“பார்த்தியா உன் அக்கா லட்சனத்தை. நீயும் உன் அப்பாவும் வெளியே போனதுக்கு பிறகு இப்படி தான் கூத்தும் கும்மாளமுமா இருக்குதுங்க... சரியா வெட்கம் கெட்டதுங்களா இருக்குங்க.. உனக்கு இப்படி ஒரு அக்கா...” என்று கவிதா மிருவிடம் கோல் மூட்டிவிட ஆரம்பிக்க மிருவின் சின்ன இதயம் சுக்கு நூறாய் போனது.
விழிகளில் நீர் நெகிழ தன் அக்காவை பார்த்தாள். அவளின் கண்கள் கலங்குவதை தாங்க முடியாமல் கதற துடித்த இதழ்களை இறுக்கிக் கடித்து உள்ளுக்குள் குமுறிக் கொண்டு இருந்தாள் சகி.
“இப்படி ஒரு நடத்திக் கெட்டவள் என் குடும்பத்துக்கு வேணாம் சர்வா... வா போகலாம். அவ தங்கச்சியே இவங்க ரெண்டு பேர் பண்ற அசிங்கத்தை தாங்க முடியாம இருக்கிற இடத்துலயே செத்து போயிடுவா போல...” என்று மேலும் கவிதா நக்கல் பண்ண
“ஆமா இந்த அசிங்கம் எல்லாம் நம்ம வீட்டு மறுமகளா ஆனதுக்கு பிறகு நடக்காம அந்த கடவுள் நம்மளை காப்பாத்திட்டாரு சர்வா... இதுக்கு மேலையும் இந்த வீட்டுல இருக்க வேணாம்.. கூட பிறந்த தங்கச்சிக்கு கூட தெரியாம ஒரே வீட்டுல கள்ளக் காதல் பண்ணிக்கிட்டு இருக்காங்க...” என்றவர்,
“ச்சீ இதை கள்ளக் காதல்னு கூட சொல்லக் கூடாது... அது கூட நல்ல வார்த்தை தான். இது சாக்கடை...” என்று செல்வநாயகமும் எவ்வளவு அசிங்கப்படுத்தி பேச முடியுமோ அந்த அளவுக்கு பேசவும் கார்த்திக்கு கட்டுக்கடங்காமல் கோவம் வர வேகமாய் அவரது சட்டையை பிடித்து உலுக்கப் போக,
அவனின் கரத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டாள் சகி...
“என்னை விடு சகி...” என்று அவன் பல்லைக் கடிக்க, அவள் வேண்டாம் என்பது போல தலையசைத்து கண்ணீருடன் கெஞ்ச,
“ச்சே...” என்று வெறுத்துப் போனான். “நீ யாருக்காக இப்படி அமைதியா இருக்கன்னு எனக்கு நல்லா தெரியும்... உன் மேல சேற்றை வாரி பூசிக்கிட்டு அவன் மேல அகிலை பூச பார்க்கிற...” என்று பல்லைக் கடித்தான் கார்த்திக்.
“இப்போ கூட பாரேன்.. அவனை விட்டு கொஞ்ச நேரம் கூட இருக்க மாட்டிக்கிறா இந்த பொண்ணு... ச்சீ இத்தனை பேரும் இருக்கிறோம் கொஞ்சம் கூட கூசாம அவனோட கையை பிடிச்சுக்கிட்டு இருக்கத பாரேன்... சர்வா இனி ஒரு நிமிடம் கூட இங்க இருக்க கூடாது. இருந்தா பாவம் நமக்கும் தொத்திக்கும்” என்று செல்வநாயகம் சர்வாவை அவசரப்படுத்தினார்.
அவரது பதட்டம் அவனிடம் கொஞ்சம் கூட இல்லை. இரு கரங்களையும் மேலே தூக்கி சோம்பல் முறித்தவன், “எந்த பாவத்தை சொல்றீங்க நீங்க?” என்று நிதானமாக கேட்டவன் அங்கு இருந்த ஒற்றை இருக்கையில் ஜம்பமாக போய் அமர்ந்துக் கொண்டான் மீண்டும். அவனை சுற்றி அத்தனை பேரும் என்ன ஆகுமோ என்று பதட்டத்துடன் இருக்க, சர்வாவோ எதுக்கும் அலட்டிக் கொள்ளாமல் இருந்தான்.
அவனிடம் இருந்த நிதானத்தைக் கண்டவர், “என்ன சர்வா நாங்க இவ்வளவு அடிச்சிக்குறோம்... நீ என்னன்னா கொஞ்சம் கூட அசராம இப்படி விருந்துக்கு வந்த மாப்பிள்ளை தோரனையில போய் உட்கார்ந்து இருக்க... இதுக்கு மேல இன்னும் என்ன ஆகணும்... பாவம் புண்ணியத்தை பத்தி விலாவரியா விலக்க சொல்ற... அதுக்கு இது தான் நேரமா... முதல்ல இங்க இருந்து வா போகலாம்” என்று அவசரப்படுத்தினார்.
“அது சரி பாவம் செஞ்ச உங்கக்கிட்டயே அதை பத்தி கேட்பது தவறு தான்...” என்று இகழ்ச்சியாக சிரித்தான் சர்வேஸ்வரன்.
அவனது முரணான பேச்சில் செல்வனாயகம் அதிர்ந்து போனார். அதை விட கவிதா வெலவெலத்துப் போனார்.
“சர்வா நீ என்ன பேசிக்கிட்டு இருக்க...? அதுவும் அப்பாக்கிட்ட பேசிக்கிட்டு இருக்கேன்றதை மறந்துடாத”
“ப்ச்...” என்று அசூசை ஆனவன், தன் காதை குடைந்துக் கொண்டே,
“இன்னும் எவ்வளவு நேரம்டி இப்படி போஸ் குடுத்துக்கிட்டே இருப்ப... தொண்டை வறண்டு போயிடுச்சு. போ போய் மாமனுக்கு ஜில்லுன்னு ஜிகர்தண்டா போட்டுட்டு வா” என்றான் சகியிடம்.
அவனது பேச்சில் சகி தன் கண்களை விரித்து அவனை அதிர்ந்து பார்த்தாள்.
அப்போ இங்க நடந்ததை இவன் நம்பவே இல்லையா? இவன் கண்ணு முன்னாடி தானே உடை நெகிழ்ந்து போய் இன்னொரு ஆடவனை கட்டிப் பிடித்துக் கொண்டு இருக்கிறேன். இப்பொழுது கூடவா நம்ப மாட்டான் என்று அவனை விழி அகலாது பார்த்தாள். அவளது பார்வையை பார்த்தவன்,
“என்ன?” என்பது போல இரு புருவம் உயர்த்தி கேட்டான். அதில் அவளது தலை ஒன்றுமில்லை என்பது போல அசைந்தது.
“உன் அக்கா இப்போதைக்கு இங்க இருந்து போக மாட்டா போல... மச்சினிச்சி நீயாவது மாமனுக்கு தண்ணி கொண்டு வரியா?” என்று மிருவை உசுப்பினான்.
“சர்வா இங்க என்ன நடக்குது... எனக்கு ஒண்ணும் புரியல... நீ இப்படி நடந்துக்குறதை பார்த்தா இந்த நடத்தைக் கெட்டவளை தான் நம்ம வீட்டுக்கு மருமகளா கொண்டு வருவப் போலையே...” கண்களில் கனலை தாங்கிக் கேட்ட கவிதாவை பார்த்து ஏளனமாக புன்னகைத்தான்.
“யாரு நடத்தைக் கெட்டவ...?” மிக நிதானமாக அவனது வார்த்தை வந்து விழ செல்வநாயகத்துக்கு உள்ளுக்குள் ஒரு படபடப்பும் அச்சமும் ஒருங்கே தோன்றியது.
“வேற யாரு இதோ இவ தான்...” என்று சகியை சுட்டிக் காட்டினார். அதில் சகி கூசிப் போனாள் மிக மோசமாக. தவறே செய்யாமல் குற்றம் சாட்டி தண்டனை தருவது வேதனையின் உச்சம் அல்லவா?
“ம்ஹும்...” என்று நக்கல் பண்ணியவன், “அப்போ நீங்க யாரு...? நீங்க செஞ்ச எல்லாத்துக்கும் துணை போன மிஸ்டர் செல்வநாயகம் யாரு?” என்று கேட்டான் அதை விட நிதானமாக. அவனது பேச்சில் பூமியே அதிர்ந்து போனது போல சர்வாவின் பெற்றவர்கள் இருவரும் ஆடி தான் போனார்கள்.
பெற்ற மகனே குற்றம் சாட்ட பெற்றவர்கள் இருவரும் நிலநடுக்கம் வந்தது போல தடுமாறிப் போனார்கள்.
“சர்வா... யாருக்கிட்ட என்ன பேச்சு பேசிக்கிட்டு இருக்க? மதத்தவ முன்னாடி நீ என்னையவே அசிங்கப்படுத்துவியா? நான் உன்னோட அம்மாடா” என்றார் கவிதா ஆத்திரமாய்.
“எனக்கு மட்டும் அம்மா இல்லையே... இதோ இங்க நிக்கிறானே கார்த்திக் அவனுக்கும் நீ தானே அம்மா” என்று மிகப்பெரிய விசயத்தை ரொம்ப சாதாரணமாக போட்டு உடைத்தான் சர்வேஸ்வரன்.
குப்பென்று செல்வனாயகாத்துக்கு வேர்த்துப் போனது. கார்த்திக் தன் காதுகளையே நம்ப முடியாமல் சர்வாவையே அதிர்ந்து போய் பார்த்துக் கொண்டு இருந்தான். தன்னுடைய காது சரியாக தான் கேட்கிறதா? இல்லை தவறா எதுவும் காதில் விழுகிறதா? என்று அவன் அதிர்ந்துப் போய் சர்வாவையே பார்த்தான்.
“சர்வா...!” என்று கவிதா அதிர்ந்து போனார்.
“சர்வா தான்... உங்க தேவைக்காக உங்க தங்கச்சியோட உடல் நிலையை காரணம் காட்டி, அவங்களால பிள்ளை பெத்துக்க முடியாதுன்னு உதவி செய்யிறேன்னு சொல்லி, அவங்க கணவனோட அதாவது மிஸ்டர் செல்வநாயகத்தின் தம்பி அதாவது என்னுடைய அப்பாவின் தம்பி சுருங்க சொன்னா என்னோட சித்தப்பாவோட வாழ்ந்து, அவங்களுக்கு பிள்ளை பெத்து குடுக்குறேன்னு சொல்லி இதோ இங்க இக்கிறானே இவனை பெத்து குடுத்துட்டு, இவனை விட்டு பிரிய முடியாதது போல பாசாங்கு செய்து, அவங்க இரண்டு பேருடைய வாழ்க்கையிலையும் சூறாவளியா சுழற்றி அடிச்சி, கடைசியா அவங்க ரெண்டு பேரையும் சொத்துக்காக ஆக்சிடென்ட் பண்ணி கொன்னீங்களே அதை விட என் சகி சோரம் போயிடல...” என்று சர்வேஸ்வரன் சொல்ல சொல்ல கார்த்திக்கு காலடியில் நிலம் சரிந்தது போல இருந்தது.
“என்னை பெற்றவள் கவிதாவா? என் அப்பா சர்வா அப்போவோட தம்பியா? அப்போ நான் அனாதை இல்லையா?” அவனது மனம் உள்ளுக்குள் ஆர்பாட்டம் பண்ணியது.
ஆனால் தொடர்ந்த சர்வாவின் பேச்சில் நெஞ்சில் யாரோ பெற்றோலை ஊற்றி தீவைத்தது போல இருந்தது...! கொன்னுட்டாங்களா? என் அப்பாவையா...? என்று அவன் கலங்கி நின்றான்.
கார்த்திக்கு மட்டும் இல்ல சர்வா சொன்னதை கேட்டுக் கொண்டு இருந்த சகிக்கும் மிருவுக்குமே மிகப்பெரும் அதிர்ச்சியாக இருந்தது...! இருவரும் ஒரு சேர கார்த்தியை பார்த்தார்கள்.
அவனது முகத்தில் வந்து போகும் உணர்வு பரிமாணங்களை வேதனையுடன் பார்த்துக் கொண்டு இருந்தார்கள். பெற்றவளே தள்ளி வைத்து இத்தனை நாள் ஆனாதையாக வீதியில் விட்டதை எண்ணி இரு பெண்களும் கலங்கிப் போனார்கள்.
கார்த்தி தன் கலக்கத்தை ஒத்தி வைத்து சர்வாவின் பேச்சில் கவனத்தை வைத்தான் முயன்று... ஆம் முயன்று தான்... அவ்வளவு எளிதாக இந்த செய்தியில் இருந்து அவனால் வெளிவரவே முடியவில்லை. இவ்வளவு நாள் வாழ்ந்த வாழ்க்கையின் தேடுதல் அல்லாவா இந்த விடை...
ஆனால் விடை வந்து சேர்ந்த பிறகும் ஏனோ அவனால் கொஞ்சம் கூட மகிழ முடியவில்லை... நெஞ்சில் பாறாங்கல்லை வைத்தது போல உணர்ந்தான்.
“அப்படியே போனாலும் என் அப்பா மாதிரி பெரிய மனசு பண்ணி உங்களை அப்பா ஏத்துக்கிட்ட மாதிரி நானும் ஏத்துக்குவேன் என் சகியை. அதோட இது பரம்பரை பரம்பரையா வழி வழியா வருது போல” என்று பகடி பேசினான்.
அதை கேட்டு சகி அவனை ஆத்திரத்துடன் முறைத்துப் பார்த்தாள். அவளது பார்வையை உணர்ந்தாலும் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல்,
“என்ன ரொம்ப அதிர்ச்சி ஆகிட்டீங்களா மிஸ்டர் அண்ட் மிச்செஸ் செல்வநாயகம்” என்று நக்கலாக கேட்டான் சர்வேஸ்வரன்.





