அந்த பிஞ்சின் ஸ்பரிசம் அவனின் வேதனையை கட்டு படுத்தினாலும் குழந்தையின் மென்மை அவளையே நினைவு படுத்தியது..
திகம்பரி அவனை ஒரு பார்வையில் கணித்து விட்டவள் “என்ன பிரச்சனையா இருக்கும். இப்படி முகம் சோர்ந்து போய் இருக்கு இவனுக்கு.” என்று ரவியின் வேதனை நிறைந்த உள்ளம் அவளுக்கு புரிய பாரமாகி போனது..
ராயரின் முன் எதுவும் கேட்க முடியாது.. ஏதாவது கேட்டால் இவன் இன்னும் கூட கொஞ்சம் சொதப்புவன். பின் ரவி வாயையே திறக்க மாட்டான் என்று புரிய அமைதி காத்தாள்.
பின் அவனுக்கு தேனீரை ஊற்றி குடுத்து அவனை உபசரிக்க குடிக்கும் மனநிலை கொஞ்சமும் இல்லை அவனுக்கு. குடிக்கவில்லை என்றால் கண்டிப்பா ராயர் என்ன ஏது ஆராய்ந்து விடுவான் என்பதால் வாங்கி பருகினான். சரியாய் குழந்தை விளையாடும் இடமாய் பார்த்து தன் தேனீர் கோப்பையை வைக்க குழந்தையும் விளையாட்டு மும்மரத்தில் தட்டி விட்டான். இதையெல்லாம் பார்த்துக்கொண்டு இருந்த திகம்பரிக்கு கஷ்டமாய் போனது.. உடனடியாய் அவனிடம் பேசவேண்டி இருப்பதை உணர்ந்துக்கொண்டாள்.
ராயரை திரும்பி பார்த்தாள். அவன் டிவி நியுஸில் கவனமாய் இருந்தான். சஞ்சயின் கேஸ் பற்றிய செய்தி தான் ஓடிக்கொண்டு இருந்தது..
திகம்பரி ரவியை பார்த்து “வாடா..” என்றுவிட்டு தோட்டத்துக்கு போக “ஹைய்யோ உலக்கைக்கு பயந்துக்கிட்டு மத்தலத்துக்கிட்ட மாட்டிக்கிட்டனே.. மாமாவையாவது கொஞ்சம் சமாளிச்சுடலாம் ஆனா இவளை சமாளிப்பது குதிரை கொம்பு தான்..” என்று தயக்கத்துடனே அவளேதிரே வந்து நின்றான்.
“என்ன டா ஆச்சு..”
“ஒன்னும் இல்ல பரி..”
“ஒண்ணுமே இல்லையா ரவி..” அழுத்தம் திருத்தமாய் கேட்டவளை கண்டு கண்கள் கலங்கியது.. அதை அடக்கியபடி “நிஜமா ஒண்ணுமே இல்ல பரி..” என்றவனின் தாவாங்கட்டையை பிடித்து நிமிர்த்தி தன் முகத்தை பார்க்க செய்தவள்
“அப்புறம் ஏண்டா கண்ணு கலங்கி இருக்கு..” கேட்க
“நிஜமாவா அது பைக்ல எதிர் காத்துல வந்தேன்னா அதனால இருக்கும் பரி..”
“ரவி..” என்று ஆழ்ந்து அவனை அழைத்தவள் “ஸ்வரா விசயமாடா..” என்று கேட்டவளை கண்டு திகைத்து போய் பார்த்தான்.
“பரி உனக்கு எப்படி..” திக்கி தினறியவனை கண்டு “டேய் அதெல்லாம் போக போக சரியாகிடும்.. நீ சொன்னா புருஞ்சுக்குவா ரவி..”
“எதை புரிஞ்சுக்குவா பரி..” குழப்பத்துடன் அவளை பார்த்தான்.
“அதான் அவ எதிர் தரப்புக்கு வாதடுறதுனால தானே நீ மூஞ்சை தொங்க போட்டுக்கிட்டு இருக்க..” என்று அவள் சரியாய் கணித்துவிட்டவளை கண்டு மெச்சினான்..
“செம்ம பரி..” அவளை பாராட்டியவனை கண்டு
“அடேய் உன் காதலுக்காக அவ தன்னையே முழுசா மாத்திக்குவாடா.. உனக்கு பிடிக்காததை அவ செய்ய மாட்டா.. நான் கேரண்டி தரேன்..” என்றவளை கண்டவனுக்கு திகம்பரியின் மீது அவ்வளவு பாசம் ஊற்றெடுத்து கிளம்பியது..
“உனக்கு பிடிக்காத விசயத்தை அவ செய்ய மாட்டா டா.. இதுக்காகவா இவ்வளவு பீல்.. நான் அவ கிட்ட பேசுறேன்..” என்றவளை கண்டு சிரித்தவன் “ம்மா சரி..” என்றுவிட்டு உள்ளே போக எண்ணியவனை விட மாட்டேன் என்று சொல்வது போல அங்கிருந்த கொடி அவனை சுற்றி வலைத்து அவனது கைகளில் படர்ந்ததை கண்டு மனம் இன்னும் பாரமாகி போனது.
திகம்பரி அவனது உணர்வை படித்தது போல அவனுக்கு தனிமையை கொடுத்துவிட்டு நகர்ந்தாள். போனவளையே ஒரு வித புரிதலோடு பார்த்தான். ராயர் கூட கண்டுகொள்ளாத விஷயத்தை தான் மறைத்தும் இவள் கண்டு கொண்டதில் தங்கள் இருவருக்கும் இடையே இருக்கும் நட்பின் ஆழத்தை இன்னும் நன்கு உணர்ந்துக்கொண்டான்.
கொடியை தடவி கொடுத்தவன் அதை கைகளில் வைத்து பார்த்துக்கொண்டே இருந்தான்.. மெல்ல மெல்ல அவனது மனம் சற்றே சமன் பட்டது.. இருந்தும் காலையில் அவளது அருகாமையை உணர்ந்த உடல் அவள் வேண்டும் என்று பித்தம் கொண்டது. அது ஒரு பக்கம் என்றாலும் அவனின் மனமோ தன்னை பார்க்காமலே ராயர் பேசும் பேச்சிலிருந்தே தன்னை உணர்ந்து காதலிக்க தொடங்கியவளின் காதல் கொண்ட மனம் வேண்டும் என்று துடித்துக்கொண்டு இருந்தது.. அவளுக்காக அவளை காதலிப்பது தவிர அவனால் வேறு எதையும் செய்து விட முடியாது.. அது போலவே அவனும் அவளை காதலிக்கிறான் என்று அவள் அறியாமல் போவது தான் அவளுக்கும் நல்லது என்று முடிவெடுத்தவன் ஊருக்கே சென்று விடலாம் என்ற எண்ணத்தில் இருந்தான்.
ஆனால் அதுவும் தவறு என்று புரிய வேறு வழியில்லாமல் உருப்படியாய் அண்ணனின் நிறுவனத்திலே குப்பை கொட்டலாம் என்று முடிவு செய்துக்கொண்டான்.
அதன் படி அவனது தினசரி வேலையை செய்ய ஆரம்பித்தான்.
ராயர் தன் மனம் கவர்ந்தவளின் பின்னே அலைந்துக்கொண்டு இருக்க, அவளோ அவனை டீலில் விட்டுட்விட்டு தன் பின்னே சுற்றி வர செய்துக்கொண்டு இருந்தாள். அதில் அம்மணிக்கு அப்படி ஒரு ஆனந்தம்..
ராயரிடம் ரவியை பற்றி பேசவேண்டும் என்று எண்ணத்துடன் அன்றைய இரவு வேளையில் அவனிடம் வர, அவனோ இது தான் சாக்கு என்று அவளை வளைத்து பிடித்தான்.
“ராய் நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க..”
“நீ மட்டும் நான் சொன்னத கேக்குறியா.. அதனால முடியாது.. இன்னைக்கு எனக்கு ஒரு லிப் லோக் குடுத்தே ஆகணும்..”
“அதெல்லாம் முடியாது.. நீங்க வேணா குடுங்க..”
“தெனமும் நேர நேரத்துக்கு நான் தானே குடுக்குறேன்.. நீயா குடுக்குற.. அதனால இன்னைக்கு நீ தான் குடுக்கணும்”
“ப்ச் நான் ஒரு முக்கியமான விஷயத்தை பத்தி பேச வந்து இருக்கேன் மாமா படுத்தாதீங்க..”
“என்னை விட முக்கியமான விஷயம் என்ன..” என்றபடி அவளை தன்னோடு அணைக்க, அவனது அணைப்பில் இருந்த படியே “ரவிக்கும் ஸ்வராவுக்கும் கல்யாணம் செஞ்சு வச்சுடலாமே மாமா..” என்று கேட்டாள்.
“வைக்கலாம்.. ஆனா அதுக்கு முன்னாடி கவி கல்யாணம் இருக்கு, மதி கல்யாணம் இருக்கு, பொறவு உன் அண்ணன் கல்யாணம் இருக்கு, அதுக்கு பிறகு தான் அவன் கல்யாணத்தை பார்க்கணும்” என்றான்.
“ஏங்க அப்படி”
“கவியும் சரி மதியும் சரி அவனவிட சின்ன பொண்ணுங்க.. சின்ன பொண்ணு அதும் கல்யாணத்துக்கு தயாரா இருக்கும் போது அண்ணன் காரனுக்கு கல்யாணம் செய்ய கூடாது.. அதே போல வாசுல பெரியவங்க அண்ணன் முறையில இருக்க நந்தன் வீட்டுல இருக்கும் பொது அவனை விட்டுட்டு அவனை விட இளையவனான ரவிக்கு பண்ணுவது தப்பு.. அதனால அவன் கடைசி தான்..” என்று விளக்கம் கொடுத்தவனை கண்டு பாவமாய் பார்த்தாள்..
அவளது பார்வையை கண்டு “என்ன ஆச்சு ரீகா.. எதுவும் ப்ராப்ளமா..”
“ப்ராப்ளம்னு இல்ல மாமா.. ஆனா இருக்குற மாதி இருக்கு..”
“என்னடா சொல்ற..”
ரவி ஒரு மாதிரி இருந்ததை சொல்லிவிட்டு கூடவே இருவரது எண்ணப்போக்கை பற்றியும் சொன்னவளை கண்டு ராயர் தன்னோடு இன்னும் இருக்க அணைத்தவன்
ஸ்வராவை பற்றி சொல்ல அதன் பிறகே ரீகா சந்தோசமானாள்.
“நிஜமாவா மாமா..”
“ஆமாண்டி.. அவ கிரிமினல் லாயர் தான் பட் ரொம்ப நல்லவ.. அவ்வளவு பெரிய தப்பு செஞ்சுட்டு அந்த சஞ்சையை வெளியே விட்டுட்ட முடியுமா.. நமக்கு சில ஆதாரங்கள் வேண்டியது இருந்தது.. அதோட மட்டும் இல்லாம அவனுங்களே அவ கிட்ட போய் தங்களுக்காக வாதாட வர சொல்ல இவளும் ஒத்துக்கிட்டா.. கூடவே சில ஆதாரங்களை வாங்கி என் கிட்ட குடுத்துட்டா.. இது எப்போதும் நடக்கும் செயல் தான்.. நானும் அவளுமே எதிர் எதிராய் நின்று பலமுறை வாதாடி இருக்கிறோம். நான் பாதிக்க பட்டவங்களுக்காக வாதாடுனா அவ எதிர் தரப்புல வாதாடி அவங்க கிட்ட இருக்குற முக்கிய ஆதாரங்களை என்கிட்டே தள்ளி விட்டுடுவா..
“ஏங்க அப்போ அவ ஒவ்வொரு முறை தோற்க்கும் போதும் அவ மேல அவனுங்களுக்கு கோவம் வராதா..”
“அதுக்கு நாங்க ஒரு ப்ளான் வச்சு இருக்குறோம்.. என்னன்னா கிட்ட தட்ட ஒரு கேசை பலமுறை ஒத்தி வைக்கிற மாதிரி நடத்துவோம். கூடவே அவ அவங்களுக்காக ஜாமீனுக்கு ட்ரை பண்ணுவா.. ஒரு சில சமயம் நானும் விட்டு குடுத்து அவங்களுக்கு ஜாமீன் குடுக்குற மாதிரி ஏற்பாடு செஞ்சுடுவோம்.. அவனுங்க கிட்டயும் ஸ்வரா “இங்க பாருங்க நான் என்னால என்ன முடியுமோ நான் செஞ்சுட்டேன்.. இனி நீங்க தான் எதிர் தரப்புல கேக்குற கேள்விக்கு பதிலை சொல்லணும்.. நீங்க ஒன்னு சொல்லி நான் ஒன்னு சொன்னா தண்டனை கிடைச்சுடும்... அதுவே நான் சொன்ன மாதிரி நீங்க பேசுநீங்கன்னா கண்டிப்பா வெளிய வந்துடலாம்.. ஆனா அவனுங்களுக்கு வேற மாதிரி சொல்லி கொடுப்போம்.. நாங்க வேற மாதிரி அவனுங்களை கேள்வி கேட்ப்போம்.. சோ அவனுங்க மாட்டிக்குவாங்க.. இது தான் எங்க ப்ளான்..” என்று விளக்கமாக சொல்ல
“ஓ இதுல இவ்வளவு இருக்கா.. ஆனா வெளிய மட்டும் கிரிமினல் லாயர்னு பேர் போட்டுக்குவீங்க.. ம்ம்ம் பலே கில்லாடி தான்..” என்று பாராட்டினாள்.
“அப்போ நான் ரவி கிட்ட சொல்லிடவா..”
“ம்ஹும் இப்போ வேணாம்.. மதி கல்யாணம் முடியட்டும். கூடவே இந்த விசயங்களை அவனே தெருஞ்சுக்குறது தான் நல்லது.. நந்தாவுக்கு கூட நாம பொண்ணு பார்க்க ஆரம்பிக்கணும் ரீகா..”
“ஆமாங்க நானும் சொல்லனும்னு நினைச்சேன்.. அதுக்கு முன்னாடி நந்தா கிட்ட ஒரு வார்த்தை கேட்டுடலாம்..”
“ம்ம் அதுவும் சரி தான்.. சரி வா அப்போ இப்போயே கேட்டுட்டு வந்துடலாம்” என்றவனை முறைத்தாள்.
“ஏண்டி..”
“முதல்ல மணியை பாருங்க..” அவள் சுட்டி காட்ட மணி பதினொன்று என்று காட்டியது.
“சாரிடி..” என்று அசடு வழிந்தான்.
“அதானே மச்சினன் கல்யாணம்னு சொன்னா நேரம் காலம் கூட தெரியாதே..” அவனை வம்பிழுக்க
“ஆமா தான்.. ஏன்னா அவன் தங்கச்சி அவ்வளவு ஸ்வீட்டுடி..” அவளை கொஞ்ச ஆரம்பித்தான்.
“அதானே கொஞ்சம் இடம் குடுத்தா மடத்தை பிடுங்குற ஆசாமி தானே நீங்க..” என்று அவனிடமிருந்து விலகி உணர்ந்து படுக்க அவனோ விடா காண்டனாய் அவளை துரத்தி பிடித்தான்.
“ச்சு சும்மா இருங்க மாமா... குழந்தை எழுந்துட போறான்..”
“அவன் நல்ல தூக்கத்துல தான் இருக்குறான்.. நான் பேசாம எனக்கு என்ன வேணுமோ அதை எடுத்துக்குறேன்..” என்றவனை முறைத்து பார்த்தாள்.
“ப்ளீஸ் டி..”
“ப்ச் போங்க மாமா..” என்று விளக்கை அணைத்துவிட்டு படுக்க போக அவனும் அவளுடன் சில செல்ல சீண்டல்களுடன் நிறைவான பொழுதாய் அன்றைய இரவை கழித்தார்கள்.
ஸ்வராவுக்கு அன்றைய இரவு விடியா இரவாய் நீள கண்கள் கலங்கிக்கொண்டே இருந்தது.. ரவியின் புறக்கணிப்பு காதல் கொண்ட நெஞ்சை கசக்கி பிழிந்தது..
அவன் யார் என்று தெரியாமலே ராயரின் வாய் மொழியிலே அவனை பற்றி கேட்டு கேட்டே அவன் வசம் உள்ளத்தை தொலைத்து இருந்தாள்.
அப்படியாப்பட்ட காதலை அவன் ஒரு நொடியில் வீழ்த்திவிட்டு சென்றதை அவளால் தாங்க முடியவில்லை.. அவன் மீது கோவம் வராமல் ஏனோ அழுகை தான் வந்தது. ஆனால் அழுவது தன்னை இன்னும் பலவீன படுத்தும் என்பதால் வந்த அழுகையை கூட அடக்கிக்கொண்டாள்.
இனி வேறொருவரை மனதால் கூட நினைக்க முடியாது..
அந்த அளவு அவளுள் ஆழமாய் இறங்கி இருந்தான் ரவி.. அடுத்து என்ன செய்வது என்று தடுமாறி போனாள். தந்தை வேறு திருமணத்துக்கு அவசரப்பட்டுக்கொண்டு இருந்தார். அதற்கு அவருடைய உடல் நிலையும் ஒரு காரணம்.. சற்றே நலிவடைந்து விட்டார். பெருமூச்சு விட்டவள் தூங்காமலே அந்த இரவை கடத்தினாள்.
அடுத்த நாள் காலை ரியாவை வரவைத்து வீட்டிலே வேலை செய்துக்கொண்டு இருந்தான் நந்தன்.. மும்மரமாய் அந்த அதிகாலையிலே வேலை செய்துக்கொண்டு இருந்த இருவரையும் ஆச்சர்யமாய் பார்த்துக்கொண்டு கீழே இறங்கி வந்தான் ராயர்.
“என்ன மச்சான் இவ்வளவு காலையில..”
“ஒரு கொட்டேஷன் ரெடி பண்ணனும் மாப்புள்ள அதான்.. அதும் பத்து மணியோட க்ளோஸ்.. சோ அதான்” என்றவன் தலையை நிமிர்த்தாமலே பதில் சொல்லிக்கொண்டே வேலையை பார்த்தான் நடு கூடத்தில் அமர்ந்து.





