இப்பொழுதாவது தன்னை பார்ப்பான் என்று அவனை நிமிர்ந்து பார்த்த பெண்ணவளுக்குள் அத்தனை ஏமாற்றம். இறுதி வரை அவளை நிமிர்ந்தே பார்க்கவில்லை. திருமணம் முடித்து மச்சினன் முறைக்கு தேனருவியின் தம்பி நன்மாறன் அவன்னுக்கு கழுத்து செயின் அணிவிக்க வர,
“தட்ஸ் ஓகே..” என்று கையில் வாங்கிக் கொண்டான் மாப்பிள்ளையாகப் பட்டவன்.
அதில் தேனருவியின் முகம் சட்டென்று வடிந்து விட சிரித்த முகமாக வைத்துக் கொள்ள அத்தனை பாடாய் போனது அவளுக்கு. மாப்பிள்ளையின் இந்த செயலில் மணிக்கு வேதனை கவ்விக் கொண்டது நெஞ்சம் முழுக்க.
இருந்தாலும் முகம் மாறாமல் சிரிப்புடனே சபையில் நின்று இருந்தார். அவனது தகுதிக்கு இவர்கள் கொஞ்சமும் ஈடு இல்லை தான். ஆனால் பொன் வைக்கும் இடத்தில இவர் கூடை கூடையாக பூக்களை வைத்து கண்களை நிறைத்து இருந்தார்.
அதை எல்லாம் திரும்பிக் கூட பார்க்கவில்லை பாரி மலையமான்.
தேனருவியின் தங்கைகளான மதி, செங்கொடி இருவருக்கும் அத்தனை கட்டலாய் போனது.
“என்னடி மாமா இப்படி பண்ணிட்டாரு.. அக்கா முகமும் அப்பா முகமும் வாடி போயிடுச்சு.. அதோட நம்ம அண்ணன் முகமும் சேர்ந்து வாடிப் போயிடுச்சு” வேதனையுடன் தங்களின் உள்ள குமுறல்களை கொட்டிக் கொண்டார்கள்.
பாரி மலையமானுக்கு ஒரே ஒரு தங்கை மட்டும் தான். மற்றபடி வேறு யாரும் இல்லை. அப்பா அம்மா ஒருவரும் இல்லை. பெரிய பிசினெஸ் மேன்.. யாருக்கும் தலைவணங்காத ஆண் மகன். ஆணவமும் திமிரும் கொஞ்சம் அதிகம் அவனுக்கு.
அதை எல்லா இடத்திலும், எல்லோரிடமும் அப்பட்டமாக காட்டுவான். இதோ இப்பொழுது கட்டினானே அது போல.. அதை கூட தாங்கிக் கொண்டு தேனருவிக்கு அந்த சங்கிலியை மாலை மறைவில் அவளது கையில் திணித்தான். அதை தான் சுத்தமாக அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.
எங்கே கண்கள் கலங்கி காட்டிக் குடுத்து விடுமோ என்று பயந்துப் போனவள், இதழ்களை கடித்து தன் அழுகையை அடக்கிக்கொண்டு வந்தவர்களுக்கு வணக்கம் வைத்துக் கொண்டு இருந்தாள்.
அதுவும் கொஞ்ச நேரம் தான். சரியாக அவனது வணிக வட்டாரத்தில் இருக்கும் பெரிய தலைகள் எல்லாம் வந்த உடனே இவன் மேடையில் இருந்து கீழே இறங்கி விட்டான். தேனருவி விக்கித்துப் போனாள்.
இவள் பக்கம் இருந்து இன்னும் ஒருவர் கூட புகைப்படம் எடுத்துக் கொள்ளவில்லை. அதற்குள் கீழே இறங்குகிறாரே என்று அதிர்ந்து நின்றாள்.
அப்பாவின் அதிர்ந்த முகம் பார்த்து சுதாரித்தவள், வேகமாய் கணவனின் பின்னே சென்று,
“என்னங்க..” என்று அவனை அழைத்தாள். அதற்குள் அவன் அங்கு இருந்த மணமகன் அறைக்குள் நுழைந்து விட்டான். பின்னோடு போவதா வேண்டாமா என்று ஒரு கணம் யோசித்தவள் தந்தையை நினைத்து வேறு வழியில்லாது அவளும் அந்த அறைக்குள் நுழைந்தாள்.
“ஏய்.. நீ எதுக்கு இப்போ உள்ள வர்ற” என்று வந்த உடனே பாரி அவளிடம் கர்ஜிக்க, அதில் திகைத்து பயந்துப் போனவள்,
“இல்ல அது நீங்க பட்டுக்க வந்துட்டீங்க.. அங்க அப்பா..” முடிக்கும் முன்பே,
“இவ்வளவு நேரம் அங்க நின்னதே பெரிய விசயம்.. இதுக்கு மேல என்னால முடியாது” என்றவன்,
“இதை சொல்ல தான் அனுமதி வாங்காம என் அறைக்குள்ள வந்தியா? இன்னொரு முறை இப்படி கேட்டு கேள்வி இல்லாம என் அறைக்குள்ள வர்ற வேலை வச்சுக்கிட்ட அவ்வளவு தான்” என்றவனின் பேச்சில் இன்னும் திகைத்துப் போனவளுக்கு என்ன மீறியும் கண்ணீர் வந்து விட்டது.





