சர்வாவின் வாயில் இருந்து வந்த வார்த்தைகளை கேட்ட அனைவரும் திடுக்கிட்டு தான் போனார்கள். அதிர்வுடன் பார்த்தவர்களின் பார்வையை கொஞ்சம் கூட கண்டு கொள்ளாமல்,
“என்ன கேஸ் வந்தாலும் நான் பார்த்துக்குறேன்... நீங்க சத்தமில்லாம முடிச்சிடுங்க” என்றான்.
“டேய் பாவி உன்னை பெத்ததுக்கு நல்ல கைம்மாறு பண்ணினடா... உன்னை போய் புள்ளையா பெத்தமே... நீ நல்லாவே இருக்க மாட்ட... நாசமா போயிடுவ... ஒளிஞ்சி போயிடுவ...” என்று வாய்க்கு வந்த படி கவிதா திட்ட ஆரம்பித்தார்.
“ம்ஹும்... உன்னை பத்தி இப்போ தான் தெரியுது சர்வா... அதுவும் இவரு போனை ஸ்பீக்கர்ல போட்டதுனால தான் தெரியுது... இல்லன்னா உன்னை இன்னும் உத்தமன்னு நினைச்சி இருப்போம்.. ஏதோ தண்டனை வாங்கி குடுத்து நீதியை நிலை நாட்டுறதா நினைச்சிக்கிட்டு இருப்போம். இப்போ தான் உன் உண்மையான குணம் வெளியில வருது... எங்களை சொல்றியே நீ என்னடா யோக்கியம் நீயும் எங்க கிட்ட இருக்க காசு பணத்துக்காக தானே எங்களை உயிரோட கொள்ள சொல்ற...?” என்று செல்வனாயகம் ஆவேசமாக கேட்க,
“ப்ச்...” என்று காதை குடைந்தவன், “நான் பேசுறதை நீ கேட்கனும்னு தான் நான் விக்ரமை ஸ்பீக்கர்ல போட சொன்னேன்...” என்றவன் மேலும்,
“என் யோக்கியத்தை பத்தி கேட்டல்ல... உங்க ரெண்டு பேர் கிட்ட இருந்து தானே நான் வந்தேன். பிறகு நான் மட்டும் எப்படி உத்தமானா இருக்க முடியும். தாய் எட்டடி பாய்ஞ்சா பிள்ளை பதினாறு அடி பாயும்னு கேள்வி பட்டது இல்லை...” என்று நக்கலாக சிரித்தவன்,
“மூணு பேரை உயிரோட நீ கொல்லல.. அது மாதிரி தான் இதுவும்... செத்து போ...” என்று சொன்னவன்,
“விக்ரம் எனக்கு ஒரு உதவி, ரெண்டு பேரும் தீக்குளிக்கிறத எனக்கு லைவ் டெலிகாஸ்ட் பண்ணுங்க...” என்றவனின் குரலில் இருந்த குரூரம் கண்டு சர்வாவை பெற்றவர்களுக்கு இப்போதே பேரச்சம் எழுந்தது...
“அய்யோ... நெருப்பு மேல பட்டா என்னத்துக்கு ஆகும்..” என்று எண்ணி இருவரும் ஜீப்பிலிருந்து குதிக்க பார்க்க காவலர்கள் அவர்களை பிடிக்க பார்க்க,
விக்ரம் வேணாம் என்று கண்ணை அசைத்தான். அதனால் இருவரும் சாலையில் குதித்ததை யாரும் தடுக்கவில்லை. வேகமாக ஓடிக் கொண்டு இருந்த ஜீப்பில் இருவரும் குதித்து சாலையில் உருண்டு பிரண்டு இரத்த சகதியில் மிதந்த நேரம் ஒரு தண்ணி லாரி கட்டுப்பாடு இல்லாமல் வந்துக் கொண்டு இருந்தது எதிர் புறம் இருந்து.
அதை பார்த்த இருவருக்கும் கொலை நடுக்கம் எடுக்க வேகமாய் சாலையில் இருந்து எழ பார்த்தார்கள். ஆனால் விழுந்ததில் கால் அடிபட்டு இருக்க அவ்வளவு வேகமாய் அவர்களால் எழ முடியவில்லை. கண்களில் இருந்து முதல்முறை இருவருக்கும் கண்ணீர் வந்தது... சாவு நிச்சையம் என்று உயிர் நடுங்கி போய் பயத்தில் வேகமாக வந்துக்கொண்டு இருந்த லாரியை பார்த்தார்கள்.
அதி வேகமாய் வந்த லாரியை உயிர் பயத்துடன் பார்த்துக் கொண்டு இருக்கும் பொழுதே இருவரின் மீதும் ஏறி இறங்கியது...! பாதி உடம்பு சிதைந்து போனது... இடுப்புக்கு கீழ் ஒன்றுமே இல்லை... அதோடு இருவரின் முகத்திலும் பாதி காயம். முகம் பாதி அளவு யார் என்று தெரியாத அளவுக்கு சிதைந்து போனது...
மூட்டையாய் அள்ளிக்கொண்டு போன ஆம்புலன்ஸ் அரசு மருத்துவமனையில் குப்பைகள் கொட்டும் ஒரு இடத்தில் துணி கூட கீழே விரிக்காமல் அப்படியே போட்டுவிட்டு சென்றது...
அங்கிருந்த செவிலியர்கள் காவலர்களிடம் விசாரித்த வரையில் அதுங்க அனாதை என்று பார்க்க யாரும் இல்லை என்று சொல்லிவிட அவர்களின் மதிப்பு குப்பை என்று முடிவு செய்து ஒரு மருத்துவமும் பார்க்காமல் போய் புழு வைக்க ஆரம்பிக்க கார்பரேஷன் ஆட்கள் அள்ளிக் கொண்டு போய் குப்பையோடு குப்பையாக போட்டு விட்டனர். குப்பையில் போடவும் நாய் கூட்டமும் கழுகு கூட்டமும் அவர்களை சுத்தி நின்று கொத்தி கொதறி எடுத்தது... அதில் இழுத்துக் கொண்டு பாதி உடம்பாய் கிடந்தார்கள்.
ஒரு கண் வைத்து தான் பார்க்க முடிந்தது. முகத்தில் அடி படவும் வாய் பாதி உடைந்து நாக்கு இழுத்துக் கொள்ள பேச்சும் வரவில்லை வெளியே...! மிக கொடூரமான அருவருக்க தக்க உருவமாய் அவர்கள் ஆகிப் போனார்கள். இதை விடவா ஒரு தண்டனை இவர்களுக்கு வேண்டும்... இனி வாழும் நாள் வரை இப்படி தான். காசு காசு என்று அலைந்தவர்களுக்கு ஒரு வாய் தண்ணி குடுக்க கூட ஆளில்லை.
ஏன் அவர்களால் எழுந்து கூட சென்று தன் தாகத்தை தீர்த்துக் கொள்ள முடியாது..! என்ன வாழ்க்கை...
என்ன இல்லை இந்த வாழ்க்கையில்... அண்ணன் தம்பியோடு உறவு ஒன்று சேர்ந்து உற்றமும் சுற்றமும் சேர்ந்து வாழும் வாழ்க்கையை விடவா பணம் கொடுத்து விடும்.. மனம் விட்டு பேசி சிரித்து நோய் இல்லாமல் வாழும் வாழ்க்கை விடுத்து பணம் பணம் என்று அலைந்து நேரத்துக்கு ஒரு கைப்பிடி மாத்திரையை அள்ளி தின்பதா வாழ்க்கை...!
இன்னும் உறவுகளுக்கு இங்கு மதிப்பு இருந்துக் கொண்டு தான் இருக்கிறது...! எவ்வளவு தான் பணம் இருந்தாலும் நம் தனிமையை பணம் போக்கிடாது... சர்வாவும் சகி அவனது வாழ்க்கையில் வந்த பிறகு தான் அதை உணர்ந்துக் கொண்டான்.
இல்லை என்றால் அவனும் அடுத்த செல்வநாயகமாய் மாறி இருப்பான்... சில இடங்களில் விதிவிலக்கு இருக்கும். எல்லோரும் மாறுவார்கள் என்று சொல்லவும் முடியாது இல்லையா...?
“இவ்வளவு பெரிய தண்டனை வேண்டுமா அவங்களுக்கு? உங்களுக்கு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா? அவங்களுக்கும் உங்களுக்கும் என்ன வித்யாசம்...?” என்றவளின் முன்னிலையில் ஒரு பைலை தூக்கிப் போட்டான்.
என்ன என்று அதை பார்க்க உச்சம் முதல் பாதம் வரை ஆடி தான் போனாள். அவளது கண்கள் காட்டும் செய்தியில் மூச்சை அடைத்துக் கொண்டு வந்தது...!
“ச... ர்வா... சர்வா... இது இதெல்லாம்...” என்று அவளுக்கு பேச்சே வர மறுத்தது...
“கவிதா ட்ரஸ்ட்ன்னு ஒண்ணு ஆரம்பிச்சு இவங்க கருப்பு பணத்தை வெள்ளை ஆக்குறதோட இல்லாம அங்க இருக்கிற முதியவர்களின் எலும்புகளை திருடி வெளிநாட்டுக்கு வித்துக்கிட்டு இருந்து இருக்காங்க.. அப்படி நிறைய முதியவர்கள் இறந்து போய் இருக்காங்க தெரியுமா? இவங்க சுயநலத்துக்காக அவங்களை எல்லாம் கொன்னது தப்பு இல்லையா? என்னவோ பெருசா பேசுற... அப்போ அப்பாவியா செத்து இருக்காங்களே இவங்களுக்கு எல்லாம் ஒரு நியாயம் வேணாமா? இத்தனை பேரை கொன்னுட்டு சமூகத்துல உயர்ந்த அந்தஸ்த்துல இருந்து இருக்காங்களே இவங்களை சும்மா விட சொல்றியா?” என்று கண்கள் செந்நிற நரியாய் சிவந்து போய் ருத்திர மூர்த்தியாய் கேட்டவனை கண்டு நெஞ்சு பயம் கொண்டது தான். ஆனால் இவன் தீயவர்களை மட்டும் அழிக்கும் சம்ஹார மூர்த்தி என்று ஆசுவாசம் கொண்டாள் சகி.
“இப்போ சொல்லுடி... நான் செஞ்சது தப்பா?”
“ஐயோ இல்லைங்க... நான் தான் புரியாம பேசிட்டேன்... இவங்களுக்கு இதெல்லாம் கம்மி தான்...” என்றாள் பட்டென்று.. சர்வாவின் முகத்தை கூர்ந்து பார்த்தாள். வலியின் தாக்கம் இருக்குமே... என்ன தான் தீயவர்கள் என்றாலும் அன்னை தந்தையல்லவா.. ஆனால் அவனது முகத்தில் வருத்தத்தின் சாயல் எதுவும் இல்லை...
மாறாக ஒரு விடுதலை உணர்வு தான் விரவி இருந்தது. அடுத்த சில நாட்கள் எப்படி போனது என்று தெரியவில்லை. கொஞ்சம் இறுக்கமாகவே நகர்ந்தது அனைவருக்கும். கார்த்திக்கை சர்வா அவனது வெட்டுக்கு அழைத்துக் கொண்டு போக, அவனால் கொஞ்ச நேரம் கூட இருக்க முடியவில்லை.
ஏதோ ஒட்டாத தன்மை அவனிடம் இருப்பதை பார்த்து சர்வாவுக்கு மனம் வேதனை பட்டது..! அதனால் நீ உன் இயல்புல இருடா என்று விட்டான். அதனால் கார்த்திக் உடனே கிளம்பி சகியின் வீட்டுக்கு வந்துவிட்டான்.
அவ்வளவு பெரிய வீட்டில் சர்வாவும் பிள்ளைகளும் மட்டும் தான் இருந்தார்கள். அதுவே அவனுக்கு மனதை உறுத்திக் கொண்டு இருந்தது...
நான் வேலைக்கு வரணும்னா சகியும் வேலைக்கு வரணும் என்று விட, வேறு வழியில்லாமல் சகி மீண்டும் சர்வாவிடம் வேலைக்கு செல்ல ஆரம்பித்தாள்.
யாருடைய வாழ்விலும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அதது அப்படியே இருந்தது. வேலைக்கு போகும் பொழுது சில நாட்கள் பிள்ளைகள் கிருஷ்ணனிடம் விட்டுவிட்டு போவான். சில நாட்கள் அலுவலகத்துக்கு கூட்டிக் கொண்டு வருவான்.
சகியோடு சேர்ந்து கார்த்திக் பிள்ளைகளிடம் நன்றாக ஒட்டிக் கொண்டான். ஆனால் சர்வாவிடம் தான் அவனால் முழு உரிமை எடுத்துக் கொள்ளவே முடியவில்லை. ஏனோ ஒரு தயக்கம். அவன் அண்ணன் என்று தெரிவதற்கு முன்பே அவன் மீது ஒரு வித நட்பு இருந்தது. அதன் வெளிப்பாடு தான் அவனது பிள்ளைகளோடு அடித்து பிடித்து விளையாண்டது. ஆனால் சர்வா தன் உடன் பிறந்தவன் என்று தெரிய வந்த பிறகு ஏனோ ஒரு இடை சொருகள் போல மனதை அழுத்திக் கொண்டு இருந்தது.
அவனது தயக்கம் கண்டு சர்வா முதலில் தானாகவே அவனுடன் பழக முன் வந்தான். ஆனால் கார்த்திக் ஒதுங்கிப் போகவே சர்வாவும் ஒதுங்க ஆரம்பித்தான். இருவரின் போராட்டத்தையும் கண்ட சகிக்கு பாவமாய் போனது.
அந்த வாரம் வேலை முடித்துக் கொண்டு அவரவர் வீடு திரும்பினார்கள். கிருஷ்ணனிடம் இருந்து பிள்ளைகளை கூட்டிக்கொண்டு சர்வா காரை கிளப்பினான் கொஞ்சமும் மனமே இல்லாமல். ஏனோ அந்த பெரிய வெட்டின் தனிமை முகத்தில் அறைந்தது அவனுக்கு. அவனுக்கு மட்டும் இன்றி அவனது பிள்ளைகளுக்கும் அந்த தனிமை பிடிக்காமல் போக, தன் தகப்பனிடம் வர மறுத்து சகியின் காலை கட்டிக் கொண்டு நின்றார்கள் இருவரும்.
அதை பார்த்தவனுக்கு முதலில் ஏக்கமாக இருந்தாலும் தன் இயலாமையில் கோவம் தான் வந்தது. அன்றைக்கு மாதிரி இன்றைக்கும் அவர்களை இழுத்துக் கொண்டு போக பார்க்க, சகி வேகமாய் பிள்ளைகளை தன்னிடம் இழுத்துக் கொண்டாள்.
“ப்ச் விடு...” என்று அவளிடம் இருந்து பிள்ளைகளை பிடுங்க வர, அதை பார்த்துக் கொண்டு இருந்த மற்ற மூவருக்கும் வேதனையாகி போக, என்னவோ பண்ணுங்க என்று உள்ளே போய்விட்டார்கள்.





