ஆனால் ஸ்வரா அவனை இன்னும் நெருங்கி “இவ்வளவு ஆசை வச்சு இருக்கியே அப்புறம் ஏண்டா என்னை வேணான்னு சொல்ற..” சற்றே வேதனையுடன் கேட்டவளை கண்டு
“ப்ச் சரா கொஞ்ச நேரம் பேசாம இருடி..” கடுப்படித்தவன் அருகில் நெருங்கியவர்களிடம் கவனம் வைத்தான். அதே நேரம் ஸ்வரா அவனை நெருங்கி முத்தமிட ரவிக்கு உயிர் அவஸ்தையாய் போனது..
அறையின் உள்ளே நுழைந்து “என்னங்க மாடம் ஒளிஞ்சுக்கிட்டீங்கீளா..” நக்கலாய் கேட்டபடி கதவின் பின் கத்தியை செலுத்தினான் ஒருவன்..
அந்த கையை அப்படியே பிடித்து முறுக்கி அவனின் பின்புறம் மடக்கி வலியை அவனுக்கு கொடுத்து எட்டி அவனது இடுப்பில் ஓங்கி ஒரு உதை கொடுத்தான் ரவி..
அதற்குள் மற்றவனும் உள்ளே வந்து அவனை குத்த பார்க்க
அதற்கு கொஞ்சமும் இடம் கொடுக்காமல் அவனது கத்தியை தள்ளிவிட்டுட்டு அவனது வயிற்றில் பலமாக எட்டி உதைத்தான். வலியில் அவன் சுருண்டு அறையின் மூலையில் சென்று விழுந்தான்.
மூன்றாமவன் அங்கிருந்தே குறி பார்த்து ரவியின் மீது கத்தியை வீச ஸ்வராவை இழுத்துக்கொண்டு கீழே குனிந்து அதிலிருந்து தப்பியவன் தனக்கு பின்னாடியே அவளை வர சொன்னவன் தானே முன்னாடி சென்று அவனை அடிக்க ஆரம்பித்தான். அதற்குள் நாலாவது ஆளும் ஐந்தாவது ஆளும் அவர்களை சூழ்ந்துக்கொள்ள ரவிக்கு சற்றே பயம் பிடித்துக்கொண்டது..
கடவுளே அவளுக்கு எதுவும் நேர்ந்து விடகூடாது இல்லன்னா உன்னை மன்னிக்கவே மாட்டேன்.. என்று லூசு தனமாக வேண்டிக்கொண்டே தன் எதிரில் இருந்தவனின் தலையில் ஓங்கி ஒரு அடி கொடுக்க அவனுக்கு தலை சுத்தி போனது.. அதே நேரம் ரவியை தாக்க நாலாவது ஆள் முயல ஸ்வரா தான் பயின்ற கராத்தே வித்தையை அவன் மீது பிரயோகித்து அவனது இடுப்பை ஒடித்தாள்.
இருவரும் ஒரு சேர பிசியாகிவிட ஐந்தாவது ஆள் வெகு சுலபமாக ரவியின் பின் புறம் தன் கத்தியை கொண்டு அவனது இடுப்பில் சொருக, தடுக்க முயன்ற ஸ்வராவால் அதை செயல்படுத்த முடியாமல் நாலாவது ஆள் அவளை பிடித்துக்கொள்ள கண்கள் கலங்கி போனது.. மீண்டும் அவன் இன்னொரு குத்து ரவியை குத்த முயன்றான் அவன். ஆனால் அதற்குள் ஸ்வரா சற்றே தெளிந்து விட வேகமாய் அவனை தள்ளிவிட முயன்றாள்.. ஆனால் இவளிடம் சண்டை போட்டுக்கொண்டு இருந்தவன் இவளை விட மறுக்க,
“ரவிவிவிவிவிவி.....” கத்தினாள்.. அவளது விழிகளில் கண்ணீர் நிரம்பி வழிந்தது..
விடாமல் ‘ரவி ரவி ரவி’ என்று அவனை அழைத்துக்கொண்டே இருந்தாள்.
தன் இடுப்பில் விழுந்த காயம் முதலில் அவனுக்கு வலிக்கவே இல்லை.. அவனது கவனம் முழுவது ஸ்வராவே நிரம்பி இருக்க அவளுக்கு எங்கேனும் காயம் ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சியவன் வேகமாய் திரும்பி தன்னை மறுபடியும் குத்த முயன்றவனை பிடிக்க முயன்றான். ஆனால் அதற்க்கு ரவி கீழே தள்ளியவன் எழுந்து அவனை பிடித்துக்கொண்டு விடாமல் ரவியை பின்பக்கமாய் மிக இறுக்கமாக இழுத்து பிடிக்க இப்போது ஐந்தாவதாய் இருந்தவனுக்கு அது மிக வசதியாய் போனது..
ரவியை குத்துவதை விட ஸ்வராவை குத்துவோம் என்று தன் பிளானை மாற்றியவன் ஸ்வராவின் பக்கம் திரும்பினான். அதுவரை சற்றே ஆசுவசாமாய் இருந்த ரவி அவனது எண்ணம் நொடியில் புரிந்தவுடன் எங்கிருந்து தான் அவ்வளவு வேகம் வந்ததோ தெரியவில்லை தன்னை பிடித்து இருந்தவனை ஒரே உதரில் கீழே விழ செய்துவிட்டு கண்ணிமைக்கும் நொடியை விட மிக விரைவாக ஸ்வராவுக்கு குறிவைத்தவனை எட்டி ஒரு உதைவிட்டான். அவனது உதையில் குப்புற விழுந்தான் அவன். அந்த நொடியை பயன்படுத்திகொண்டு ஸ்வராவை பிடித்து இருந்த நான்காவது ஆளை ஒரே தள்ளில் சுவரில் முட்ட செய்துவிட்டு அவளை தன் பக்கம் இழுத்துக்கொண்டவன் அடிபட்ட எல்லோரையும் அந்த அறையிலே உள்ளே வைத்து பூட்டிவிட்டு ஸ்வராவுடன் வெளியே வந்தான்.. அதற்குள் அந்த இடமே ரவியின் இரத்தத்தால் சிவந்து போய் கிடந்தது..
அதை பார்த்தவளுக்கு மயக்கம் வருவது போல இருந்தது.. ஆனாலும் முயன்று தன்னை திடப்படுத்திக்கொண்டவள் அவனது சட்டையை அவிழ்த்து அவனது காயத்தில் இருக்க கட்டு போட்டவள் விழிகளில் வழிந்த நீரை துடைக்க கூட தோன்றாமல் அவனை கை தாங்களாக அழைத்து கீழே சென்றவள் தன்னுடைய காரில் அவனை அமரவைக்க முயன்றாள்.. ரவியோ அதை தடுத்து அவளது மொபைலை வாங்கி அருகில் இருக்கும் காவல் துறைக்கு போன் செய்து விவரம் சொன்னான்.
அவனது தீரத்தை கண்டு பெருமை கொண்டாள். என்றலும் அவனது நிலை அவளை கொன்று போட்டது.. தன்னால் தானே இத்தனையும் என்று மனமொடிந்து போனாள்.
அவனது நேரம் அந்த ஸ்டேசனில் உள்ள அனைவரும் ஸ்வரா வாதாடிய அந்த சஞ்சயின் கையாட்களாய் இருந்தார்கள்.
“அவங்க யாரும் உதவிக்கு வரமாட்டாங்க ரிஷி வாங்க நாம போகலாம்.. கட்டு போட்டும் இரத்தம் வருது ரவி..” என்றவளை கொஞ்சமும் சட்டை செய்யாமல் நந்தாவுக்கு அழைத்து விவரம் சொன்னான்.
கேள்விப்பட்ட உடனே நந்தன் வாயு வேகமாய் விரைந்து வந்து ரவியை கைத்தாங்கலாய் பற்றிக்கொண்டு கமிஷனருக்கு போன் செய்து நடந்த விசயங்களை முறைப்படி தெரிவித்தவன் ரவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றான்.
போகும் முன்பு நந்தனின் ஆட்களை வைத்து அவளை வீட்டுக்கு கொண்டு போய் விட ஏற்பாடு செய்தான் ரவி.. கூடவே கோதாண்டத்தையும். போகும் அவளை சற்றே ஆராய்ந்தான் ரவி.. எங்காவது அடி பட்டு இருக்கிறதா என்று.. ஒரு கீறல் கூட அவள் மேல் விழவில்லை.. அதன் பின்பே அவனுக்கு மூச்சு வந்தது.. அதற்கு பிறகே அவனது காயத்தின் வலியை உணர்ந்தான்.. மெல்ல மயக்க நிலைக்கு சென்றான் ரவி..
மயங்கியவனை தன் தோளில் சாய்த்துக்கொண்டு ஒற்றை கையாலே வண்டியை ஓட்டிக்கொண்டு மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தான். மனம் முழுவதும் லேசாய் ஒரு நடுக்கம்.
முதல் முறை திகம்பரி இரத்த வெள்ளத்தில் கிடந்த போதும், அதே சமயத்தில் ராஜன் கை கால் செயல் இழந்து இருக்கும் போதும். இரண்டாவது முறை ராயரும் திகம்பரியும் கத்தி குத்து பட்டு இரத்த வெள்ளத்தில் மிதந்த போதும் சரி அவன் அவ்வளவு தளர்ந்து போனான். இதோ இப்போது ரவியும் இவ்வாறு இருக்க அவன் மிகவும் ஓய்ந்து போய் தான் இருந்தான்..
யாரிடமும் சொல்லாமல் தான் தான் இதை சரிசெய்ய வேண்டும் எண்ணியவன் ரவியை மருத்துவரிடம் ஒப்படைத்து விட்டு அப்படியே சரிந்தான் இருக்கையில்.
அண்ணா அண்ணா என்று காலை சுத்திக்கொண்டு இருப்பவனை இப்படி படுக்கையில் அதுவும் இவ்வளவு இரத்தத்தில் காணும் போது மனம் கலங்கி போய் விழிகளில் நீர் நிறைந்து போனது..
“கடவுளே என் தம்பிக்கு எதுவும் ஆகிட கூடாது.. அவனை இப்படி ஒரு கோலத்தில் என்னால் பார்க்கமுடியவில்லை. என்னை நம்பி தான் அவங்க அப்பா அம்மா அனுப்பி வச்சாங்க இப்போ அவங்க வந்து கேட்டா நான் என்ன பதில் சொல்றது.. ராஜனுக்கு என்ன பதில் சொல்றது.. கொஞ்ச நேரம் அவன் தாமதமாய் வந்தாலும் என்ன ஏதுன்னு அவ்வளவு விசாரணை பண்ணுவாரு.. இதோ இப்போ இப்படி ஒரு நிலையில் இவனை பார்த்தா அவர் என்ன நிலைக்கு செல்வாரோ” என்று நாளா பக்கமும் அவனது எண்ணம் சுழன்று அடித்தது.. ராயருக்கும் திகம்பரிக்கும் என்ன பதில் சொல்வது என்று எண்ணிய சமயம் ஸ்வராவுக்கே இந்த நிலை என்றால் ராயரின் நிலை.. அய்யோ என்று மனம் அலறி அவனுக்கு போன் பண்ண அவனது எண் பிசியாகவே இருந்தது..
“கடவுளே இதென்ன சோதனை..” தலையிலே அடித்துக்கொண்டவன் வேகமாய் தன் வீட்டின் எண்ணுக்கு அழைத்தான்.. அப்போதும் யாரும் எடுக்காமல் போக வீட்டு காவலாளிக்கு போன் செய்தான்..
அவர் எடுத்து பேச
“அங்க ஏதும் பிரச்சனை இல்லையே யாராவது அறிமுகம் இல்லாத ஆள் யாரும் வீட்டுக்கு வந்தாங்களா..” படபடப்பாய் கேட்டவனுக்கு
“அதெல்லாம் ஒன்னும் இல்ல சார்..” என்றார் அவர்.
“ம்ம் இனிமே யாரு வந்தாலும் வீட்டுக்குள்ள விட கூடாது.. அதே போல யாரும் வீட்டை விட்டு வெளியே செல்லவும் கூடாது..” என்று சொல்லிவிட்டு மறுபடியும் வீட்டு எண்ணுக்கு போன் போட்டான்..
சரியாய் ராயரே எடுத்தான்.. அவனிடம் விஷயத்தை சொல்ல அவன் பதறி போனான்..
“நந்தா ப்ளீஸ் சொல்லுடா எந்த மருத்துவமனைன்னு நானும் வரேன்..” என்று கெஞ்சினான் ராயர்.
“இல்ல மாப்ள நீ இங்க வராது சேப்டி இல்லடா.. நீ வீட்டுலையே இரு..” என்றவன் வைக்க போக
“மச்சான் ப்ளீஸ் டா ஒரே ஒருமுறை அவனை பார்த்துட்டு வந்துடுறேண்டா.. வச்சுடாதாடா மச்சான்” என்று அவன் மறுக்க மறுக்க வைத்துவிட்டான் நந்தன்.
தலையை பிடித்துக்கொண்டு அப்படியே அமர்ந்துவிட்டான் ராயர்.. அவனால் ரவியை அப்படி ஒரு நிலையில் எதிர்பார்த்திருக்கவே இல்லை.. இன்னும் அவன் சிறு பிள்ளை என்றொரு எண்ணம் இவனுக்கு.. அவனுக்கு போய் கத்தி குத்தா.. ஓய்ந்து போய் இருந்தான் ராயர்..
ராயரை தேடிவந்த திகம்பரி அவனின் நிலையை கண்டு பயந்து போய் “என்ன மாமா என்ன ஆச்சு ஏன் இப்படி உட்கார்ந்து இருக்கீங்க..” அவனை உலுக்கினாள். அவளது உலுக்கலில் நிமிர்ந்து பார்த்தான். பார்த்தவனின் விழிகள் சிவந்து போய் நீர் கோர்த்து இருக்க
“மாமா” என்று அதிர்து அவனை பார்த்தாள்.. அவன் எதுக்காகவும் கலங்கி அவள் பார்த்தது இல்லை. அப்படி பட்டவன் இன்று இப்படி இருப்பதை கண்டு பயந்து போனாள்.
“மாமா யாருக்கு என்ன ஆச்சு.. ஏன் இப்படி அமைதியா இருக்கீங்க.. ஏதாவது சொல்லுங்க மாமா” மீண்டும் அவனை உலுக்கினாள்..
“ரவிக்கு கத்தி குத்து பட்டிருக்குடி” என்றான் வேதனையுடன்.
“மாமா” அதிர்ந்து போய் தன் வாயை பொத்திக்கொண்டாள் திகம்பரி.. அது பாட்டுக்கு விழிகளில் நீர் வழிய சரிந்து வீழ்ந்தாள் நிலத்தில்.. அவளை பிடிக்க கூட அவனுக்கு தோன்றவில்லை..
இருவரும் பிரேமை பிடித்தது போல இருக்க அந்த நேரம் ராஜன் வர சட்டென்று தன்னை நிலை நிறுத்தியவன் திகம்பரியை பற்றி எழுப்பி விட்டு அருகில் இருந்த அறைக்கு சென்றுவிட்டான்..
அதை கவனிக்காத ராஜன் தன் போல் செய்தியை போட்டு பார்த்தார்.. கூடவே தீஷிதனையும் வைத்துக்கொண்டார். அதனால் அவருக்கு ரவியை பற்றிய எந்த தகவலும் வராமல் போனது..
உள்ளே நுழைந்த திகம்பரி “ரவிய பாக்கணும்ங்க..” என்றாள் வேதனையாக
“உன் அண்ணன் இப்போதைக்கு நிலைமை சரியில்ல.. அதனால வேணான்னு மறுத்திட்டான்” என்று கூற
“என்ன ஆச்சு முழுசா விவரம் சொல்லுங்க..” என்று சொல்ல ராயர் எல்லா தகவலையும் சொன்னான்.. அதை கேட்டவளுக்கு இதயம் துடித்து போனது..
“ஸ்வரா பத்திரமா வீடு போய் சேர்ந்துட்டாளா.. இல்லையா.. எதுக்கும் அவளுக்கு ஒரு போன் போடுங்க” என்று தவிக்க ராயரும் அவளுக்கு போன் போட்டு விசாரித்தான். அவள் பாதுகாப்பாய் வந்துவிட்டதை சொல்லிவிட்டு “ரவிக்கு எப்படி இருக்கு அண்ணா..” என்று கண்ணீருடன் கேட்டாள் ஸ்வரா.
“எனக்கும் ஒன்னும் தெரியல மா.. நந்தன் எங்களை ஹவுஸ் அரெஸ்ட் பண்ணி வச்சு இருக்கான்..” என்றான் ஆற்றாமையாய்.
“நல்லது தானே அண்ணா..” என்றவள் நந்தாவுக்கு போன் செய்து கேட்டாள்.
அவளுக்கும் சரியான பதிலை சொல்லாமல் வைத்தவன் இருக்கையின் பின் புறம் அப்படியே சாய்ந்துக்கொண்டான்..
முதல் முறை இப்படி தானே தனியாக தவித்தான்.. திகம்பரி ஒரு பக்கம் படுக்கையில் ராஜன் ஒரு பக்கம் படுக்கையில்.. இருவருக்கும் இடையில் இவன் மட்டும் அலைந்து திரிந்து ஆறுதலுக்கு கூட தோள் சாய தோள் இல்லாமல் அவன் தவித்த தவிப்பு அவன் மட்டுமே அறிவான்..
எவ்வளவு சொத்து சுகம் இருந்து என்ன பயன்.. சுற்றிலும் நல்ல சொந்தம் இல்லை என்றால் என்ன இருந்தும் அநாதை தானே.. இந்த நொடியில் அவன் அன்று அனுபவித்த தனிமையும் வேதனயும் நினைவுக்கு வர இன்னும் சோர்ந்து போனான்.
ரவிக்கு சற்று ரத்தம் அதிகமாய் வெளியேறி இருக்க இரத்தம் ஏற்ற வேண்டும் சொல்லிவிட்டார்கள். பிளட் பேங்க்குக்கு தொடர்பு கொண்டவன் அங்கு ஸ்டாக் இல்லை என்று சொல்ல அந்த இரவு பொழுதில் ரவியின் ரத்த வகைக்காக அலைந்து திரிந்தான் நந்தன்..
ஒவ்வொரு வங்கியாய் ஏறி இறங்க எங்கும் இல்லை என்று சொல்ல தனக்கு தெரிந்தவர் அறிந்தவர் என்று ஒருவரையும் விட்டு வைக்காமல் எல்லோரிடமும் கேட்டான். கிட்ட தட்ட இரண்டு மூன்று மணி நேரம் கழித்தே இரத்தம் கிடைக்க சற்றே மகிழ்வுடன் இருந்தான் நந்தன் தான் இருக்கும் சூழ்நிலை மறந்து... கூடவே கமிஷ்னரை முடுக்கி விடவும் செய்தான்..
“யாரு என்ன என்னனு எனக்கு உடனே தகவல் வரனும் செழியன்.. அவனுங்களை ஒரு கை பார்க்கணும்” என்று வன்மையுடன் சொல்ல
“அதை நான் பாத்துக்குறேன்டா நீ ரவியை பாத்துக்கோ.. நானும் செக்யூரிட்டிக்கு ஆள் போடுறேன்” என்று சொல்லிவிட்டு தன்னோடு வந்த சில காவல் காரர்களை அங்கே நியமித்து விட்டு சம்பவம் நடந்த ஸ்வராவின் அலுவலகத்துக்கு சென்றான் செழியன்.
அங்கு சென்று அந்த இடத்தில் சிதறி இருந்த ஒவ்வொன்றையும் ஆராய்ந்து நோட் செய்துக்கொண்டவன் மேலும் ஆராய்ந்து பார்த்தான் எதாவது தடையம் சிக்குதா என்று ஆராய்ந்து பார்த்தான்.. அன்றைய இரவு பொழுது செழியனுக்கு அங்கேயே கழிந்தது.. அஞ்சலிக்கு போன் செய்து தகவல் சொல்லிவிட்டு மீண்டும் ஆராய்ந்து பார்த்தான் அவ்விடத்தை..
அங்கு இங்கு என்று அலைந்ததில் இன்னும் சோர்வு தட்டியது நந்தனுக்கு.. ஆனாலும் அவனது தவிப்பு மட்டும் குறையவே இல்லை..
மருத்துவர் ஸ்டிச் போடணும் என்று சொல்லினார்களே தவிர வேறு எதுவும் சொல்லவில்லை.. அதனால் நந்தனுக்கு சற்று பயமாகவே இருந்தது...





