ஆதித்யன் பெயருக்கு ஏற்றார் போல நெருப்பாக காய்ந்துக் கொண்டு தான் இருப்பான். அவனை அவ்வளவு எளிதாக குளிர்விக்கவே முடியாது. அவனின் நட்பு வட்டம் ராஜாவும் கேசவும் தான். அவர்களை தாண்டி அவன் வேறு யாரையும் அருகில் விட மாட்டான்.
கேசவின் தங்கை அபிராமி கூட ஆரம்பத்தில் ஆதி மீது ஒரு ஈர்ப்பை கொண்டு இருந்தாள். ஆனால் அவன் பார்த்த பார்வையிலே ஆட்டோ மேட்டிக்கா அண்ணன் என்று அழைக்க ஆரம்பித்து விட்டாள்.
ஆனால் அந்த பாட்சா மகரியாளிடம் மட்டும் பழிக்கவில்லை. அவன் முறைத்தால் இவள் இன்னும் அதிகமாக அவன் பின்னாடி சுத்தி வருவாள்.
ஆம் மகரியாளின் உயிர் காதல் மன்னவன் தான் இந்த ஆதி... அவன் முறைத்துப் பார்த்தும் விரட்டி பார்த்தும் எதற்கும் அசையாது அவனின் பின்னாடியே சுற்றி வந்தவள் இன்றைக்கு அந்த நினைவுகளை எல்லாம் ஒட்டு மொத்தமாக இழந்து விட்டு அவனை முறைத்துக் கொண்டு திரிகிறாள்.
தூங்கி எழுந்த மகரியாளுக்கு உடம்பெல்லாம் வலிப்பது போல இருந்தது. சோம்பல் முறித்து எழுந்தவள் பிரெஷ் அப் ஆகிட்டு வர, காலையில் எந்த இடத்தில் செஸ் போர்டை போட்டாளோ அதே இடத்தில் தான் கிடந்தது.
செஸ் காயின்ஸ் டப்பாவில் இருந்து சிதறி அறை எங்கும் கிடப்பதை பார்த்தவள்,
“இதை கூட எடுத்து வைக்காம என்ன தான் பண்றாரோ..” புலம்பியவள் எல்லாவற்றையும் எடுத்து வைத்து விட்டு வெளியே வர, லேசாக இருள் கவிழ்ந்து இருந்தது.
“விளக்கை கூட போடலையா?” புலம்பிக் கொண்டே எல்லா இடத்திலும் போட்டு விட்டவள், பசி எடுக்க உணவு மேசை பக்கம் வந்தாள்.
அவளுக்கு பிடித்த பிரியாணி சுடசுட இருக்க கண்டு,
“வாவ்” என்று சொல்லி போட்டு சாப்பிட ஆரம்பித்து விட்டாள்.
“பரவயில்லையே.. சொன்ன உடனே ஆளெல்லாம் வேலைக்கு போட்டுட்டார்” மனதுக்குள் பாராட்டிக் கொண்டே உண்டு முடித்தவள் எழுந்து வர கூடத்தில் அமர்ந்து இருந்தான் ஆதித்யன்.
“செஸ் விளையாடலாமா? போரடிக்கிது” சொல்லிக் கொண்டே போர்ட் காயின்ஸ் என எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு வந்தாள்.
எதிரெதிர் சோபாவில் அமர்ந்து ராயல் சென்டர் டேபிளில் போர்டை வைத்து காயின்ஸ் அடுக்கியவளை கூர்ந்துப் பார்த்தான்.
அவனது பார்வையில் இருந்த ஆதங்கம் அவளுக்கு புரியவே இல்லை. மும்மரமாக காயின் அடுக்குவதிலே முனைப்பாக இருந்தாள். அவளறியாமல் பெருமூச்சு விட்டவனுக்குள் கொட்டிக் கிடந்த ஆதங்கமும் கோவமும் அவனை கொஞ்சம் கொஞ்சமாக அரித்துக் கொண்டு இருந்தது.
அவனின் பார்வை வீரியத்தில் சற்றே கலைந்தவள் நிமிர்ந்து அவனை பார்த்தாள். அதற்குள் ஆதி தன் பார்வையை மாற்றிக் கொண்டு விட்டான்.
தோளை உலுக்கிக் கொண்டவள் மீண்டும் அடுக்க ஆரம்பித்தாள்.
“என்னை கொல்லணும்னு முடிவு பண்ணதுக்கு பிறகு எதுக்காக இந்த மாதிரி கொஞ்சம் கொஞ்சமா கொன்னுட்டு இருக்க.. மொத்தமா என்னை குத்தில் கிழிச்சுட வேண்டீயது தானேடி” அவளுக்கு கேட்கா வண்ணம் ஆத்திரத்தில் கர்ஜித்துக் கொண்டான்.
“ம்ம் அடுக்கிட்டேன் வாங்க.. விளையாடலாம்” என்று அவள் ஆரம்பிக்க,
“ஷால் மறந்துடாத” என்றவன் இப்பொழுதும் அவள் கழுத்தில் இருந்த ஷாலி பிடுங்கி வைத்துக் கொண்டான்.
“இன்னும் விளையடாவே இல்ல. அதுக்குள்ள எதுக்கு வாங்கி வச்சுக்கணும்” முணுமுணுத்தவள், காய்களை நேக்காக நகர்த்த ஆரம்பித்தாள்.
“எப்படியும் வின் பண்ண போறது நான் தான். அதனால கான்பிடன்ட்டா ஷாலை முன்கூட்டியே உருவி வச்சுட்டேன்” என்றவன் தன் வெற்று மார்பில் அவளது ஷாலை கழுத்தை சுற்றிப் போட்டுக் கொண்டவனுக்கு அவளின் வாசம் நாசியில் ஏறியது.
“போதும் போதும் காலையில இதனால தான் சிக்கல் வந்தது. மறுபடியும் எதையும் ஆரம்பிக்காத ஆதி” தனக்குள் சொல்லிக் கொண்டவன், முழு மூச்சோடு விளையாட்டில் ஈடு பட்டான்.
இருவரும் போட்டி போட்டு காயை நகர்த்த இருபதாவது மூவிலே மகரியாளின் ராணியை தூக்கி விட்டு ராஜாவுக்கு செக் வைத்து விட்டான்.
“ஹேய் இது போங்கு.. அதுக்குள்ள செக் வச்சுட்டீங்க” சிணுங்கியவள்,
“இன்னொரு விளையாட்டு விளையாடலாம்” என்று மீண்டும் அவளே காய்களை அடுக்கி வைத்து விளையாட அழைக்க, இவனும் சளைக்காது அவளுடன் விளையாண்டான்.
இந்த முறையும் அவனே வெற்றி பெற,
“உங்களை தோற்கடிக்கவே முடியல.. ரொம்ப டப் குடுக்குறீங்க நீங்க” எழுந்து போய் விட்டாள்.
“ஹேய் எங்க எஸ்கேப் ஆகுற.. போர்ட எடுத்து வச்சுட்டு போடி” அவளை நிறுத்தினான்.
“விளையாட வரும் பொழுது மட்டும் தான் போர்டை நான் எடுத்து வைப்பேன்.. மத்த நேரம் நீங்க தான் எடுத்து வைக்கணும்” என்று விட்டு போனவளை படியோடு இருந்த கைப்பிடியில் தன் கழுத்தில் போட்டு இருந்த சாலை உருவி அவளின் இரண்டு கையையும் பின்னால் வைத்து கட்டிப் போட்டு விட்டான் ஒற்றை நொடியில்.
அவளால் சுதாரிக்க கூட முடியவில்லை.
“ஐயோ என்ன பண்றீங்க? எதுக்காக கட்டிப் போடுறீங்க.. விடுங்க ஆதி.. நீங்க ரொம்ப ஓவரா போறீங்க” நெளிந்து அவன் கட்டிய கட்டுகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள பார்த்தாள்.
ஆனால் அவன் கட்டிய கட்டில் இருந்து வெளியே வரவே முடியவில்லை.
“ப்ளீஸ் அவிழ்த்து விடுங்க”
“அப்போ ஒழுங்கா எங்க இருந்து போர்டை எடுத்தியோ அங்கேயே மீண்டும் வை” என்றவனின் பார்வை லட்ஜை இன்றி அவள் மீது ஊறியது.
அதும் அவனின் பார்வை அவளின் முன் மேனியின் மீது படர, “ஹைய்யோ..” என்று மனதுக்குள் அலறினாள்.
“இதுக்கு தான் இங்க வரலன்னு சொன்னேன்.. இப்படி திங்கிற மாதிரி பார்த்தா நான் என்ன பண்ணுவேன்.. என்னை மறைத்துக் கொள்ள கூட வழியில்லை” புலம்பியவள் அவனின் பார்வையில் சிலிர்த்து, தானே வழிக்கு வந்தாள்.
“கட்டை அவிழ்த்து விடுங்க.. நானே எதுத்து வைக்கறேன்” என்று சொல்லி தலையை கவிழ்ந்துக் கொண்டாள்.
“இதை நான் சொல்லும் பொழுதே செய்தா என்ன..” என்றவன் அவளின் கையை அவிழ்த்து விட அவளை நெருங்கி வந்தவன், தன் முன் மேனி அவளின் முன் மேனியில் பட நெருங்கி நின்று பின்னால் கை விட்டு எவ்வளவு பொறுமையா அவிழ்க்க முடியுமோ அந்த அளவுக்கு பொறுமையா அவன் அவிழ்த்து விட, அவனின் ஆண் வாசம் அவளின் நாசியில் ஏறி அவளை என்னவோ செய்தது.
கண்களை மூடி அவனின் நெருக்கத்தை உணர்ந்தவளுக்குள் சின்னதாக பிரளயம் ஒன்று உருவானது.
“நோ..” என்று அவளின் உள்மனது அலறியது. அடுத்து வந்த இரண்டு நாட்களும் அவர்களுக்குள் இப்படியே தான் பொழுது கழிந்தது. அதுவும் ஒவ்வொரு நாள் இரவின் போதும் வீராப்பாக தனி சோபாவில் படுப்பவள், நடு இரவில் அவனுடன் அவனை ஒட்டிக் கொண்டு வந்து படுத்துக் கொள்வாள்.
காலையில் அவனை மனதுக்குள்ளே திட்டி தீர்ப்பாள். அன்றைக்கு எதோ அலுவலக வேலையாக இவன் இருந்த சமயம் “ஆதி” என்று கத்திக் கொண்டே படியில் மயக்கம் போட்டு விழுந்து கிடந்தாள் மகரியாள்.
அவளின் கையில் ஒரு புகைப்படம் இருந்தது. அதை எடுத்துப் பார்த்தவனுக்குள் அத்தனை கோவம் முகிழ்த்தது.
அந்த கோவத்தை அவளிடம் காட்ட வழியில்லாது போன தன் நிலையை எண்ணி அவனுள் அத்தனை இறுக்கம் சூழ்ந்தது.
பொறுத்து பொறுத்துப் பார்த்தவன் மூன்றாம் நாள் ராஜாவுக்கு போனை போட்டு “மரியாதையா உன் தங்கையை இங்க இருந்தது கூட்டிட்டு போயிடு. அது தான் அவளுக்கும் நல்லது எனக்கும் நல்லது” என்று கத்திவிட்டான்.





