மீட்டிங்கை முடித்து விடு தன் அறைக்கு வந்தவன் கண்கள் கலங்கி வேலை செய்துக்கொண்டு இருந்தவளை ஒரு கணம் பார்த்தான், ஆனாலும் எதுவும் சொல்லாமல் தன் வேலையை பார்க்க ஆரம்பித்தான்.
அவனது இந்த அலட்ச்சியம் அவளை கொன்று போட அவனிடமிருந்து தள்ளி இருக்க வேண்டும் போல தோன்றியது அந்த கணம்.. ஏனோ அவனது அருகாமை அவளுக்கு மூச்சு முட்டி போவது போல இருந்தது..
“எனக்கு லீவ் வேணும்..” என்றாள்.
அவளை ஆராய்ந்தவன் “குடுக்க முடியாது” என்றான்..
“அப்போ என் வேலையை ரிசைன் பண்றேன்..” என்றவள் தன் கைப்பையை எடுத்துக்கொண்டு கிளம்பி சென்றுவிட்டாள். அவளை தடுக்க கூட மனம் வரவில்லை நந்தனுக்கு..
கண்கள் சிவந்து அழுதுக்கொண்டு சென்றவளை எதிர் புறம் வந்த ரவி கண்டுக்கொண்டான்..
“ரியா என்ன ஆச்சு..”
“நத்திங் ரவி.. ஜஸ்ட் ஹெட் ஏக்..” என்று புன்னகைத்தவள் அவனுடைய அடுத்த கேள்வியை எதிர்நோக்கி காத்திருக்காமல் விருட்டென்று செல்ல ரவி சென்றுக்கொண்டு இருந்தவளை ஆராய்ச்சியுடன் பார்த்தான்.
நந்தனின் அறைக்குள் நுழைந்து அவனை ஆராய்ச்சியாக பார்த்தான் ரவி..
“என்னடா வந்த உடனே ஆராயிர.. என்ன விஷயம்..” என்றான்.
“அண்ணா ரியா உன்னை லவ் பண்றாங்க அது உனக்கு தெரியுமா தெரியாதா..” என்று போட்டு உடைத்து விட்டான்.
அவனை ஆழ்ந்து பார்த்தானே தவிர பதில் எதுவும் சொல்லவில்லை.
“பதில் சொல்லாம இப்படி பாத்துக்கிட்டே இருந்தா என்ன அர்த்தம் அண்ணா..”
“அந்த சொல்லுக்கு அவளுக்கு அர்த்தமே தெரியாது டா.. அவ என் மேல வச்சு இருக்குறது வெறும் கவர்ச்சி மட்டும் தான்..” என்று சொன்னவன் எழுந்து வெளியே செல்ல, அங்கே கண்களில் இன்னும் அதித சிவப்போடு அவனை முறைத்து பார்த்துக்கொண்டு இருந்தாள் ரியா..
“என் காதலை எப்படி நீங்க வெறும் கவர்ச்சின்னு மட்டும் சொல்லுவீங்க.. என் காதலோட ஆழம் என்னன்னு தெரியுமா உங்களுக்கு.. அஞ்சு வருசமா உங்களை என் நெஞ்சுல சுமந்துக்கிட்டு உங்களை மட்டுமே நேசிச்சுக்கிட்டு இருக்குற என்னை பார்த்து எப்படி இப்படியெல்லாம் உங்களால பேச முடியுது நந்தன்..” ஆற்றாமையுடன் கேட்டவளை இகழ்வாக ஒரு புன்னகயுடன் பார்த்தவன்
“உன்னோட காதல்ல எப்பவுமே கவர்ச்சி மட்டும் தான் இருக்கு.. அது இப்போன்னு இல்ல.. நீ என்னிடம் வரும்போதிலிருந்தே அப்படி தான்.. அதனால காதல்னு சொல்லி அந்த காதலுக்குரிய மரியாதையை கெடுத்துடாத..” என்றவன் கிளம்பும் சமயம் கார்த்திக் வர,
மூவரும் அவரவர் முகங்களை சரி செய்துக்கொண்டு அவனை வரவேற்றார்கள்..
நந்தனின் மூலம் கார்த்திக்கின் நட்பு ஏற்க்கனவே ரியாவுக்கு கிடைத்து இருந்தது.. அதனால் அவனை வரவேர்ப்பாக அழைத்து அவனுக்கு குடிக்க பானத்தை ஏற்பாடு செய்தவள் கிளம்ப போக
“நீயும் இரு ரியா..” என்றவன் மூன்று பேருக்கும் தன்னுடைய கல்யாண பத்திரிக்கையை வைத்து வர சொல்லி சொல்ல
“வாழ்த்துக்கள்” என்று மூவரும் வாழ்த்தினார்கள்..
“இவனுங்க ரெண்டு பேரும் கண்டிப்பா வந்துடுவானுங்க.. ரியா நீ தான் சாக்கு போக்கு சொல்லுவ.. உனக்கு எந்த எஸ்க்கியுசும் கிடையாது.. உன் பாஸ் கிளம்பும் போது நீயும் வந்துடனும் சொல்லிட்டேன்..” என்றவன் அவளை மிரட்டி வரவைக்க அவளிடமே சம்மதம் வாங்கினான்..
“பேச்சுலர் பார்ட்டி எப்போடா..” என்று இருவரும் கேட்க ரியா நந்தனை ஒரு பார்வை பார்த்தாள். அவளுடைய பார்வையை கொஞ்சமும் சட்டை செய்யாமல் காரியத்திலே கண்ணாய் இருந்தான். ரவி இருவரின் பார்வையையும் கணக்கிட்டான்.. அதிலிருந்து அவனால் எதையும் கண்டு பிடிக்க முடியவில்லை..
“சரி இவர்களை விட்டு பிடிப்போம்” என்று விட்டு கார்த்தியின் பேச்சில் தானும் இணைந்துக்கொண்டான்..
அதன் பிறகு அவன் விடைபெற்று செல்ல ரவியும் பின்னோடு சென்றுவிட்டான்.
நந்தன் திரும்பி நின்று நக்கலான பார்வையுடன் அவளை ஏறிட்டு பார்த்தான்..
“ரிசைனிங் லெட்டர் குடுக்கறேன்னு சொல்லிட்டு போனவங்களுக்கு இங்க என்ன வேலை..” நறுக்கென்று கேட்டான்.
அதில் அவளுக்கு உயிர் போனது..
“மதியாதார் தலை வாசலை மதியாதே..” என்று அவளுக்கு படித்த படிப்பெல்லாம் நினைவுக்கு வர, அந்த வேதனையில் மனம் இன்னும் கலங்கி போனது.. அதுவும் அவனது ஒட்டுதல் இல்லா பேச்சில்.. யாரோ எவரோ என்கிற மாதிரி இருக்க அவனுக்கு பதில் சொல்லாமல் தன் மேசையின் மீது இருந்த போனை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டாள்.
அவளது ஒதுக்கம் கண்டு தோள்களை குளுக்கிக்கொண்டவன் தன் வேலைகளை பார்க்க ஆரம்பித்தான்..
இடை இடையே ஸ்வராவும் ரவியும் மோதிக்கொண்டு தான் இருந்தார்கள்.. அவளது கண்களில் தென்படும் காதலில் ரவி உருகி தான் போவான்.. ஆனால் அவனால் அதை முழுமையாக அனுபவிக்க விடாமல் இடையே இருக்கும் பிரச்சனை பூதாகரமாக இருக்க பெருமூச்சுடன் நகர்ந்து விடுவான்..
அன்று ஒரு நாள் நல்ல மழை வெளுத்து வாங்க ஸ்வரா ஒரு முக்கியமான வேலை காரணமாக அலுவலகத்திலே தங்கிவிட்டாள். அதை அறியாத ரவி வீட்டுக்கு சென்றுவிட்டான். கோதாண்டம் அவளுக்கு உதவியாய் அங்கேயே இருக்க அப்போது அவளுக்கு ஒரு போன் வந்தது..
“ஹலோ”
“மேடம் ரொம்ப ஸ்மார்ட்டா வொர்க் பண்ணிக்கிட்டு இருக்கீங்க போல... கருப்பு கோட்டு போட்டுக்கிட்டா நீங்க என்ன வேணாலும் செய்யலாமா.. என் கிட்ட அவ்வளவு பணம் வாங்கிகிட்டு எனக்கு எதிரா செய்லபட்டு கிட்டு இருக்குற உன்னை என்ன பண்ணலாம்..” என்று தொலை பேசியிலே அவளை ஒரு குரல் மிரட்ட அவள் ஒரு கணம் தடுமாறி தான் போனாள்.
அடுத்த நொடி ரவிக்கு கால் போட்டாள். “என்ன இவ இந்த நேரத்துல போன் பண்றா...” யோசனையுடனே அவன் எடுத்தான்..
“ஹலோ யாருங்க பேசுறது.. எதா இருந்தாலும் முதல்ல என்ன விசயம்னு தெளிவா சொல்லுங்க. அப்புறம் யாரு என்ன என்கிறதையும் சொல்லுங்க.” என்றவளின் குரல் கேட்க
“என்ன இவ இப்படி பேசுறா.. இவளா தானே கால் பண்ணா இப்போ இப்படி பேசுறா..” என்றபடி இன்னும் அவளது குரலை ஆழ்ந்து கேட்டான்.
“இங்க பாருங்க நீங்க நினைக்கிற வக்கீல் நான் கிடையாது..” எதோ சொல்ல அதன் பிறகே அவள் இன்னொரு காலில் பேசுவது புரிந்தது.. அதனோடு கூடவே
“நான் தனியா இருக்குறேன்னு உனக்கு யாரு சொன்னது... ஆமா என் அலுவலகத்துல தான் இருக்கேன்.. இதெல்லாம் தெருஞ்சு வச்கிக்கிட்டு நீ என்ன பண்ண போற” என்றவுடனே ரவி போனை ப்லூடூத்தில் போட்டுவிட்டு பைக்கை பறக்க விட்டான் அவளது அலுவலகத்துக்கு..
எதுக்காக அவள் தனக்கு கால் செய்தாள் என்பதை புரிந்துக்கொண்டவன் அதிவிரைவாக சென்றான் மழையை கொஞ்சமும் பொருட்படுத்தாமல்..
அவனது நெஞ்சு வாய் வரை வந்து துடித்தது.. என்ன வம்பை விலைக்கு வாங்கி வச்சு இருக்காளோ என்று தவித்து போனான். கடவுளே நான் வரும் வரை எந்த பயலுவளும் அவளை நெருங்கி இருக்க கூடாது.. உனக்கு மொட்டை வேணாலும் போடுறேன்..” என்று வேண்டியபடியே வந்து சேர்ந்தான்..
அலுவலகத்தின் உள் இன்னும் வேகமாய் வந்தான் அவளது பேச்சை கேட்டபடி.. அப்போதும் அவள் போனில் பேசிக்கொண்டு தான் இருந்தாள்.
“வந்துட்டியா வாடா முடுஞ்சா என் மேல கைவச்சு பாரு நான் யாருன்னு காமிக்கிறேன்..” என்று இவள் சவால் விட பதிலுக்கு அவன் என்ன சொன்னானோ சரியாய் கீழே ஒரு கார் வந்து நின்றது.. அதிலிருந்து ஒரு ஐந்து பேர் கத்தி கொடுவா அருவாள் என்று எடுத்துக்கொண்டு வர ரவிக்கு ஒரு கணம் மூச்சே நின்று போனது போல இருந்தது..
அவள் பேசிக்கொண்டு இருந்த போனை பிடுங்கி வைத்தவன் அவளை இழுத்துக்கொண்டு அந்த அறையின் கதவின் பின் ஒளிந்துக்கொண்டான்..
கூடவே கோதாண்டத்தை வேறு அறையில் மறைத்து வைத்தவன் ஸ்வராவை தன் கைபிடியில் வைத்துக்கொண்டவன் அவள் ஏதோ பேச வருவதை கொஞ்சமும் சட்டை செய்யாமல் தன் இடுப்பில் இருந்த கன்னை எடுத்து குறிபார்த்து வாசலை நோக்கியபடி பிடித்துக்கொண்டு இருந்தான்..
வந்ததிலிருந்தே ரவியின் ஒவ்வொரு செயலையும் பார்த்துக்கொண்டு இருந்தவளுக்கு அவனின் அன்பு மட்டுமே அதில் தெரிந்தது.. அதை சொன்னா இவன் ஏற்றுக்கொள்ளவே மாட்டான்.. எதையாவது செய்யட்டும் என்று இவளால் ஒதுங்கி போகவும் முடியவில்லை.. ஒவ்வொரு செயலாலும் அவளை மிகவும் கவர்ந்து இழுக்குறான்.. என்ன செய்யறது.. என்று யோசித்தவளின் சிந்தனை அவனது கை அவளின் இடையை இறுக்கி பிடித்ததில் முடிவுக்கு வந்தது..
“எங்க பிடிக்கிறான் பாரு பிராடு.. இதுல லவ் இல்லன்னு சொல்லுவான்..” அவனது தொடுகையை ரசித்தபடி இருக்கும் இக்கட்டான நிலையை உணராமல் அவள் காதல் பண்ணிக்கொண்டு இருக்க
“ஏண்டி அறிவு கெட்டவளே.. எத்தனை முறை சொல்றது இப்படி இக்கட்டுல வந்து மாட்டிக்காதன்னு.. கொஞ்சமும் கேட்டுக்க மாட்டியா.. எவேண்டி இவன் இந்நேரத்துக்கு வந்து கழுத்தை அருக்குறான்..” தன் மீசை முடி உரச அவளது காதில் உருமியவனை கண்டு கோவம் வராமல் இன்னும்மின்னும் காதல் தான் பெருகியது..
“ஏண்டி கேக்குறேன்ல.. பதிலை சொல்லி தொலை” பல்லை கடித்தபடி பேசியவனை பக்கவாட்டில் திரும்பி பார்த்தவள்
“இப்போ ஒரு கேசு போச்சுல்ல அந்த ஆள் தான்..”
“ஏண்டி அவன் எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா..” இன்னும் கோவம் பெருகியது அவனுக்கு..
“ப்ச் எல்லாம் தெரியும்..” என்றவள் அவனின் நெஞ்சோடு சரிந்துக்கொண்டாள்.
“ஏண்டி இப்படி பண்ற.. அவனே அவ்வளவு பெரிய ஆள்.. அதோட இல்லாம அவனுக்கு பின்னாடி ஒரு கூட்டமே இருக்குடி.. இதுல பல அமைச்சர்கள் கூட இருக்காங்க தெரியுமா..” ஆத்திரமாய் கேட்டவனை இன்னும் சவுகாரியமாக பார்க்க வேண்டும் போல இருக்க அவனது கை வலைவுக்குள்ளே திரும்பி அவனது முகத்தை பார்த்தவள் காதலுடன் “அது தெரியாமலா இவ்வளவு தூரம் இறங்கி இருப்பேன்..” என்றவளை கொல்லும் ஆத்திரத்துடன் நோக்கினான்.
“ப்ச் இப்போ எதுக்கு முறைக்கீறீங்க..” என்றவள் வாகாக அவனது நெஞ்சில் சாய்ந்துக்கொண்டவளை எந்த வகையில் சேர்ப்பது என்று தெரியாமல் முழித்து பார்த்தான் அவளை..
“என்னடி இப்படி பண்ற.. நமக்குள்ள ஒத்து வராதுடி..” உள்ளே போன குரலுடன் பேசியவனின் இதழை தன் இதழ் கொண்டு மூடியவள் பின் விலகி
“எனக்கு நீ தாண்டா வேணும்.. நீ இல்லன்னா சாகல்லாம் மாட்டேன்.. ஆனா என்னால உயிர்ப்பா இருக்க முடியாது அவ்வளவு தான்” என்றவள் அவனது நெஞ்சில் சாய்ந்துக்கொண்டாள். இவ்வளவு இயல்பாய் தன் காதலை சொல்லியவளை கண்டு மனம் மயங்கி தான் போனது..
“ரவி நீ கூட உயர்ந்த அன்பால காதலிக்க படுறடா.. குடுத்து வச்சவன்டா.. இவ நேசம் கிடைக்க” என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டவன் இருக்கும் இக்கட்டை நினைத்தது லேசாய் நடுங்கி தான் போனான்..
எந்த வித சேதாரமும் இல்லாமல் ஸ்வராவை காப்பாத்தணும் என்ற எண்ணமே அவனுக்கு பயத்தை கொடுத்தது.. அவன் மட்டும் என்றால் எதற்கும் பயப்பட மாட்டான். ஆனால் கூட ஒரு பொம்பள பிள்ளையை அதுவும் அவன் மனம் கவர்ந்த பிள்ளையை வைத்துக்கொண்டு சண்டை இடுவது என்பது சற்று சவாலாகவே இருந்தது அவனுக்கு.. அவள் மீது ஒரு சின்ன கீறல் கூட விழ கூடாது என்று உறுதி எடுத்தவன் அவனையும் அறியாமல் அவளது நெற்றியில் அழுத்தமாக தன் இதழை புதைத்தவன் அவளை தன்னோடு சேர்த்து இருக்கி அணைத்துக்கொண்டான். அவனது உடல் மொழியிலே அவனது உணர்வுகளை புரிந்துக்கொண்டவள்
“பயமா இருக்கா மாமா..”
“ப்ச் பயம்னு இல்லடி.. உன்னை ஸேப் பண்ணனும்.. அது தான் கொஞ்சம் தடுமாற்றமா இருக்கு..” என்ற போது தான் அவளது மாமா என்ற அழைப்பையே உணர்ந்தான்.
“ஏண்டி நீ வேற இருக்குற இருப்புல மனுசன உசுப்பேத்திக்கிட்டு” என்ற போதே அவளது இதழை தன் வசமாக்கிக்கொண்டு அழுத்தமாய் வன்மையாய் ஒரு இதழ் முத்தம் குடுத்தவன்
“என்னை ரொம்ப சீண்டாதடி அப்புறம் நீ தான் காய பட்டு போவ” என்று எச்சரித்து விட்டு வெகு அருகாமையில் கேட்கும் காலடி ஓசையில் கவனமானான்..





