பாட்டு மட்டும் அன்றி முழுமையாக அவனிடம் ஒரு நெறி வந்து சேர்ந்தது. அவன் ஆசை பட்ட குடும்ப அமைப்பு அவனுக்கு கிடைத்தது... காலை சுற்றி ஓடும் மிரு, புத்தி சொல்லும் தந்தையாக கிருஷ்ணன், தோளுக்கு தோளாக சகி, எதையும் மனம் விட்டு பேசி கொள்ளும் சுதந்திரம், முக்கியமாக அவன் வெறுத்த தனிமை அவனிடம் இல்லாமல் யாராவது அவனுடன் இருந்துக் கொண்டே இருந்தார்கள்... ஆனால் அவ்வப்பொழுது அவனிடம் ஒரு மூர்கம் வெளிப்பட்டு கொண்டு தான் இருந்தது.
ஆனால் அது அவனது குடும்பத்தாரிடம் மட்டும் வெளிப்படவே படாது... தானாகவே இது அவனது குடும்பம் என்று அவனது மனம் ஒட்டிக் கொண்டது...
அதுவே அவனுக்கு மிகப்பெரிய ஆறுதல். அந்த ஆறுதலை மனமுவந்து தந்த சகி அவனுக்கு எப்பொழுதும் ஒரு படி உசத்தி தான்... அவனை விடவும் அவள் அவனுக்கு ரொம்ப ரொம்ப முக்கியம்...
இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தது என்றாலும் மண்டபத்தில் என்ன நடந்தது என்று கார்த்தியின் காதை மறைத்து தன் தந்தையிடம் கேட்டாள். அதற்குள் அவர்களுடைய சொத்து அனைத்தும் வாங்கிய கடனுக்கு விலை பேச வர, எல்லாவற்றையும் தாரை வார்த்துக் கொடுத்து விட்டு எளிமையான ஒரு வீட்டில் குடி ஏறி இருந்தார்கள்.
“மிருவை கல்லூரியில் விட்டுட்டு அப்படியே அவளுக்கு முதல் செமஸ்டர் பீஸ் கட்டிட்டு வந்திடு கார்த்திக்” என்று அவனை வெளியே அனுப்பி விட்டுட்டு தந்தையின் காலடியில் அமர்ந்தாள்.
அவளின் தலையை வருடி விட்டவரின் கண்களில் நீர் கோர்த்தது...
“எதையும் மறைக்காம சொல்லுங்க ப்பா. அங்க என்ன நடந்தது...?” கேட்டவளை வேதனை பொங்க பார்த்தார் கிருஷ்ணன்.
“நான் ஏமாத்துக்காரனாம்... சொத்து இருக்குன்னு ஏமாத்தி பெரிய இடத்து மாப்பிள்ளையை வளைச்சி போட்டுட்டனாம்...” என்று வேதனை பொங்க சொன்னவரின் இருக் கால்களையும் பற்றிக் கொண்டாள்.
“அப்பா...” என்று அவள் அதிர,
“அது உண்மை தான் பாப்பா... உனக்கு நல்ல இடத்துல மாப்பிள்ளை அமைஞ்சதுன்னா உன்னை வச்சே சின்னவளுக்கும் முடிக்கலாம்னு நினைச்சேன்..” என்று சொல்ல,
“ரெண்டு பெண்ணை பெத்த எல்லா அப்பாவும் நினைக்கிறது தானே ப்பா... இதுல தவறு என்ன இருக்கு?” என்று கேட்டவள்,
“நம்ம சொத்து பத்திய விவரம் எதையும் மறைச்சீங்களா ப்பா?”
“மாப்பிள்ளைகிட்ட எல்லா விவரத்தையும் சொன்னேன் மா...” என்னப்பா சொல்றீங்க...
“ஆமான்டா நான் மாப்பிள்ளைய கூப்பிட்டு எல்லாத்தையும் சொல்லி தான் இந்த கல்யாணத்தையே ஏற்பாடு செய்தேன். ஆனா இது இப்படி ஆகும்னு தெரியல...” என்று முதுகு குலுங்க அழுதவரை எழுந்து கட்டிக் கொண்டாள்.
“அப்பா விடுங்க ப்பா... இதைவிட பெரிய நல்லது நடக்கும் அதனால தான் இந்த சம்மந்தம் விட்டு போய் இருக்கு” என்று மனதை மறைத்து அவருக்கு சமாதனம் சொன்னாள்.
“உனக்கு வருத்தமாவே இல்லையாடா?” வேதனை பொங்க கேட்டவரை பார்த்து சிரித்தாள்.
“அவரை ஒரு ரெண்டு மூணு முறை பார்த்து இருப்பேனா ப்பா... அவரோட முகம் கூட என் மனசுல ஒழுங்கா பதியல... இதுல வருத்தம் வேற படுறனாக்கும்... ஏன் பா சிரிப்பை மூட்டிக்கிட்டு இருக்கீங்க... எனக்கு என்னோட பிசினெஸ் போச்சேன்னு தான் வருத்தம்...” என்றவளை கூர்ந்து பார்த்தார்.
அதில் சர்வாவுக்கான தேடல் எதுவும் இல்லாமல் இருப்பதை கண்டு சகி சொல்வது உண்மை என்று அவரும் நம்பி தான் போனார்.
ஆனால் சர்வா அவளின் மனதில் இல்லையே...! உயிரோடு ஒன்றாக கலந்து அவளது ஆவி எங்கும் நிறைந்து இருக்கிறானே பிறகு எப்படி முகத்தில் அவனுக்கான தேடல் தெரியும்.
ஒருவேளை சகியின் உயிரை வெட்டி பார்த்தால் அவன் அங்கு நீக்கமற நிறைந்து இருப்பது தெரிந்து இருக்குமோ என்னவோ...!
பெருமூச்சு விட்டவர்,
“நான் பெண் பிள்ளையை ஒழுங்கா வளர்க்கலையாம். ஒழுக்கம் னா என்னன்னு நான் உனக்கு சொல்லி தரலியாம். ஊர் மேய ... என்று நா கூசும் சொற்களை எல்லாம் பேசி உன்னோட ஒழுக்கத்தை ரொம்ப அசிங்கப் படுத்திட்டாங்கமா” என்று கண்களில் கண்ணீர் நெகிழ சொன்னார். அதை சொல்ல கூட முடியாமல் அவரின் பண்பான நாகரீகம் தடுத்தது.
“ப்பா...” என்றவளின் கண்களில் சிறிது கூட கண்ணீர் வரவில்லை. ஏனெனில் அவளுக்கு தான் ஏற்கனவே தெரியுமே இது ஒரு நாடகம் என்று... செல்வனாயகத்தை அங்கு பார்க்காவிடில் அனைத்தையும் எண்ணி சர்வாவுக்காக ஏங்கி உருகி ஏதேதோ செய்து இருப்பாள்.
ஆனால் அவனின் தந்தை தான் எல்லாவற்றிற்கும் காரணம் என்று புரிய அவளுக்கு வெறுத்து போய் தான் வந்தது. அதோடு செல்வநாயகம் தன்னையே அங்கு பிச்சைக்காரி என்று தான் சொன்னார். அப்படி பட்டவர் அத்தனை பேரின் மத்தியிலும் தங்களது குடும்பத்தையும் தன் தந்தையையும் நிச்சயமாக மானபங்கம் செய்து இருப்பார் என்று எண்ணினாள்.
அதையே கிருஷ்ணனும் சொல்ல உடைந்து தான் போனாள்.
“என்னய்யா பொண்ணை பெத்து வச்சி இருக்க... இது தான் நீ பெண்ணை வளர்த்த லட்சனமா? அது சரி பொம்பளை வளர்திருந்தா புள்ளைங்க நல்லா வளந்து இருக்கும். நீ ஆம்பிள்ளை தானே... நீ வளர்த்து அதுங்க எப்படி கரை சேரும்...” என்று செல்வநாயகம் ஏசி தூற்றி அவமரியாதை செய்தார்.
அதோடு கவிதாவும் சேர்ந்துக்கொண்டு அவரை பேசி பேசி எவ்வளவு புண் படுத்த முடியுமோ அந்த அளவுக்கு புண் படுத்தினார்கள். கூடவே அவர்கள் பக்க உறவுகளும் சேர்ந்து வேதனை படுத்த அத்தனை பெரிய சபையின் முன்பு தலைக்குனிந்து அவர் நின்றதை சொல்ல வேதனையில் உள்ளம் பொசுங்கிப் போனது.
‘யாரோ செய்த தவறுக்கு என் அப்பாவை தீக்குளிக்க வைத்தது எப்படி நியாயம்...? பணம் இருந்தா என்ன வேணாலும் செய்யலாமா? இவங்களுக்கு எல்லாம் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா? இவங்க எல்லாம் காசு பணத்தை பார்த்தா பிடுங்கி அலையும் கூட்டம். இதுங்க கிட்ட எப்படி நியாயத்தை எதிர் பார்க்க முடியும்...’ என்று உள்ளுக்குள் தவித்தவள் கண்ணீரோடு இருந்த தகப்பனை அணைத்துக் கொண்டவள்,
“அவங்க பேசுனதை மனதில் வச்சுக்காதீங்க ப்பா. அவங்க பேசுன எதுவும் உண்மை கிடையாது...! அம்மா வளர்த்து இருந்தா கூட எங்களை இந்த அளவுக்கு கட்டு கோப்பா வளர்த்து இருக்க மாட்டாங்க... இந்த அளவுக்கு பண்பாவும் வளர்ந்து இருப்பமான்னு கூட தெரியல” என்றவளின் தலையை வருடி விட்டவர்,
“என்கிட்டே இருந்து என் சுமையை வாங்கிக்கிட்ட ஆனா உன் மனசுல இருக்குற பாரத்தை ஏன் பாப்பா கொட்ட மாட்டிக்கிற” என்று அவர் வேதனையுடன் கேட்டார்.
அவரது கரத்தை பற்றி தன் கன்னத்தில் வைத்துக் கொண்டவள்,
“என்ன சொல்லணும் ப்பா...” என்று மிருதுவாக புன்னகைத்தாள்.
“அன்னைக்கு சர்வா என்கிட்டே உன்னை வெளியே கூட்டிட்டு போகவான்னு அனுமதி கேட்டாரு. வெளியே போயிட்டு வந்த பிறகு உங்க ரெண்டு பேருடைய முகம் கல்யாண கலையுடன் மகிழ்ச்சியுடன் தான் இருந்தது. ஏன் அர்த்த ராத்திரியில நான் உன்னை பார்க்க வரும் சமயம் எல்லாம் உன் அறை வாசல்ல தான் மாப்பிள்ளை இருந்தாரு... அப்படி இருந்தும் எப்படிம்மா இப்படி ஆச்சு?” என்று கேட்டவரை சற்றே அதிர்ந்து தான் பார்த்தாள்.
அவளின் பார்வையை உணர்ந்து “அம்மாடி பெண்ணை கட்டி குடுக்குற வரை அப்பனுங்களுக்கு ஏதுடா தூக்கம். உங்களை ஒரு அறையில படுக்க சொல்லிட்டு நான் ஒரு அறையில படுத்துக்கிட்டாலும் எனக்கு தூக்கம் வரலடா... தனியா உங்களை விட்டுட்டு வந்து எனக்கு எப்படி தூக்கம் வரும். அது தான் மணிக்கு ஒரு முறை வந்து பார்த்துக்கிட்டு இருந்தேன் உங்களை...” என்றார் அன்புடன்.
அவரது அன்பில் நெகிழ்ந்தவள், அவரை கட்டிக் கொண்டாள் இறுக்கமாக...
“சொல்லுடா ரெண்டு பேருக்கும் அவ்வளவு பிடிச்சி இருந்துச்சே... பிறகு எப்படி?” கேட்டவரை பார்த்து சிரித்தவள்,
“வேணாமே ப்பா...” என்றாள்.
“ஏன்டா நான் தெரிஞ்சுக்க கூடாதா?” வேதனையுடன் கேட்டவரை கட்டிக் கொண்டவள்,
‘தெரிஞ்சுக்கிட்டா நீங்க ரொம்ப வேதனை படுவீங்க ப்பா... நம்மகிட்ட காசு இல்ல இல்லையா? அது தான் காரணம். நீங்க பிசினெஸ்ல லாஸ் ஆன கதை அவருக்கு தெரிஞ்சி இருக்கு. அதை நீங்க தெருஞ்சுக்கிட்டா இன்னும் உடைஞ்சி போவீங்க. எனக்கு நீங்க வேணும்... உங்களையும் என்னால இழக்க முடியாது...’ எண்ணியவள், வெளியே சிரித்து மழுப்பி விட்டு தன் வேலை தேடும் பணியை தொடங்கினாள்.
ஆனால் அதற்குள் கிருஷ்ணனுக்கு உடம்பு சரியில்லாமல் போய் இருந்தது... அதையெல்லாம் எண்ணி பார்த்தவளுக்கு வேதனை நெஞ்சை கவ்வியது...! தங்களின் ஒட்டு மொத்த வேதனைக்கும் காரணமான செல்வனாயகத்தை பழிவாங்க நெஞ்சம் துடித்தது. ஆனால் தந்தையின் மீதும் தவறு இருக்கிறதே...! பிசினெஸ் லாஸ் ஆகிடுச்சு என்று ஒரு வார்த்தை வெளிப்படையாக சொல்லி இருக்கலாம். தன்னிடமாவது சொல்லி இருந்தால் இந்த கையறு நிலையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்காதே... பெருமூச்சு விட்டவள் தன் வேலையை பார்க்க தொடங்கினாள்.
அதை கெடுக்க வேண்டும் என்றே விதி நான்கு வருடங்களுக்கு பிறகு தன் ஆட்டத்தை மீண்டும் தொடங்கி இருந்தது... இதில் யார் வெல்ல போகிறார்களோ தெரியவில்லை.
கடந்து போன எல்லாவற்றையும் எண்ணி பார்த்தவளுக்கு மிச்சம் மீதி எந்த கோவமும் இல்லை. ஆனால் தங்களை மிக துச்சமாக எண்ணிய செல்வனாயகத்துக்கு சரியான பதிலடி குடுக்க எண்ணினாள். அதை செயல் படுத்தவும் ஆரம்பித்திருந்தாள்.





