“மரியாதையா இங்க இருந்து ஓடி போயிடு... உன் மகன் புராணத்தை இன்னொரு முறை என்கிட்டே தூக்கிட்டு வந்து பஞ்சாயத்து பண்ணிக்கிட்டு இருந்தன்னு வை...” என்றவள் அடுப்படிக்கு சென்று அருவாள்மனையை தூக்கிக்கொண்டு வந்து செல்வநாயகத்தின் கழுத்தில் வைத்து அழுத்தியவள்,
“ஒட்டு மொத்தமா சீவிடுவேன்” என்றாள் ஆங்காரியாக... அவளிடம் இப்படி ஒரு ஆங்காரத்தை எதிர் பார்க்காத செல்வநாயகம் அதிர்ந்து தான் போனார். தன் கண்களையே அவரால் நம்ப முடியவில்லை.
ஒரு பெண்ணுக்குள் இவ்வளவு கோவமும் ஆங்காரமும் வீரமும் இருக்குமா என்று... வருமே...! பெண் என்பவள் தென்றல் என்று நினைக்கும் பொழுது சுழட்டி அடிக்கும் புயலாகவும் உருவெடுப்பாள். ஐயோ இவளை நெருங்குவது மிகவும் கடினம் என்று பயந்து விலகி நிற்கும் பொழுது தாயாய் பாசம் காட்டி நெஞ்சில் போட்டு தாலாட்டவும் செய்வாள். அவள் யார் என்பதையும், அவள் யாராக இருக்க வேண்டும் என்பதையும் தீர்மானிப்பது அவளின் எதிரில் இருப்பவர்கள் தான்.
அவர்களின் செயல்கள் மட்டும் தான் பெண்ணவளை ஆழ்கடலாகவும் விரிக்க முடியும், அதே சமயம் துளியாக சங்கில் பதுக்கவும் முடியும்...
சும்மாவா சொல்லி வைத்திருக்கிறார்கள் நம் ஆட்கள் ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலேன்னு... அதை அவரின் கண் முன்னால் நிரூபித்துக் கொண்டு இருந்தாள் சகி...
அவளின் விஸ்வரூபம் கண்டு மூச்சடைத்தது செல்வநாயகத்துக்கு. இவ்வளவு தீரம் இவளுக்கு எங்கிருந்து வந்தது... என்று அவர் ஆராய... இது யாரிடமிருந்தும் வராது... தனக்குள்ளே ஒளித்து வைத்திருந்து யாரிடம் காட்ட வேண்டுமோ அவர்களிடம் மட்டுமே வெளிப்படுத்துவாள் பெண்... என்று அறியாமையில் யோசித்துக் கொண்டு இருந்தார்.
“இன்னொரு முறை என் வாழ்க்கையில உன்னை பார்க்க கூடாது... என்ன பெரிய மகன்... இல்ல என்ன பெரிய மகன நீ பெத்துட்ட... எல்லோரும் பத்து மாதம் சுமந்து தானே பெத்து எடுக்குறாங்க.. இல்ல நீ மட்டும் உன் மகனை இருபது மாதம் சுமந்து பெத்தியா? ஏதோ உலகத்துலையே இல்லாத தகுதியில உன் பிள்ளைய பெத்த மாதிரி ஓவரா அலட்டிக்கிட்டு இருக்க? நான் நினைச்சா இப்போ கூட உன் மகனோட வாழ முடியும். வாழ்ந்து காட்டுறேன். பார்க்குறியா?” என்று சவால் விட அவரின் கண்களில் அச்சத்தின் சாயல் அப்பட்டமாய் தெரிய,
“ச்சீ..” என்றானது அவளுக்கு.
“இதோ பார் உன்னோட மகனுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது... நீயா எதையாவது கற்பனை பண்ணிக்கிட்டு இங்க வந்து சத்தம் போடுற வேலையை வச்சிக்கிட்ட... அப்புறம் உன்னை எவ்வளவு அசிங்கப்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு அசிங்கப்படுத்திடுவேன்... ஜாக்கிரதை..” என்று அவரை பார்த்து எச்சரித்தவள்,
“அப்புறம் இந்த ஆளை கடத்தி என்னை படிய வைச்சி, மிரட்டி பார்க்கணும்னு திட்டம் போட்ட உன் மகன் கிட்ட உன் வாண்டவாளத்தை எல்லாம் சொல்லிடுவேன். பிறகு உனக்கு கடைசி வரை உன் மகன் இல்லாம போயிடுவான்... பார்த்துக்க..” என்று அவரை முழுமையாக மிரட்டி உருட்டியவள்
“கெட் அவுட்...” என்று அசிங்கப்படுத்தி அனுப்பி வைத்தாள். அதன் பிறகே தன் இயல்புக்கு திரும்பினாள் சங்கரேஸ்வரி.
அவளும் எவ்வளவு தான் குட்ட குட்ட குனியிறது... அவளின் வாழ்க்கையை கெடுத்து குட்டி சுவராய் ஆக்கி விட்டதோடு அல்லாமல் அதிலிருந்து மீண்டு வந்தால் மறுபடியும் ஓரம் கட்ட முயன்றால் எப்படி ஏற்றுக் கொள்வது. பொறுத்தது போதும் ஒரு முறையாவது பாரதி சொன்ன சொல்லை கடைபிடிக்க எண்ணி “பாதகஞ் செய்பவனை கண்டால் மோதி ஏறி மிதித்து விடு பாப்பா” என்றதுக்கு ஏற்ப செல்வநாயகத்தை அடக்கி ஒடுக்கி ஓட விட்டாள் சகி.
இனி வாலாட்ட மாட்டார் என்று எண்ணினாள். ஆனால் அடிபட்ட பாம்பு அப்படியே விட்டுவிடவும் செய்யாது என்று அவளுக்கு நெஞ்சுக்குள் உறுத்திக் கொண்டே இருந்தது. ஆனால் தன்னை சார்ந்தவர்களுக்காக தான் எதாவது செய்து தான் ஆக வேண்டும் என்று எண்ணியவள் ஒரு முடிவுக்கு வந்தாள்.
அது தன் குடும்பத்தையே வஞ்சிக்கும் என்று அவள் எண்ணி இருக்கவில்லை. மனதை கல்லாக்கிக் கொண்டு அந்த முடிவை எடுத்தாள் சகி.
அதன் படி ஒரு நாள் தன் தங்கையை கல்லூரிக்கு அனுப்பி விட்டு கார்த்தியை வேலைக்கு விடுப்பு எடுக்க சொன்னவள், தன் தந்தையை வெளியே அனுப்பி விட்டு கார்த்தியின் முன்பு வந்து நின்றாள்.
அதற்கு முன்பு போய் அடுப்படிக்கு சென்று தன் தோளில் இருந்த பின்னையும் இடையை மறைத்து குத்தி இருந்த பின்னையும் கழட்டி எடுத்தவள், நழுவும் சேலையோடு கார்த்தியின் முன்பு வந்து நின்றாள்.
அவன் நாற்காலியில் அமர்ந்து பழங்களை வெட்டிக் கொண்டு இருந்தான். தன் முன்பு வந்து நின்றவளை ஏறெடுத்து பார்த்து,
“இந்த பழம் எடுத்துக்கோ” என்று நீட்டினான். “இல்ல வேணாம் கார்த்திக்...” என்றவளுக்கு பயத்தில் கை கால்கள் எல்லாம் நடுங்க ஆரம்பித்தது...
ஆனாலும் தன்னை சமாதனாம் செய்துக் கொண்டு அவனின் முன்பு நின்றாள்.
“ஏன் காலையில எப்பொழுதும் சாப்பிடுவியே... இந்தா எடுத்துக்கோ” என்று அவளுக்கு வாயில் ஊட்டி விட, கடின பட்டு அதை முழுங்கியவளுக்கு வேர்த்து கொட்டியது. அதோடு நழுவிய சேலையை எந்த பாகமும் தென்படாத அளவுக்கு கட்டி இருந்தவள் முந்தானையை இறுக்கமாக தன்னை சுற்றி பிடித்துக் கொண்டாள்.
“என்ன ஆச்சு? உனக்கு ஏன் என்னவோ மாதிரி இருக்க..? காய்ச்சலா இருக்கா?” என்று அவன் எழுந்தவன் புறங்கையால் அவளது நெற்றியை தொட்டு பார்த்தான்.
“எதுவும் இல்லையே...” என்று யோசித்தவன் அவளது முகத்தை ஆராய்ந்தான். அவனது ஆராய்ச்சியில் கண்கள் கலங்கியவள் தன் கலக்கத்தை அவனுக்கு காட்டாமல் மறைத்து, அடைத்துக் கொண்டு வந்து தொண்டையை செருமி முயன்று அவனிடம் பேச வந்தாள்.
ஆனால் வெறும் காத்து தான் வந்தது... பாவம் சகி.
“ஹேய் என்னவோ சொல்ற ஆனா எனக்கு ஒண்ணுமே புரியல... என்னடி ஆச்சு உனக்கு...” என்று அவளது தோளை தொட சட்டென்று அவனது கரத்தில் இருந்து தன்னை விலக்கிக் கொண்டவளுக்கு அவமானத்தில் உயிர் போனது.
ஆனால் செய்ய வேண்டிய காரியம் எல்லாம் அப்படியே இருக்கே... எனக்கு என் குடும்பம் முக்கியம்... என் குடும்பத்துல இருக்க யாருக்கும் எதுவும் ஆக விட மாட்டேன்..! என்று உறுதியாக உள்ளுக்குள் சொல்லிக் கொண்டவள்,
அவனது கண்களை நேரடியா பார்த்து, “உன் சட்டையை அவுரு கார்த்திக்...” என்றாள். சகி இப்படி சொல்லவும் அவளை இன்னும் கூர்ந்து பார்த்தான். அவளது முகத்தில் எதையும் கண்டு பிடிக்க முடியவில்லை. ஆனால் அவளது கண்களில் ஒரு கலக்கம் ஓடிக்கொண்டு இருப்பதை உணர்ந்தவன் மறு பேச்சு பேசாமல் தன் சட்டையை கழட்டி அமர்ந்து இருந்த இருக்கையில் போட்டான்.
அவன் உடனடியாக இந்த செயலை செய்யவும் தன் மேல் எவ்வளவு நம்பிக்கை வைத்து இருக்கிறான் என்று எண்ணியவளுக்கு கண்களில் கண்ணீர் வந்தது. அதோடு சிறிது நாளுக்கு முன்னாடி தான் தன் தங்கை கார்த்தியை விரும்புவது தெரிந்தது. அந்த மகிழ்ச்சியை ஆழ்ந்து அனுபவிக்கும் முன்பே இப்படி ஒரு மா பாதக செயலை செய்ய வைத்த செல்வனாயகத்தை கண்டதுண்டமா வெட்டி போட கைகள் பரபரத்தது...!
ஆனாலும் எதையும் செய்ய முடியாமல் போன தன் நிலையை எண்ணி நொந்தவள் கார்த்தியிடம் மனமார மன்னிப்பு கேட்டவள், அவனது கண்களை பார்க்க முடியாமல் அவனது தோளில் தன் பார்வையை பதித்தவள்,
“ப... ப..” என்று தடுமாறியவள், “பனியனையும் கழட்டு கார்த்திக்...” என்றாள் உயிர் போய்விடும் வேதனையில்.. சகி சொன்னதை கேட்டு ஒரு அவனது பார்வை கூர்மை பெற்றது. நெற்றி யோசனையில் சுருக்கம் விழுந்தது. ஆனால் சிறிதும் தாமதிக்காமல் தன் பனியனை கழட்டி போட்டு விட்டு பறந்து விரிந்த வெற்று மார்புடன் அவன் நின்றான் அவளுக்கு முன்பு.
அவன் அப்படி எந்த கேள்வியும் கேட்டாமல் உடனே கழட்டி போடவும் இன்னும் வேதனையில் அவளது உள்ளம் துடித்துப் போனது. பெருமூச்சு விட்டு தன்னை நிலை நிறுத்திக் கொண்டவள்,
கார்த்தியை இன்னும் நெருங்கினாள். அவளது நெருக்கத்தில் இருந்த நடுக்கத்தை கண்டு கொண்டவனுக்கு ஆத்திரத்தில் பல்லைக் கடித்தான். ஆனாலும் எதுவும் செய்யாமல் அப்படியே சிலை போல நின்றான். சகிக்கு அந்த நெருக்கம் போதாது என்று நன்றாக தெரிந்தது என்றாலும் அதற்கு மேல் அவளால் அவனை நெருங்க முடியவில்லை.
சாதாரணமாக அவனை தொட்டு பழகி மடியில் போட்டு அவனை சீராட்டுவதும், அவனது தோளில் தொங்குவதும், சாய்ந்துக் கொள்வதும் என எல்லாமுமே செய்தவள் தான். ஆனால் அப்பொழுது எல்லாம் எந்த உள்நோக்கமும் கிடையாதே...! ஆனால் இப்பொழுது அப்படி இல்லையே..
முழுக்க மனதில் அழுக்கை வைத்துக் கொண்டு எங்கிருந்து அவனை நெருங்கவது. தன் வாழ்க்கையை மட்டும் அல்லாமல் கார்த்திக் வாழ்க்கையும் தன் தங்கை வாழ்க்கையையும் அல்லவா சேர்த்து குழி தோண்டி புதைக்க போகிறாள்.. அதனால் அவளுக்கு உடம்பு முதற்கொண்டு நெஞ்சம் வரை நடுங்கி தான் போனது.
வெளியே ஏதோ சத்தம் கேட்க சட்டென்று கார்த்தியின் தோளில் அப்படியே சாய்ந்து விட்டாள். அதோடு அது வரை இறுக்கமாக பிடித்து வைத்திருந்த முந்தானையை விட்டாள் தன் செயலை தானே வெறுத்துக் கொண்டு. அழுகை வெடித்துக் கொண்டு வர அதை முயன்று அடக்கிக்கொண்டு தன் இதழ்களை கடித்து அதை தன் வாய்க்குள்ளே புதைத்தாள்.
அவளின் போராட்டம் கண்டு தன் கை முஷ்ட்டியை அருகில் இருந்த சுவரில் குத்தினான் சிறிது கூட சத்தமே இல்லாமல்... வாயிலின் புறம் நிழல் ஆட கண்டு,
“இப்போ நான் உன் மேல கை போட்டு கட்டிக்கனுமா?” என்று கேட்டான் முகம் இறுக...
அதில் திகைத்து அவனை நிமிர்ந்து பார்த்தாள் கலவரத்துடன்... அவளது கண்களில் விரிந்த அச்சத்தை பார்த்து தன் கோவத்தை கட்டுப் படுத்திக் கொண்டவன்,
“சொல்லு...” என்றான் அழுத்தமாக. அதில் அவளது தலை ஆமாம் என்பது போல அசைய அடுத்த நொடி அவனது கரம் சகியை சுற்றி படர்ந்தது...! அதில் விரசமில்லை, காதல் இல்லை, மோகமில்லை.
ஆனால் வெளியே இருந்து பார்க்கிறவர்களுக்கு கலவி முடித்து கட்டிக் கொண்டு இருப்பது போல இருக்கும். ஏனெனில் இருவரது உடையும் நெகிழ்ந்து போய் இருக்கிறதே...!
“இப்போ உனக்கு சந்தோஷமா சர்வா... இப்படி கேடு கேட்டவளை தான் நீ உனக்கு மனைவியா தேர்ந்தேடுத்து இருக்க... வீட்டுலையே ஆளை வச்சுக்கிட்டு உன்னையும் வளைத்து போட பார்க்கிறா? இவ நம்ம வீட்டுல காலடி எடுத்து வச்சா அவ்வளவு தான்” என்று செல்வநாயகம் தன் ஆட்டத்தை ஆட ஆரம்பித்தார். சகியின் வீட்டு வாசலில் சர்வா, செல்வநாயகம், மற்றும் கவிதா மூவரும் கையில் தாம்பூல தட்டோடு வந்து நின்றிருந்தார்கள் சர்வாவுக்கு சகியை பெண் கேட்கலாம் என்று...





