அடுத்த நாள் காலையில் எழுந்திரிக்க முடியாமல் தடுமாறிப் போனவளின் நாசியில் ஆதியின் ஆண் வாசம் ஏற, கண்களை பட்டென்று திறந்துப் பார்த்தாள். அவள் முழுமையாக அவனின் அணைப்பில் இருந்தாள்.
“இது எப்படி சாத்தியம் ஆனது.. நான் சோபால தானே படுத்து இருந்தேன்..” குழம்பியவள்,
“இவரு தான் நான் தூங்குனதுக்கு பிறகு இங்க தூங்கிட்டு வந்து இருப்பாரு.. சரியான பொறுக்கி. செய்யிறதையும் செஞ்சுட்டு எப்படி தூங்குறான் பாரு..” திட்டிக் கொண்டே அவனிடம் இருந்து விலகி எழுந்திரிக்கப் பார்க்க அவளால் அவனது முரட்டு கைகளை விலக்கி எழுந்திரிக்க முடியவில்லை.
“ம்மா என்னத்தை தின்பாரு இந்தா கணம் கணக்குறாரு.. கையை கூட அசைக்க முடியல..” திட்டிக் கொண்டே தன் முழு பலத்தையும் வைத்து அவனது ஒரு கையை எடுத்து விட்டவளுக்கு அப்பொழுது தான் மூச்சே வந்தது.
தன் இடுப்பில் இருந்த அவனது காலில் சுல்லேன்று அடி வைக்க ஆசை வந்தது. அவன் முழித்து விட்டால் என்ன செய்வது என்று வாய்க்குள் திட்டிக் கொண்டே எழுந்து குளியல் அறைக்குள் நுழைந்துக் கொண்டவளுக்கு என்னவோ ஒரு உணர்வு.
அதை பற்றி அவளுக்கு எந்த அனுமானமும் பிடிபடவில்லை. ஏன் என் மனசு என்னவோ மாதிரி பண்ணுது.. அதுக்கு தான் இவனை பார்க்குறதே இல்லை. இவனை பார்த்தாலே எனக்கு இப்படி தான் ஆகுது.. உதட்டை கடித்து அதை பற்றி யோசித்தவளுக்கு ஒன்றுமே புரியாமல் போக தன் வேலைகளை எல்லாம் முடித்துக் கொண்டு வெளியே வந்தாள்.
ஆதி எழுந்து இருந்தான். ஆனால் அறையில் இல்லை. எங்க போனாரோ.. எண்ணிக் கொண்டே கீழே வந்தவளுக்கு வீட்டில் வேலையாட்கள் யாரும் இல்லாததை பார்த்து,
“கஞ்ச பிசுநாறி.. ஒரு வேலையாள் கூட வச்சுக்க மாட்டாரு... இங்க வந்தா நாம் தான் சமைச்சு சாப்பிடனும். என்னை கொடுமை படுத்தவே எல்லோரும் சேர்ந்து இங்க வந்து தள்ளிட்டாங்க..” புலம்பியவள், காலங்காத்தாலையே
ராஜாவுக்கு போனை போட்டாள்.
“என்னடா?” என்று அப்பொழுது தான் தூங்க தயார் ஆகிக் கொண்டு இருந்தான் அவன்.
“என்ன நொன்ன.. எனக்கு சமைக்க தெரியாதுன்னு உனக்கு தெரியுமா தெரியாதாடா? அப்போ நான் இங்க வரும் போதே ஒரு சமையல் ஆளையும் போட்டு இருக்கணுமா இல்லையா? என்ன அண்ணன் நீ.. என் மேல ஒரு பாசமும் இல்லை.. எனக்கு சோறு வேணும். நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ எனக்கு தெரியாது.. என்னால எல்லாம் சமைக்க முடியாது..” கடுகடுத்தாள்.
“சரி சரி.. நான் கேசவை வர சொல்றேன்” என்றான் அவரசமாய்.
“அந்த எருமை வந்து சமைச்சி குடுத்து நான் எப்ப சாப்பிடுறது” அதற்கும் வக்கணையாக பதில் சொன்னவளை போனிலே முறைத்துப் பார்த்தான் ராஜா.
“சரி சரி.. சீக்கிரம் வர சொல்லு..” என்றவள்,
“அந்த எருமை வர்றதுக்குள்ள நான் ஒரு காபியாவது போட்டு குடிக்கிறேன்.. பசி தாங்க முடியால” ராஜாவிடம் பேசிக் கொண்டே பிரிட்ஜில் இருந்து பாலை எடுத்து காய்ச்சி பில்ட்டர் காபி போட்டாள்.
கேட்டா சமைக்க தெரியாதுன்னு சொல்லுவா.. ஆனா சமையல்ல அத்தனை வகையும் தெரியும்.. பெருமூச்சு விட்டான் ராஜா.
“என்னடா உனக்கும் காபி வேணுமா?” கேட்டுக் கொண்டே அவள் எடுத்து பருக,
“எனக்கு வேணாம் உன் பின்னால ஒருத்தன் நிக்கிறான் பாரு அவனுக்கு கிட்ட குடு. அவனுக்கு தான் பில்டர் காபி ரொம்ப பிடிக்கும்” என்றான் ராஜா.
அவன் அப்படி சொல்லவும் பின்னால் திரும்பி பார்த்தாள் மகரியாள். நிலைப்படியில் கையை கட்டிக் கொண்டு இவளை பார்த்த படி நின்று இருந்தான் ஆதித்யன்.
“சேர்த்து தான் போட்டு இருக்கேன்” என்றவள் போன் பக்கம் திருப்பி அண்ணனுக்கு பதில் சொன்னவள், ஆதி எப்பொழுதும் குடிக்கும் அவனது கப்பில் ஊற்றி சரியான அளவில் பில்ட்டர் கலந்து கொடுத்தாள்.
அதை வாங்காமல் அவளையே பார்த்தான் ஆதி.
“பிடிங்க” என்றாள். அதன் பிறகே வாங்கிக் கொண்டான்.
“எனக்கு சமைக்க தெரியாது.. வேலையும் செய்ய வராது.. அதனால நான் இருக்குற வரை வேலையாள் ரெண்டு பேரை போடுங்க” என்றாள். நேற்று வரும் பொழுது கொஞ்சம் பயந்துப் போனவளாய் இருந்தவளிடம் இன்றைக்கு சற்றே அதிகாரம் சேர்ந்துக் கொண்டது.
“ம்ம்.. வேற” என்றான் அவள் போட்ட பில்டர் காபியை சுவைத்தபடி.
“வேற என்ன.. வேற ஒன்னும் இல்லையே..” வேகமாய் சொன்னவள் தன் கப்பை எடுத்துக் கொண்டு அவ்விடத்தை விட்டு ஓடியே விட்டாள்.
அவளது போன் அங்கே தான் இருந்தது. அதில் ராஜா இன்னும் கனேக்ட்டில் தான் இருந்தான். இருவரின் பார்வையும் ஒரு கணம் பொருள் நிறைந்து மோதிக் கொண்டு பின் தலை அசைத்து இருவரும் போனை கட் பண்ணி விட்டார்கள்.
சிறிது நேரத்திலே துளசிநாதனும் கேசவும் காலை உணவை எடுத்துக் கொண்டு வந்து விட்டார்கள்.
“எவ்வளவு நேரம் உங்களுக்காக காத்துக்கிட்டு இருக்கிறது.. பெருங்குடலை என் சிறுகுடல் தின்னுட்டு இருக்கு” அனைவருக்கும் ப்ளேட் எடுத்து வைத்தாள். கேசவ் பரிமாறினான். ஆதிக்கு பரிமாற வர, ஒரு கை நீட்டி வைத்து தடுத்தவன் டேபிளில் இருந்த பிரட்டை மெல்ட் பட்டர் ஜாம் தடவி உண்ண ஆரம்பித்தான்.
வலி நிறைந்த பார்வை பார்த்தார்கள் அப்பாவும் மகனும். இவர்கள் கையில் அள்ளி தொண்டையில் வைத்த உணவு விக்கியது.
“எப்போ பாரு ப்ரெட் தான்.. அந்த பிரட்ல அப்படி என்ன தான் இருக்கோ.. ச்சை காஞ்சி போன ரொட்டிய எப்படி தான் திங்க முடியுதோ இந்த மனுசரால.. நம்மளை எல்லாம் ஊரு நேரம் திங்க சொன்னாலே நாக்கு செத்துப் போகும்.. ஆனா இவரு வருசம் முன்னூத்தி அறுபத்தி அஞ்சு நாளும் சலிக்காம தின்கிறாருப்பா.. செல்கள் எல்லாம் செத்துப் போச்சோ என்னவோ” முணுமுணுத்துக் கொண்டே நாட்டு கோழி குழம்பு ஊற்றி பஞ்சு மாதிரி இருந்த இட்லியை அமிர்தாமாய் இரசித்து ருசித்து சாப்பிட்டாள் மகரியாள்.
அவள் சாப்பிடும் அழகை அடிக் கண்களால் பார்த்த ஆதி இரண்டு ஸ்லைஸ் ப்ரெட்டை சாப்பிட்டு விட்டு எழுந்துக் கொண்டான்.
அவன் போன பிறகே வாயை திறந்தாள் மகரியாள்.
“ஏன் பெரியப்பா இப்படி வெறும் பிரட்டையே சாப்பிட்டுக்கிட்டு இருந்தா இன்னும் ஸ்ட்ரெஸ் தான் கூடிப்போகும்னு சொல்ல மாட்டீங்களா? அதுல என்ன சத்து இருக்கு.. ஒழுங்கா எல்லா சாப்பாடும் வல்லு வதக்குன்னு சாப்பிட வேண்டியது தானே.. பிறகு போடுற மாத்திரை எல்லாம் எப்படி கேக்கும். அதுவும் வெறும் வயிறுல போடுற மாதிரி தான் இருக்கும். வயிறும் வாயும் வெந்துப் போகதா?” மனம் தாங்காமல் அவர்களிடம் கேட்டாள்.
“இதை நீயே அவன் கிட்ட சொல்ல வேண்டியது தான்..”
“ம்கும் நீங்க சொல்லியே அவர் கேட்க மாட்டாரு.. பிறகு என் சொல்லை மட்டும் எப்படி கேட்பாரு.. என்னை பார்த்தாலே அவருக்கு பிடிக்காது” என்றாள்.
“ம்கும் பிடிக்காம தான் ஒரே அறையில தங்க விடுறானாக்கும்..” சத்தமில்லாமல் முணகிக் கொண்ட கேசவ்,
“அவனை அவன் போக்குல விட்டுட்டு மகி.. உனக்கு என்ன புதுசா அவன் மேல அக்கறை. இன்னும் மூணு மாசத்துல நீ தான் உன் லவ்வரோட அமெரிக்க போகப் போறியே.. யார் எப்படி போனா என்ன” மனம் தாங்காமல் அவளிடம் கடுப்பாக கேட்டான்.
“அதுவும் சரி தான். யார் எப்படி போனா எனக்கு என்ன..” தோளை உலுக்கிக் கொண்டவள் தன் உணவில் கவனமாகி விட்டாள்.
அதை பார்த்த நாதனுக்கு அத்தனை மனம் கனமாகிப் போனது. அவரின் கையை அழுத்தமாக பற்றிக் கொண்ட கேசவ்,
“எதையும் காட்டி குடுத்துடாதீங்க ப்பா.. இன்னும் மூணு மாசம் முழுதா டைம் இருக்கு. பார்த்துக்கலாம்” என்று கண்ணை மூடி சமாதனம் செய்தவன் மேற்கொண்டு சாப்பிட மனமில்லாமல் ஆதியை தேடி போனான்.
அலுவலக அறையில் பைல்களை பார்த்துக் கொண்டு இருந்தான் ஆதி.
“என்ன மச்சான் என்ன பண்ற?” இலகுவாக கேட்டுக் கொண்டே உள்ளே வந்தான் கேசவ்.
“பைல்ஸ் டா.. ரெண்டு கொட்டேஷன் வந்து இருக்கு போல.. பைனல் பண்ணிட்டியா?” கேட்டுக் கொண்டே லேப்டாப்பை பார்த்தான்.
“ம்ம் உன்னோட ஒபினியன் என்னன்னு கேட்டுட்டு முடிவு பண்ணலாம்னு வச்சு இருந்தேன்” என்றான்.
“ஓகே யா செக் பண்ணிட்டியா?” என்று அந்த கொட்டேஷனை கவனமாக படித்தான் ஆதி.
“ம்ம்” என்று சொன்னவன் அவனை நிமிர்ந்துப் பார்த்து,
“உன்னையே வருத்திக்கிட்டு இருக்கடா..” மனம் தாங்காது சொன்ன நண்பனை நிமிர்ந்துப் பார்த்த ஆதி விழிகள் சிவக்க அவனை முறைத்துப் பார்த்தான்.
அவனது கண்களில் தெரிந்த ரௌத்திரத்தில் மனம் துணுக்குற்றாலும் இதை இப்படியே விட முடியாமல்,
“உன் உடம்பு இருக்க இருக்க மோசமாகிட்டு இருக்குடா. அட்லீஸ்ட் ஒரே ஒரு நேரமாவது புட் எடுத்துக்கோ” என்றவனின் இறைஞ்சலை காதில் வாங்கிக் கொள்ளாமல்,
“இந்த ஒரு கொட்டேஷனை மட்டும் அப்ரூவ் பண்ணு. இன்னொன்னை பெண்டிங்ல போடு.. இது சரி வராதுன்னு தோணுது” என்று அவன் கேட்ட கேள்விக்கு எந்த பதிலையும் சொல்லாமல் அலுவலகம் பற்றி மட்டும் பேசினான் ஆதி.
இனி அவனிடம் இதை பற்றி எதையும் பேச முடியாது என்று புரிந்துக் கொண்டவனுக்கு விழியோரம் ஈரம் கசிந்தது.
“அப்புறம் வேலைக்கு ஆட்களை வர சொல்லிடு.. அவ இங்க இருக்குற வரை அவ நினைச்ச படி இருக்கட்டும்” என்று சொல்லிவிட்டு எழுந்துப் போய் விட்டான்.
போனவனை நெஞ்சில் உதிரம் கொட்ட பார்த்து நின்றான் கேசவ்.





