அந்த வாரம் வேலை முடித்துக் கொண்டு அவரவர் வீடு திரும்பினார்கள். கிருஷ்ணனிடம் இருந்து பிள்ளைகளை கூட்டிக்கொண்டு சர்வா காரை கிளப்பினான் கொஞ்சமும் மனமே இல்லாமல். ஏனோ அந்த பெரிய வெட்டின் தனிமை முகத்தில் அறைந்தது அவனுக்கு. அவனுக்கு மட்டும் இன்றி அவனது பிள்ளைகளுக்கும் அந்த தனிமை பிடிக்காமல் போக, தன் தகப்பனிடம் வர மறுத்து சகியின் காலை கட்டிக் கொண்டு நின்றார்கள் இருவரும்.
அதை பார்த்தவனுக்கு முதலில் ஏக்கமாக இருந்தாலும் தன் இயலாமையில் கோவம் தான் வந்தது. அன்றைக்கு மாதிரி இன்றைக்கும் அவர்களை இழுத்துக் கொண்டு போக பார்க்க, சகி வேகமாய் பிள்ளைகளை தன்னிடம் இழுத்துக் கொண்டாள்.
“ப்ச் விடு...” என்று அவளிடம் இருந்து பிள்ளைகளை பிடுங்க வர, அதை பார்த்துக் கொண்டு இருந்த மற்ற மூவருக்கும் வேதனையாகி போக, என்னவோ பண்ணுங்க என்று உள்ளே போய்விட்டார்கள்.
“ஏன் இப்படி பிள்ளைங்க கிட்ட முரட்டு தனமா நடந்துக்குறீங்க... கொஞ்சம் மென்மையா ஹேண்டில் பண்ணா தான் என்னவாம்” என்று முறைத்தாள்.
“எனக்கு மென்மையா எல்லாம் பேச வராதுடி. நான் இப்படி தான்” என்று மல்லுக்கு நின்றவனை கோவமாக பார்த்தவள்,
“முதல்ல பிள்ளைங்க மேல இருந்து கையை எடுங்க...” என்றவள் அவனிடம் இருந்து பிள்ளைகளை தன் கைக்கு வாங்கியவள்,
“இன்னைக்கு ஒரு நாள் பிள்ளைங்க என் கூட இருக்கட்டும்...” என்றபடியே பிள்ளைகள் தேம்புவதை பார்த்து தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்.. கைக்கொள்ளாமல் இரு பிள்ளைகளையும் வைத்துக் கொண்டு இருப்பவளை விரக்தியுடன் பார்த்தவன் ஒன்றும் சொல்லாமல் காரில் ஏறினான். அவனது முகத்தில் இருக்கும் ஏமாற்றத்தின் சாயலை உணர்ந்தவளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.. அவளாக உள்ளே கூப்பிட முடியாதே அவனை..
உள்ளே நோக்கி குரல் “அப்பா...” என்று குரல் கொடுத்தாள்.
அவர் வெளியே வர, சகி அவருக்கு கண்ணை காட்டினாள். அதில் புரிந்துக் கொண்டவர்,
“தம்பி நாளைக்கு விடுமுறை தானே.. நீங்க மட்டும் தனியா எதுக்கு அந்த வீட்டுக்கு போய்க்கிட்டு... இங்கயே இன்னைக்கு தங்குங்குங்க...” என்று அவனை உள்ளே கூப்பிட,
“இல்லைங்க சார்... பரவாயில்லை” என்று அவன் மறுக்க,
“அட வாங்க தம்பி நீங்க உள்ளே... அது தான் கார்த்திக் இருக்கான் இல்லையா... வாங்க உள்ள...” என்று அவனின் கையை பிடித்து உள்ளே கூப்பிட்டு போக என்ன மாதிரி உணர்ந்தான் என்று வரையறுக்கவே முடியவில்லை.
சகியை பார்த்தான். அவள் அவனை கண்டுக் கொள்ளவே இல்லை. பிள்ளைகளோடு ஐக்கியமாகி விட்டாள். அதில் பல்லைக் கடித்தவன் கடுப்போடு உள்ளே வந்தான்.
இரு கரத்திலும் இருக்கும் பிள்ளைகளை கார்த்திக் வாங்க வர, இனி சகியின் கழுத்தை கட்டிக்கொண்டு வர மறுக்க, ஆதுக் குட்டி கார்த்திக் கை நீட்டும் முன்பே அவனிடம் தாவினான்.
தாவி வந்த பிள்ளையை அலேக்காக தூக்கி மேலே தூக்கி போட்டு விளையாட ஆரம்பித்தவன்,
“ஏய் ரெட்டை சிண்டு உன்னை ஒரு நாள் இரு சூப் வச்சி குடிக்கிறேன்...” என்று அவளின் முகத்தின் அருகே சென்று தன் முகத்தை காட்டி பல்லை கடித்துக் கொண்டு அவன் கத்த,
“போதா பந்தி...” என்று இனி குட்டி அவனை திட்ட,
“எது பன்னியா? எவ்வளவு கொழுப்பு இருக்கணும். இரு இதுக்காகவே உன்னை கடிச்சி வைக்கிறேன்..” என்று அவளை கடிக்க வர, அவனது முகத்தில் தன் கரத்தை பதித்து ஒரு புறமாய் தள்ளி விட்டவள் தன் முகத்தை சகியின் கழுத்தில் புதைத்துக் கொண்டாள்.
“அடியே கருவாச்சி என்னையவே தள்ளி விடுறியா? இரு உன்னை வச்சுக்குறேன்...” என்று அவளிடம் வம்பிழுத்துக் கொண்டு இருக்க ஆதுக்கு அது போருக்க முடியாமல் அவனது தலைமுடியை பிடித்து இழுத்து தன்னை கவனத்தில் வைக்க பார்த்தான். அதில் கார்த்தியின் கவனம் அவனிடம் போய் விட,
“புள்ளைய கருவாச்சி சொல்லாதடா எரும...” என்று இனி குட்டியை இடுப்பில் வைத்த படி சகி சமையல் அறைக்குள் போய் விட,
“இல்ல என்ன பார்த்தா ஆத்தாவுக்கும் மகளுக்கும் எப்படிடி இருக்கு... இல்ல எப்படி இருக்குன்னு கேக்குறேன்... ஒருத்தி என்னனா பன்னிங்குறா.. நீ என்னனா எருமைன்னு சொல்ற...” அவன் பல்லைக் கடித்தான்.
உள்ளே போனவள் வெளியே வந்து கார்த்தியை மேலும் கீழும் பார்த்து “ம்ம்... பார்க்க அப்படியே சூல இருந்து தப்பிச்சு வந்த மாதிரி இருக்கடா” என்றவள் அவன் அடிக்க வரவும் வேகமாய் சமையல் அறைக்குள் நுழைந்துக் கொண்டாள் இனியுடன்.
“கையில மாட்டு... அப்புறம் இருக்கு உங்க ரெண்டு பேருக்கும்..” என்று கத்தியவன் ஆதுவுடன் விளையாட ஆரம்பித்தான்.
மிருவும் சமைக்க உதவ பிள்ளைகளுக்கு பிடிச்ச ப்ரெட் டோஸ்ட் போட்டுவிட்டு, தங்களுக்கு வெஜ்ஜிடபில் வடை போட்டு எடுத்துக் கொண்டவள் மிருவிடம் தேநீரை எடுத்து வர சொல்லிவிட்டு கூடத்தில் வந்து அமர, அங்கு கார்த்தியின் இலகுவான உடையில் சர்வா அமர்ந்து இருந்தான்.
அவனோடு கிருஷ்ணனும் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்க, கார்த்தியும் ஆதுவும் கட்டி புரண்டு விளையாடிக் கொண்டு இருந்தார்கள். இனியை சர்வா வாங்கிக்கொள்ள, அவனது கைபிடியில் சிறிது நேரம் இருந்தவள் மீண்டும் சகியின் முந்தானையை பிடித்துக் கொண்டாள்.
அதை பார்த்த கிருஷ்ணன்,
“பாப்பா இங்க வாங்க டா... டீ சூடா இருக்கும். பாப்பா மேல பட்டுச்சுன்னா புண்ணாகிடும்” என்று அவளை தன் மடியில் இருத்திக் கொண்டார்.
கார்த்திக் தன் தம்பி என்றவுடன் சகியின் வீட்டுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்துக் கொடுத்தான். ஆனால் சகி அதை மறுக்க,
“நான் உனக்கு ஒண்ணும் செய்யல என் தம்பிக்காக தான் செய்யிறேன்...” என்று முறைத்தவன், அவள் தடுக்க தடுக்க அந்த சிறிய வீட்டில் தேவையான அனைத்து வசதிகளும் நிறைந்து வழிந்தன.. அதோடு கூடம் முதற்கொண்டு அறைகளுக்கும் அவன் ஏசி வாங்கி மாட்டி விட, கிருஷ்ணனுக்கு என்னவோ போல் ஆனது.
“இதெல்லாம் எதுக்கு தம்பி... வேணாமே...” என்று அவர் சங்கடப் பட,
“என் பிள்ளைகள் வந்து போகுது இல்லையா சார். அவங்களுக்காகவாவது இருக்கட்டுமே என்று விட, அதன் பிறகு யாரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.
கார்த்திக் எதிலையும் தலையிட்டுக் கொள்ளவில்லை. அவனை பொறுத்த வரை அவனது வாழ்வு இந்த மூவருடன் மட்டும் தான். இப்பொழுது புதிதாக சர்வாவும் அவனது பிள்ளைகளும் என்று ஆனது.
அவனை பொறுத்தவரை காசு பணம் எதுவும் வேணாம். அவனது தனிமை போகிற அளவு அவனை சுற்றி ஆட்கள் இருக்க வேண்டும். அது இருந்தாலே போதும்... அவன் எதிர் பார்த்தது அவனுக்கு முழுமையாக கிடைக்க அவன் எதையும் சிரத்தில் எடுத்துக் கொள்ளவில்லை.
சர்வா அப்படியே போகாமல் வீட்டுக்குள் வருவதை கேள்வியாக பார்த்தான் முதலில். பிறகு என்ன எண்ணினானோ எதுவும் பேசவில்லை. இங்கு வந்து தங்குவதை அவன் எந்த கருத்தும் சொல்லவில்லை.
அதோடு உரிமையாக தான் பயன் படுத்தும் உடைகளை சர்வா இயல்பாக அணிந்தது மனதில் ஒரு இளக்கத்தை கொடுத்தது அவனுக்கு. ஆனாலும் பெரிதாக அவனிடம் எதுவும் பேசவில்லை.
ஆனால் அவனது காலடியில் தான் படுத்து உருண்டுக்கொண்டு இருந்தான் அவனது மகனோடு. அவனுக்கு பக்கத்தில் தான் பெண்கள் இருவரும் அமர்ந்து அனைவருக்கும் பரிமாறிக் கொண்டு இருந்தார்கள்.
அந்த காட்சியை பார்த்துக் கொண்டு இருந்த கிருஷ்ணனுக்கு மனதை பிசைந்தது... என்னவோ தன்னுடைய இரு பெண்களுக்கும் திருமணம் ஆகி அவர்களின் கணவனோடு தந்தையின் வீட்டுக்கு அவர்கள் பெற்ற பிள்ளைகளோடு வந்து இருப்பது போல உணர்ந்தார்.
சர்வாவின் பார்வை சகியின் மீதே இருந்தது. அவளுக்கு அது ஒரு மாதிரி குறுகுறுப்பை ஊட்ட இடை மறைத்த புடவையை மறுபடியும் ஒழுங்காக மேல இழுத்து விட்டாள். அதை பார்த்த சர்வாவுக்கு கடுப்பாய் வந்தது.
பிள்ளைகளுக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டே சகியும் சாப்பிட, அவளுக்கு அதிக சிரமம் வைக்காமல் அனைவரும் ஆளுக்கு ஒரு வாய் பிள்ளைகளுக்கு ஊட்டி விட்டுக்கொண்டே இரவு உணவு சாப்பிட்டு முடித்தார்கள்.
அன்றிரவு சகி பிள்ளைகளை தன்னோடு படுக்க வைத்துக் கொள்ள அவர்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான். கத கதை என்று ஆரம்பிக்க இட பக்கம் இனியும், வலப்பக்கம் ஆதியும் படுத்துக் கொண்டு சகியை தொல்லை பண்ண ஆரம்பிக்க, அவளும் கதை சொல்ல ஆரம்பித்தாள்.
சகி ஒரு பெரிய காடு என்று தான் ஆரம்பித்து இருந்தாள். அதற்குள் ஆதுக்கு ஆயிரத்தெட்டு சந்தேகம் வந்து கேள்வி மேல் கேள்வி எழுப்பினான்.
“அடேய் நானே இன்னைக்கு தான்டா முதல் முதலா கதை சொல்ல போறேன்.. நீவேற ஆயிரத்தெட்டு சந்தேகம் கேட்டு வைக்கிற...” என்று பாவமாய் புலம்பியவள், அவன் கேட்ட அத்தனை கேள்விக்கும் நிதானமாக பதிலை சொன்னாள். அது இனிக்கு பிடிக்காமல் “கத... கத... ஏனும்..” என்று சிணுங்க, அவளை தட்டிக் கொடுத்துக் கொண்டே பாப்பா தூங்குனதுக்கு பிறகு ஆதுக்குட்டி யோட சந்தேகத்தை எல்லாம் தீர்ப்பேனாம்... சரியா செல்லம்” என்று அவனையும் சமம்தான் செய்து மேற்கொண்டு கதை சொல்ல ஆரம்பித்தாள்.
அந்த கதையில் வீட்டில் இருந்த அத்தனை பேரும் தூங்கிப் போனார்கள். பிள்ளைகள் தூங்கி விட அங்கும் இங்கும் எரிந்துக் கொண்டு இருந்த விளக்கை அணைக்க எழுந்தவள் கூடத்தில் படுத்து இருந்த மூவரையும் பார்த்தாள்.
அதிலும் அவளது பார்வை அதிகம் சர்வாவின் மீது தான் இருந்தது... சர்வாவுக்கு என்ன இல்லை.. எல்லாமே இருக்கு. ஆனால் எதுவும் இல்லாதது போல இந்த சின்ன இடத்தில் படுத்து தூங்குகிறான். கால் நீட்ட கூட வசதி இல்லை... என்று அவனது நிலையை எண்ணி கலங்கியவள், தன் கண்ணீரை துடைத்துக் கொண்டு வெளி விளக்கை அனைத்து விட்டு வாசலில் போய் அமர்ந்தாள்.
ஏனோ நெஞ்சில் ஒருவித பாரம்... கண்களை மூடி வெளியே இருந்த சுவரில் அப்படியே சாய்ந்து அமர்ந்து விட்டாள். சிறிது நேரத்திலே அவளது மடியில் ஒரு பாரம் படர, கண்களை திறக்கவே இல்லை...





