“நான் பிள்ளைகளுக்காக தான் வந்தேன். மத்தபடி நீங்க கேட்டதுக்காக எல்லாம் நான் வரல...” என்றாள்.
அதை கேட்டு நக்கலாக சிரித்தவன், விலகியவளை நெருங்காமல் “பிள்ளைகளுக்காக வர்றதுக்கு எதுக்கு இவ்வளவு மேக்கப்?” என்று அவனது இதழ்கள் நக்கல் செய்ய, தன்னையே குற்றிக் கொண்டாள். ஆனாலும் அவனது கேள்வி பாதிக்காத வண்ணம் அவனை நோக்கியவள்,
“எனக்கு இன்னைக்கு மேக்கப் போடணும்னு தோணுனது. அதனால போட்டுக்கிட்டேன்... அதோட இது என்னோட விருப்பம். உங்கள மயக்க ஒண்ணும் நான் இதை போடல... அதுவும் முக்கியமா நீங்க என்ன பாக்கணும்னு நான் இந்த மேக்கப் போட்டுக்கல” என்று அவனுக்கு பதிலடி கொடுத்தவள் பிள்ளைகளுடன் அமர்ந்து விட்டாள்.
அதன் பிறகு பிள்ளைகளை கிளப்பி அவர்களுக்கு உணவு ஊட்டி அவர்களோடு விளையாடி என மதிய பொழுது வரை அங்கேயே சென்றது. பிள்ளைகளுடனே அவளும் சாப்பிட்டாள் ஒரு கணம் சாப்பிட தயங்கினாள் தான். ஆனால் அதன் பிறகு என்ன நினைத்தாளோ ஒன்றும் சொல்லாமல் அவள் போட்டு சாப்பிட ஆரம்பித்தாள். அதை பார்த்துக் கொண்டிருந்த செல்வ நாயகத்துக்கு ஆத்திரத்தில் கண்கள் சிவந்தது.
‘எவ்வளவு உரிமையா இந்த வீட்டில இவள் நடமாடுறா... அதுவும் கிச்சன் வரை போகிறான்னா’ அவளது நெஞ்சுரம் நன்கு புரிந்து போக... ‘அவள் சாதிக்காமல் விடமாட்டா போலவே...’ என்று தன் நாடியை குற்றி யோசித்தவருக்கு கண்களில் மின்னல் வெட்டியது.
கவிதா மைதிலி வீட்டுக்கு போவதற்காக கிளம்பி இருந்தவரை நிறுத்தி, “மைதிலியை இங்க வர சொல்லு...” என்றார்.
“ஏங்க? என்ன ஆச்சு? நாம போய் அவ வீட்டுக்கு போய் அவ அப்பா அம்மா கிட்ட பேசிட்டு வரலாம்னு சொன்னீங்க. இப்போ இப்படி பேசுறீங்க...” என்று அவர் படபடக்க,
அதை கண்டு கொள்ளாமல் “நாம போனோம்னா இங்க இன்னும் வேற என்னென்னமோ நடந்திடும் போல. அதனால நாம போக வேணாம். மைதிலியா இங்க வர சொல்லு...” என்றார். அப்பொழுதுதான் அங்கு நடக்கும் நிகழ்வுகளை ஊன்றி கவனித்தார் கவிதா.
பிள்ளைகளுக்காக பிள்ளைகளின் உணவுகளுக்காக கிச்சன் சென்று கிச்சனில் இருக்கும் ஆட்களுக்கு ஆர்டர் போட்டாள். அதோடு கேர் டேக்கர்களுக்கு என்னென்ன பணி என்று அதை செய்ய சொல்லி ஆணையிட்டாள்.
அதோடு டைனிங் டேபிள் வந்து சர்வாவுக்கு பரிமாறி பிள்ளைகளுக்கு உணவு ஊட்டி அவளும் அவர்களோடு அமர்ந்து சாப்பிடுவதை பார்த்த கவிக்கு தாங்க முடியவில்லை. ஏய்...! என்று கத்தி அவளை பாதி சாப்பாட்டில் எழுப்ப முன் வந்த கவிதாவை அடக்கியவர்,
“ஆடுகிற வரை அவ ஆடட்டும் கவி... வெயிட் பண்ணு மைதிலி வரட்டும்... அவ வந்து இவளை கசாப்பு போடும் நேரம் வரும். அப்பா பார்த்துக் கொள்ளலாம்... இப்போ விடு...” என்று செல்வநாயகம் சொல்ல கவியால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.
“அதெல்லாம் என்னால முடியாது...! அவ வரும்போது வரட்டும்ங்க... அதுக்கு முன்னாடி இவளுக்கு ஒரு முடிவு கட்டணும். எவ்வளவு தைரியம் இருந்தா கிச்சனுக்கு குள்ள போறா... சர்வாவுக்கு இவ எதுக்கு சாப்பாடு போடுறா... ஏதோ இவ தான் அவன் கிட்ட தொங்க தொங்கு தாலி கட்டிக்கிட்ட மாதிரி என்னென்ன எல்லாம் செய்யிற... என்னோட வேலையாட்களுக்கு அதுவும் நான் வச்ச வேலையாட்களுக்கு இவ ஆர்டர் போடுறா... ஏதோ இவ தான் எஜமானி மாதிரி... என்னால இதையெல்லாம் பார்த்துகிட்டு சும்மா இருக்க முடியல... என்ன விடுங்க இன்னைக்கு நானா அவளான்னு ஒரு கை பார்த்துட்டு வரேன்” என்றார் கவிதா.
அதில் கடுப்பான செல்வநாயகம், “கொஞ்ச நேரம் சும்மா இரு... சர்வா இருக்கான்... சர்வா முதல்ல இங்க இருந்து போகட்டும். அதுக்கு பிறகு நாம பார்த்துக்கலாம் அது வரை உன் வாயை திறக்காத சொல்லிட்டேன்...” என்று கடுப்படித்தார் செல்வநாயகம்.
“ஆமா நீங்க பாத்துக்கிட்ட லட்சனம் தான் நல்லா தெரியுதே...! ரோட்டுல போற சனியனை அப்படியே தெருவோட அனுப்பாம வீட்டுக்குள்ள கூட்டிட்டு வந்து அதுவும் நடு வீட்டுல உட்கார வச்சி அழகு பாத்துக்கிட்டு இருக்கீங்க... முதல் நாள் வந்த அன்னைக்கே அவள அடிச்சு விரட்டி விடுங்கன்னு சொன்னேன்.”
“ஆனா நீங்க என்ன சொன்னீங்க... ஆபீஸ்ல தானே இருக்குறா.. அவளால நமக்கு என்ன பாதிப்பு வந்துட போகுதுன்னு சொன்னீங்க... சரின்னு நானும் அதோட போய் தொலைவா அப்படின்னு பார்த்தா இப்போ நடுவீடு வரையிலும் வந்து நிக்கிறா... நடுவீட்டோட மட்டுமா நிக்கிறா...? அவனோட அறையில போய் ஜம்பமா பிளைங்களுடன் விளையாடுவது என்ன...? எதுவும் அவதான் இந்த வீட்டு மகாராணி மாதிரி எல்லா இடத்துலயும் அவளோட ராஜ்ஜியம் நடக்குற மாதிரி நடந்துக்கிறா... இதெல்லாம் எனக்கு சுத்தமா புடிக்கல. நான் நினைச்சது வேற ஆனா இங்க நடக்கிறது வேற... நான் நினைச்சது மட்டும் நடக்காம போகட்டும் அப்புறம் இருக்கு உங்க எல்லோருக்கும்...” என்று அவர் தன் ஒட்டு மொத்த கோவத்தையும் கொட்டினார்.
“உனக்கு ஒரு முறை சொன்னால் புரியாதாடி? வெயிட் பண்ணுன்னு சொல்றேன்ல... எதா இருந்தாலும் ஆழமா அடிச்சு இறக்கணும். அப்பதான் காயம் ஆழமா இறங்கும்.” என்றார்.
“நாம ஒரு அடி கொடுத்ததற்கே அவ நாலு வருஷமா எந்திரிக்க முடியல இப்போ தான் எழுந்தே நடமாடுறா... அப்படி பட்டவ மறுபடியும் வந்து இருக்கான்னா அவளுக்கு பின்னாடி ஒரு தூண் இருக்கணும். அந்த தூண அடிச்சு நொறுக்கனா வேலை முடிஞ்சுது...” என்றார் கண்களில் பலி வெறி மின்ன…
“என்னவோ சொல்றீங்க ஆனா எனக்கு ஒன்னும் புரியல... இங்க நடக்கிறதும் புடிக்கல. அது மட்டும் தான் நான் சொல்லுவேன்.” என்றார் கவிதா.
“எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன். நீ எதுக்கும் டென்ஷனாகாத. இதெல்லாம் சப்ப மேட்டார். இதுக்காக நீ எதுக்கு இவ்வளவு ஸ்ட்ரெஸ் ஆகுற...” என்று தன் மனைவியை சமாதானப்படுத்தியவர், அவர்களுக்கு முன்னாடியே இவர்கள் இருவரும் அமர்ந்து உணவு உண்ண ஆரம்பித்தார்கள். அதை பார்த்த சகிக்கு செல்வனாயகத்தை வம்பிழுக்க தோன்றியது.
அதனால் சர்வாவை நன்கு கவனிப்பது போல “அந்த சட்னி வச்சுக்கோங்க, இதை போட்டுக்கோங்க, அந்த சாப்பாடு போட்டுக்கோங்க, இது நல்லா இருக்கு” என்று அவள் பார்த்து பார்த்து பரிமாற அதோடு அவனுக்கு இருமல் வரும்போது தானே அவனுக்கு தண்ணீரை வேறு புகட்டவும் செய்தாள். அதை பார்த்துக் கொண்டிருந்த செல்வநாயகத்துக்கும் கவிதாவுக்கும் ஆத்திரம் பற்றி கொண்டு வந்தது. ஆனால் எதுவும் சொல்ல முடியாமல் அமைதி காத்தார்கள் இருவரும்.
“என்ன நீங்க சின்ன பிள்ளை மாதிரி சாப்பிட்டு இருக்கீங்க? இன்னும் நல்லா வச்சு சாப்பிட வேண்டியது தானே? என்ன சாப்பிடுறீங்க? இருங்க நானே ஊட்டி விடுறேன்” என்று சர்வாவுக்கு ஊட்டி விடவும் செய்தாள். அதை சர்வாவால் கூட நம்பவே முடியவில்லை.
“இது சகிதனா இல்ல? இல்ல சகிக்குள்ள வேற எதுவும் பேய் போயிடுச்சா?” என்று அவளின் காதோரம் நக்கலாக கேட்டான். அவனது கேள்விக்கு பதில் சொல்லாமல்
“நானே ஊட்டி விடணும்னு அடம் பிடிச்சா எப்படி சர்வா... ஏங்க நீங்களே அள்ளி சாப்பிட்டா தான் என்னவாம்.. அத்தை மாமா வேற இருக்காங்க... ஐயோ போங்க நீங்க..” என்று வெட்கமாக முகத்தை வைத்துக் கொண்டவள், அவனுக்கு ஊட்டி விடவும் செய்தாள்.
நேற்று இருந்த சகி இவ இல்லையே...! என்று அவனது நெற்றியில் யோசனை அதிகம் படர, அவனது வாய்க்குள் சகி சாப்பாட்டை வைத்து திணித்தாள். அவனுக்கு அவளது இந்த கவனிப்பில் விக்கலே வந்துவிட்டது.
சகியின் இந்த மாற்றம் கண்டு மூவருமே திகைத்து தான் போனார்கள். அந்த நேரம் கார்த்தி அவளை தேடி உள்ளே வர சர்வாவுக்கு ஊட்டும் சாட்சியைப் பார்த்த கார்த்திக் திகைத்துப் போனான். ‘என்னோட சகியா இது?’ என்பது போல அடிபட்ட பார்வை ஒன்றை அவள் மீது வீசினான்.
கார்த்தியை அங்கே சற்றும் எதிர்பார்க்காத செல்வநாயகம் அவனை கண்டு திகைத்துப் போனார். கவியை ஒரு கணம் பார்த்தவருக்கு சட்டென்று வியர்த்துப் போனது. நேற்று அலுவலகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு முதல் முதலாக கார்த்தியை பார்த்து திகைத்ததை இன்று அந்த திகைப்பை அப்படியே தனக்குள் உணர்ந்தார்.
தன் அதிர்வை யாருக்கும் காட்டாமல் சமாளித்தார். ஆனாலும் நான்கு வருடங்களுக்கு முன்பு நடந்தது கண்முன் வர வேகமாக சர்வாவை திரும்பி பார்த்தார்.
சர்வா கார்த்தியை நிமிர்ந்து பார்த்தான். அவனது கண்களில் ஏளன புன்னகை வந்தது.
“நீ என்கிட்டே இருந்து அவளை விலக்கி வைக்கணும்னு பார்த்த... இப்போ பாரு அவ என் இடத்துல என் வீட்டுல இருக்கா...” என்று கண்களாலே பரிகாசம் செய்தான்.
அவனது கண்களில் வழிந்த ஏளனத்தை கார்த்திக்கு உயிரே போனது போல இருந்தது. அதுவும் அவனுக்கு போய் தன்னுடைய சகி ஊட்டி விடுவதை கண்டு கண்கள் எல்லாம் கலங்கிக் கொண்டு வந்தது... கலங்கிய கண்களை துடைக்க கூட இல்லாமல் அவன் சகியை வெறிக்க,
சட்டென்று சகி எழுந்து நின்றாள் அவனை அங்கே சிறிதும் எதிர்பாராமல்...!





