவர் மனைவிமார்கள் தங்களது ஆண்களை கவனிக்க பாண்டியன் நிமிர்ந்து தன் மனைவியை பார்த்தான்.
நெற்றியில் வட்ட போட்டு வகிட்டில் குங்கும போட்டு மிளிர, மஞ்சளில் குளித்த தேகம், ஈர துண்டு இன்னும் தலையில் முடிந்து இருக்க, அவனது கண்கள் பரவச நிலையில் இருந்தது.
பத்தாதற்கு இடுப்பில் அவனது மகன் வேறு... மனமெல்லாம் நிறைந்து போய் இருந்தது. அவனுக்கு மட்டும் அல்ல. அங்கு இருந்த அத்தனை பேருக்கும் தான்.
பாண்டியம்மாளும் அவளது கணவனும் உணவு உண்ண வர, மாறனும் வர, அதன் பிறகு கொஞ்சம் கலகலப்பாக சென்றது.
“தம்புக்கு மருமவக்கிட்ட சாப்பாடு குடுத்து விடு மத்தியம்..” அம்பலத்தார் சொல்ல, “சரிங்க” என்றார் மீனாச்சி.
எத்தனை பேர் ஆளுக்காரர்கள் இருந்தாலும் அவரவர் கணவன்மார்களை உடையப்பட்டவர் தான் கவனிக்கணும்.
அது அந்த வீட்டில் எழுதப்படாத விதி. அதை மாதுமையாளுக்கும் சொல்லி தர, அவளும் பழக்கப்படுத்திக்கொண்டாள்.
இரண்டாவது நாளே அவளை வயலுக்கு சாப்பாடு எடுத்து வர பணிக்க, இவளுக்கு அதெல்லாம் பெரிய காரியமாக தெரியவில்லை.
தங்கஇழைகள் சரிகையாய் புடவையின் இரு கரையிலும் சன்னமாக ஓட, மற்ற இடங்களில் எல்லாம் பருத்தி நூலால் நெய்யப்பட்டு இருந்தது அவளது புடவை.
அதனால் அவளுக்கு அது தெரியவில்லை அந்த புடவையின் மதிப்பு. சாதாரண பருத்தி புடவை என்றே எண்ணினாள்.
முந்தானையிலே சும்மாடு சுத்தியவள் அதை தலயில் வைத்து அதன் மீது சாப்பாட்டு கூடையை வைத்து இருந்தாள்.
அவளது இந்த பாங்கு கண்டு ராக்காயியும் பிச்சாயியும் கூட ஒரு நொடி அசந்து போனார்கள்.
“ஏட்டி மருமவளே உன் மருமவளுக்கு எதுவும் சொல்லி தரவேணாம் போலையே... டவுனுல இருந்த புள்ளைக்கு எப்படில நம்ம ஊரு நடைமுறை எல்லாம் தெரிஞ்சி வச்சு இருக்கு...” வியப்பாய் மீனாச்சியிடம் கேட்க,
“டவுனு புள்ள இல்ல அதான் நாளும் தெரிஞ்சி வச்சு இருக்கும்...” ஐவரும் சொல்ல அதைக்கேட்டுக்கொண்டு இருந்த மாதுமையாளுக்கு மனசு என்னவோ போல இருந்தது.
“சரிங்க ஆத்தா, அத்தை நான் வரேன்..” என்று சொல்லி வெளியே கிளம்ப, துணைக்கு பண்ணையில் வேலை செய்யும் பவளம் உடன் வந்தாள்.
“அம்மணி நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க... அதுவும் இரண்டு பக்கமும் குத்தி இருக்கிற மூக்குத்தி ஜோலிக்கிறதுல நம்ம ஊரு பேச்சியாயி அம்மன் மாதிரியே இருக்கீங்க.. அந்த மூக்குத்தி வைரமுங்களா...?” ஆசையாக கேட்க
வெறும் கல்லு தான்னு சொல்ல முடியாமல், கணவன் வீட்டு அந்தஸ்த்தை குலைக்காமல்
“ஆமா பவளம்...” என்றாள்.
“அது தான் இந்த ஜொலி ஜொலிக்கிது...” என்று ஆசையாக அவளது முகத்தை பார்த்தாள்.
என் மூஞ்சியவே பார்த்து நடந்தா பாதையில இருக்க கல்லு முள்ளு தெரியாம போயிட போகுது...” கிண்டல் பண்ணினாள்.
“இல்லைங்க அம்மணி உங்க முகம் அம்புட்டு அம்சமா இருக்கு... நானுந்தேன் தினமும் குளிக்கிறேன்.. ஆனா இந்த கல வரலையே...”
“அது கல்யாணம் ஆனா தானா அந்த கலை வரும் பவளம்...”
“அது என்னவோ வாஸ்த்தவம் தாணுங்க அம்மணி...” என்று இருவரும் பேசிக்கொண்டே வர,
“அம்மணி...” என்று வீறிட்டாள்.
“ஏன்டி இப்படி கத்துற...” நெஞ்சை பிடிக்க,
“அம்மணி நீங்க என்றக்கிட்ட பேசிட்டீங்க...” என்றாள்.
“அட இதுக்கா இப்படி கத்துன... நான் கூட என்னவோ ஏதோன்னு நினைச்சேன்...” என்று நெஞ்சின் மீது இருந்த கையை எடுத்தாள்.
“போங்க அம்மிணி நீங்கல்லாம் எங்க கூட பேசுவீங்கலான்னு எப்படி தெரியுமா ஏங்கிகிட்டு இருந்தோம்... அந்த சோலையம்மா கிட்ட இத சொல்லி சொல்லி பீத்திக்குவேன்.” என்றவளது வெகுளி பேச்சை கேட்டு இதழ்களில் சிரிப்பு வந்தது.
தானும் இது போல வெகுளியாக தானே இருந்தோம்.. என்கிற எண்ணம் வர கண்கள் கலங்கியது.
அதை இயல்பாக மறைத்துக்கொண்டு சுற்றிலும் வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தாள். அவளது பார்வையை கண்ட பவளம்,
“என்ன அம்மணி பார்க்கிறீங்க... சுத்து பட்டு எல்லா ஊருக்கும் இந்த வயக்காடு தான் சோறு போடுது... கண்ணுக்கு எட்டுன தூரம் வரைக்கும், இந்த பக்கம் அந்த மலையடி வரைக்கும் நம்ம அய்யாரு இடந்தாணுங்க... வயக்காட்டுக்கு மத்தியிலயே மூணு ஏரி இருக்குங்க...
வயக்காட்டு அம்மன்னு வயலுக்கு மத்தியில இருக்கு. அந்த கோயிலுக்கு நெல்லு விளையும் போதெல்லாம் பொங்கல் வச்சி படைப்போம். அது போக வருசத்துக்கு ஒருதர திருவிழா வச்சி அய்யாரு கொண்டாடுவாக அந்த தாய...” என்று அந்த அரண்மனை வீட்டின் பெருமைகளை சொல்லிக்கொண்டு வர, பொழிலிக்கு கண்களை இருட்டிக்கொண்டு வந்தது.





