இரவு முழுக்க கொஞ்சமும் தூக்கம் இல்லமால் உப்பரிகையில் நின்று இருந்தவளுக்கு கண்கள் எல்லாம் ஒரே எரிச்சல்.. கண்ணை கசிக்கிக் கொண்டு விடியும் கிழக்கை வெறித்துப் பார்த்தாள் தேனருவி.
மழைக் காலம் போல.. லேசாக தூறிக் கொண்டு இருந்தது காலை நேரத்திலே..
“தூங்கவே இல்லையா?” முரட்டுக் குரல் அவளை உசுப்பியது.
பதில் சொல்ல கூட அவளுக்கு அத்தனை எரிச்சல் வந்தது. அதுவும் அவனை பார்க்கவே சுத்தமாக பிடிக்கவில்லை. திருமணத்துக்கு முன்பு அவனின் முகத்தை ஆசையுடன் மனம் முழுக்க நிரப்பிக் கொண்டு, தன் நெஞ்சை விட்டு நீங்கவே விடல்லை அவனது தோற்றத்தை. ஆனால் இப்பொழுது அவனது உருவம் கண்ணுக்குள் உறுத்தி நிற்கும் தூசியாய் அவளுக்குள் அத்தனை வெறுப்பை கொடுத்தது.
“நான் கேட்டா பதில் சொல்லணும்..” பல்லைக் கடித்தான் மலையமான்.
“ம்ம்.. தூக்கம் வரல” என்றாள் அவனை திரும்பி பார்க்காது.
“ஓ.. பட்டு மெத்தை போட்டு வச்சு, அரை முழுக்க ஏசி போட்டு வச்சு, கழுத்து நிறைய தங்கம் இருந்தும் மேடமுக்கு தூக்கம் வரலன்னா என்ன அர்த்தம்.. நீ சொல்றதை என்னை நம்ப சொல்றியா? உன் ஒட்டு போட்ட வீட்டுல இருந்தவளுக்கு இங்க இவ்வளவு சவுகாரியம் செஞ்சு குடுத்து இருக்கேன்.. தூக்கம் வரலன்னு சொல்ற?” அவனது பரிகாசத்தில் இன்னுமின்னும் வெறுப்பு தான் மண்டியது.
தன் வெறுப்பை காட்ட கூட அவளுக்கு விருப்பம் இல்லை.. அவனிடம் ஒன்றும் சொல்லாமல்,
“குளிச்சுட்டு வரேன்” பொதுப்படையாக சொல்லி விட்டு தான் எடுத்து வந்திருந்த பையில் இருந்து வேற ஒரு புது புடவையை எடுத்துக் கொண்டு குளியல் அறைக்குள் நுழைந்தாள்.
கல்யாணம் ஆன புது பெண் ஒரு மாதத்துக்கு புது துணி தான் உடுத்த வேண்டும் என்று அவளின் அப்பா புது புடவையாக வாங்கி குவித்து இருந்தார். அதை கண்டு பெருமூச்சு விட்டவளுக்கு மனதுக்குள் சொல்லொண்ணாத பாரம் ஆக்கிரமித்தது.
‘காசு பணம் வசதி வாய்ப்பு இருந்துட்டா போதுமா? தூக்கம் காசு பார்த்து வராதுன்னு இவருக்கு புரிய வைக்க முடியாது.. காசை தாண்டி இந்த உலகத்துல எவ்வளவோ இருக்கு.. அதை சொன்னாலும் கேட்க மாட்டாரு.. அந்த அளவுக்கு ஆணவத்துல இருக்குற இவர் கிட்ட பேசுறதே வேஸ்ட்...’ எண்ணியவளின் கல்யாண கனவுகள் அத்தனையும் கானல் நீராய் மாறிப்போனது கூட பெண்ணவளுக்கு வருத்தம் இல்லை. ஆனால் நூதன முறையில் கணவன் கொடுமை படுத்துவது தான் அத்தனை வேதனையை கொடுத்தது.
இதில் இருந்து எப்படி மீள்வது என்று ஒன்றும் புரியவில்லை. இன்றைக்கு என்னென்ன கூத்து செய்ய சொல்வானோ என்று அடி மனதில் நெருப்பு பிடித்துக் கொண்டது.
பேசாம அப்பாக்கிட்ட சொல்லி இந்த வீட்டை விட்டு போயிடலாமா? என்று கூட தோன்றியது. ஆனால் அவளால் அப்படி செய்ய முடியவில்லை. பெட்டியும் கையுமாக போனால் நெஞ்சை பிடித்து உயிரையே விட்டாலும் விட்டு விடுவார் பாசம் மிகு தந்தை. அவளுக்கு பிறகு இருக்கும் தங்கைகளின் வாழ்க்கையை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.
ஷவரை திறந்து விட்டு நனைந்தவளின் கண்ணீர் நீரோடு கலந்துப் போனது. விழிகள் சிவந்துப் போய் தான் வெளியே வந்தாள்.
அவளின் இரத்த நிற விழிகளை புருவம் ஏற்றி பார்த்தவன் அலட்டிக் கொள்ளாமல் தன் வேலையில் ஈடுபட்டான். ட்ரை ஏரியா வெட் ஏரியா என தனித்தனியாக பாத்ரூமிலே இருக்க உள்ளேயே புடவை கட்டிக் கொண்டாள்.
முன்பு இருந்த அறையில் இருந்ததை விட இந்த அறையில் இன்னும் அதிக வேலைபாடு நிறைந்து இருந்தது. காலை கீழ வைக்கவே கூசிப் போகும் அளவுக்கு இதன் செல்வ செழிப்பும் ஆடம்பரமும் இருந்தது தான். ஆனால் முதல் நாள் இருந்த மலைப்பு இன்றைக்கு இருக்கவில்லை தேனருவிக்கு. இந்த செல்வ செழிப்புக்கு பின்னாடி இருக்கும் மலையமானின் அருவெறுப்பு நிரம்பிய மனம் தான் தெரிந்தது.
ஒரே நாளில் இந்த வீட்டின் பிரம்மாண்டம் தரைமட்டம் ஆகிவிட்டது அவளின் பார்வையில். அப்பா அம்மா யாரும் இல்லை என்று தந்தை சொல்லி இருக்கு ஒரு வேலை நல்லது கெட்டது தெரியாமல் தான் இப்படி நடந்துக்குறாரோ என்று தோன்றிய அடுத்த கணமே இதழ்களில் ஏளனம் பெருகியது.
“இல்லையே ரொம்ப தெளிவா சொன்னாரே.. உன்னை கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்ததுக்கு பின்னாடி இருக்குற காரணமே என் தங்கச்சி தான். நமக்குள்ள என்ன நடக்கிறதோ அது அத்தனையும் அவளுக்கு தெரியணும்னு சொன்னாரே.. எவ்வளவு பொறுக்கியா இருந்தாலும் ஒரு அண்ணன் இதை செய்ய துணிய மாட்டான். ஆனா இவன் செய்கிறான் என்றால் எவ்வளவு கீழ்த்தரமாக இருப்பான்” என்று தேனருவியின் நெஞ்சில் மலையமான் மிகவும் கீழிறங்கி போய் விட்டான்.
‘அவன் மட்டுமா அப்படி இல்லையே.. இளவரசியும் அல்லவா தன்னை ஆராய்ச்சி பார்வை பார்க்கிறாள். கணவனோடு இருக்கும் நேரத்தில் அவளின் பார்வை இவளை மொய்க்கிறதே.. அண்ணன் வாழ்வதை விழி எடுக்காமல் ஒரு தங்கச்சியால் எப்படி பார்க்க முடிகிறது? உளவியல் ரீதியாக இரண்டு பேரும் பாதிக்கப்பட்டு இருக்காங்களா?’ என்று சிந்தனை வளர்ந்தது.
‘இதை சீக்கிரம் கண்டு பிடிக்கணும்..’ எண்ணியபடியே குளித்து வெளிய வந்த பொழுது அவளின் அப்பா அழைத்து இருந்தார்.
“அம்மாடி மறுவீட்டு விருந்துக்கு அழைக்க வரணும். மாப்பிள்ளை கிட்ட கேட்டு சொல்றியா? நாங்க எப்ப வரட்டும்னு” ஆரவத்துடனம் ஆசையுடனும் கேட்டார்.
இப்படி ஆசையுடன் கேட்பவரிடம் நேரடியாக மறுக்க முடியாமல், “அவர் இப்போ பிசியா இருக்குறாருப்பா நான் பிறகு கேட்டுட்டு சொல்லவா?” என்றாள் தன்மையாக.
“சரிம்மா” என்றவருக்கு மனசே இல்லை. என்னவோ அவரின் மனதை போட்டு குத்திக் கொண்டே இருந்தது. தன் மகள் அங்கே நன்றாக வாழவில்லையோ என்ற அச்சம் அவருக்கு தோன்றியது. தாயில்லா பிள்ளை எல்லாத்தையும் மனசுலையே போட்டு வச்சு மறுகுமே என்று உள்ளுக்குள் குமைந்துப் போனார். வாய் விட்டு எந்த துன்பத்தையும் பகிர்ந்துக் கொள்ள மாட்டாள். ஆனால் எங்கள் அத்தனை பேரின் துன்பத்தையும் ஒற்றையாக தூக்கி சுமப்பவள் என் பெண் என்று கலங்கிப் போனார்.
“ஆத்தா அப்பா ஒரு எட்டு உன்னை வந்து பார்த்துட்டு மட்டும் வரட்டுமா?” இறைஞ்சினார்.
அவர் அப்படி கேட்கவும் உடைந்துப் போன அருவி குரலை செருமி,
“அதெல்லாம் ஒன்னும் வேணாம் ப்பா.. நான் நல்லா தான் இருக்கேன். எனக்கு வருத்தம் எல்லாம் உங்க எல்லோரையும் விட்டுட்டு வந்தது தான். மத்தபடி நான் இங்க ரொம்ப நல்லா இருக்கேன். நீங்க மனசை போட்டு குழப்பிக்காதீங்க.. மருவீட்டை பத்தி அவர் கிட்ட கேட்டுட்டு சொல்றேன்” என்று வைத்து விட்டாள்.
அதற்கு மேல் அவரிடம் பேசமுடியவில்லை. மேற்கொண்டு ஒரு வார்த்தை பேசினாலும் வெடித்து சிதறி விடும் நிலையில் இருந்தாள்.
“இன்னும் எத்தனை நேரம் இங்கயே இருக்க போற? எனக்கு காபி கொண்டு வந்து குடுக்கணும்ன்ற யோசனையே இல்லையா?” அவளின் முதுகுக்கு பின் மலையமானின் முரட்டு குரல் கேட்டது.
“ஒரு நிமிடம் கூட நிம்மதியா இருக்க விட மாட்டாரு போல” எண்ணிக் கொண்டு கீழே போனாள். வீடே மிகுந்த அமைதியில் மூழ்கி இருக்க, அடுப்படியில் மட்டும் பணியாளர்கள் வேலை செய்யும் அரவம் கேட்டது.
அங்கே போய் அவர்கள் போட்டு வைத்த காபியை கெட்டிலில் எடுத்துக் கொண்டு மேலே போனாள்.
“இளாக்கு குடுத்தியா?” அடுத்த கேள்வி பறந்தது.
“கதவு சாத்தி இருந்தது..” என்றாள்.
“அதுக்காக அப்படியே வந்துடுவியா? எழுப்பி குடுக்கணும்னு அறிவு இல்ல” கண்ணிலே முறைத்தான்.
“வழக்கப் படுத்திக்கிறேன்” என்றவள் அவனுக்கு ஒரு கப்பில் எடுத்து கொடுத்து விட்டு கீழே போகப் பார்க்க,
“இனி நான் சொல்ற மாதிரி வச்சுக்கிட்ட உன்னை என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது. அவளுக்காக தான் உன்னை கல்யாணம் பண்ணேன். ஒழுங்கா அவளை கவனிச்சுக்க” என்றவன் அவளின் வழியை மறைத்து நின்றான்.
“இன்னும் என்ன?” என்பது போல அவனை நிமிர்ந்துப் பார்த்தாள். அவளின் பார்வையை சட்டை செய்யாமல் அவளின் பிடரியை பிடித்து தன் முகம் நோக்கி இழுத்தவன், அவள் சுதாரிக்கும் முன்னரே அவளின் சிவந்துப் போன இதழ்களை கடித்து தனக்குள் இழுத்துக் கொண்டான்.
வன்மையான இதழ் முத்தம். அதை இரசிக்கக் கூட அவளுக்கு உமட்டிக் கொண்டு வந்தது. அவளை ஆழ்ந்து இரசித்து வன்மையாக முத்தம் குடுத்து இருந்தால் இவளும் உருகி கரைந்து இருப்பாள்.
ஆனால் இப்பொழுது குடுக்கும் முத்தம் அவன் தங்கைக்காக அல்லவா? அவனின் ஒவ்வொரு செயலும் அவளுக்கு அத்துபடியாகிவிட்டது. அதனால் எந்த எதிர்ப்பும் காட்டாமல் அப்படியே அவனது கைப்பிடியில் நின்றாள்.
அவனது கைகள் அவளின் இடையை வளைத்து இறுக்கிப் பிடிக்கவில்லை. விழிகள் அவளை இரசிக்கவில்லை. அவனின் மீசை முடி அவளிடம் சில்மிஷம் செய்யவில்லை. வெறுமெனே ஒற்றை கையால் அவளின் பிடரியை பற்றி இழுத்து இருந்தான். அவ்வளவே.. இருவரின் உடலுக்கும் இடையில் இரண்டு கை அளவு தூரம் இடைவெளி இருந்தது.
காதல் மிகுதியில் தரப்படும் முத்தம் இப்படியா இருக்கும்.. வேரோடு வெட்டி சாய்த்து விடுமே.. இதழ்கள் உரசும் முன்பே இரு முன் உடல்களும் உரசி தகிப்பை ஏற்படுத்தி கிளர்ச்சியை ஊட்டி இருக்குமே.. இப்படியா உப்பும் சப்புமாக இருக்கும்.
மனதில் எழுந்த வலியை அடக்கி விட்டு வெறுமனே அவனுடன் நின்று இருந்தாள். அவளின் இதழ்களை சுவைக்காமல் வெறுமென தன் பற்களால் இழுத்து காயம் செய்து கொதறி வைத்தான்.
அதில் குருதி பூக்கள் பூத்துக் குலுங்க, தன் இதழ்களில் அவளின் உதிரத்தை சுவை பார்த்த பிறகே அவளை விட்டான் மலையமான்.
விட்ட உடனே அங்கிருந்து அவள் விலகப் பார்க்க, மீண்டும் அவளை மறித்து நின்றவன்,
“செம்மையா என்ஜாய் பண்ணியா?” என்று கேட்டான். அப்படி கேட்டவனை நிமிர்ந்துப் பார்த்தாவளின் நெஞ்சில் ஏளனம் மட்டுமே மிஞ்சியது. அதை தன் கண்களால் கூட காட்டவில்லை.
“என்ஜாய் பண்ற அளவுக்கு நீ என்ன பெர்பாம் பண்ணுன?” என்று கேட்கத் தோன்றியது. ஆனால் அதை அவள் கேட்கவில்லை. அவளின் வளர்ப்பு அவளை கேட்க விடவில்லை. சின்ன புன்னகையுடன் அங்கிருந்து அவள் விலகிப் போக,
“திமிரா?” என்று கேட்டவனை நிறுத்தி நிதானமாக அவனை பார்த்தவள்,
“திமிர் எல்லாம் கிடையாது.. உங்களுக்கும் எனக்கும் இடையில எதுவும் இல்லைன்னு தெளிவா சொல்லி இருக்கீங்க.. அதை நான் என்னைக்கும் மறக்க மாட்டேன்... இன்னைக்கு நடந்ததை உங்க தங்கச்சிக்கு காட்ட போகணும் இல்லையா? நேரம் ஆனா இந்த காயமும் உதிரமும் கருத்துப் போயிடும்.. பிரெஷா இருக்குறப்ப ஏற்படுற உணர்வு பிறகு வராது இல்லையா.. அதனால தான் சீக்கிரம் போய் காண்பிச்சுட்டு வரலாம்னு போறேன்..” என்று அவள் சொல்ல,
அவளை கண்கள் சுருக்கிப் பார்த்தவன் “என்னடி ரொம்ப ஆணவமா பேசுற மாதிரி இருக்கு..” கேட்டான்.
“அப்படி நீங்க நினைச்சா நான் ஒன்னும் பண்றதுக்கு இல்ல.. இப்போ எப்படி.. இதை உங்க தங்கச்சிக்கிட்ட காட்டுட்டா வேணாமா?” என்று கேட்டுக் கொண்டே அவளின் இதழ்களில் துளிர்த்து நின்ற உதிரத்தை துடைத்து விட கையை கொண்டுப் போனாள்.
“ஏய்..” சட்டென்று அவளின் கையை பிடித்துக் கொண்டவன்,
“போய் தொலை” சீறி விட்டு திரும்பிக் கொண்டான். எதோ ஒரு வகையில் அவனை தான் வெற்றி கொண்டு விட்டதாக அவளுக்கு தோன்றியது.. அந்த எண்ணத்துடன் இளவரசி இருந்த அறை கதவை தட்டி அவளுக்கு காபி குடுத்தாள்.





