சர்வாவை அங்கு எதிர் பார்க்காதவள் சற்று திகைத்து தான் போனாள். அதோடு அவன் கண்களில் தெரிந்த கட்டுக்கடங்காத கோவத்தை கண்டு பேரச்சம் கொண்டாள். ‘நான் அப்படி என்ன பண்ணினேன்.. அதுவும் பண்ணலையே...!’ என்று அவள் சிந்தனை ஒரு பக்கம் போக, ‘எதுவும் பண்ணாதது’ தான் அவனுக்கு கோவமே என்று அறியாமல் அவன் மீது பயம் கொண்டாள்.
அவளின் விழிகளில் தெரிந்த அச்சம் கூட சர்வாவை இன்னும் கோவப்படுத்த அதற்கும் சேர்த்து அவளை வதைக்க ஆரம்பித்தான்.
“ஏன்டி என் வாழ்க்கையில மறுபடியும் வந்த... என்னை நிம்மதியாக வாழவே விட கூடாதுன்னு கங்கணம் எதுவும் கட்டி இருக்கியா? மனுசனை சாகடிக்கிறடி... உன்னை என்னைக்கு பார்த்தானோ அப்பவே எனக்கு என்னோட மகிழ்ச்சியே போச்சு...” என்று அவளை கடித்து குதற சகி அவனை புரியாது பார்த்தாள்.
காலையில் சந்தித்த பொழுது அப்படி உருகினான். இப்போ நீ எதுக்கு என் வாழ்க்கையில வந்தன்னு கொலை பண்ணுகிற அளவுக்கு வெறியுடன் கடித்து குதறுகிறான். சப்பா இவனை புரிஞ்சுக்கவே முடியல.. என்று சற்றே அரண்டு தான் போனாள்.
அரண்டு விழித்தவளை கொலை வெறியுடன் நோக்கியவன்,
“உன்னை ஒவ்வொரு முறையும் என் வாழ்க்கையில நான் சந்திக்கும் போதெல்லாம் ஏன்டி காயத்தை மட்டுமே எனக்கு குடுக்குற.. அப்படி என்ன நான் உனக்கு செய்தேன். நிம்மதியே இல்லாம என்னை சுத்தி சுத்தி அடிக்கிற” என்று ஆற்ற முடியாமல் அவளிடம் அவன் கொட்ட,
காரணமே இல்லாமல் தன் மேல் பழி போடுபவனை பார்த்து கண்கள் சிவந்துப் போனாள்.
“யாரு நான் உங்களை சுத்தி சுத்தி அடிக்கிறானா? கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம எப்படி உங்களால இப்படியெல்லாம் பேச முடியுது சர்வா... ஆண் வர்க்கம் இல்லையா அதனால ரொம்ப சுலபமா பெண்கள் மேல பழியை போட்டு தப்பிக்க பார்க்குறீங்க... ரைட்..” என்று அவள் கோவத்தில் கத்தினாள்.
“ஏய்...” என்று அவளது குரல்வளையை அப்படியே பிடித்து தூக்கியவன்,
“நான் என்ன சொல்றேன் நீ என்னடி பேசுற... நான் உன்னை மட்டும் தான் தப்பு சொன்னேன். நீ தேவையில்லாம பெமிநிசம் பேசுற” என்றான் ஆத்திரத்தில்.
அவனது பிடியில் விழிகள் பிதுங்கினாலும் கொஞ்சம் கூட அசராமல் அவனது பிடியில் அப்படியே நின்றாள்.
ஆத்திரம் சிறிதும் அடங்காமல் அவளின் கழுத்தில் இருந்த கையை மட்டும் நீக்கியவன்,
“ஆரம்பத்துலயே கடமைக்கு வாழலாம்னு நினைச்சேன். ஆனா நீ வந்து வானவில் மாதிரி வாழணும். அது தான் வாழ்க்கைன்னு காண்பிச்ச... நானும் சரின்னு என் மனதை நெகிழ்த்தி அந்த வாழ்க்கைக்கு தயாரானேன்.. ஆனா நீ என்ன பண்ண... என்னை விட்டு முழுசா காணாம போயிட்ட... அப்ப கூட இது என் தலை எழுத்துன்னு நான் மனசை மாத்திக்கிட்டு அவ கூட வாழ்ந்தேன். அவளும் பாதியில விட்டுட்டு போயிட்டா...” என்று பெருமூச்சு விட்டான்.
அவன் சொல்ல வர்ற விசயங்களை எல்லாம் கூர்ந்து கேட்டவளுக்கு அடி நெஞ்சில் தீ பற்றி எரியும் வேலை கொண்டு குத்தியது போல வலித்தது. ஏனெனில் அவன் கொண்ட நேசம் அவளும் அறிவாளே..! அப்படியே அவனது காலடியில் விழுந்தாள்.
“அதுக்கு பிறகு என் வாழ்க்கையில எதுவும் இல்லன்னு நினைச்சி என் பிள்ளைகளுக்காக வாழ ஆரம்பிச்சேன்... ஆனா அது பொறுக்காம மறுபடியும் என் வாழ்க்கையில வந்துட்ட...” என்று அவளை கொலை வெறியோடு வெறித்தான்.
“எந்த எதிர்பார்ப்புமே இல்லாம வாழ்ந்துக்கிட்டு இருக்கேன்... ஆனா உன்கிட்ட மட்டும் என்னை எல்லாத்தையும் எதிர் பார்க்க வைக்கிறடி.. உன்கிட்ட நான் ஒவ்வொரு நிமிடமும் வீழ்ந்துக்கிட்டே இருக்கேன். ஆனா அந்த பாதிப்பு உன்கிட்ட கொஞ்சம் கூட இல்ல... நீ என்ன கல்லாடி...” என்று அவளருகில் தொப்பென்று மடிந்து அமர்ந்தவன் அவளை அப்படியே உலுக்கு உலுக்கு என்று உலுக்கி எடுத்தான்.
“உன்னால நான் ஒவ்வொரு முறையும் அடையிற ஏமாற்றத்தின் அளவு என்னன்னு தெரியுமாடி...” என்று அவளை இன்னும் உலுக்கி எடுக்க தோள்கள் இரண்டும் கன்றிப் போனது அவளுக்கு.
அந்த வலியை விட அவனது வலி அதிகம் என்று உணர்ந்தவளுக்கு வலித்த இடம் கூட மறுத்துப் போனது.
“ஏமாற்றத்தின் உச்சம்...” என்று அவன் ஏதோ சொல்ல வர, சட்டென்று அவனது வாயை பொத்தியவள்,
“இனி உங்க வாழ்க்கையில உங்க கண்ணு முன்னாடி நான் வரவே மாட்டேன். எல்லாத்துக்கும் சாரி...” என்றவள் அவனை அப்படியே விடுத்து விட்டு அவள் நீங்கி போக,மணலில் அவளது காலடி தடம் மிக அழுத்தமாக பதிந்து போய் இருப்பதை அது உணர்த்த...
சர்வா விரக்தியாக சிரித்தான். கடைசி வரை புரிஞ்சுக்கவே மாட்டாள்...” என்று எண்ணியவன் தன் ஆத்திரம் தீரும் வரை அந்த மணலில் குத்தி குத்தி தன் கரத்தை காயம் செய்தான்.
ஒட்டு மொத்த ஆத்திரத்தையும் அந்த கடற்கரை மணலில் கொட்டிவிட்டு போகும் பொழுது பிள்ளைகளை கூப்பிட்டுக் கொண்டவன் கிருஷ்ணனிடம் மட்டும் தலை அசைத்தவன் நிமிடம் கூட தாமதிக்காமல் போய் விட்டான். அவன் போகும் வரை சகி குனிந்த தலையை கொஞ்சம் கூட நிமிர்த்தவில்லை.
அதை பார்த்த கார்த்திக்கு நெற்றி சுருங்கியது...!
அடுத்த நாளும் சகி வேலைக்கு போகவில்லை. ஏன் என்று கேட்டவர்களுக்கு ஒரு புன்னகையை மட்டும் பதிலாக கொடுத்து விட்டு வேறு வேலை எதுவும் இருக்கா என்று தேடுதல் வேட்டையில் இறங்கினாள்.
சகி போகாததால் கார்த்திக்கும் வேலைக்கு போக மாட்டேன் என்று சொல்ல, அவனை வலுக்கட்டாயமாக வேலைக்கு அனுப்பி வைத்தவள், தங்கை கல்லூரிக்கு கிளப்பியவள், தந்தையுடன் மார்கெட் கிளம்ப,
“நீ இருடா நான் மட்டும் போயிட்டு வரேன்” என்று அவளை வீட்டில் விட்டுவிட்டு போக, அடுத்த சில நிமிடங்களில் சர்வாவின் வீட்டு கார் ஒன்று அவளின் வீட்டுக்கு முன்பு வந்து நின்றது.
அதிலருந்து தோரணையாக செல்வநாயகமும் கவிதாவும் இறங்கி வீட்டுக்குள் நுழைந்தார்கள்.
வீட்டுக்குள் நுழைந்தவர்களை வெறுமையாக பார்த்தாள் சகி...
அவளின் முகத்தில் இருந்த வேதனையை நன்கு உணர்ந்த செல்வநாயகம்,
“என்னமோ அன்னைக்கு என்னென்னவோ கதை குடுத்துட்டு போன... இப்போ மொத்தமா புட்டுகிச்சா?” என்றார் எகத்தாளமாக...
“லுக் இந்த பகடி பேச்சு பேசுறதுக்கு நான் ஆள் இல்லை. இப்போ எதுக்கு இங்க வந்து இருக்கீங்க? அதை முதல்ல சொல்லுங்க அதை விட்டுட்டு தேவையில்லாத பேச்செல்லாம் இங்க பேச வேண்டாம்...” என்றாள் கடுப்பாக...
“ஏய்... நீ இப்படி எகத்தாளமாக பேசுறதுக்கு தான் என் மகன்கிட்ட நேத்திக்கு வாங்கி கட்டுன... அதுக்குள்ளவா மறந்து போயிடுச்சு” என்றார் திமிராக..
அவள் அதிர்ந்து அவரை பார்க்க,
“என் மகன் வாயாலே உன்னை வேணான்னு சொல்லிட்டான். இனி உனக்கும் அவனுக்கும் எந்த சம்ந்தமும் இல்லன்னு பட்டவர்த்தனமா உன்னை அடிச்சே சொல்லிட்டான். இனிமேலாவது ஆம்ளைங்களுக்காக அலையாம இரு...” என்றார்.
“ஏய்...!” அவள் அவரை அடிக்க போக, அவளது கையை பிடித்துக் கொண்டவர்,
“உண்மைய வெளிப்படையா சொன்னவுடனே ரோஷம் பொத்துக்கிட்டு வருதோ...? நீ அப்படி பட்டவ தானே... உனக்கு ஆம்பளைங்க என்ன புதுசா...? அது தான் வீட்டோடையே ஒருத்தனை வச்சி இருக்கியே பத்தாதா உனக்கு?” என்று அவளை இன்னும் அசிங்கமாக பேச கண்களை கலங்கிக்கொண்டு வந்தது.
வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையை பயன் படுத்திக் கொண்டு கண்டபடிக்கு பேசும் அவரை எரிப்பது போல பார்த்தாள்.
“ச்சீ இப்படி எல்லாம் பேச உங்களுக்கு அசிங்கமா இல்ல...?”
“எனக்கு எந்த அசிங்கமும் இல்லை... உன் நடத்தை அப்படி தானே இருக்கு...?” என்று அவளை இன்னும் அசிங்கமாக பேச, பொருத்து பொருத்து பார்த்தவள் அவரின் கையில் இருந்து தன் கரத்தை உருவிக் கொண்டவள்,
“இதுக்கு மேல எதுவும் பேசாதீங்க... அப்படி பேசுனா உங்க மரியாதை கெட்டு போயிடும்... சொல்லிட்டேன்” என்றாள் எச்சரிக்கையாக...
“ஓ...! உன் ஒழுக்கத்தை பத்தி பேசுனா என் மரியாதை கெட்டு போயிடுமா? அதையும் தான் பார்க்கிறானே... எப்படி கேட்டு போகுதுன்னு...” என்றவர் எவ்வளவு தரைக்குறைவாக அவளை பேச முடியுமோ அந்த அளவுக்கு தரைக்குறைவாக பேச ஆரம்பித்தார்.
“நாலு வருடமா உன் வீட்டுல இருந்து யாருமே வேலைக்கு போகாம உன் குடும்பத்துல அடுப்பு எரியுதுன்னா அப்போ நீ சோத்துக்கு ... போனவ தானே.. உனக்கு என்னடி மரியாதை... நீயெல்லாம் என் கால் தூசிக்கு கூட சமம் கிடையாது. நீ என் வீட்டு மருமகளா? அதுக்கு நான் விடுவனா? உன்னை உண்டு இல்லன்னு அக்கி போட்டுட்டு போய் கிட்டே இருப்பேன்... கொலை காரனை வீட்டோட வச்சி குடும்பம் நடந்திக்கிட்டு இருக்க நீ என்ன பெரிய உத்தமியா? அவன் தானே உனக்கு மாமா வேலை பார்க்கிறான்...” என்று சொல்லி முடிக்கும் முன்பே அவரது கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டு இருந்தாள் சகி. அதில் உதடு கிழிந்து உதிரம் சொட்டியது கடைவாயின் ஓரம்..
பத்திரகாளியாக உருமாறி நின்று தன் எதிரில் நின்று இருந்தவரை உருத்து பார்த்தாள். அவளின் பார்வையிலே அவருக்கு மொத்தமும் ஆடி போனது. அதோடு அவள் விட்ட ஒரு அறையில் பொறி கலங்கிப் போய் தள்ளாடி கீழேவும் விழுந்து விட்டார். அவள் கரம் பட்ட இடம் தீயாய் எரிந்தது...
அவளது விரல்களின் தடம் அப்பட்டமாய் அவரது கன்னத்தில் தெரிந்தது. கையால் தன் எறிந்த கன்னத்தை பொத்திக் கொண்டு அச்சம் மிகுந்து போய் அவளை பார்த்தார்.
அவளிடமிருந்து இப்படி ஒரு ஆக்ரோஷமான அடி வாங்குவோம் என்று கனவில் கூட எண்ணி பார்த்திருக்கவில்லை.
“நீ பேசுறதை பேசு... ஆனா பேசுறதுக்கு உனக்கு வாய் இருக்காது...!” என்பது போல அவரது வாயை உடைத்து போட்டாள் ஒரே அறையில்...
“என்னாடா சொன்ன...?” என்று கேட்டு அவரது நெஞ்சில் தன் காலால் ஒரு மிதி மிதித்தவள்,
“பொண்ணுன்னா உனக்கு அவ்வளவு இழக்காரமா போயிடுச்சா? வாய் இருக்குன்னு என்ன வேணாலும் பேசுவியா? தொலைச்சி கட்டிடுவேன்... இன்னொரு முறை என்கிட்டே இப்படி நடந்துக்கிட்ட என் கை பேசாது. என் செருப்பு தான் பேசும்.. புனிதமான எங்க உறவை உன் கீழ்த்தரமான புத்தியால கொச்சை படுத்தினா நான் கேட்டுக்கிட்டு இருப்பேன்னு நினைச்சியா? வகுந்து போட்டுடுவேன். எங்க அப்பா என்னை லண்டனுக்கு படிக்க அனுப்பி வச்சாலும் உள்ளுக்குள்ள ஓடுறது இந்த ஊரு இரத்தம் தான்... உன் பொண்டாட்டி பிள்ளை கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு உரு தெரியாத அளவுக்கு அளிச்சிடுவேன். நீயெல்லாம் ஒரு மனுசன்... ச்சீ... உன் முகத்துல முழிச்சாலே பாவம்... ” என்றவள்,
“மரியாதையா இங்க இருந்து ஓடி போயிடு... உன் மகன் புராணத்தை இன்னொரு முறை என்கிட்டே தூக்கிட்டு வந்து பஞ்சாயத்து பண்ணிக்கிட்டு இருந்தன்னு வை...” என்றவள் அடுப்படிக்கு சென்று அருவாள்மனையை தூக்கிக்கொண்டு வந்து செல்வநாயகத்தின் கழுத்தில் வைத்து அழுத்தியவள்,
“ஒட்டு மொத்தமா சீவிடுவேன்” என்றாள் ஆங்காரியாக... அவளிடம் இப்படி ஒரு ஆங்காரத்தை எதிர் பார்க்காத செல்வநாயகம் அதிர்ந்து தான் போனார். தன் கண்களையே அவரால் நம்ப முடியவில்லை.





