“சர்வா வா போகலாம். இப்படி ஒரு கேவலமான குடும்பத்துலையா நாம சம்மந்தம் வச்சுக்கணும். என்னால முடியாது... வாடா போகலாம்” என்று கவிதா அவனது கையை பிடித்து பின்னால் இழுத்தார்.
“அம்மா சொல்றதை கேளு சர்வா... உனக்காக மைதிலி காத்துக்கிட்டு இருக்கா. அந்த பெண் நம்ம குடும்பத்துக்கு ஏத்த பெண். அதோட இதோ இப்படி நடத்தை கெட்டு சீரழிஞ்ச குடும்பம் கிடையாது... சொன்னா கேளு சர்வா வா போகலாம்” என்று செல்வநாயகம் சொல்ல சர்வேஷ்வரன் கொஞ்சம் கூட அசையவில்லை. அவனது பார்வை மொத்தமும் சகியிடம் தான் இருந்தது.
அவனது குத்தும் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தலைக் குனிந்து நின்றாள். அவளின் அருகில் கார்த்தியும் கையை கட்டிக் கொண்டு நின்றான். அவன் எதுவுமே பேசவில்லை. இங்கு நடக்கும் நிகழ்ச்சியை தனக்கு சாதகமாக பயன் படுத்திக் கொண்டு தன் சகியை விட்டு சர்வாவை பிரித்து விடலாம் என்று கணக்கு போட்டான். ஆனால் அதில் சகியின் மானம் கூறு போடப் படுகிறதை உணர்ந்து கட்டுக்கு அடங்காமல் கோவம் வந்தது.
கோவத்தால் ஒரு நன்மையை இழக்க முடியாதே என்று அமைதியாக இருந்தான் தன் இரு கரங்களையும் கட்டியபடி.
சிறிதும் தன் நிலையில இருந்து விலகாமல் இருந்தவனை “சர்வா...” என்று செல்வநாயகம் அசைத்துப் பார்க்க,
“ஹாங்..” என்று சர்வா விளித்தான்...
“வா சர்வா இதை விட ஒரு அவமானம் நமக்கு வேணாம்... வா போகலாம். உன் மனசு எவ்வளவு காயப்பட்டு இருக்கும்னு எனக்கு ரொம்ப நல்லாவே தெரியும்...” என்று அவர் ஒரு தந்தையாய் தோள் கொடுக்க வர, தன் தலையை திருப்பி அவரை ஒரு பார்வை பார்த்தான்.
அந்த பார்வையில் பொதிந்து இருந்த பொருளை உணராமல்,
“என்னடா சர்வா அப்படி பார்க்கிற... என்னை விட உன்னை வேற யாரு நல்லா புரிஞ்சுக்குவா... உன்னை பெற்றவன் இல்லையா... உன் வேதனை எனக்கு ரொம்ப நல்லாவே தெரியும் வாடா தம்பி நாம இங்க இருந்து போகலாம்... இதை பார்த்து பார்த்து நீ இன்னும் நொந்து போகாதா...” என்றார் தேன் ஒழுக...
அந்த தேன் ஒழுகும் பேச்சில் சர்வாவின் இதழ்களில் ஒரு புன்னகை வர, அனைவரும் பார்க்க படும் படியாகவே சிரித்தான்.
இதழ் பிரியாமல் அவன் சிரித்த சிரிப்பை கார்த்திக் கூர்ந்து கவனித்தான். அதில் என்ன இருக்கிறது என்று அவன் ஆராய முற்பட அதற்கு சர்வா விட வேண்டுமே...
இதுவரை தன் உள்ளக் கிடங்கை யாரும் அறிய விட்டது இல்லை சர்வா. இனிமேலும் விட மாட்டான்... அதனால் கார்த்தியால் சர்வைவை கொஞ்சம் கூட கணிக்க முடியவில்லை.
தன் நெற்றியை தடவி இரு புருவத்தையும் நீவி விட்டவன் பதில் மொழி பேசாமல் சகியின் வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்தான் சர்வா.
“அப்பா இவ்வளவு தூரம் சொல்றனே தம்பி... இவ்வளவு நடந்த பிறகும் இவ தான் வேணுமா?” ஆத்திரத்துடன் கேட்டார் செல்வநாயகம்.
“கொஞ்சம் பொறுமையா இருங்க...” என்றவன், அங்கிருந்த ஒற்றை இருக்கையில் தோரணையாக அமர்ந்தான் சர்வா. அவனை தொடர்ந்து வேறு வழியில்லாமல் கவிதாவும் அவரும் உள்ளே வந்தார்கள்.
அனைவரின் முன்னிலையிலும் தலையை நிமிர்த்த முடியாமல் தலை குனிந்து நின்றவளை பெருமூச்சுடன் பார்த்தான். இதை அவளிடம் சிறிதும் கூட எதிர்பார்க்கவேயில்லை. பெருமூச்சு விட்டான் சர்வா.
இவன் இந்த நேரம் என்ன செய்ய போகிறானோ என்று அனைவரும் பீதியுடன் அவனையே பார்த்துக் கொண்டு இருந்தார்கள். முக்கியமாக அவனது பெற்றோர்.
ஒன்றும் சொல்லாமல் சிறிது நேரம் அமர்ந்து இருந்தவன், எழுந்து அவளின் எதிரில் வந்து நின்றான்...! வந்து நின்றவனை ஏறெடுத்துப் பார்க்க முடியாமல் தலை குனிந்து நின்றவளின் முகத்தை நிமிர்த்தி தன்னை பார்க்க வைத்தான்.
அவள் மறுத்தாள். ஆனால் சர்வா விடவில்லை. நீண்ட மௌனத்துக்கு பிறகு, அவளது கண்களை கூர்ந்து பார்த்து,
“இதெல்லாம் உண்மையா?” என்று நிதானமாக கேட்டான். “இல்லை என்று சொல்லடி..” என்கிற உண்மையை சொல் என்கிற அர்த்தம் அதில் அதிக அழுந்தி இருந்ததை உணர்ந்த சகிக்கு பக்கென்று இருந்தது. ஆனாலும் அதை காட்டிக் கொள்ளாமல்,
அவனது கண்களை பார்த்து மெல்ல தலை அசைத்தாள். “ஆம்...” என்பது போல. அடுத்த நொடி அவனது இரும்பு போன்ற வலிமை வாய்ந்த கரம் அவளது கன்னத்தில் அதி தீவிரத்தோடு பதிந்தது... அதை கார்த்தி சிறிது கூட எதிர் பார்க்கவில்லை.. சகி சிலையாகினாள்.
“ஏய்...” என்று அவன் பாய்ந்து வர, ஒற்றை கரத்தால் அவனை தடுத்தவன், “இது எனக்கும் அவளுக்கும் மட்டும் உள்ள கணக்கு.. இதுல நீ தலையிடாதடா...” என்று கார்த்தியை எச்சரித்தவன்,
சகியை மட்டுமே பார்த்துக் கொண்டு இருந்தான். அவனது விரல் தடம் அப்படியே அவளது கன்னத்தில் வர்ணம் தீட்டி இருந்தது. அதை தன் விரல்களால் வருடிய படியே அவளை பார்த்தான்.
சகியை அடித்தை பார்த்த கவிதாவும் செல்வநாயகமும் ஒருவரை ஒருவர் பார்த்து தங்களது உள்ள மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டார்கள்.
அவளிடம் ஒரு மாறுதல் கூட இல்லை. அப்படியே நின்றாள். இன்னும் நீ எத்தனை அடி வேணாலும் அடிச்சுக்கோ என்பது போல நின்றாள்.
அவளின் அந்த தோற்றம் கண்டு கடுப்பானவன்,
“இப்படி என் கண்ணு முன்னாடி நிற்க உனக்கு கூட அசிங்கமாவே இல்லயாடி...?” என்று கேட்க, மனம் முழுவதும் நிறைந்து இருந்தவனின் முன்னிலையில் அதுவும் அவனது வாயிலிருந்து வந்த கேள்வியில் ஐந்து உயிரும் கூனி குறுகி கூசிப் போய் கண்களில் நீர் இதோ அதோ என்று தருணம் பார்க்க அதை அடக்கிக் கொண்டு,
“எனக்கு ஏன் அசிங்கமா இருக்கனும்... என் மனசுக்கு பிடிச்சவனோட......” என்று இன்னும் சொல்ல வந்தவள் மீண்டும் சர்வேஸ்வரன் விட்ட ஒற்றை அரையில் அப்படியே அவளது பேச்சு நின்றுப் போனது.
கன்னத்தை பொத்தியபடி அவனை நிமிர்ந்து பார்த்து முறைத்தாள்.
“அம்மணி முறைக்க வேண்டியது நான் நீங்க இல்ல...” என்று நக்கல் பண்ணினான் சர்வா.
“மிஸ்டர் என் வீட்டுக்குள்ள அத்துமீறி வந்ததோட மட்டும் இல்லாமல் இப்படி பொசுக்கு பொசுக்குன்னு அடிச்சா என்ன அர்த்தம்... முதல்ல வீட்டை விட்டு வெளியே போங்க... இது எங்க வீடு நாங்க எப்படி வேணாலும் இருப்போம். அதை கேட்க இங்க யாருக்கும் உரிமையில்லை...” என்றபோதே சகியின் தங்கை மிரு வீட்டுக்குள் நுழைந்தாள்.
அவளின் பார்வையில் இப்படி நிற்க வேண்டிய சூழல் வந்ததை எண்ணி நொந்துப் போனவள் குரங்கு தான் கெட்டது போதாது என்று வனத்தையும் சேர்த்து கெட்ட கதையாக ஆகிப் போனது...!
மிரு அதிர்ந்து தன் தமக்கையை பார்த்தாள். அதோடு அவளை ஒட்டி நின்றுக்கொண்டு இருந்த தன் மனதை கொள்ளைக் கொண்டவனை பார்த்தாள். பார்த்தவளின் நெஞ்சில் ஒரு கோடி முள் வந்து தைத்தது...!
சிறு பெண்ணவளின் கண்களில் தூசி படிந்து உறுத்துவது போல இக்காட்சி உறுத்த கண்களில் கண்ணீர் நெகிழ்ந்தது...
அதை எதிர் பார்க்காதவள் தன் தங்கையின் அருகில் செல்ல பார்க்க செல்வநாயகம் அவளை எச்சரிக்கையாக ஒரு முறை முறைத்து அங்கேயே நில் என்பது போல கண்ணைக் காட்டினார்.
அதில் தாவி வர துடித்த சகியின் கால்கள் அப்படியே வேரோடிப் போனது. எவ்வளவு தாங்க முடியுமோ அவ்வளவும் நீ தாங்கி தான் ஆக வேண்டும் என விதி இருக்க அதிலிருந்து அவள் எப்படி நழுவ முடியும்.
என் வாழ்க்கை தான் பாலுங்கிணறு ஆகிவிட்டது என்றால் என் தங்கை வாழ்க்கையையும் நானே என் கையால் நாசமாக்க பார்க்கிறானே... என்று நெஞ்சை அடைத்துக் கொண்டு வந்தது.
இரத்த வாடையில் சுகம் கண்டு இரக்கமே இல்லாமல் தன்னை விட வலு குறைந்த உயிரிகளை துச்சமாக பதுங்கி வேட்டையாடும் புலியிடம் ஈன்றெடுத்த குட்டிகளோடு அதை காப்பாற்ற முடியாமல், ஏன் தன்னையும் காப்பாற்றிக் கொள்ள முடியாத கையறு நிலையில் இருக்கும் தாய் மான் மாட்டிக் கொண்டதை போல உணர்ந்தாள் சகி.
அவளின் இரு பிள்ளைகள் கார்த்தியும் மிருவும் தானே...! நினைக்க நினைக்க நெஞ்சை அடைத்துக் கொண்டு வந்தது.
“பார்த்தியா உன் அக்கா லட்சனத்தை. நீயும் உன் அப்பாவும் வெளியே போனதுக்கு பிறகு இப்படி தான் கூத்தும் கும்மாளமுமா இருக்குதுங்க... சரியா வெட்கம் கெட்டதுங்களா இருக்குங்க.. உனக்கு இப்படி ஒரு அக்கா...” என்று கவிதா மிருவிடம் கோல் மூட்டிவிட ஆரம்பிக்க மிருவின் சின்ன இதயம் சுக்கு நூறாய் போனது.
விழிகளில் நீர் நெகிழ தன் அக்காவை பார்த்தாள். அவளின் கண்கள் கலங்குவதை தாங்க முடியாமல் கதற துடித்த இதழ்களை இறுக்கிக் கடித்து உள்ளுக்குள் குமுறிக் கொண்டு இருந்தாள் சகி.





