“அப்படியே போனாலும் என் அப்பா மாதிரி பெரிய மனசு பண்ணி உங்களை அப்பா ஏத்துக்கிட்ட மாதிரி நானும் ஏத்துக்குவேன் என் சகியை. அதோட இது பரம்பரை பரம்பரையா வழி வழியா வருது போல” என்று பகடி பேசினான்.
அதை கேட்டு சகி அவனை ஆத்திரத்துடன் முறைத்துப் பார்த்தாள். அவளது பார்வையை உணர்ந்தாலும் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல்,
“என்ன ரொம்ப அதிர்ச்சி ஆகிட்டீங்களா மிஸ்டர் அண்ட் மிச்செஸ் செல்வநாயகம்” என்று நக்கலாக கேட்டான் சர்வேஸ்வரன்.
“என்னவோ எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசிக்கிட்டு போற... உனக்கு என்ன தெரியும் எங்களை பத்தி... கண்டபடிக்கு நீ பாட்டுக்கு பேசிக்கிட்டே போற...? டேய் நான் உன் அப்பா டா...” என்று அவர் தடுமாற,
“சோ... வாட்?” என்றான் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல்.
“சர்வா...” என்று அவர் அதிர,
“உங்க சுயநலத்துக்காக ஒரு குடும்பத்தை அழிச்சீங்க சரி.. கார்த்தி என்ன பண்ணினான். அவனை எதுக்கு அனாதையா விட்டீங்க... அதோட அவனை ஒரு ஹோம்ல சேர்த்து இருந்தா கூட ஒரு நல்ல நிலையில இருந்து இருப்பான். ஆனா நீங்க எவ்வளவு பக்கா சுயநலம்னு அவனை வளர்த்த விதத்துலையே தெரிஞ்சி இருக்கு... உங்களுக்கு ஒரு அடியாளா உங்க தவறுகளை எல்லாம் அவன் மூலமா செஞ்சி ஒரு ரவுடி மாதிரி வளர்த்து ஜெயிலுக்கு அனுப்பி வேடிக்கை பார்த்து இருக்கீங்க... வெட்கமா இல்லை...? இப்படி எல்லாம் செய்ய” என்று கடும் கோவத்துடன் வார்த்தையை துப்பியவன்,
“அந்த ஆளு தான் பெக்கல... ஆனா நீ தானே அவனை பெத்த... பெத்த பாசம் கொஞ்சம் கூடவா உனக்கு இல்ல... ச்சீ நீயெல்லாம் ஒரு பொம்பளையா? இதுல நீ என் சகியை கண்டமேனிக்கு பேசிக்கிட்டு இருக்க” என்று உச்சக்கட்ட ஆத்திரத்துடன் மட்டு மரியாதை எல்லாம் காற்றில் விட்டவன், கேட்ட கேள்வியில் கவிதாவுக்கு நெருப்பில் தள்ளி விட்டது போல நடுநடுங்கிப் போனார்.
“சர்வா...” என்று அவனை அடக்கப் பார்த்தார் செல்வநாயகம்.
“ப்ச்... நீ பேசாதய்யா... நீயெல்லாம் ஒரு மனுசன்... உன்னையெல்லாம் தகப்பன்னு சொல்லிக்க எனக்கு வெக்கமா இருக்கு.. அப்படி என்ன காசு பணம் உன்னை ஆட்டி வைக்கிது...” என்று அவன் இன்னும் கடுமையாக பேசினான்.
“சர்வா நான் உன் அப்பாடா..”
“அதுக்காக நீ செஞ்சது எல்லாம் இல்லன்னு ஆகிடுமாய்யா? இதோட உன் பணத்தாசை விட்டுச்சுன்னு பார்த்தா நீ அப்பாவும் அடங்கல... ஆசையா ஒரு பெண்ணை பார்த்து அவளை கல்யாணம் பண்ணிக்கலாம்னு அவளை பார்த்த மூணு வருசமா காத்துக்கிட்டு இருந்தேன். அதுவும் அவ லண்டல படிக்க ஆசை படுறான்னு குறுக்க போகாம அவ படிச்சிட்டு வர வரையிலும் நான் பொறுமையா காத்துக்கிட்டு இருந்தேன்... மூணு வருட நேசத்தை எனக்கு தெரியாமலே நீ கொலை பண்ணுனியே அதை மறக்க சொல்றியா?” என்று அவன் ஆங்காரமகா கேட்டான்.
சகி அதிர்ந்து போய் சர்வாவை பார்த்தான். திருமணத்துக்கு முன்னாடியே மூணு வருட நேசமா? என்று திகைத்துப் போனாள்.
“சர்வா... அது...” என்று அவர் தடுமாற,
“நல்லா இருந்த குடும்பத்தை உன் சுய நலத்துக்காக நடு தெருவுக்கு கொண்டு வந்தியே அதை மறக்க சொல்றியா?” என்று மேலும் கேட்டான். அவனது சாட்டையடி கேள்வியில் அவர் இன்னும் வெலவெலத்துப் போனார்.
“இது எல்லாம் நான் தான் செஞ்சேன்னு ஏதாவது ஆதாரம் இருக்கா? ஆதாரம் இல்லாம இப்படி பேசாத சர்வா...” என்று அவர் இன்னும் தடுமாறியபடி சொன்னார். அதுவும் அந்த நேரம் கிருஷ்ணன் உள்ளே வர இன்னுமே ஆடி தான் போனார் செல்வநாயகம்.
“ஆதாரமா நீ கேட்ட எல்லாத்துக்கும் பக்காவா ஆதாரம் இருக்கு... அதோட இதோ வந்துட்டாரே... சம்மந்தப்பட்ட நபர்... இப்போ பேசு...” என்றவன் கண்கள் சிவந்து ரௌத்திரமாக “கிருஷ்ணன் மாமாவோட சொத்து முழுசும் உங்க பேர்ல இருக்கிற இந்த ஒற்றை ஆதாரம் போதாதா?” என்று ஆத்திரத்துடன் கேட்டான்..
அவனது குற்றச்சாட்டில் கவிதாவுக்கும் சம பங்கு இருக்க அவருக்கு வேர்த்துக் கொட்ட்டியது.. எதெல்லாம் தங்களின் மகனுக்கு தெரிய கூடாது என்று மறைத்தார்களோ அது எல்லாவற்றையும் பிட்டு பிட்டு வைத்தான் சர்வா. அதில்உதிரம் எல்லாம் உறைந்து போனது போல பயத்தில் இருவருக்கும் ஒட்டு மொத்த செயல்கள் எல்லாம் அடங்கி விட்டது போல நின்று இருந்தார்கள்.
“இப்போ சொல்லு உன் விலக்க உரையை...” என்று அவன் நக்கல் பண்ணினான் தன் பெற்றவர்களை பார்த்து. அவர்கள் இருவரும் வாயையே திறக்கவில்லை.
“இதுக்கு மேல இங்க இருக்க எங்களுக்கு விருப்பமில்லை... இனி நீயாச்சு... உன் வாழ்க்கையாச்சு.. எங்களுக்கும் உனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை... வா கவி போகலாம்” என்று வாசல் நோக்கி போக கிருஷ்ணன் அழுத்தமாக தன் வீட்டு கதவை அழுந்த சாற்றி தாள் போட்டார்.
அவரிடம் இருந்த நிமிர்வை பார்த்த செல்வநாயகத்துக்கு பக்கென்று ஆனது. அவரது அந்த தோரணையிலே இவருக்கு எல்லாம் வெட்ட வெளி ஆகிவிட்டதை உணர்ந்தவருக்கு உயிர் பயம் கண்ணில் தெரிந்தது.
அது வரை தன் தோரனையை சிறிதும் மாத்திக்காத சர்வா இப்பொழுதும் அப்படியே அதே தோரணையுடன் அந்த இருக்கையில் அமர்ந்து இருந்தான்.
காட்டில் எத்தனை மிருகம் வேணாலும் வரலாம் போகலாம்... என்ன வேணாலும் செய்யலாம். ஆடலாம், ஓடலாம், பாடலாம், விளையாடலாம், கும்மாளம் போடலாம்... ஆனால் சிங்கத்தின் ஒற்றை கர்ச்சனை(கர்ஜனை) போதும். அனைத்து உயிரும் இருக்கிற இடம் தெரியாமல் அடங்கிப் போய் விடும்... அதில் புலியும் ஒன்று... அது போல ஆடும் வரை ஆட விட்டு நின்று நிதானமாக தன் வேட்டையை தொடங்கினான் சர்வா... சர்வேஸ்வரன்.
“வெளியே போக ரொம்ப அவசரமா மிஸ்டர் செல்வநாயகம்...? இருங்க இப்ப தானே ஆம்பிச்சு இருக்கேன். இன்னும் எவ்வளவோ இருக்கு...” என்று நிதானமாக சொன்னவன், சகியின் புறம் திரும்பினான். அவனை பார்க்காமல் அவள் திரும்பிக் கொள்ள,
“மாமா உங்க பொண்ணு ரொம்ப ஓவரா போறா... அப்புறம் பின் விளைவுகள் ரொம்ப பயங்கரமா இருக்கும் சொல்லிட்டேன்” என்று எச்சரித்தான்.
“நீங்களாச்சு உங்க பொண்டாட்டியாச்சு. எதுக்கு என் தலையை உருட்டுறீங்க மாப்பிள்ளை..” என்று அவர் சொல்ல, அவரது பேச்சில் அதிர்ச்சி அடைந்தவள் வேகமாய் இருவரையும் முறைத்துப் பார்த்தாள். அவள் திரும்பியவுடன் அதுக்காகவே காத்துக்கொண்டு இருப்பது போல அவளை பார்த்து கண்ணடித்தான்.
அதில் பத்திக் கொண்டு வந்தது அவளுக்கு.
“அப்பா... எதுக்கு இப்படி தேவை இல்லாததை எல்லாம் பேசிக்கிட்டு இருக்கீங்க...? என்ன பேசணுமோ அதை மட்டும் அவரை பேச சொல்லுங்க. நடக்காதை எல்லாம் பேச வேண்டாம்” என்று தன் தந்தையை கடிந்துக் கொண்டாள்.
“எது நடக்கும் நடக்காதுன்னு அப்புறம் பார்த்துக்கலாம்டி... இப்போ முதல்ல உன் மாமியார் மாமனாரை கொஞ்சம் கவனி” என்றான் நக்கலாய்.
அவனது பேச்சை கேட்ட மிருவுக்கு ஏதோ புரிவது போல தோன்றியது..! தன் அக்காவின் மீதும் மனம் கவர்ந்தவனின் மீதும் இருந்த களங்கத்தை எப்படியும் சர்வா தீர்த்து துடைத்து போட்டு விடுவார் என்று நம்பிக்கை வந்தது அவளுக்கு.
அதனால் அவளது முகத்தில் இருந்த கலக்கம் தீர்ந்து நிம்மதி குடிக் கொண்டது. தங்கையின் முகத்தில் இருந்த கவலை நொடியில் தீர்ந்து போவதை பார்த்த சகிக்கு என்ன மாயம் என்று தான் தோன்றியது.
அதை உணர்ந்தவள் போல தன் அக்காவின் புறம் வந்து அவளின் கரத்தை இறுக்கமாக பற்றிக் கொண்டாள்.
“உன்னை இப்படி பழி சொல்லுக்கு ஆளாக்கிட்டாங்கலேன்னு தான் வருந்தினேனே தவிர உங்க ரெண்டு பேர் மேலையும் சந்தேகப்பட்டு அழல...” என்றாள் பெரிய மனுசியாய்.
“மிரு...” என்றாள் அதிர்வாய்.
“நாலு வருசமா உங்க கூட இருந்து பார்த்துக்கிட்டு இருக்கேன். நான் ஒண்ணும் அவ்வளவு மக்கட்டை இல்லக்கா... உனக்கு கார்த்தியை பிடிச்சி இருந்துச்சுனா நான் அவரை கண்ணால பார்த்து கூட இருக்க மாட்டேன். உன் பார்வை சர்வா மாமா மேலே மட்டும் தான் இருந்தது. அதனால தான் இவரை நான் பார்க்கவே ஆரம்பிச்சேன்.” என்று அவளின் காதோரம் சொல்ல இப்படி ஒரு தங்கை கிடைக்க என்ன புண்ணியம் செய்து இருக்கணும் என்று பெருமையில் நெஞ்சு பொங்கியது...
“சர்வா... நீ வச்சி விளையாட நாங்க ஒண்ணும் காயின் கிடையாது. எங்களை விடு நாங்க போகணும்...” என்றார் கவிதா எப்படியாவது இங்க இருந்து போய் விட வேண்டும் என்று தவியாய் தவித்துப் போனார்.
“இருங்க என்ன அவசரம்... உங்க ஆலோசனை படி தானே அப்பா செஞ்சுக்கிட்டு இருக்காரு இவ்வளவு காலமும்... அதையெல்லாம் பற்றி விலாவரியா இவங்களுக்கு சொல்ல வேணாமா?” என்று நக்கலாக கேட்டான்.
“நாங்க எது செஞ்சாலும் அது உன் நல்லதுக்கு தான்னு உனக்கு ஏன்டா புரியல... ஏதோ இந்த உலகத்துலையே யாரும் செய்யாத தப்பை செஞ்ச மாதிரி வீட்டுக்குள்ள அடைச்சி வச்சி குற்றம் சாட்டிக்கிட்டு இருக்க” என்று பொறுத்தது போதும் என்று பொங்கிவிட்டார் செல்வநாயகம்.
“ஆஹா... செய்யிறது எல்லாம் செஞ்சிட்டு என்னோட நல்லதுக்கா... என்னோட நல்லதுன்னா நான் யாரை ஆசை பட்டனோ, யாரை மனசார நேசிச்சனோ அவளோட என் வாழ்க்கையை அமைச்சி குடுத்து இருந்தா பரவாயில்லன்னு ஏதோ என் மேல பாசம் இருக்குன்னு நானும் நினைச்சி இருப்பேன். ஆனா நீங்க அப்படியா பண்ணீங்க...?”
“எங்க நான் சகியை கல்யாணம் செஞ்சுக்குவனோன்னு அவ லண்டன்ல இருக்கிற நேரமே அவ அப்பாவை எம்மாத்த ஆரம்பிச்சு, கடனுக்கு அவங்க சொத்தை வித்து தரேன்னு சொல்லி சொல்லியே அதுவும் அவரோட நண்பர்கள் மூலமாகவே சொத்தை எல்லாம் அடி மாட்டு விலைக்கு வாங்கி கொஞ்சமா பணத்தை குடுத்து அவர் இத்தனை வருடமா சேர்த்து வச்சிருந்த சொத்து எல்லாத்தையும் நேக்கா உங்க பேருக்கு மாத்தி ஏமாத்தி எழுதிக்கிட்டீங்க... சரி அது போகுதுன்னு பார்த்தா நீங்க ரெண்டு பேரும் அதோட மட்டுமா விட்டீங்க...?”
“எங்க சகி உங்க வீட்டுக்கு மருமகளா வந்துடுவாளோன்னு பயந்து அவளை உங்க அடியாள வளர்க்கப் பட்ட உங்க சொந்த மகனையே வச்சி கடத்துனீங்க... பிறகு இந்த பக்கம் சத்தமே இல்லாம ஒரு வருடத்துக்கு முன்னாடியே திவ்யா அப்பாக்கிட்ட எனக்கு சம்மந்தம் பேசி அவரையும் திவ்யாவையும் கல்யாண மண்டபத்துக்கு வர வச்சி, என் கெளரவத்தை குறி வைத்து பேசி, அத்தனை பேர் முன்னிலையிலும் சகியோட நடத்தையை தவறா சித்தரிச்சி திவ்யாவை எனக்கு கல்யாணம் பண்ணி வச்சீங்க” என்றான் நிதானமாக.





