Notifications
Clear all

அத்தியாயம் 52

 

Admin
(@ramya-devi)
Member Admin
Joined: 12 months ago
Posts: 960
Topic starter  

கார்த்திக்கு அந்த வீடு தானே பிரச்சனையே தவிர சர்வா கிடையாது. சகிக்காக பேச போய் தன்னை ஒரு நிலையில் கொண்டு வந்தவன் சர்வா தானே... அதோடு தனக்காகவும் சேர்த்து தன் அண்ணன் யோசித்து செயல் பட்டதில் நெக்குருகி போய் தான் இருந்தான். ஆனால் அதை எப்படி அவனிடம் காட்டுவது என்று தெரியாமல் அவன் தடுமாறிக்கொண்டு இருந்தான்.

அந்த தடுமாற்றமே இருவருக்கும் இடையே ஒரு இடைவெளி கொடுத்து இருந்தது. அந்த இடைவெளியை போக்க தான் சர்வாவை இன்று சகி அவளது வீட்டில் தங்க வைத்தது. அதோடு அவனின் முகத்தில் தென்பட்ட தனிமை... அங்கு போய் அது இன்னும் அதிகரிக்குமே தவிர குறையாது என்று நன்கு உணர்ந்தவள், அவனின் மன நிலையை முன்னிறுத்தியே சர்வாவை தன் தகப்பனின் மூலம் இங்கு தங்க சொன்னாள்.

அதே போல அவனது தனிமையும் விலகியது. அதோடு இதோ அவள் எதிர் பார்த்தது அண்ணன் தம்பி இருவரும் ஒன்றாய்.. பார்க்கவே கண்கள் நிறைந்துப் போனது. அவளையும் அறியாமல் அவளது தலை சர்வாவின் தோளில் சாய்ந்தது. ஒரு கரத்தில் கார்த்தியின் தலையை வருடி விட்டவன், இன்னொரு கரத்தால் சகியின் தலையை இறுக்கிக் கொண்டான் தன் கழுத்தோடு.

மூவருக்குமான ஒரு நெருக்கம், அது வரை புழுங்கிக்கொண்டு இருந்த புழுக்கம் சர்வாவை விட்டு நிரந்தரமாக விலகி ஓடியது போல இருக்க பேரமைதி எழுந்தது அவனுக்குள்.

தலையை பற்றி இருந்த கரம் சிறிது நேரத்திலே அவளின் இடையை இறுக்கிப் பிடிக்க ஆரம்பிக்க சகி நிமிர்ந்து அவனை முறைத்துப் பார்த்தாள்.

கார்த்தியின் கண்களை வலக்கையால் ஒரு நிமிடம் மூடியவன், சகி விலக விலக தலையை இடக்கையால் இறுகப் பற்றி வன்மையாக அவளின் இதழ்களை கவ்விக் கொண்டான்.

“அடேய்ங்களா ஒரு சின்ன பிள்ளையை வைத்துக் கொண்டு என்ன காரியம் செய்துக்கிட்டு இருக்கீங்க” என்று சர்வாவின் கரத்தை தன் கண்ணிலிருந்து எடுக்க பார்க்க ம்ஹும்... சர்வாவின் கரத்தை எடுக்கவே முடியவில்லை. தன் கண்களை பொத்தியதன் காரணத்தை உணர்ந்தவனுக்கு வயிறு பற்றிக் கொண்டு வந்தது.

“நானும் என் மிருவோட இப்படி எல்லாம் பண்ணுவேன்... நீங்க பார்த்து வயிறு எறியணும்..” என்று அவன் கான்டாக சொல்ல, முத்தமிட்ட நான்கு இதழ்களிலும் ஒரு மெல்லிய புன்னகை வந்தது.

பின் நிதானமாக தன் ஆக்கிரமிப்பில் இருந்து அவளின் இதழ்களை விடுவித்தவன்,

“அதை போய் முதல்ல பண்ணுடா... எதுக்கு பூசை வேலை கரடியா இங்க இருக்க” என்று சர்வா அவனது காலை வாரிவிட,

“எதுக்கு நான் அந்த பக்கம் போனவுடனே எதுவும் தெரியாத என் சகியை கெடுத்து குட்டி செவுரா ஆக்கவா... அது நான் இருக்கிற வரை நடக்காதுண்ணா...” என்று முறைத்தான்.

“டேய் தம்பி நீ இப்ப தான்டா ஆரம்ப பாடத்துல இருக்க... ஆனா நான் இந்த விசயத்துல பிஹெச்டி பண்ணி இருக்கேன்... சோ என் கிட்ட வாலாட்டாத” என்றான் நக்கலாய்.

இருவரும் ரொம்ப இயல்பு போல பேசிக் கொள்வதை பார்த்த சகிக்கு கண்கள் இரண்டும் கலங்கிக் கொண்டு வந்தது. அப்படியே அந்த நிமிடத்தை அவள் அனுபவிக்க,

இங்க இருவரும் ஒருவரை ஒருவர் வாரி விட்டுக் கொண்டு நக்கல் பண்ணிக்கொண்டு இருந்தார்கள் ரொம்ப இயல்பாய். இருவரின் நெருக்கத்தையும் இருவரும் கண்டு கொண்டாலும் அதை பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

உள்ளுக்குள் அப்படி ஒரு நெகிழ்வு பிறந்தது இருவருக்கும்.. ஆனால் அதை காட்டிக் கொள்ளாமல் எப்பொழுதும் போல எதிரும் புதிருமாய் இருந்தார்கள். அந்த நேரம் சத்தம் கேட்டு வெளியே வந்த கிருஷ்ணன் இவர்கள் மூவரும் ஒன்றாய் அமர்ந்து அதுவும் சர்வாவின் மடியில் சிறு பிள்ளை போல கார்த்திக் படுத்துக் கொண்டு அவனையே வம்பிழுத்துக் கொண்டு இருந்ததை பார்த்து தன் கண்களை நம்ப முடியாமல் திகைத்து தான் பார்த்தார். சகியின் எச்சரிக்கையான பார்வையில் தன் வியப்பை மாற்றிக்கொண்டு,

“தூங்கலையா ஒருத்தரும்...” என்று அவரும் அவர்களோடு கால் நீட்டி அமர்ந்து விட, அவரது மடியில் கொஞ்சமும் யோசிக்காமல் சர்வா படுத்து விட, ஒரு கணம் கிருஷ்ணன் ஆடி தான் போனார். அதன் பிறகு அவரும் அவருக்கு தலையை கோதி கொடுக்க ஆரம்பிக்க ஏனோ சொல்லோன்னாத ஒரு இதம் அங்கு நிறைந்துப் போனது.

எந்த எதிர்பார்ப்பும் அவரின் மனதில் இல்லை. தன் மகளை கட்டுவான் என்றெல்லாம் அவரது சிந்தனை இல்லை. தன் மகனை எப்படி கையாள்வாரோ அப்படியே சர்வாவையும் கையாண்டார்.

அதன் பிறகு நால்வரும் விடியும் வரை அப்படியே இருந்தபடி தூங்கினார்கள். மிரு காலையில் கொட்டாவி விட்டபடி எழுந்து வந்து பார்க்க நால்வரும் இருந்த நிலையை கண்டு அதிர்ந்து போனாள்.  

ஆனாலும் பார்க்க அந்த காட்சி ரொம்ப இயல்பாக இருக்க கண்டு அதை மிஸ் பண்ண மனம் வராமல் கேமராவில் பதித்துக் கொண்டாள். அதில் சற்றே சத்தம் வர கண்களை கசக்கியபடி நால்வரும் எழுந்தார்கள்.

அப்பொழுது தான் நேற்றிரவு அப்படியே தூங்கியது புத்தியில் உறைய நால்வரும் அசட்டு சிரிப்புடன் தங்களது வேலையை பார்க்க சென்றார்கள்.

இன்றைக்கு ஞாயிறு என்பதால் சற்று சோம்பலாகவே விடிந்தது. இன்றைக்கு ஒரு நாள் கார்த்தியை சர்வாவின் வீட்டுக்கு போக சொல்ல அவன் எல்லோரையும் அழைக்க கிருஷ்ணனின் சம்மதத்துடன் சர்வாவின் வற்புறுத்தலில் அனைவரும் கிளம்பி சர்வாவின் வீட்டுக்கு சென்றார்கள்.

அனைவரும் அங்கு ஏற்கனவே வந்த வீடு தான் என்பதால் பழகிய தோற்றம் கண் முன் வந்தது. சகி எல்லோருக்கும் சமைக்க சொல்லி வேலையாட்களிடம் சொல்லிவிட்டு பிள்ளைகளை கவனிக்க போக, அவளின் பின்னாடி மிருவும் போய் விட்டாள்.

ஆண்கள் மூவரும் கூடத்தில் அமர்ந்து இருந்தார்கள். பெரும் மௌனம் அவ்விடத்தை சூழ்ந்து இருந்தது. யார் அதை கலைப்பது என்பது போல இருக்க, நீண்ட தயக்கத்துக்கு பிறகு சர்வாவே அந்த மௌனத்தை கலைத்தான்.

“கார்த்திக்கு மிருவை கல்யாணம் பண்ணி குடுகுறீங்களா சார். எல்லோரையும் விட நல்லா பார்த்துக்குவான் உங்க பெண்ணை... இந்த சொத்துல பாதி அவனோடது தான். அதை அவன் பெயர்லயே ரெஜிஸ்டரும் பண்ணிட்டேன்...” என்று கிருஷ்ணனை பார்த்தான்.

“அது தம்பி..” அவர் இழுக்க,

“சகி மூலமா தான் நேத்திக்கு இந்த விசயம் தெரிய வந்தது...! சின்ன பிள்ளைங்க சார். பிரிக்க வேணாமே... ஏற்ற தாழ்வு பார்த்து வேணான்னு சொல்லிடாதீங்க... கார்த்திக்கு மிருவை விட ஒரு பொண்ணு கிடைக்க மாட்டா. அதே போல தான் மிருவுக்கும்... ப்ளீஸ் சார்...” என்று அவன் தன் நிலையை விட்டு தன் தம்பிக்காக கைக்கூப்பி கேட்க பார்த்துக் கொண்டு இருந்த கார்த்திக்கு நெஞ்சை அடைத்துக் கொண்டு வந்தது.

சர்வாவின் திமிர் தெரியும். ஆளுமை தெரியும்.. கம்பீரம் தெரியும்... கோவமும் தெரியும். ஏன் அவனது தோளில் திறமையும் தெரியும். எதிராளியை பேச விடாமல் எடுத்த காரியத்தை சிரத்தியுடன் செய்யும் திறமையும் தெரியும். ஆனால் அவனது பாசம் மட்டும் கார்த்திக் அறிந்திராதது. அதை இப்பொழுது தான் சமீபகாலமாக பார்த்துக் கொண்டு இருந்தான்.

அதற்கு அத்தாட்சி இதோ தன் உயர்த்தை விடுத்து தன் தம்பிக்காக கைக்கூப்பி கேட்டுக் கொண்டு இருக்கிறான். கண்கள் எல்லாம் கலங்கிக் கொண்டு வந்தது கார்த்திக்கு...!

“தம்பி என்ன இது கையை கூப்பிக்கிட்டு...” என்று அவனது கையை பிடித்து கீழே இறக்கி விட்டவர், “நமக்குள்ள இந்த கேள்வியே வேணாம். எப்போன்னு சொல்லுங்க என் பெண்ணை மணமேடையில உங்க தம்பி பக்கத்துல உட்கார வைக்கிறேன்” என்றார் அதை விட பெருந்தன்மையாக.

இருவரின் பேச்சிலும் தன் நலனே முன்னிருத்தி இருக்க கண்டு இந்த அன்பு தானே தனக்கு இத்தனை நாள் கிடைக்காமல் இருந்தது... என்று எண்ணியவன்,

சட்டென்று சர்வாவை பார்த்தான். கிட்டத்தட்ட கார்த்திக்கும் சர்வாவுக்கும் பெரிய வித்யாசம் இல்லை. என்ன இவன் காசுக்காக வெளியே அனாதையாக சுற்றி திறந்தான். சர்வா மூணு நேரமும் பணத்தில் புரண்டு இருந்தனே தவிர அவனுக்கும் இந்த அன்பும் பாசமும் கிடைக்கவில்லை. கிடைத்த பொழுதும் அது கைநழுவி போய் அவனை இன்னும் ஏமாற்ற செய்தது...! அதனால் தன்னை விட சர்வாவுக்கு வலியும் வேதனையும் அதிகம் என்று யோசித்தவன்,

“இந்த கல்யாணம் நடக்கணும்னா ஒரு கண்டிஷன் இருக்கு” என்றான் கார்த்திக்.

“என்னடா கண்டிஷன்?” என்று இருவருமே புருவம் சுருக்க,

“சகிக்கு முதல்ல கல்யாணம் நடக்கணும். அதுக்கு பிறகு தான் எங்களுக்கு” என்றான்.

அவர்களின் பேச்சை கேட்டுக் கொண்டு வந்த சகி,

“கார்த்திக் இப்போ உன் கல்யாணத்தை மட்டும் பேசுனா போதும். ஏன் தேவை இல்லாத வேலை... எனக்கு இதுல எல்லாம் பெருசா விருப்பம் இல்லை..” என்றாள்.

Loading spinner


   
Quote
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top